இன்றைய சமூக எதார்த்ததில் எதைத் தான் நான் செய்ய முனைகின்றேன். இது எனது சுயபுராணமோ விளம்பரமோ அல்ல

இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டிய ஒரு எதார்த்த சூழல் அவசியமாகி விடுகின்றது. நான் வைக்கும் கருத்துகள் மீதும், கட்டுரை வடிவங்கள் மீதும், எனது போராட்ட நடைமுறைகள் மீதும் சிலர் அபிப்பிராயங்களை முன் வைக்கின்றனர். இதில் சில விமர்சனங்களாகவும்,

 சில என்னை ஒத்த முன்மாதிரிகளுடன் செயல்பட முனைவதாகவும் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றது. இந்த நிலையில் நான் சிலவற்றை உங்களுடன் நேரடியாக பேசியேயாக வேண்டியுள்ளது.

 

உதாரணமாக தமிழ்மணம் விவாதத் தளத்தில் ஜனநாயகம் "அறிவைப் பயனுள்ள முறைமைகளில் பயன்படுத்துதல் அவசியமானதால் 'தமிழ் அரங்க" ஆசிரியர் இரயாகரன் கூட தமிழ்மணத்தைத் தவிர்க்க முடியாத தளமாகக் கண்டு இங்கும் பதிவிட வந்துள்ளார். ஆதலால் பலரைப் படிக்கத் தூண்டும் ஒரு தளத்தை எப்படிதான் வளர்த்தெடுக்கிறது? இதுகுறித்துச் சிந்திக்காதவர்கள், ப்புளக்கரை தமிழ்மணத்தைவிட்டு வேறெங்கோ பதிவுகளிட ஆலோசிப்பது அறிவார்ந்த செயற்பாடாகத் தெரியவில்லை. நாம் சமூகமாகக் காரியமாற்றப் போகிறோமா? அப்போ வாருங்கள்!" என்று ஜனநாயகம் விவாதத்தளம் கூறுகின்றது. இது போன்று பல வேறுபட்ட கருத்துக்களுடன் தூண்டில் விவாதத் தளம், மயூரன் விவாதத் தளம் இப்படி பல.


மற்றொரு தரப்பினர் எனது கட்டுரைகள் பெரிதாக இருக்கின்றன என்கின்றனர். சிறிய கட்டுரையாக விடையத்தை சுருக்கிச் சொல்ல கோருகின்றனர். வேறு சிலர் கட்டுரைகள் விளங்கவே முடியாதுள்ளதாக கூறுகின்றனர். மற்றொரு பகுதியினர் பரந்துபட்ட மக்களுக்கு ஏற்றவகையில் எழுதக் கோருகின்றனர். இப்படி பல கருத்துகள், விமர்சனங்கள் என்னை நோக்கி முன்வைக்கப்படுகின்றது. இவற்றைக் கடந்து என்னை தூசணத்தால் புணர்ந்து எழுதுவதும், தூற்றுவதும், வதந்திகளை புனைந்து புணர்ந்து பரப்புவதும் மற்றொரு தரப்பாரின் அரசியலாகவுள்ளது.

 

பொதுவாக ஒருபுறம் கட்டுரையின் வடிவங்கள் மீதான விமர்சனங்கள் மறுபுறம் என்னை முன்மாதிரியாக தேர்ந்தெடுக்கும் போக்கு குறித்து, நான் உங்களுடன் பேசியேயாக வேண்டியுள்ளது. இன்றைய சமூக எதார்த்தம் சார்ந்த சூழலில் நான் தனித்து போராடுகின்ற ஒருநிலையில், தனிமைப்பட்டுள்ளேன். சமூகம் சார்ந்த அறிவின் பின்புலம் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எங்கும் நுனிப்புல் மேய்கின்ற சமூக போக்கில், நான் தனித்து நடத்தும் போராட்டம் மிகக் கடினமானதாகவே உள்ளது, கடுமையானதாக மாறிவருகின்றது. உளவியல் ரீதியாக நான் சமூகப் புறக்கணிப்பை எதிர்கொண்டு, உண்மைக்காகவும் மனித விடுதலைக்காகவும் சளையாது போராடுவது என்பதைக் கூட ஒரு அரசியல் கலையாக நான் வளர்த்துள்ளேன். யாருடனும் கருத்துக்களைப் பகிரமுடியாத தனிமைப்படுத்தப்பட்ட எனது கருத்து சார்ந்த விவாத உணர்வையே, கடுமையாக நெருடுகின்ற ஒன்றாகவே சமூக எதார்த்தம் என்முன் உள்ளது.

