புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!

எங்கும் ஒரு புதிர். ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு. இருப்புக் கொள்ளாத புலம்பல். வரட்சியுடன் கூடிய எதிர்பார்ப்பு. நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆரூடங்கள். இதுவே அன்றாட செய்திகள், கட்டுரைகள். எல்லாம் இதற்குள் சுத்தி சுத்தி ஒப்பாரி வைக்கின்றன. புலி செய்தி மீடியாக்கள் கூட, எதிரியின் கூற்றுகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்லியே, தமது சொந்தப் பிரமையை தக்க வைக்கின்ற அரசியல் அவலம்.

உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது? என்ன தான் நடக்கின்றது?

 

புலிகள் ஒரு எதிர்தாக்குதலை நடத்தவே, தந்திரமாக பின்வாங்குவதாக நம்பும் பிரமை அதிகரித்துள்ளது. எதிர்த்தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கனவு, எதார்த்தத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

புலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாளன் படையை தளபதிகளுக்கு காட்ட வெளிக்கிட்டது முதல், தளபதிகள் மிக விரைவில் வெற்றித் தாக்குதல் என்ற அறிக்கைகள் விட்டு, அவை ஒய்ந்துள்ள நிலையிலும், கனவுகள் பிரமைகள் நம்பிக்கைகளாகின்றது.

 

புலிகள் முதல் அரசு வரை இப்படி நம்புவது, ஒருதலைப்பட்சமாக அதிகரித்து பல்வேறு ஊகங்களாகின்றது. இந்த எல்லைக்குள் ராஜதந்திரிகள் முதல் தொடர்ச்சியாக கருத்துரைப்பவர்கள் அனைவரும், இப்படியே இதற்குள்ளேயே கருத்துரைப்பதுடன், அதையே எதிர்பார்த்தும் காத்துக்கிடக்கின்றனர். நிலைமையை ஆராய அடிப்படையான தரவுகளின்றி, கடந்தகால அனுமானங்களில் இருந்து இவை வெளிப்படுகின்றது.

 

நாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றோம். இது மற்றவர்களுக்கும் எமக்கும் இடையிலான அடிப்படையான அரசியல் வேறுபாடுகளில் இருந்து, வேறுபட்ட முடிவுகளுக்கு வந்தடையக் காரணமாகின்றது.

 

பலரும் புலிகளின் கடந்த வரலாற்று ஒட்டத்தின் ஊடாக அனுமானங்களை, முன் முடிவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு கருத்துரைக்கின்றனர். ஆனால் நாங்கள் அதில் இருந்து மாறாக, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் இருந்து கருத்துரைக்கின்றோம். நாங்கள் எதார்த்த உண்மைகளில் இருந்து நிலைமையை அவதானிக்க, மற்றவர்கள் கற்பனை நம்பிக்கைகளில் இருந்து கருத்துரைக்கின்றனர். முன் முடிவுகளில் இருந்து, விம்பத்தை உருவமாக்க முனைகின்றனர்.

 

புலிகள் ஒரு இராணுவம் என்ற வகையில் அது கொண்டுள்ள பலம், புலித் தலைவர்களின் உறுதி குறையாத அதே மூர்க்கம் எதுவும் வெளிப்படையாக மாறிவிடவில்லை. புலியைப் பற்றிய மதிப்பீடுகள், இங்கிருந்து தான் 99.9 சதவீதமானவை வெளிவருகின்றது. ஆய்வுகள், கருத்துகள் இங்கிருத்து தான் உருவாக்கப்படுகின்றது. புலிகளின் வெளிப்படையான மாறாத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, முன் கூட்டிய எதிர்பார்ப்புகள், அனுமானங்கள் செய்யப்படுகின்றது. தகவல் உலகை இது ஆக்கிரமிக்கின்றது. புலிகள் முதல் அரசுதரப்பு தகவல் வரை, இதுதான் மையச் செய்தியாகின்றது.

 

யுத்தத்தில் முன்னேறும் அரசும் கூட, புலியின் எதிர்த்தாக்குதல் தயாரிப்பா, புலிப் பின்வாங்கலா என்று அச்சமுறுகின்றது. அந்தளவுக்கு புலிகளின் யுத்தமுனைகள் பாரிய எதிர்ப்பின்றி வெல்லப்படுகின்றது. அரசு திகைத்துப் போயுள்ளது.

