மக்கள் போராட்டம் என்றால் என்ன?

மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.

இது தனக்குள்ளான ஒடுக்குமுறைகளை அனுமதிக்காது. அதாவது தனக்குள்ளான முரண்பாடுகளை களையும் போராட்டத்தை நடாத்திக் கொண்டு, எதிரியை தனிமைப்படுத்தி தனது சொந்த விடுதலையை அடையப் போராடுவது தான் மக்கள் போராட்டம்.

 

இப்படி போராடாத, போராட முனையாத அனைத்துமே மக்கள் விரோதப் போராட்டம் தான். இப்படி குறைந்தபட்சம் மக்கள் போராட்டம் இருக்க, மக்களை பிளவுபடுத்தி அதை அரசியலாக பாதுகாக்கும் மக்களின் எதிரிகள் எல்லாம், தாம் மக்கள் போராட்டம் நடத்துவதாக கூறிக்கொள்கின்றனர்.

 

தாம் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு தான், ஜோஷ் புஸ் முதல் பின்லாடன் வரை மக்களின் தொண்டைக்குழியையே அறுக்கின்றனர். புலிகளாக இருக்கலாம், புலியெதிர்ப்பாளனாக இருக்கலாம், போலிக் கம்ய+னிஸ்ட்டாக இருக்கலாம், அரசியல் கருத்தற்றவராக கூறிக்கொள்பவராக இருக்கலாம், ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனமாக இருக்கலாம், இப்படி பற்பலவிதமானவர்கள் எல்லாம் மக்களின் விரோதிகளாகவே  உள்ளனர். ஆனால் இவர்கள் தாம் நடத்துவது, மக்கள் போராட்டம் என்கின்றனர்.

 

பணத்தை, ஆயுதத்தை, அதிகாரத்தை வைத்துக் கொண்டும், சமூக பிளவுகளை விதைத்துக் கொண்டும் தான், இவர்கள் மக்களின் வாழ்வை அழித்தொழிக்கின்றனர். மக்கள் வாழ்வின் உண்மையை அறிந்து விடாது இருக்கும் வண்ணம், தம்மைச் சுற்றி போலியானதும் கவர்ச்சியானதுமான மலிவான முலாம் மூலம் கவசமிட்டு வைத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் சிறிதொரு பிரிவின் நலன்களுக்காக, அனைத்தையும் வளைத்துப் போடுகின்றனர். 

 

இவர்களால் தான் உலகெங்குமுள்ள மக்கள் தம் வாழ்வை இழக்கின்றனர். வெறும் நுகர்வு மந்தையர்களாக, அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இவர்களின் கோட்பாடோ, மக்கள் தமக்காக தாமே போராட முடியாது. மாறாக தம்மை மீட்பாளராக, மக்கள் தமது மந்தைக் குணத்துடன் ஏற்க வேண்டும். இதை மீறினால், சாமபேதம் பாராது எதையும் எப்படியும் கையாள்கின்றனர்.

 

விடுதலைப்புலிகளின் பாசிசமாகட்டும், பிள்ளையானின் கிழக்கு ரவுடித் தனமாகட்டும், தாலிபானின் இஸ்லாமிய கொடூரமான ஆட்சியாகட்டும், இந்தியாவின் போலி கம்யூனிஸ்டுக்களின் (உதாரணம் நந்திக்கிராம்) வக்கிரமாகட்டும், ஜே.வி.பியின் பச்சையான இனவாதமாகட்டும், இப்படி மக்களின் பெயரில் இவர்கள் செய்யும் மக்கள் விரோத செயல்களையே மக்களின் விடுதலை என்கின்றனர். 

 

மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தமது சொந்த விடுதலையை அடைதல் தான். இதை மறுப்பதோ, மிகமோசமான அயோகியத்தனமாகும். மக்களின் விடுதலை என்பது, தம் மீதான அடக்குமுறைகளை களைதல் தான். அது சமூகத்தில் எந்த விதத்தில் எப்படி வந்தாலும், அது எந்த முரண்பாடாக இருந்தாலும், அதைக் களைந்து மக்கள் தமது விடுதலையை அடைதல் தான் மக்கள் போராட்டம். இதுதான் மக்களின் விடுதலையை அடிப்படையாக கொண்ட, விடுதலைப் போராட்டம். இது சக மனிதனை ஒடுக்காது. சக மனிதன் மீதான ஒடுக்குமுறைகளைக் களைய தானே முன்னின்று போராடும்.