 

இந்த நிலையில் எனது கருத்தை நான் சமூகத்தின் முன்கொண்டு வருவதே, மரண தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக மற்றவர்கள் போல் நான் சுதந்திரமாக வீதிகளில் இயல்பாக நடமாடமுடியாத ஒருநிலை. அதாவது எச்சரிக்கை உணர்வின்றி நாம் சுதந்திரமாக நடமாடமுடியாத ஒருநிலையில் வாழ்கின்றேன். வீட்டில் கூட எச்சரிக்கை உணர்வின்றி சுதந்திரமாக இருக்க முடியாத நிலை. கொலையாளிகள் எந்த ரூபத்திலும் எப்போதும் எமனாக காட்சியளிக்கக் கூடிய வகையில், வக்கிரம் பிடித்த வகையில் அலைகின்றனர். வீட்டில் யன்னலுக்கு அருகில் இருப்பதற்கு கூட, எச்சரிக்கை உணர்வுகள் இன்றி, நான் உயிர் வாழ்ந்துவிடவில்லை. வீதியில் நிற்கும் போது, நடமாடும் போது கூட பின்னால் யார் நடமாடுகின்றனர் என்ற சுய உணர்வின்றி, நான் உயிர் வாழ முடியாதுள்ளது. வெளியில் உணவு உண்ணும் போதும் கூட, அதில் நஞ்சு கலக்கப்பட்டுவிடும் என்ற எச்சரிக்கை உணர்வின்றி நான் உயிர்வாழ முடியாத ஒரு நிலை. கொலையாளிகள் எமன் கோலத்தில் எப்படியும் வருவார்கள் என்பதையே, எமது சமூக எதார்த்தம் சார்ந்த அனுபவம் காட்டுகின்றது. இது கடந்தகாலத்தின் எனது சொந்த அனுபவம் கூட. கடுமையான நெருக்கடிக்குரிய ஒரு புறச் சூழலில், இயல்புத்தன்மையைக் கடந்த ஒரு போராட்டத்தின் பின்பே எனது எழுத்துகள்; வெளிவருகின்றது. இதைக் கூட, யாரும் இன்று புரிந்துகொண்டது கிடையாது. நான் அன்றாடம் பயணங்களின்; போதே பெருமளவில் நூல்களை வாசிப்பது வழக்கம். பயணத்துக்காக ஒரு புகையிரத நிலையத்தில் புகையிரத்துக்காக காத்து நிற்கும் போது கூட, பாதுகாப்பான ஒரு நிலையில் நின்றுதான் நூலை வாசிப்பது வழக்கம். புகையிரதத்தில் தள்ளிக் கொலை செய்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வின்றி, நான் வாழ முடியாத அவலம். இதுவே அன்றாட மனநிலை கூட. கிரகித்தலுக்குரிய ஒரு அமைதியான சூழல் எப்போதும் கடுமையாகவே பாதிக்கப்படுகின்றது.

 

இது என் சார்ந்த பொதுச் சூழல். இந்த ஒரு நிலையில் தான், சமூகத்தின் விடுதலைக்காக அதன் உண்மைக்காக போராடவேண்டிய நிலையில் உள்ளேன். ஆனால் நான் காணும் சமூகத்தில் சமூக அவலங்களை பகட்டுத்தனத்தால் முலாமிடப்படுகின்றது. ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளல் என்பது, நுனிப்புல் மேய்வது போல் மேய்ந்து தெரிந்து கொள்ளமுடியாது. இந்த நுனிப்புல் மேய்தலே அறிவாகிவிட்ட ஒரு நிலையில், தமிழ் சமூகத்தின் புத்திஜீவிகளையே இயல்பாக இல்லாததாக்கி வருகின்றது.

