அரசு அல்லது புலியை நாம் ஆதரிக்கா விட்டால் 'என்ன தீர்வு" என்று எம்மிடம் கேட்பவனின் அரசியல் என்ன?

இதுவோ எம்மை எதிர்கொள்ள முடியாதவனின் எதிர்வாதம். இது நாம் சந்திக்கும் அரசியல் சவால். எம்மால் அம்பலமாகும் புலிகளும் புலியெதிர்ப்பும் தான் தொடர்ச்சியாக இந்த வாதத்தை எம்மை நோக்கி எழுப்புகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நலனில் இருந்து இதைக் கேட்கவில்லை. இந்த அடிப்படையில் சுயமாக சிந்திப்பது கிடையாது.

 

 

வேடிக்கை என்னவென்றால் புலிக்கும் அரசுக்கும் வெளியிலான மக்களின் அரசியல் செயல்தளத்தை இவர்களே முன்நின்று அழித்த வண்ணம் தான் அந்த அரசியலை முன்னெடுத்தபடி தான் எம்மை நோக்கி இந்த அரசியல் தர்க்கத்தையே வைக்கின்றனர். மக்களுக்கான அரசியல் சாத்தியமற்ற ஒன்றாக கூறுமளவுக்கு இந்த மக்கள் விரோதத்தை 'ஜனநாயக" மாக்குகின்றனர். இப்படி இவர்கள் யாருக்காக ஊளையிடுகின்றனர்? மக்கள் அரசியல் என்பது ஒரு விவாதப்பொருளல்ல என்று கூறுமளவுக்கு புலம்பெயர் சூழலில் எதிர்ப்புரட்சிகரமான பண்பு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

 

ஒன்றில் புலியை ஆதாpப்பது அல்லது அரசை ஆதாpப்பது என்ற ஒற்றைப்பரிமாண பாசிச  அரசியல் முன்தள்ளப்படுகின்றது. இதற்கு வெளியில் இன்று மாற்று அரசியலுக்கு இடமில்லை என்கின்றனர். இது தான் புதிய அரசியல் சூழலின் சாரப் பொருள். இதைப் பொதுவில் இனம் காணாமல் இருப்பது இதை நாம் தனித்து எதிர்கொள்வது நாம் மட்டும் சந்திக்கும் புதிய அரசியல் நெருக்கடி. 

 

அரசுடன் அல்லது புலியுடன் சேர்ந்து இயங்குவதா மக்கள் அரசியல்?

 

இந்த கேள்வி ஒருபுறம். இதுதான் மக்களுக்கான அரசியல் என்று கூறுகின்ற பெரும்பான்மையான அரசியல் வாதங்கள். இவர்கள் மக்கள் அரசியல் என்பது சாத்தியமற்ற ஒன்றாக கூறுகின்றனர். இப்படி கூறும் இவர்கள் தாம் மக்களுக்காகத் தான் போராடுகின்றோம் என்று கூறுகின்ற வக்கிரமும் இதற்குள் அரங்கேறுகின்றது.

 
 
அரசுடன் அல்லது புலியுடன் எம்மை அடையாளப்படுத்தத் தவறுவது எமது கருத்தின் மீதான குற்றமாக காட்டப்படுகின்றது. இது புலி அல்லது புலியெதிர்ப்பு ஐக்கியத்துக்கு எதிரானதாக சித்திரிக்கப்படுகின்றது. மக்கள் அரசியலை வைப்பது ஒரு இணக்கமற்ற அணுகுமுறையாகவும் வரட்டுத்தனமானதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

 

இவர்கள் அரசின் பின்னும் புலியின் பின்னும் இருந்தபடி அதற்குள் நுழைந்தபடி அதை நியாயப்படுத்தியபடி எம்மீது 'தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு" என்ற எதிர் தாக்குதலை நடத்துகின்றனர்.

 

சரி இவர்கள் யார்? இவர்களின் அரசியல் அடையாளம் என்ன?

 

தேசியத்தையும் ஜனநாயகத்தையும் ஒரு சேர  மறுக்கின்றவர்கள் இவர்கள். புலிகள் தாம் விரும்பியவாறு தேசியத்தையும் அரசு தான் விரும்பியவாறு ஜனநாயகத்தையும் வைக்கின்றது. இதைத் தான் அவர்கள் மக்களின் விடுதலைக்கான பாதை என்கின்றனர். தமக்கே மக்கள் ஆதரவு உண்டு என்கின்றனர். இந்த எல்லையை மீறாத வகையில் அவர்கள் மக்கள் மேல் பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த எல்லைக்கு மேல்> மக்களுடன் வேறு எந்த உறவும் கிடையாது.