 

இப்படி மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தம் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலையை அடைவதற்காக போராடுவதை அடிப்படையாக கொண்டது. இந்த மக்கள் போராட்டத்தை யாரும் குத்தகைக்கு எடுக்க முடியாது. தாம் விடுதலை பெற்றுத் தருவதாக, ஒரு குழு கூற முடியாது. மாறாக அந்த மக்கள், தமது சொந்த விடுதலைக்காக போராடுவது தான் மக்கள் போராட்டம். இப்படி மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தாம் தெரிவு செய்கின்ற எந்த வழியிலாவது தமது சொந்த விடுதலையை அடைதல் தான்.

 

தலைமைகள் என்பது, மக்கள் தமது போராட்டத்தின் தேவைக்கு ஏற்ப, உருவாக்கும் அமைப்பு வடிவங்கள் தான். மக்களின் சொந்த நலனுக்கு வெளியில், மக்கள் தலைமைகள் இருக்க முடியாது. இது மக்கள் போராட்டத்தில் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இப்படித்தான் மக்கள் தலைமைகள் உருவாகின்றது. சமூகம் எதிர் கொள்ளும் முரண்பாடுளை தீர்க்கின்ற போராட்டத்தில் தான், உண்மையான மக்கள் தலைமைகள் உருவாகின்றது.

 

சமூகத்துக்கு எதிரான முரண்பாடுகள் எவை?

மனித இனம், தனது சொந்த விடுதலையை நாடி நிற்கின்றது. இதை கோட்பாட்டு ரீதியாகவே, இந்த உலக ஒழுங்கு மறுக்கின்றது. மக்கள் தனது சொந்த விடுதலையை நாடுகின்றது என்றால், தனக்கு எதிரான அனைத்து முரண்பாட்டையும் களையக் கோருகின்றது. இதுவல்லாத விடுதலைப் போராட்டம் அல்லது தீர்வுகள் அல்லது மனித வாழ்வு  என்பது, அந்த மக்களை ஓடுக்குவது தான். 

 

வர்க்கப் போராட்டமாக இருக்கலாம், தேசிய போராட்டமாக இருக்கலாம், சாதிப் போராட்டமாக இருக்கலாம், பெண்ணிய போராட்டமாக இருக்கலாம், இவை எதுவாக இருந்தாலும், இதில் ஒன்று சமூகத்துக்கும் சரி தனிமனிதனுக்கும் சரி முதன்மை முரண்பாடாக அமைவது எதார்த்தம். இந்த எதார்த்தம் என்பது இதில் இருந்து விடுவிக்கும்  போராட்டமாக மாறும் போது, அது தன்னைச் சுற்றியுள்ள மக்களின் மொத்த விடுதலையை பற்றி கவனத்தில் கொள்ளுகின்றது. தனித்து விடுதலை அடைதல் சாத்தியமில்லை.  இதைக் கவனத்தில் கொள்ளாது போராடினால், அது இயல்பாக மக்களையே ஒடுக்குகின்ற போராட்டமாக சீரழிந்து விடுகின்றது. எதை பிரதான முரண்பாடாக கருதியதோ, அது மக்களிள் விடுதலைக்குரிய ஒன்றாக இருப்பதை மறுக்கத் தொடங்குகின்றது. இதை உலகம் முழுக்க நாம் காணமுடியும். 

 

தமிழ் தேசியம் எப்படி பாசிசமானது?

தமிழ் தேசியம் தன் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக தேசிய முரண்பாட்டை களைய முற்பட்ட போது, தமிழ் மக்களின் உள்ளான சமூக முரண்பாட்டை களைய மறுத்ததன் மூலம் தான், அது தன்னைப் பாசிசமாக்கிக் கொண்டது. இதை நாம் புலிகள் மீது மட்டும் குறிப்பாக குற்றம்சாட்ட முற்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் சகல குழுக்களும் (ஒரு சில சிறு குழுக்களைத் தவிர) சமூக முரண்பாடுளை களைந்து, தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த மறுத்தன. மாறாக சமூக முரண்பாடுகளைப் பாதுகாத்து, சமூக பிளவுகளை விதைத்து, தமிழ் தேசியத்தையே சுடுகாடாக்கினர். மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கினர். புலிகளோ இதை பல பத்தாயிரம் சகோதாரப் படுகொலைகள் மூலம் அரங்கேற்றினர்.

 

தமிழ் தேசியத்தில் மக்களை ஜக்கியப்படுத்துவதற்கு பதில், மக்களைப் பிளந்து, மக்களையே ஈவிரக்கமின்றி கொன்றனர். மக்கள் போராட்டம் என்பதற்கான சகல அடிப்படைகளையும் தகர்த்தனர். 

 

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு பேரினவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டிய மக்கள் போராட்டம், ஒரு குழுவின் நலன்சார்ந்த போராட்டமாக குறுகிப்போனது. மக்கள் மத்தியில் உள்ள சமூக முரண்பாட்டைப் பயன்படுத்தி, குழுவின் குழுப் போராட்டமாக்கியது.