 

சமூகத்தில் பொதுவாக கொஞ்சம் விடையம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளும் இன்றைய இலக்கிய மற்றும் அரசியல் தளத்தில் கூட, இதுவே நிலைமை. இவர்களின் சமூக அறிவை எடுத்து ஆராய்ந்தால், உள்ளடக்க ரீதியாக வெற்றுக் கோம்பைகளே என்பதை தெரிந்து கொள்ளமுடியும்;. அந்தளவுக்கு அவர்களின் சமூக அறிவின்மை மூடிமறைக்கப்பட்டுள்ளது.

 

பொதுவான சமூகத்தின் பலவீனமான பொது அறிவு மந்த புத்தி கொண்டதாக இருப்பதால் தான், இவர்கள் அவர்கள் முன் தங்களை தாங்கள் அறிவாளிகளாக காட்டிக் கொண்டு நடிக்கமுடிகின்றது அவ்வளவே. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சமூகக் கூறுகளை நெருங்கி அணுகமுடியாத வகையில், இவர்களின் வீம்பு (வம்பு) பேச்சுகள் தான் அனைத்தையும் மேவி நிற்கின்றன. இன்று பொதுவாக வாசிப்பு திறனை முற்றாகவே எமது சமூகம் இழந்து நிற்கின்றது. குறிப்பாக இவர்கள் வாசிப்பது என்னவென்று தேடினால், குளுகுளுப்பை ஏற்படுத்தும் இந்திய சந்தையை நிரப்பும் கழிசடைக் குப்பைகளையே. சந்தையை மையமாக கொண்டு மக்களின் சிந்தனையை சீரழிவாக்கி, அதில் காசு பண்ணும் இந்த சமூக விரோத வக்கிரங்களையே இவர்கள் விரும்பிப் படிக்கின்றனர்.

 

 இதையே தான், தாம் அறிவாளியாக சமூகத்துக்கு காட்டிக் கொள்ளும் புத்திஜீவிகளும் கூட விரும்பிப் படிக்கின்றனர். இதற்கு வெளியில் எமது தமிழ் மீடியாக்கள் பரப்பும் பொய்யையும் புரட்டையும், அப்படியே விமர்சனமின்றி சமூகம் உள்வாங்குகின்றனர். இதற்கு ஏற்ப சமூகத்தின் அறிவின் மட்டத்தையே நலமடித்துள்ளனர், நலமடிக்கின்றனர். இது உண்மையில் தனிநபர் புகழ்பாடும், சொந்த பினாமிய பிழைப்பைச் சார்ந்து வழங்கப்படும், மலிவான வக்கிரமான மனிதவிரோத சிந்தனைக் கொத்துக்களே. இதுதான் இன்றைய எமது தமிழ் சமூகத்தின் அறிவின் உயர்ந்தபட்ச எல்லையாகும். அதை உதாரணமாகவும் சிறப்பாக புரிந்தகொள்ளுவோமாயின், அனைத்தையும் துரோகி தியாகி என்ற வார்த்தைக்குள் அடக்கிவிடுவார்கள்.

 

சமூக அறிவின் மட்டம் தொடர்ச்சியாகவும், மிக வேகமாகவும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. விவாதங்கள், விவாதத் தளங்கள் எங்கும் இதே கதிதான். சமூக நேசிப்புள்ள எழுத்துக்கள் அறவே கிடையவே கிடையாது. சமூகத்தை புரிந்துகொள்ளும் முயற்சிகள் முற்றாகவே சிறுமைப்படுத்தப்படுகின்றது. சமூகத்தின் உயிர்த்துடிப்புள்ள ஆற்றல் உள்ள புரட்சிகர சமூக அறிவு கிடையாது. நலமடிக்கப்பட்ட அறிவாக, மலட்டுத்தனம் கொண்டு காணப்படுகின்றது. இதற்கு இசைவான வகையில், லும்பன்தனமான மூடர்களின் வன்முறையிலான காட்டுமிராண்டி சமூகமே கட்டமைக்கப்படுகின்றது. எமது சமூகம் ஆதிக்கத்தில் உள்ள பாசிசத்தின் சமூக இருப்பில் இருந்து, இது மேலும் ஆழமாக சிதைந்து நாற்றமெடுக்கின்றது.