 

பின்வாங்கல் என்பது முன்னேறுவதற்கான சுயவிமர்சனத்தை அடிப்படையாக கொண்டது. இவ்வாறா புலிகள் செய்கின்றனர். மூதூர் முதல் துணுக்காய் … என்று, பாரிய நிலப்பரப்பில் புலிகள் பின்வாங்கினர் என்பது, தமது சொந்தக் காதில் பூ வைப்பது தான்.


புலிகள் பின்வாங்குகின்றனரா! தோற்கின்றனரா! சரி இது எதுவாக இருந்தாலும், பேரினவாதத்திற்கு இது எப்படி சாத்தியமானது என்பது அவர்களுக்கு கூட புதிராகவே உள்ளது. யுத்த நிலைமையை ஆய்வு செய்யும் எழுத்தாளர்கள் கூட, அதிர்ந்து போயுள்ளனர். எதிர்க்கட்சிகள் அரசு சொல்வது பொய்யாகக் கூடாதா, என்று எதிர்பார்க்கின்றனர்.

 

எங்கும் ஒரு எதிர்த்தாக்குதல் எதிர்பார்க்கப்படுகின்றது, விரும்பப்படுகின்றது. அரசு இதற்கு ஏற்ப பிரதிபலிக்கின்றது. இதை புலிசார்பு தகவல்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதுடன், தமது சொந்தப் பிரமையை மெருகூட்டுகின்றனர். இப்படி புலி தனது சொந்த எதிரியின் கருத்துகள் மூலம், புலியின் எதிர்பார்ப்பை மேலும் வெம்பவைக்கின்றனர்.

 

நாங்கள் இதில் இருந்து மாறுபட்ட வகையில், புலிகள் பின்வாங்கவில்லை அவர்கள் தோற்கின்றனர் என்பதை சொல்கின்றோம். இந்த தோல்வியை மக்கள் புலிக்கு கொடுக்கின்றனர் என்ற உண்மையை நாம் மட்டும் தான் கூறுகின்றோம். புலியின் எதிரி கூட இதைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் புலிகள் எப்படித் தான் இதைப் புரிந்து கொள்ளமுடியும்.

 

மக்கள் புலிகள் உறவில் ஏற்பட்ட மாற்றத்தை, நாம் மட்டும் தான் தெளிவாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். இதை புலிகள் கவனத்தில் எடுக்கவில்லை என்பதோடு, மாறாக மக்கள் புலிகள் உறவை மேலும் மோசமாக்கினர். இந்த வகையில்

 

1. புலிகள் மக்கள் உறவு இன்று எப்படி உள்ளது?


2. புலியின் அணிகளுக்கும், புலித் தலைமைக்கும் இடையில் உள்ள உறவு எப்படி உள்ளது?


3. புலி அணிக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள உறவு எப்படி உள்ளது?


4. புலித் தலைமைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு எப்படி உள்ளது?

 

இது தான் யுத்தத்தின் போக்கை தெளிவாகத் தீர்மானிக்கின்றது. பலரும் இதற்கு வெளியில் மாறுபட்ட வகையில் யுத்தத்தின் போக்கைப் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் நாங்கள், இதுதான் யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கின்றது என்கின்றோம். அமைதி சமாதானம் என்று புலிகள் பேசத் தொடங்கிய காலத்தில், புலிகள் மக்களுடன் கொண்டிருந்த உறவுக்கும், இன்றைய அவர்களின் உறவுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

 

இதை எம்மைத் தவிர, வேறு யாரும் ஏற்றுக்கொள்வது கூட கிடையாது. நாங்கள் மட்டும் தான் மக்களில் இருந்து, இந்தப் பிரச்சனையை அணுகுபவர்கள். நாங்கள் தெளிவுபடவே கூறுகின்றோம், அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில் முறுகல் நிலையையும், பாரிய பிளவையும் ஏற்படுத்தியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.

 

புலிகள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடு நிறைந்த இராணுவம் என்ற வடிவத்தைக் கடந்த, அராஜகத் தன்மை கொண்ட மக்களுக்கு எதிரான ஒரு இராணுவமாக சீரழிந்து விட்டது. மக்களைக் கண்காணித்து, தண்டனை வழங்கும் புலிக் கும்பல், உதிரித்தனமான அராஜகம் மூலம் மக்களைப் பந்தாடுகின்றனர்.