 

இவர்களின் அரசியல் ஏஜண்டுகள் தான் மக்கள் போராட்டம் சாத்தியமற்றது என்கின்றனர். அதை பற்றிக் கதைப்பதையும் ஏன் கதைப்பவர்களின் சுதந்திரத்தையும் கூட அவர்கள் மறுக்கின்றனர்.  

 

இவர்கள் யாரும் மக்களை அரசியல் ரீதியாகவும் அவர்களின் சொந்த செயல் சார்ந்த அரசியல் கோரிக்கைகளுடன் அணிதிரட்டுவது கிடையாது. அதை அவர்கள் சாத்தியமற்ற ஒன்றாகவும் எதார்த்தமற்ற ஒன்றாகவும் சித்தரிக்கின்றனர். இதை விமர்சிப்பதும் மறுப்பதும் வரட்டுத் தனமானது என்கின்றனர்.

 

மக்கள் போராட்டத்தைக் கோருவதே வரட்டுத்தனமானது என்கின்றனர். இவர்கள் இப்படி கூறிக்கொண்டு மக்கள் சார்ந்த அனைத்து செயல் சார்ந்த வழிகளையும் சிந்தனை முறைகளையும் மூடிவிடுகின்றனர். பாசிசத்தை மட்டும் தத்தம் அரசியல் வழிகளாகக் கொண்டு 'தேசியம்" என்றும் 'ஜனநாயகம்" என்று தாமாகவே மக்களுக்கு வெளியில் கொக்கரிக்கின்றனர்.

 

எதிர்தரப்புக்கு எதிராக இதில் ஒன்றை மறுப்பதன் மூலம் எதிர்தரப்பு தரமறுப்பதை காட்டி ஐயோ தமிழ்மக்களின் உரிமை என்று தலையிலடித்து கதறுகின்றனர். இப்படித்தான் இதற்குள் தான் இலங்கை அரசியல் இருக்கமுடியும் என்கின்றனர். இதைத் தமக்குள் தாம் போற்றுகின்றனர் எதிர்தரப்பை தூற்றுகின்றனர். இப்படி இரண்டு சமூக விரோத எதிர்மறைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தம்மைத் தாம் நேராக்க முனைகின்றனர். 

    

புலியெதிர்ப்பு அரசியலை நாம் வெட்டொன்று இரண்டொன்றாக முறித்தாக வேண்டியநிலை. அரசு ஆதரவு கொண்ட புலியெதிர்ப்பும் மக்கள் அரசியலை முன்வைப்பவர்களும் ஒன்றாக கூடி நடனமாடிய வேஷத்தை அனுமதிக்க முடியாது. அரசுடன் சேர்ந்து இயங்குபவன் மக்களின் முதல்தரமான எதிரி. இதைப் பிரகடனம் செய்யாத சமரசங்கள் அனைத்தும் அரசு சார்பானதே. இது இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் எதிரானது. அரசு குறிப்பாக பேரினவாதமாக இருப்பதால் தமிழ் மக்களின் பிரதான முதன்மை எதிரி. அவனுடன் கூடிக் குலைக்கின்றவர்களோ இனவெறி பாசிட்டுகள் தான். இந்த எதிரிகளுடன் நாம் விவாதத்தை மக்களுக்காக செய்ய முடியாது. மாறாக எதிரியை அம்பலப்படுத்தி போராட வேண்டியது எம்முன்னுள்ள பணி. 

 

பேரினவாத அரசுசார்பு பிரிவினரோ அரசுடன் சேர்ந்து இயங்குவதைத் தவிர அதனிடம் மக்களுக்கான மாற்று அரசியல் எதுவும் கிடையாது. இப்படி அரசுக்காக கூலிக்கு மாரடிப்பவர்கள் தான் பெரும்பாலான 'ஜனநாயக"வாதிகள். இதை இல்லை என்று சொல்ல அவர்களிடம் எந்த அரசியலும் மாற்றாக கிடையாது.