 

இந்த நிலையில் தான் சமூகம் சார்ந்த எனது எழுத்துக்கள், மிகவும் பின்தங்கிய எமது சமூக அறிவில் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு நிலைக்குள் சமூகம் தாழ்ந்து கிடக்கின்றது. இது என் எழுத்துக்களை மட்டுமல்ல, சமூகம் சார்ந்த உலகளாவிய விடையங்களைக் கூட புரிந்து கொள்ளமுடியாத நிலைக்கு தாழ்ந்து கிடக்கின்றது. இன்று ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்க வேண்டிய நிலைக்கு, இதுவே காரணமாகின்றது. இல்லாதுபோனால் அதை மொட்டையாக குறுக்கி, துரோகி தியாகி என்று கூறுவது போல் கருத்தையே திரித்து தமது அறிவின்மைக்கு ஏற்ப பயன்படுத்திவிடுவது அன்றாடம் நிகழ்கின்றது. அறிவு சார்ந்த உண்மையை, தனித்துவமாகவே முரணற்ற வகையில் மீண்டும் சமூகத்திடம் எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.

 

அடுத்து சமூகத்தின் பின்தங்கிய அறிவினால், ஒரு விடையத்தைப் பற்றி விரிவாக விளக்க வேண்டியநிலை உருவாகின்றது. மறுபக்கத்தில் வாசிப்புத் திறனையே இழந்து சீரழிந்து வரும் சமூகத்தில், விரிவான கட்டுரை என்பது விலகியோடவும் வைக்கின்றது. இதனால் எழுதுவதை நிறுத்திவிட முடியுமா! இன்று நூல்கள் சமூகத்தில் என்ன பாத்திரத்தை வகிக்கின்றனவோ, அதேயொத்த பாத்திரத்தையே எனது எழுத்துக்கள் அடிப்படையாக கொண்டது. ஒரு செய்தி பத்திரிகைக்குரிய செய்திகள் அல்ல எனது கட்டுரைகள். ஒரு நூலில் சொல்லும் விடையத்தை சிறிய பகுதியில் கூறிவிடமுடியாது. இந்த அடிப்படையில் எனது கட்டுரைகள், பெருமளவில் தத்துவ ஆழம் செறிந்த வகையில் உள்ளது. 80, 100 பக்கத்தில் பலரும் புரியும் வகையில் விரிவாக எழுதவேண்டிய ஒரு விடையத்தை, நான் சுருக்கி எழுதுகின்றேன். இதனால் கட்டுரை ஆழம் செறிந்ததாக உள்ள அதேநேரம், எல்லோரும் புரிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றது. இதற்கு சமூகத்தின் அறிவில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியும் ஒரு காரணம். தொலைக்காட்சியை பார்த்து அறிவை வளர்க்கும் குருட்டுச் சமூகம் அப்படித்தான் இருக்கும். வாசிப்பது கடினமானதாக சிரமானதாக கருதும் இவர்கள் தான், சிறிய கொசுறுச் செய்திகளை தரும்படி வேண்டுகின்றனர். சமூகம் சார்ந்த எழுத்தாளன் முன் எதைச் செய்ய வேண்டும் என்பதிலும், செய்வதிலும் ஒரு முரNணு ஏற்படுகின்றது. சமூக அறிவின் வீழ்ச்சியான ஒரு நிலையில் விரிவாகவே அனைத்தையும் சொல்ல வேண்டியுள்ளது. அதேநேரம் சுருக்கமாகவும் சொல்ல வேண்டியுள்ளது. இதை ஒருங்கே தீர்க்க முடியாதுள்ளது. எமது நோக்கம் சார்ந்த வாசகன் யார் என்பதை தெரிவு செய்யும் படி ஒரு முடிவை ஏற்படுத்திவிடுகின்றது. நான் யாரை நோக்கி எழுத வெண்டியுள்ளது என்பதை, லெனின் கூறுவது ஊடாகவே ஊடறுத்துக் காண்கின்றேன். லெனினின் ".. வெகுஜனங்கள் வாழ்க்கையின் வாயிலாகவே கற்றறிகின்றனர், புத்தகங்களின் வாயிலாய் அல்ல" என்ற கூற்றை நான் தெளிவாக புரிந்து கொண்டே வினையாற்றுகின்றேன்.