 

ஈவிரக்கமற்ற, மனிதாபிமானமற்ற, மாபியாக் கும்பலாக அன்னியமாகிய கும்பல்கள் தான், மக்களை ஈவிரக்கமின்றி கண்காணிக்கின்றது. யுத்த முனையில் மக்களுக்காக போராட முனைகின்ற பிரிவு ஒருபுறம், மறுபக்கத்தில் அந்த மக்களையே அடக்கியொடுக்கும் அதிகாரக் கும்பல்கள் மறுபக்கம். இதனால் யுத்த முனையில் உணர்வு பூர்வமாகவே போராடும் ஆற்றல் இயல்பாகவே செத்துப்போகின்றது.

 

யுத்தமுனை தொடக்கம் வாழ்வுக்காய் போராடும் மக்கள் வரை, எங்கும் அதிருப்தி. வாய்விட்டுக் கூட புலம்பமுடியாத வாழ்வியல் துயரங்கள். ஒருபுறம் எதிரி, மறுபுறம் புலி.

 

இதற்குள் வாழ்வதற்கான போராட்டம். இதற்குள் போராட்டம் சீரழிந்துவிட்டது. ஊழல், இலஞ்சம் கொண்ட அமைப்பாக, கண்காணிப்புக்கு பயந்து நடக்கும் எல்லைக்குள் புலி சீரழிந்து விட்டது. சொந்த உணர்வு உணர்ச்சி சார்ந்த போராட்ட நேர்மைக்கு பதில், புலியின் கண்காணிப்புக்கு உட்பட்டு உயிர்வாழும் ஒரு நேர்மையற்ற பொய்யான அமைப்பாகிவிட்டது.

 

புலிக் கண்காணிப்பு இல்லையென்றால், புலியையே புலி விழுங்கிவிடும் அளவுக்கு, போராட்ட உணர்வு செத்துவிட்டது. புலி சுயநலம் சுய தியாகத்தை மிஞ்சி விடவில்லை. மக்களுக்காக போராடாத ஒரு இயக்கத்திடம், சுயதியாகம் இருக்கமுடியாது, சுயநலம் தான் ஆட்சி செய்யும்.

 

இதற்குள் வாழும் மக்கள், புலியின் கண்காணிப்பை மீறி வாழ பழகிவிட்டனர். எல்லா வடிவிலும், தம் சொந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க நடத்தும் போராட்டம், நம்பமுடியாத அளவுக்கு புல்லரிக்க வைப்பவை. புலியையே மிஞ்சுகின்றனர். ஆயிரம் ஆயிரம் நம்ப முடியாத கதைகள் உண்டு. ஒரு சில உதாரணங்கள் பார்ப்போம்.

 

1. புலியின் கட்டாயப் பயிற்சியில் இருந்து தப்பி வர என்ன செய்கின்றனர். புலியின் இராணுவ உடைகளை (ஊடுருவித் தாக்குபவனும் இதையே செய்கின்றான்) அணிந்து, எல்லை ஒரங்களில் அவற்றை களைந்துவிட்டு தப்பி வருகின்றனர். இதை வழிகாட்டிச் செல்லும் வழிகாட்டிகளும், கூலிக்கு உருவாகியுள்ளனர். புலியின் இராணுவச் சீருடையை கொடுப்பது, புலியில் உள்ள உறவினர்கள் தான். அண்மையில் இப்படி தப்ப முயன்று கைதான சம்பவத்தின் போது, கைதானவருக்கு கட்டாயப் பயிற்சியும், தந்தைக்கு பாதாள சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. தந்தையிடம் மீட்க பல இலட்சம் பணம் இலஞ்சமாக கோரப்பட்டது.

 

2. ஒரு இளம் பெண்ணை கட்டாயப் பயிற்சிக்கு இட்டுச்செல்ல புலிகள் முயன்ற போது, அவரை பெற்றோர் புலிக்கு எதிராக (இப்படி நிறைய சம்பவம் வெளிவருகின்றது) ஒளித்துவைத்தனர். அவருக்கு 18 வயதானவுடன் அவசரம் அவசரமாக திருமணம் செய்து வைத்தனர். இந்த பெண் கர்ப்பமாகிவிட்டாள். இதன் பின் அப்பெண்ணை கண்டுபிடித்த புலிகள், பெண்ணை கர்ப்பத்துடன் கடத்திச்சென்றனர். கர்ப்பத்தை அழித்து, தமது போராட்டத்துக்குள் இணைத்தனர்.