 

'துரோகி! துரோகி தாண்டா!!" என்ற எனது முந்தைய கட்டுரை> அவர்களின் இழிவான மலிவான அரசியலை அம்பலமாக்கியதைத் தொடர்ந்து பலரும் 'ஜனநாயகம்" பற்றி ஒப்பாரி வைத்து கதறுகின்றனர். அரசுடன் சேர்ந்து இயங்குவது தான் சாத்தியமான ஒரேயொரு 'ஜனநாயக" வழி என்கின்றனர். இலங்கை - இந்திய அரசுடன் சேர்ந்து நிற்கும் துரோகத்தை அரசியலாக முன்னிறுத்துகின்றனர். புலியல்லாத தளம்> இப்படி அம்பலமாகின்றது. அவர்கள் தமது துரோகத்தை மக்களுக்கான தமது சொந்த தியாகமாக பறைசாற்றுகின்றனர்.

 

இப்படி முன்னாள் இன்னாள் கொலைகாரர்கள் எல்லாம் கூடி இப்படித்தான் தமிழ் மக்களின் 'ஜனநாயகத்தை" பேரினவாத பாசிசமாக மீட்கின்றனர். இதைவிட இவர்களிடம் மாற்றான மக்கள் அரசியல் எதுவும் கிடையாது. இப்படி மக்கள் விரோதிகள் புலியின் எதிர்மறை அரசியலைப் பயன்படுத்தி தனது பேரினவாத பாசிசத்தை 'ஜனநாயகமாக" ஆதாpக்க கோருகின்றனர்.

 

புலியின் படுகொலை அரசியல் ஒருபுறம் ஆட்டம் போட அதைக் கூறிக்கொண்டு இலங்கை அரசை 'ஜனநாயக" அரசாக நியாயப்படுத்துகின்றனர். புலியின் படுகொலைகளுக்காக கண்ணீர் வடிக்கும் இந்த 'ஜனநாயக"வாதிகள் அரசின் படுகொலை அரசியலை ஆதாpக்கின்றனர். இப்படி பாசிச அரசியலின் எடுபிடிகளாக இருப்பதைத் தான் மக்கள் அரசியல் என்கின்றனர்.

 

இப்படிக் கூறுவதன் மூலம் தம்மை 'ஜனநாயகவாதி"கள் என்கின்றனர். இந்த புலியெதிர்ப்பு அரசியல் பேரினவாத பாசிசத்தை தேர்ந்தெடுத்தால் அது  சட்டபூர்வமான 'ஜனநாயகமாகவும்" புலிப் பாசிசத்தை சட்டபூர்வமற்றதால் அது 'ஜனநாயகமற்றதாகவும்" காட்டி நியாயப்படுத்துகின்றனர்.

 

இப்படி இரண்டில் ஒன்றாகவே சமூகம் இருக்க முடியும் என்று கூறி சமூகத்தை தமக்கு ஏற்ப  பிரித்து திரித்து விடுகின்றனர். இதற்கு வெளியில் எந்த மாற்றுச் சிந்தனையும் கிடையாது என்கின்றனர். இதற்கு எதிராக விமர்சனங்கள் எழும் போது இலங்கை அரசுடன் சேர்ந்து நிற்பதைத் தவிர 'ஜனநாயகத்தை" மீட்க வேறு எந்த மாற்று வழியும் கிடையாது என்கின்றனர். 'ஜனநாயகத்தை" மீட்க இலங்கை - இந்தியாவுடன் சேர்ந்து இயங்குதல் தான் எதார்த்தமான வழி என்கின்றனர். இப்படி புலியெதிர்ப்பு 'ஜனநாயக" வழி இன்று பாசிச முகத்துடன் அம்பலமாகின்றது.

 

இதே எதிர்மறையில் தான் புலித் 'தேசியமும்" இயங்குகின்றது. புலியை விட்டால் தேசியத்தை பாதுகாக்கவும் மீட்கவும் வேறு எந்த எதார்த்தமான மாற்றும் கிடையாது என்கின்றது. இந்த வாதங்கள் மூன்றாம் தரப்பான எமக்கு எதிராக வைக்கப்படுகின்றது.

 

இப்படி இரண்டு எதிர்மறைகளும் இலங்கையில் தத்தம் படுபிற்போக்கான அரசியலை தக்கவைக்க முனைகின்றன. இதற்கு ஏற்ப நியாயவாதங்களை கற்பிக்கின்றனர். இரண்டும் எம்மிடம் ஒரே கேள்வியைத் தான் கேட்கின்றது.

 

இதைவிட வேறு மாற்றுவழி என்ன என்று கேட்கின்றது? இப்படி அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு மக்களின் முதுகில்; ஓங்கிக் குத்துகின்றனர். இதை அம்பலப்படுத்தும் எம்மை கம்யூட்டரின் முன் அமர்ந்து இருந்து எழுதுவதாகவும் ஐரோப்பாவில் இருப்பதாகவும் கம்யூட்டர் புரட்சி செய்வதாகவும் ஒருசேர இருதரப்பும் கூறுகின்றனர்.