 

மறுபக்கத்தில் பேரினவாதம் தமிழ் மக்களை முழுவீச்சில் ஒடுக்கியது. ஆனால் தமிழ் மக்களின் மக்கள் போராட்டம், சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் ஒரு மக்கள் போராட்டமாக உருவாகவில்லை. ஒரு குழு நலன் சார்ந்த போராட்டமாய் சீரழிந்தும், படிப்படியாக மாபியாத்தன்மை பெற்றும் அது பாசிசமாகியது. 

 

தமிழ் சமூகம் ஒன்றுபட்டு எழுந்து நிற்க வேண்டும் என்றால், தமிழ் சமூகத்தின் உள்ளான தனது சொந்த முரண்பாடுகளை களைந்து இருக்க வேண்டும். இதுதான், ஒன்றுபட்ட மக்கள் தேசியத்தையும், மக்கள் போராட்டத்தையும் உருவாக்கியிருக்கும்.

 

தமிழ் தேசியத்தின் சொந்தக் குரல் கூட இதுதான். மக்கள் அதைத் தான் விரும்பினர். இதனால் தான் அனைத்து இயக்கமும் இதை தமது தேசிய வேலைத்திட்டத்தில் பெயரளவிலாவது குறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இப்படி மக்களை தாம் முரண்பாடுகளைக் களைந்து ஒன்றுபடுத்துவதாக காட்டிக் கொண்ட இயக்கங்களின் தேசியம், மக்களின் முதுகிலேயே குத்தி ஏமாற்றினர்.

 

எத்தனை நாளைக்குத் தான் மக்களை ஏமாற்ற முடியும். விளைவு படிப்படியாக மக்களை எதிரியாக கருதி, அவர்களை ஒடுக்கத் தொடங்கினர். பின் அதுவே கொலைக் களமாகியது. இப்படி மக்களை ஒன்றுபடுத்த தடையாக இருந்த முரண்பாடுகளை களைய மறுத்து, அதே முரண்பாடுகளை மேலும் ஆழமான பிளவுகளாக விதைத்தனர். இப்படி மக்களின் ஐக்கியம், தேசியம் என்றவை கருவிலேயே சிதைக்கப்பட்டது. தனிமனித நலன் சாhந்து, குழு நலனாக அவை முதன்மை பெற்றறு. இது மக்களையே எதிரியாக்கியது. அனைத்தும் தனிமனிதர் சார்ந்த குழு நலனுக்கு உட்பட்டதாக பார்த்து, தேசியத்தையே அதற்கு ஏற்ப நலமடித்தனர். 

 

இப்படி ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்துக்கான, அரசியல் அடிப்படையே மறுதலிக்கப்பட்டு வந்தது. தமிழ் தேசியம் தமிழர்களை ஒன்றுபடுத்துவதற்கு பதில், அவர்களை பல கூறாக பிளந்தனர். இங்கு மக்கள் போராட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாது போனது. 

 

குழுவின் நலன் முதன்மை அம்சமாகி, அதுவே போராட்டமாகியது. குழுநலன் முதன்மையாக, தமிழ் மக்கள் என்ற பொது அடையாளம் மறுப்புக்குள்ளானது. தனக்குள் இருந்த ஒடுக்குமுறைகளைக் களைய மறுத்தது. மாறாக பிளவை பாதுகாத்து, தனது சொந்த குழுநலனை முதன்மைப்படுத்தியது. தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதில், அவர்களைப் பிளந்தது. பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்தது. இப்படி மக்கள் போராட்டம் என்பது குழுப் போராட்டமாகி விட, மக்களை பலாத்காரமாக யுத்த முனையில் ஈடுபடுத்தி அழிக்கின்றது.

 

புலித் தேசியமோ, மக்கள் விரோதப் போராட்டமாகிவிட்டது

1. தமிழ் என்ற மொழி ஊடான தமிழ் தேசிய அடையாளத்தின் கீழ் வாழ்ந்த முஸ்லீம் மக்களை, தமிழ் தேசியத்தின் பெயரில் இயங்கிய குழுக்கள் என்ன செய்தனர்? முஸ்லீம் மற்றும் தமிழ் மக்கள் இடையேயான முரண்பாடுகளை எப்படிக் களைய முனைந்தனர். தமிழ் மொழி என்ற அடையாளம் மூலம் ஐக்கியத்தை வளர்த்தார்களா? அல்லது பிரித்தார்களா? இங்கு முஸ்லீம் மக்களையே தமிழ் தேசியத்துக்கு எதிரான எதிரியாக நிறுத்தியது. இதையே மக்கள் போராட்டம் என்று சொல்லுகின்றவர்களை, விவாத அரங்கிலும் நாம் காண்கின்றோம். 