 

இந்த நிலையில் சமூகத்தில் இன்று வாசிப்புத் திறனை பலர் கொண்டிருப்பதில்லை. இதனால் கருத்துகளை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது. சமூகத்தில் நிகழ்வது தொடர்ச்சியான ஆழமான சமூகச் சிதைவுதான். இதற்கு சமூக பொருளாதார அரசியல் காரணங்களே அடிப்படையாகவுள்ளது.

 

இதில் முக்கியமானது தமிழ் தேசியத்தின் பாசிசக் கூறே. பாசிசம் தனது இருத்தல் என்ற அடிப்படையில், சமூக அறிவின் இருத்தலையே நலமடித்து அழித்தொழிக்கின்றது. சுயமான சிந்தனையைக் கூட, தேசத் துரோகமாக கருதி அழிக்கின்றது. இதற்கு இசைவாக இசைவாக்கம் அடைந்த செக்கு மாட்டுத்தனமே, சமூகத்தின் பொதுப் போக்காகியுள்ளது. இதனடிப்படையில் தான் தமிழ்தேசியத்தின் பெயரில் அதிகாரத்தில் உள்ள புலிகள், தமிழ் மக்கள் வாசிக்கவே கூடாது என்பது அவர்களின் அடிப்படையான சித்தாந்தமாக இருந்தது. உதாரணமாக பிரபாகரனுடன் முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்தோர் எதாவது வாசிக்க முற்பட்டபோதெல்லாம், அதை அவர் இழிவாக பார்த்ததுடன் இந்த நடவடிக்கைகள் கூட நக்கலடித்து பரிகசிக்கப்பட்டது. இதுவே பின்னால் படிப்படியாக வாசிப்பது கூட துரோகமாகக் கருதப்பட்டது. ஏன் பின்னால் வாசிப்பது எனன்வெனக் கூட கண்காணிகப்பட்டது. வாசிப்பவர்கள் விசேடமாக கண்காணிக்கப்பட்டார்கள். நூல்கள் வாசிப்பவர்கள் இயக்கத்தின் ஒற்றுமையை சிதைப்பவராகவும், மக்களை குழப்புபவராகவும், தமிழ் தேசியத்துக்கு எதிரானவராகவும் கூட கருதப்பட்டனர். நூல்களின் இருத்தல் கூட, இன்று இடம் மாறியுள்ளது. தம்மை அறிவாளியாக காட்டும் புலித்தலைவர்களின் விளம்பரப் படங்களின் பின்னால், நூல்கள் அலங்கரிக்கும் ஒரு அலங்காரப் பொருளாகவே தரம்தாழ்ந்து போனது. இப்படி அறிவின் வளர்ச்சி என்பது, தமது சொந்த இருப்பிற்கே ஆபத்து என்பது புலியின் பாசிச சித்தாந்தம், மக்களின் அறிவின் வளர்ச்சியை முடக்கி முடமாக்கியது.

