புலியை ஆதரிக்க, 'சுயநிர்ணயவுரிமையை" முன்வைக்கும் இடதுசாரிய புல்லுருவிகள்

அரசை எதிர்க்க நாம் புலியை ஆதரிக்கவேண்டும். அரசுக்கு எதிராக வேறு யார் தான் உள்ளனர். இதை புலிகள் மட்டும் சொல்லவில்லை. இடதுசாரிய புல்லுருவிகளும் இப்படிக் கூறுகின்றனர்.

இப்படி தாளம் போடும் இடதுசாரிய புல்லுருவிகள், தமது இடதுசாரிய வேஷத்தை பாதுகாக்கும் ஆசையும் வேறு. இதனால் புலியை ஆதரிக்கவும், அதேநேரம் இடதுசாரியத்தை பாதுகாக்கவும் தாம் 'சுயநிர்ணயவுரிமை"காக போராடுவதாக திடீரென இன்று பாசாங்கு செய்கின்றனர்.

 

இப்படி வலது பாசிசத்தை ஆதரிக்க, அதன் பிற்போக்கை மூடிமறைக்கவும் முனையும் இடதுசாரிய போக்கிலிகள், இன்று அரசியல் வேஷம் போடுகின்றனர். தம்மை மூடிமறைத்துக்கொள்ள 'சுயநிர்ணயவுரிமைக்" காகத்தான், தாம் போராடுவதாகவும் பீற்றிக்கொள்கின்றனர்.

 

தற்போது இதை திடீரென்ற ஒரு புதுக்கோசமாக முன்வைக்கும் இவர்கள், இதுவரை காலமும் எங்கேயிருந்தனர். இன்று இதை புலிக்காகவே முன்னெடுக்கும் இவர்கள், உண்மையில் சுயநிர்ணயவுரிமைக்காகவா போராடுகின்றனர்? இல்லை.

 

சுயநிர்ணய உரிமைக்காக போராடுவது என்பது, சில அரசியல் அடிப்படைகளைக் கொண்டது. சுயநிர்ணயம் என்பது, புலிகள் உச்சரிப்பது போல் புலிக்கு தாளம் போடும் வெறும் சொல்லல்ல.

 

சுயநிர்ணயம் என்பது  

1. மக்களின் சுயநிர்ணயவுரிமையை முன்னிறுத்தி, தனக்கான சொந்த அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

2. சுயநிர்ணயவுரிமையை மறுக்கும் அனைத்து பிரிவுகளையும் இனம்காட்டி, அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி சுயமாக மக்கள் போராடுவதாகும்.

 

3. சுயநிர்ணம் என்பது என்னவென்பதை வரையறுத்து, வெளிப்படையாக அதற்காகப் போராடுதலாகும்.

 

குறைந்தபட்சம் இதை வெளிப்படையாக மக்களின் முன் வைத்து சுயமாக போராடாத அனைத்தும், புலிப் பாசிசத்தை சுயநிர்ணயத்துக்கான போராட்டமாக காட்டி திரிதலாகும். மக்களுக்காக அரசியல் நோக்கமின்றி, இதனடிப்படையில் சொந்தக் கருத்தின்றி சுயநிர்ணயத்தை பேசுவது, புலிப்பாசிசத்தை பின்பக்கமாக பாதுகாத்தலாகும்.

 

இன்று புலிப் பாசிசம் தான், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை தமிழ் மக்களின் உள்ளிருந்தே மறுப்பவர்கள். இப்படி, இதனடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கு எதிரான முதல் தரமான துரோகிகள். இதை அம்பலப்படுத்தாத ’சுயநிர்ணயவுரிமை" வாதிகள் மோசடிக்காரர்கள். 

 

இன்று தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை மறுப்பவர்கள் யார்?

 

1. பேரினவாத அரசு


2. புலிகள்


3. ஏகாதிபத்தியமும், பிராந்திய விஸ்தரிப்புவாதிகளும்   

 

இதற்குள் உள்ள வர்க்க சக்திகள். இப்படி சுயநிர்ணயவுரிமை மறுப்பவர்கள், தமிழ் இனத்தை அடிமைப்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் இதற்கு எதிராகவா இன்று 'சுயநிர்ணயவுரிமை" முன்வைக்கின்றனர் எனின், இல்லை.

