யாழ் சமூக கட்டமைப்பின் சமூகவிளைவா, விடுதலைப் புலிகள்?

யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற தர்க்கமே, இன்று தமிழ் இடதுசாரிய அரசியல் வழியில் செல்வாக்கு வகிக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி தனது சமூக அரசியல் மதிப்பீட்டை, இப்படி தவறாகவே கூறி வருகின்றனர். அதாவது இந்த யாழ் சமூக கட்டமைப்பைப் தாண்டி, புலிகளைத் தவிர வேறு யாரும் உருவாயிருக்க முடியாது என்கின்றனர். யாழ் மேலாதிக்க தன்மை தான், புலியை உருவாக்கியது என்கின்றனர்.

இதை நாங்கள் தெளிவாகவே மறுக்கின்றோம். இந்த முடிவை கூறுபவர்கள் அனைவரும், புலி பாசி;ச சூழலை எதிர்கொள்ள திராணியற்றவர்கள். ஒரு மாற்று அரசியல் வழியை மக்களுக்கு முன் வைக்கத் தவறியவர்கள் அல்லது அதில் தோற்றவர்கள். ஒரு அரசியல் வழியின்றி, தம் சொந்த அடையாளத்தையே இழந்தவர்கள்;. தமது இன்றைய இந்த நிலையை நியாயப்படுத்திக் கொள்ள, இந்த தர்க்கத்தை முன்வைக்கின்றனர். இதன் மூலம் தமது செயலற்ற தன்மையையும், கருத்தற்ற ஓடுகாலித்தனத்தையும் நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

 

இதன் சாரம், யாழ் சமூகக் கட்டமைப்பின் தன்மையைத் தாண்டி, புலிக்கு மாற்றாக எதுவும் உருவாகியிருக்கவே முடியாது என்கின்றனர். இதனால் தான், தாம் சமூகத்தை மாற்ற எதுவும் செய்யமுடியாது இருக்கின்றோம் என்று கூறி, சமூகக் கடமையை நிராகரிக்கின்றனர். இதன் மூலம் கருத்துத்தளத்தில் தம் கருத்தையே கை விடுகின்றனர். 

 

இந்த தர்க்கம், இதன் சாரம், இதன் நடைமுறை, மூன்று பிரதான சமூக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

 

1.பாசிச இனவெறி அரசைச் சார்ந்து நின்று தான், புலியை எதிர் கொள்ளமுடியும் என்கின்ற துரோக நிலைக்கு இது வழிகாட்டியுள்ளது.

 

2.புலிகளுடன் சேர்ந்து தான், பேரினவாதத்தை எதிர்கொள்ள முடியும் என்கின்ற பாசிசத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இது வழிகாட்டியுள்ளது.

 

3. சுயமாக மக்களைச் சார்ந்து நின்று எதுவும் செய்யமுடியாது என்ற, மக்கள் விரோத நிலையை இது உருவாக்கியுள்ளது.

 

இப்படி செயலூக்கமுள்ள மக்கள் திரளுக்காக போராடும் முயற்சிக்கு எதிரான கோட்பாட்டை, தம் செயலற்ற தன்மைக்கு ஏற்ப உருவாக்கி, அதுவே இன்று செல்வாக்கு வகிக்கின்றது.

 

இதன் விளைவு, மக்கள் விரோத பேரினவாதம் மற்றும் புலிக்கு பின்னால் செல்வதை துரிதமாகியது. செயலூக்கமுள்ள பிரிவும், புத்திசாலிகளாக அறிவாளியாக உள்ளவர்கள், இதை தமது பிழைப்புக்கு ஏற்ற ஒரு கோட்பாடாக கருதி, பேரினவாதம் மற்றும் புலிக்கு பின்னால் சென்று நக்குகின்றனர். 

   

மக்களை அணிதிரட்டல், மக்களுக்காக போராடுதல் என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றதாக இவர்கள் கருதுகின்றனர். அதையே பிரச்சாரம் செய்கின்றனர். இப்படி தம் செயலற்ற தன்மையை நியாயப்படுத்த, யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற இவர்களின்  தர்க்கம் உதவுகின்றது. தம் நிலைக்கு ஏற்ப தாம் கண்டுபிடித்த இந்த அறிவையும் ஆய்வையும் மெச்சிக் கொள்வதுடன், இதைக்கொண்டு தம்மை இடதுசாரிய பிரமுகராக்கிக் கொள்கின்றனர். 

         

யாழ்ப்பாண சமூகம் பாசிசத்தன்மை கொண்டதா?