 

வாசிப்பும் அது ஏற்படுத்தும் சமூக அறிவும், இயல்பாகவே இன்றைய எதார்த்த சமூகம் மீது ஆழமான ஒரு சமூகக் கேள்வியை உருவாக்கும். கேள்விகளே, இச் சமூக அமைப்பின் இருத்தலை மாற்றக் கோரும். இதை புலிகள் அனுமதிக்கவில்லை. அறிவை விருத்தி செய்த புத்தகங்களைக் அன்று கைப்பற்றிய புலிகள் அவற்றை எரியூட்டினர் அல்லது அதை கறையானுக்கு இரையாக்கினர் அல்லது தம்மை அறிவாளியாக காட்ட தமக்கு பின்னால் அலங்காரப் பொருளாக்கி அதை அடுக்கினர். அன்று எனது வீடு உட்பட பலரது வீட்டில் இருந்த நூல்களை, புலிகள் பலாத்காரமாகவே அள்ளி எடுத்துச் சென்றனர். அன்று புலிகள் நபர்களை மட்டும் கடத்திச் செல்லவில்லை, அந்த நபர்களின் கருத்தை உருவாக்கிய நூல்களையும் கூட கடத்திச் சென்றனர். புலிப் பாசித்துக்கு அஞ்சி ஒட நிர்ப்பந்தித்த போது, குழந்தைகளின் அறிவை வளர்த்த நூல் வைத்திருக்கவே பல பெற்றோர்கள் பயந்தனர். அச்சம் காரணமாக அதைப் புதைத்தனர் அல்லது எரித்தனர். இப்படி தமிழ் சமூகத்தின் அறிவே நலமடிக்கப்பட்டு சிதைக்கப்பட்டது.

 

எமது சமூகத்தில் அறிவு சார்ந்த சமூக நூல்கள் முற்றாக தடுக்கப்பட்டன. வாசிப்பு துரோகமாக கருதப்பட்டது. இப்படி பொதுவாகவே சமூகத்தின் அறிவின் வீழ்ச்சி விரைவாகவே நடைபெற்றது. மறுபுறம் அறிவைப் கொஞ்சம் பெற்றவர்கள், அதைக் கொண்டு பிழைத்து வாழும் வகையில் சீரழிந்தனர். தமது அறிவைக் கொண்டே, அறிவுமட்டம் குறைந்த சமூகத்தை ஏமாற்றி வாழும் ஒரு இழிவான வாழ்வை வந்தடைந்தனர். புலிகள் அறிவு சார்ந்து எதைச் செய்தனரோ, அதையே இந்தக் கும்பலும் செய்தது. மற்றொரு பிரிவு பினாமியாகவும், பிழைப்புவாதிகளாகவும் நக்கிப்பிழைக்கவும், தமது குறைந்தபட்ச அறிவை பயன்படுத்திக் கொண்டனர். சமூகத்தின் மிக பின்தங்கிய அறிவுமட்டமே, இவர்களின் மேலாண்மையாகியது. இன்னுமொரு பக்கம் அறிவு என்பதைக் கொண்டு சமூக மேலாண்மையை ஏற்படுத்த முடிந்த நிலையில், கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலைக்குள் இந்தக் கும்பல் சீரழிந்தனர். இருக்கும் மலட்டுச் சரக்கைக் கொண்டு, தம்மைத் தாம் அறிவாளியாகக் காட்டிக் கொண்டனர்.

 