 

2. எமது போராட்டம் பிரதேசவாத பிளவுகளை ஒழித்துக்கட்டியதா ? இல்லை. மாறாக அதை வளர்த்து. பிரதேசவாத பிளவுகளை ஆழமாக்கியது. மக்களை பிளந்து ஐக்கியத்தையே சிதறடித்துள்ளது. இந்த நிலையில் எப்படித் தான் மக்கள் போராட்டம் நடக்கும்.

 

3. தமிழ் தேசமே எழுந்து நிற்கும் வண்ணம், அது மக்கள் போராட்டமாக மாற வேண்டும் என்றால், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் குரல்களையும் தேசியம் உள்வாங்க வேண்டும்.  மக்கள் தமது கருத்துச் சுதந்திரத்தை, செயல் சுதந்திரத்தை, வாழ்வியல் சுதந்திரத்தை பேணும் ஐக்கியத்தை, எமது தேசியம் கொண்டிருந்ததா? இல்லை, எமது போராட்டம் அதை மறுத்தது. மாறாக சர்வாதிகார வடிவங்களில், பாசிச உள்ளடகத்தில் இதற்கு பதில் கொடுத்தது. தமிழ் தேசியத்தின் ஆன்மாவோ, குடலுடன் உருவப்பட்டது.

 

4. மக்கள் போராட்டம் எப்படி சகோதரப் படுகொலைகள் நடத்தும். ஒரு குழுவின் சர்வாதிகாரமே போராட்டமாகியதால், அது பல பத்தாயிரம் தமிழ் மக்களையே கொன்று குவித்தது. இதுவா மக்கள் போராட்டம்! 

 

5. மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தாமே தீர்மானங்களை எடுக்கவும், வழிகாட்டவும் கூடிய வகையில், தமது சொந்த போராட்டமாக போராட்டத்தை வழிநடத்துவர். மாறாக ஒரு குழு தான் விரும்பியதை, மக்கள் மேல் திணிப்பதா மக்கள் போராட்டம். 

 

6. தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட சாதியத்தைப் பாருங்கள். நாங்கள் தமிழ் மக்கள் என்று கூறிக்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் சாதிய பிளவை வைத்துக்கொண்டு, எப்படி ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த முடியும். நாம் இந்துகள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனியம், தனக்குள் தீண்டத்தகாதவனை உள்ளடக்குவது போல் தான் இதுவும். இப்படி எமது போராட்டம் இதைக் களைய மறுத்து, சாதிய பிளவுகளை வளர்க்கின்ற வகையில் தான், அந்த மக்களுக்கும் எதிராகவும் சீரழிந்தது.

 

7. தமிழ் மக்களின் போராட்டம் என்பது தேசியத்தை அடிப்படையாக கொண்டது. இந்த தேசியம் என்பது, தேசத்தை நிர்மாணம் செய்யும் தேசிய பொருளாதார கட்டுமானத்தை அடிப்படையாக கொண்டது. இப்படி தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய முதலாளிகளை ஆதாரமாக கொண்டது. இப்படி தேசிய முதலாளித்துவத்தையா, எமது போராட்டம் உருவாக்கியது? தேசியத்துக்கு எதிரான நிலபிரபுத்துவ, தரகு முதலாளித்துவ கட்டமைப்பை பாதுகாத்துக்கொண்டு, தேசிய முதலாளித்துவ கூறுகளை அழித்தொழித்தது. இப்படி இருக்க, இங்கு உழைக்கும் வர்க்கத்தின் மேலான ஒடுக்குமுறை சொல்லிமாளாது. இப்படி போராட்டம் என்பது மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கு பதில், இதற்கு எதிராகிப் போனது.

 

8. சக மனிதனின் உழைப்பை சதா சுரண்டித் தின்னும் ஒருவனுக்கும், அதை பறிகொடுத்தவனுக்கும் இடையில் எப்படி ஒன்றுபட்ட போராட்டம் எழும். இதை களைகின்ற போராட்டம் தான், மக்கள் போராட்டம்.

 

இப்படி பல.

இப்படி மக்களுக்கு எதிரான அரசியலை ஆணையில் வைத்துக் கொண்டு, மக்களைப் பிளந்தன் மூலம் மக்கள் போராட்டத்தை தடுத்தி நிறுத்தினர். ஒரு குழுவின் பாசிச மாபியாத்தன்மையை மக்கள் போராட்டம் என்று சொல்லுகின்றனர். இப்படி எதிர்புரட்சியையே புரட்சி என்கின்ற மாயை நீண்டகாலம் மக்கள் முன் நீடிப்பதில்லை. அதனால் தான் மக்கள், தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுகின்றனர். 

   

பி.இரயாகரன்   
07.05.2008

Last Updated on Saturday, 06 December 2008 07:19