 

இல்லை. இந்துத்துவம், சாதியம் என்ற அடிப்படையில் இதை நுணுகி அணுகினால் கூட, இந்தியாவில் உள்ளதை விட இந்தச் சமூகம் இதில் கடும் போக்கானவையல்ல. இது மிதவாதத்தன்மை கொண்ட சமூகம். புலிப் பாசிசக் கட்டமைப்பு உருவான போதும், அது இந்துத்துவமாகவோ சாதியமாகவோ ஒரு கடும் போக்கை எடுக்க முடியவில்லை. அதை மறுத்ததும், யாழ் சமூகக் கட்டமைப்பின் தன்மை தான். போராட்டம் யாழ்மேலாதிக்கம் பெற்ற போதும், யாழ் மேலாதிக்க கூறுகள் பாசிசத்தன்மை பெற யாழ் சமூக கட்டமைப்பு அனுமதிக்கவில்லை.

 

புலிகள் இந்துத்துவ அமைப்பல்ல. சாதிய அமைப்புமல்ல. மாறாக சமூக மேலாண்மையைச் சார்ந்த அமைப்பு. இதற்கு எதிரான கூறுகள் மேல், தன்னை பாசிசத் தன்மை உருவாக்கியது.
  
இதை நாம் மேலும் ஆழமாக புரிந்து கொள்ள முன்னம், புலிகள் யாழ் சமூக அமைப்பை பிரதிநித்துவப்படுத்தினார்கள் என்பதன் பின் உள்ள அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்வது அவசியம். புலிகள் செய்தது என்ன?

 

புலிகள் இயல்பாகவே நிலவிய யாழ் சமூக மேலாண்மையை, மாற்ற முனையவில்லை. அதை பாதுகாத்து, அதன் அடிப்படையில் தம்மை பாசிச மயமாக்கினர். யாழ் சமூக அமைப்பில் காணப்பட்ட சாதி மேலாண்மை, மத மேலாண்மை, ஆணாதிக்கம், பிரதேசவாதம், இனவாதம்,  சுரண்டல்… என்று அனைத்து சமூக விரோத கூறுகளையும், இது மாற்ற முற்படவி;ல்லை. அதை அப்படியே எடுத்து, அதையே தம் இயக்க கொள்கையாக்கி கொண்டனர். இதை இடதுசாரிய புல்லுருவிகள், புலியின் தத்துவமாக்கி அதற்கு ஏற்ப பாசிச தத்துவத்தை வழங்கினர். இது அனைத்து பெரிய இயக்கத்துக்கும் பொருந்தும். இப்படி இந்த யாழ் மேலாதிக்கத்தை, புலியிசமாக்கியதன் மூலம், அதை பாசிசமாக்கினர்.

 

உண்மையில் யாழ் சமூக அமைப்பு கொண்டிருந்த உள்ளார்ந்த சமூக மேலான்மை கூறுகளையும், மற்றைய சமூகங்கள் மேல்கொண்டிருந்த சமூக மேலான்மையையும், புலிகளின் கோட்பாடாக்கியவர்கள், அதனுடன் ஒட்டிக்கொண்ட இடதுசாரிய புல்லுருவிகள் தான்.

 

இப்படித்தான் யாழ் சமூக மேலாதிக்கமே, போராட்டமாக மையப்படுத்தியது. முழு மக்களையும் தனக்கு கீழ் அடிமைப்படுத்தியது. யாழ் மேலாதிக்கமே புலித் தேசிய போராட்டமாகியது.

 

நீண்ட காலமாக நிலவிய சமூகத்தின் அசமந்த போக்கில் தான், யாழ் சமூகம் மேலாதிக்கம் பெற்றிருந்தது. இதையே புலிகளின் தேசிய போராட்டமாக்கியது. இது வெறும் புலிகளின் கண்டுபிடிப்பல்ல. புலிகளின் வலதுசாரி செயலுக்கு தத்துவம் வழங்கிய இடதுசாரிய புல்லுருவிகள்;, அதை நியாயப்படுத்தி வழங்கிய தத்துவமே யாழ் மேலாதிக்கமாகும். இதை மறுத்து, அவர்கள் தத்துவம் வழங்கவில்லை. இப்படி போராட்டம் புல்லுருவி இடதுசாரிகளின் வழிகாட்டிலில் யாழ் மேலாதிக்கமாக சிதைய, அது பாசிசமாக வடிவமெடுத்தது.

 

புலிப் பாசிசம் யாழ் மேலாதிக்க கூறுகளை மையப்படுத்தி உருவாகவில்லை. சமூகம் பாசிசக் கூறுகளில் இருந்து விலகியே இருக்கின்றது. மக்கள் அன்றும் இன்றும் புலிகளுடன் இல்லை. புலிகளின் பாசிச இராணுவக் கட்டமைப்பு தகர்ந்த அடுத்த நிமிடமே, புலிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பையும் அவர்களின் செயலையும் நாம் காணமுடியும். இப்படி யாழ் மேலாதிக்க சமூகம் பாசிசத்துடன் இல்லை. 