இந்த நிலையில் எமது சமூகத்துக்கு வழிகாட்டக் கூடிய அறிவுத்துறையின்றியும், சமூகத்தின் அறியாமை மீதும் எமது சமூகம் இழிந்து கிடக்கின்றது. இந்த சமூகத்தை அணுகும் போது, என் மீதான விமர்சனமும், முன்மாதிரியான எடுகோளாகவும் மாறிவிடுகின்றது. மறுபக்கத்தில் பொது சமூகத்தில் பைத்தியம் பிடித்த ஒரு மனநோயாளியாகவே என்னைக் கருதுகின்றனர். அன்று 1986 இல் ராக்கிங்கை எதிர்த்து நான் தனித்து கருத்தியல் ரீதியாக அம்பலப்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒரு துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தேன். அதன் போது இதை எதிர்த்து அதை வாபஸ் வாங்கக் கோரியும் பல்கலைகழக பகிஸ்கரிப்பை நடத்திய மாணவர்கள், இதை மனநோய்க்குரிய ஒரு செயலாக கூறி ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டதுடன், அதை அன்று ஈழநாடு பத்திரிகையிலும் கூட பிரசுரிக்க வைத்தனர். இப்படித்தான் இன்று எனது எழுத்தை அல்லது எனது நடத்தையை மனநோய்க்குரிய ஒன்றாக சிலர் எள்ளிநகையாடுகின்றனர். குறுகிய வாழ்க்கை வட்டத்தில், அந்த சிந்தனைக்கு உட்பட்டு வாழ்வதையே, இயல்பான மனநிலைக்குரிய ஒன்றானதாகக் கூட கருதுகின்றனர். அந்தளவுக்கு எமது சமூகம் தரம் தாழ்ந்து மற்றவரின் கால் தூசு துடைத்தபடி மண்டியிட்டு கிடக்கின்றது.

 

அறிவு என்பது இயங்கியல் ரீதியானது. அன்றாடம் நாம் கற்றுக் கொள்ளும் விடையங்களே, எமது அறிவை மேலும் ஆழமாக்குகின்றது. வயதின் முதிர்ச்சியுடன் கூடிய கற்கும் அறிவும், வாழ்வின் அனுபவ அறிவும், ஆளுமையுள்ள சமூக வழிகாட்டிகளையே உருவாக்கும்;. இதுவே பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான மதிப்பைக் கூட உருவாக்கியது. மாறாக கற்றுக்கொள்வது என்பதையே மறுக்கும் ஒரு சமூகத்தில், வயதுசெல்ல ஏற்படும் அறிவின்மை விதண்டாவாதமாகவும், கண்மூடித்தனமான வழிபாடாகவும் மாறுகின்றது. இந்தப் பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், வெறுமனே லும்பன்களாகவே உருவாக்கப்படுகின்றனர். சாதாரணமாக சக மனிதனுடன் விவாதிக்கவும் பேசிக்கொள்ளவும் முடியாத வகையில், வன்முறை கொண்ட குழந்தைகளையே எமது சமூகம் உருவாக்குகின்றது. எமது சமூக இயலாமை, படிப்படியாகவே சமூக இருப்பின் மேலான கண்மூடித்தனமான நம்பிக்கையை விதைக்கின்றது. அதை கண்ணை மூடிக்கொண்டு பாதுகாக்க முனைப்புக் கொள்கின்றது. அதைவிட்டால் எதுவும் கிடைக்காது என்ற அங்கலாய்ப்பும், பதைபதைப்பும் உருவாகின்றது. கண்மூடித்தனமான நம்பிக்கையும், அது சார்ந்த வழிபாடும் உருவாகின்றது. கருத்துக்கள், சிந்தனைகள் விதண்டாவாதமான வக்கிரமாக மாறுகின்றது. விவாதப் பண்பே சமூகக் குற்றமாக கருதும் நிலைக்கு சமூகம் தரம் தாழ்ந்து போகின்றது.



மறுபக்கத்தில்; சமூகத்தின் பின்தங்கிய அறிவின் மட்டம், சிலருக்கு சமூகத்தையே அடிமையாக பயன்படுத்தி தமது வாழ்வை வளப்படுத்துவதில் முடிகின்றது. அதாவது சிலர் சமூகத்தை ஏமாற்றி வாழவும், சொகுசாக இருக்கவும் இதுவே உதவுவதால், சமூக அறியாமையை பாதுகாக்கவே அறிவின் மீது அடக்குமுறையை ஏவுகின்றனர். அறிவை கொச்சைப் படுத்துகின்றனர். அறிவின் மீதான திட்டமிட்ட கொலைகள் முதல் தூசணத்தால் பலாத்காரமாக புணர்தல் வரை, அன்றாடம் நாம் இதை சமூகத்தில் பலவிதத்தில் காணமுடிகின்றது.