 

இப்படி கூறும் இவர்கள் தான் அன்றும்-இன்றும் எம்மை மண்ணில் அரசியல் செய்ய அனுமதிக்காத பாசிட்டுகள். நாம் மண்ணில் கால்பதித்தால் உடனடியாகவே கொன்றுவிட திடசங்கர்ப்பம் கொண்டவர்கள் தான்.

 

எமது தொடர்ச்சியான எழுத்தோ இவர்களை அம்பலமாக்குகின்றது. இருதரப்பும் ஆப்பிழுத்த குரங்காட்டம் ஒருபுறம் காட்டுக் கூச்சலாக எமக்கு எதிராக கத்துகின்றனர். மறுபுறம் மரப்பிளவில் விட்ட அரசியல் வாலை மீட்க முடிவதில்லை. அது எம்மீதான அரசியல் வெறுப்பாக காழ்ப்பாக அவதூறாக மாறுகின்றது.

 

இவர்கள் எமக்கு எதிராக கொண்டுள்ள அரசியல் என்ன? 

 

1.பேரினவாதம் மறுக்கும் தமிழ் தேசியத்தை புலிக்கு வெளியில் எப்படி பாதுகாப்பது என்கின்றனர். இப்படி கூறி புலியை ஆதரிக்கின்றனர்.

 

2.புலிகள் மறுக்கும் ஜனநாயகத்தை மீட்க அரசை விட்டால் மாற்று வழி என்ன என்று கேட்கின்றனர். இப்படி கூறி அரசை ஆதரிக்கின்றனர்.

 

இரண்டு தரப்பும் எமக்கு எதிராக கூறுவது இதைத் தான். எம்மை நோக்கி எழும்பும் இந்த வாதம் மக்கள் விரோதம் என்பதால் எம்மீதான அரசியல் அவதூறாக மாறுகின்றது. நீங்கள் என்னத்தைக் கிழித்தீர்கள் என்கின்றது? எத்தனை பேர் உள்ளீர்கள் என்கின்றது? கம்யூட்டருக்கு முன்னால் புரட்சி செய்கின்றீர்கள் என்கின்றது. மண்ணின் எதார்த்தம் தெரியாது கதைக்கின்றீர்கள் என்கின்றது. இதன் பின்னுள்ள தியாகம் மனிதாபிமானம் சேவை என அனைத்தையும் மறுக்கின்றீர்கள் என்கின்றது. வரட்டுத்தனமாக கதைக்கின்றீர்கள் என்கின்றது. இப்படி பல குற்றச்சாட்டுகள்.

 

இவை எல்லாம் எதற்காக? புலியை ஆதரி அல்லது அரசை ஆதரி என்ற அவரவர் பாசிச அரசியல் நிலைக்கு ஏற்பத்தான் வைக்கின்றனர். இதில் ஒன்றை ஆதரி எல்லாம் சரியாகிவிடும் என்பதே இவர்கள் தரப்பு அரசியல் வாதம்.

 

இந்த வகையில் நாங்கள் மட்டும் தான் புலிக்கும் – அரசுக்கும் எதிராக உள்ளவர்கள் என்ற அடிப்படையில் எம்மை நோக்கி அவர்கள் ஒரே அரசியல் கண்ணோட்டத்தில் எமக்கு எதிராக  ஒன்றுபட்டு நிற்க முனைகின்றனர். ஒரே விதமான குற்றச்சாட்டை எம்மீது வைக்கின்றனர்.

 

இவர்கள் குற்றம்சாட்டும் நாங்கள் யார்? இந்தக் கேள்விக்கு பதில் என்பது மிகத் தெளிவானது. தேசியமாகட்டும் ஜனநாயகமாகட்டும் எதுவாக இருந்தாலும் இது மக்களின் சொந்த விடுதலையுடன் தொடர்புடையது என்பதை அரசியலாக கொண்டவர்கள் நாம். மக்கள் தமது சொந்த விடுதலைக்காக அவர்களே போராட வேண்டிவர்கள் என்ற அடிப்படையில் நடைமுறை அரசியலை முன்வைப்பவர்கள். இந்த அடிப்படையில் இயங்குபவர்கள் நாம்.

 

பி.இரயாகரன்
25.05.2008

பின்குறிப்பு : தமிழ் மக்களின் மாற்றுப் பாதை என்ன? மிக விரையில் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்.

Last Updated on Monday, 26 May 2008 11:45