  

யாழ் மேலாதிக்க சமூகமோ நடுத்தர வர்க்கம் சார்ந்தது    

     

சாதி அமைப்பான இந்திய சமூகத்தை விட, இலகுவாக சாதிக்கு எதிராக அணிதிரளக் கூடிய மிதவாத சமூகம் தான் யாழ் சமூகம். சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடக் கூடிய ஒரு சமூகம். எந்த வலதுசாரி கோட்பாட்டையும், தத்துவமாக வரிந்து கொண்ட ஒரு சமூகமல்ல. இயல்பாக உலகளவில் நிலவுகின்ற சமூக விரோத கூறுகள், இங்கு மிதவாதத் தன்மையில் ஆதிக்கம் பெற்றுக் காணப்படுகின்து. அதுவும் நடுத்தர வர்க்கத்துடன் கூடிய உதிரித்தன்மை வாய்ந்தவை. இது யாழ் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றது. இது மேலாதிக்கம் கொள்ளும் மற்றைய சமூகங்கள், மிகவும் பிற்போக்குத் தன்மை குறைந்த சமூகங்கள்.

 

கடந்த காலத்தில் சண் தலைமையிலான இடதுசாரியம் யாழ் சமூகத்தில் கொண்டிருந்த செல்வாக்கு, அதை வெற்றி கொள்ள முடிந்த போராட்ட மரபும், யாழ் சமூகத்தின் வலதுசாரியம் கொண்டுள்ள தத்துவமின்மையை அழகாக எடுத்துக் காட்டுகின்றது. சண் தலைமையிலான இடதுசாரிகளின் தவறுகள் தான், இங்கு இடதுசாரி அடிப்படையே இல்லாததாகியதென்பதை நாம் இங்கு குறித்துக்கொள்ள வேண்டும். யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு, விடுதலைப்புலிகளாகவில்லை. இடதுசாரி தவறுகள் தான், வலதுசாரிகளை நிலைநிறுத்த உதவியது. இதற்கு புல்லுருவி இடதுசாரிகள் வலதை இடதாக திரித்துக்காட்டி, வலது பாசிசத்தை இடதுகளின் பெயரில் நிலைநாட்ட முடிந்தது. வலதுசாரி பாசிசம், இடதுசாரி மூகமுடியுடன் தான், யாழில் நிலைநிறுத்த முடிந்தது. இதைத்தான் இடதுசாரி புல்லுருவிகள் செய்து முடித்தனர்.

 

மொத்தத்தில் இப்படி யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவுகள் இடதுசாரியத்தன்மை கொண்டது. இதனூடாகத்தான் இடதாக திரிக்கப்பட்ட வலதுசாரியம், விடுதலைப்புலிகள் வடிவில் இடதாக உருவானது. வலதுசாரியத்துக்கு யாழில் தத்துவ மரபு கிடையாது. ஆறுமுகநாவலர் கூட, வலது அடிப்படைவாதத்தை ஒரு சமூக தத்துவமாக யாழுக்கு கொடுக்க முடியவில்லை.

 

வலது புலிகளை அதிகாரத்துக்கு கொண்டு வந்தவர்கள், இடதுசாரிய புல்லுருவிகள் தான்.  வலதை இடதாக காட்டி செய்த மோசடியை பாதுகாக்க, பாசிசத்தை அதன் தத்துவமாக்கினர்.   

 

யாழ் மேலாதிக்கத்துக்கு உட்பட்டுள்ள சமூகமும், வெளிச் சமூகமும் ஏன் தனித்துவமாக யாழ்மேலாதிக்கத்துக்கு வெளியில் புரட்சிகரமாகவில்லை. இதன் அவசியம் இருக்கா வண்ணம், வலதுசாரியம் இடதுசாரியமாக வேஷம் போட்டது. இப்படி அவர்கள் ஏமாற்றப்பட்டனர். யாழ் சமூகமே இடதுசாரியமாக காட்டி ஏமாற்றப்பட்டது போல், இவர்களும் ஏமாற்றப்பட்டனர்.

 

இன்றும் வலதுசாரி புலியிசத்தை இடதுசாரியமாக காட்ட, இடதுசாரிய புல்லுருவிகள் தான், முனைப்பாக உள்ளனர். இந்த இடது புல்லுருவிகளின் மோசடிகளை தோலுரிக்காமல், எம் சமூகத்தை வலது பாசிசத்தில் இருந்து விடுவிக்க முடியாது. 

 

பி.இரயாகரன்
14.12.2008

 

Last Updated on Sunday, 05 April 2009 06:59