 

3. கட்டாயப்பயிற்சிக்கென பலோத்காரமாக அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண் ஒருவர் தப்பியோடியுள்ளார். அவர் எங்கு தப்பிச் சென்றார் என்பது யாருக்கும் தெரியாததாக உள்ளது. ஆனால் அப் பெண்ணின் தாயார் மகள் தப்பிச் சென்றதற்காக சிறைப் பிடிக்கப்பட்டுள்ளார். தாய் சிறையில் மகளோ எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. மகள் மீண்டும் திரும்பினால் மட்டுமே தாய் விடுவிக்கப்படுவார்.

 

இப்படி எத்தனையோ சம்பவங்கள். இப்படி திரட்டப்பட்டவர்கள் உள்ளடங்கத் தான், போர்முனை தோல்வியும் சரி அவர்களின் மரணங்களும் நிகழ்கின்றது. இதையே தியாகம் என்கின்றனர்.

 

எத்தனையோ சம்பவங்கள், கண்ணீர் கதைகள். இளம் வயதுத் திருமணங்கள், பொருந்தாத் திருமணங்கள், விருப்பமற்ற திருமணங்கள். தப்பியோடும் சம்பவங்கள். புலிக்கு பயந்து நடுங்கும் உளவியல் அவலங்கள்.

 

இந்தளவையும் தாண்டி மயிர் கூச்செறியும் வகையில், புலிக்கு எதிராக மக்கள் தப்பியோட வைக்கும் போராட்டங்கள். இப்படி மக்கள் புலிக்கு எதிராகவே இயங்கும் வகையில், அவர்கள் சிந்தனை செயல் எல்லாம் அமைந்துவிடுகின்றது. அச்சம் பீதி கடந்த நடவடிக்கைகள், இயல்பாகவே புலிக்கு எதிராக பழக்கப்பட்டு விடுகின்றது. வாழ்வதற்கு முனையும் மக்களுக்கு, வேறு வழி கிடையாது.

 

புலிகள் இதைக் கட்டுப்படுத்த அவர்கள் செய்யக் கூடியது, காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளைத் தான். அச்சத்தை மனித உணர்வாக்கும் வண்ணம், உதிரியான லும்பன் வன்முறைகள். விளைவு மாயமான சுடுகாட்டில், மக்கள் புலிகளை மெதுவாக எரிக்கின்றனர்.

 

உண்மையில் புலிகளில் போராடும் அணிகளின் உணர்வு, பாரிய உளவியல் சிக்கலுக்குள் சிக்கி மரணித்துவிட்டது. யாருக்கு எதற்கு யுத்தம்? தன்னால் துன்படும் இந்த மக்களின் வாழ்வுக்காகவா, என்ற இந்தக் கேள்வி அவர்களிடம் போராட்ட உணர்ச்சியையே அழித்துவிட்டது. அவன் தனது சொந்தத் சாவைத் தவிர, வேறு எந்த உணர்ச்சியுமற்ற பிணமாகவே செத்துக் கிடக்கின்றான். இதைத்தான் பேரினவாத அரசு தனது சொந்த வெற்றியாக்குகின்றது.

 

யுத்த முனையில் திணிக்கப்பட்டு, கண்காணிக்கப்படும் யுத்தத்தில், உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் ஒருவனால் போராட முடிவதில்லை. இந்த புதிய சூழலை புரிந்துகொள்ளாத யாராலும், புலியை மதிப்பிடவே முடியாது.

 

புலித்தலைமை முதல் புலிக்கு எதிராக தும்முபவர்கள் வரை, புலிகளின் எதிர்த்தாக்குதல் பற்றிய பிரமையுடன் காத்துக்கிடக்கின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை என்பதை, போராடுபவனின் உணர்வு சொல்லுகின்றது.

 

இதை செய்யும் மனோபலத்தை, போராடுபவன் கொண்டிருக்கவில்லை. ஏதாவது தப்பித்தவறி அது நடந்தால், அவை தற்செயலானது. அதாவது இரண்டு இராணுவங்கள் என்ற வகையில் நடக்குமே ஒழிய, அவை உணர்வுபூர்வமானதாக அமையாது. அது எப்போதோ செத்துவிட்டது. தமிழ் தேசியப் போராட்டம் போல் தான் இதுவும் செத்துவிட்டது.

 

பி.இரயாகரன்
03.08.2008

 

 

Last Updated on Monday, 04 August 2008 05:48