 

இன்று தமிழ் சமூகம் தன்னைத்தான் அணிதிரட்டிக் கொள்ள, அதற்கே சுயநிர்ணய உரிமை கிடையாது. கருத்து சொல்லவும், எழுத்தை முன்வைக்கவும், பேச்சு உரிமை என எதுவும் தமிழ் மக்களுக்கு கிடையாது.

 

இப்படியிருக்க தாம் 'சுயநிர்ணயவுரிமை"க்காக போராடுவதாக கூறுபவர்கள்;, சமூகத்துக்காக போராட எந்த உரிமைகளுமற்றவர்கள். இதை மூடி மறைத்தும், இதை கோர மறுத்தும் 'சுயநிர்ணயவுரிமை"க்காக போராடுவதாக கூறுவது மாபெரும் அரசியல் மோசடி. இதுவோர் பாசிசத்தின் நிகழ்ச்சி நிரல். உண்மையில் மக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் பாசிச சமூக அமைப்பை பாதுகாக்க முனையும், இடதுசாரிய புல்லுருவித் தனம். மக்களை ஏமாற்ற தனக்குத்தானே அது 'சுயநிர்ணயவுரிமை"க்காக என்று வேஷம் போடுகின்றது.

 

மக்களின் எதிரிகள் மறுக்கும் சுயநிர்ணயவுரிமைக்கான போராட்டத்தை நடத்த, முதலில் எமக்குள் தடையாக உள்ள தடைகளை களைவது அவசியம். இந்த வகையில் சுயநிர்ணயவுரிக்கு எதிராகவுள்ள புலிகள் அம்பலப்படுத்துவதன் மூலம்தான், சுயநிர்ணயவுரிமைக்காக மக்கள் போராட முடியும். இதையா இடதுசாரி புல்லுருவிகள் செய்கின்றனர். இல்லை, ஆனால் தாம் 'சுயநிர்ணயவுரிமை" க்காக போராடுவதாக கூறுவது, புலிப் பாசிசத்தை பின்பக்கமாக பாதுகாக்க மாமா வேலை செய்வதுதான். இந்த மாமாக்கள் நேர்மையற்ற போக்கிலித்தனத்தின் மூலம், தம்மைத்தாம் மூடிமறைக்க முனைகின்றனர்.

 

சுயநிர்ணயவுரிமை என்பது, குறைந்தபட்சம் ஜனநாயக புரட்சியை அடிப்படையாக கொண்டது. குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்தையும், அதனடிப்படையிலான புரட்சியையும் முரணற்ற வகையில் கொண்டிருத்தலாகும்.

 

இதையா புலிகள் கோருகின்றனர்!?  இதையா உங்கள் 'சுயநிர்ணயவுரிமை" முன்வைக்கின்றது. ஊர் உலகத்தை ஏமாற்ற சுயநிர்ணயவுரிமையை பயன்படுத்தும் நீங்கள், பாசிசத்தின் பின் உள்ள பக்காக் கிரிமினல்கள்தான். 

 

மக்களுக்கு எந்த உரிமைகளுமற்ற நிலையில், அதற்காக குரல் கொடுக்க மறுக்கும் உங்கள் 'சுயநிர்ணயவுரிமை" புலிப் பாசிசத்தை மக்கள் மேல் மேலும் நிறுவி அவர்களை மூச்சின்றி அடிமைப்படுத்துவதுதான். மக்களின் அவலங்கள் அனைத்தையும் பற்றி பேசாது, அதன் ஒரு பக்கத்தை மட்டும் பேசுவது புலிப் பாசிசத்தை பலப்படுத்தும் அரசியல் சூழ்ச்சியாகும்;. இதை புரிந்து கொள்வது தான், எம்மை சுற்றியுள்ள எமது இன்றைய எழுத்து உரிமையைத்தன்னும் பாதுகாக்க முடியும்;. 

  

பி.இரயாகரன்
15.12.2008
  
     

 

Last Updated on Tuesday, 16 December 2008 07:37