சமூகத்தையே கேள்விக்குள்ளாக்கல், எமது வாழ்வை கேள்விக்குள்ளாக்கல் என்று எதையும் நாம் செய்ய மறுக்கின்றோம். சமூகம் மேலும் மேலும் ஏமாற்றப்படுவதை கண்டுகொள்ள முடியாத ஒரு குருட்டுச் சமூகமாக மாறுகின்றது. சமூகத்தின் அவலத்தையே தெரிந்துகொள்ள முடியாத வகையில், மந்தைக் கூட்டமாக மாற்றப்பட்டு விடுகின்றது. மக்கள் பட்டியில் அடைக்கப்பட்ட ஒரு நிலையில், வரையறைக்குட்பட்ட எல்லைக்குள் வினையற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டியை வீட்டு மீறி வெளிவருபவர்களுக்கு, உயிர் வாழ்வதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. பட்டியில் உள்ள மந்தைக்குரிய குணாம்சத்துடன் தான், தமிழ் சமூகம் பாசிசமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

 

இதில் இருந்து மீட்சி என்பது, சமூகத்தை இயல்பாக இயற்கையாகவே சிந்திக்கத் தூண்டுவதே. அதாவது மனிதனின் இயல்பான இயற்கை இயல்பை மீண்டும் பெறத் தூண்டுவதே இன்றைய எனது பணியாகும். அந்த வகையில் சமூகத்தை நாம் கற்கத் தூண்டுகின்றோம்;. வாழ்வின் அனுபவங்களை தொகுக்கக் கோருகின்றோம். பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட நூல்களை, சுயமாகவே படிக்க கோருவது இதில் ஒரு அம்சமாகும். கற்றல் என்பது உள்ளடக்க ரீதியாகவே, சமூக அறிவை திரட்டி ஒருங்கமைந்த நூல்களை கற்கத் தூண்டுவதன் மூலம், சொந்த வாழ்வின் அனுபவத்தையே சுயமாக இனம் காணத் தூண்டுகின்றோம். அதாவது இன்று கற்றலை வரையறையற்ற வகையில் தூண்டுவதன் மூலம், கற்கும் முறைமையையே சமூகத்துக்கு உருவாக்குவது அவசியமாகும்.

 

பொதுவாகவே எமது சமூகம் அதிகமாகவே சுயநலம் கொண்டது. மிக குறுகிய வட்டத்தில் மேலும் சிதைந்து போகின்ற நிலையில், கல்விசார் அறிவு மட்டம் கூட தரம்குறைந்து வருகின்றது. பாடப் புத்தகத்தை அப்படியே பாடமாக்கி ஒப்புவிக்கும் எமது இளம் தலைமுறையின் அறிவுமட்டம், வெறுமனே மந்தைக் குணம் கொண்டதாகவே அமைகின்றது. அதாவது பண்ணை மந்தைக்கு ஒரு சில உணவை மட்டும் போட்டு, சந்தை விளைச்சலுக்காக வளர்ப்பது போல்தான், எமது குழந்தைகளுக்கு கல்வியும் திணிக்கப்படுகின்றது. இதில் பெற்றோரின் குறுகிய புத்தியுள்ள சுயநலப்பண்பு, இக் கல்வியை மேலும் சிறுக்கவைக்கின்றது. சேடம் கட்டிய குதிரையாட்டம், கவ்வி இயந்திரத்தன்மை வாயந்த்தாக மாற்றி அறிவை ஒப்புவிக்கும் எல்லைக்குள் மலடாக்குகின்றனர்.

 

அதாவது குழந்தைகளுக்கே உரிய துடிப்புள்ள கேள்விகளும், ஆராய்வு முறைகளும் கூட மலடாக்கப்படுகின்றது. இன்று சமூகத்தை வழி நடத்தக் கூடிய, சமூகப் பொறுப்புள்ள குழந்தைகள் உருவாவதில்லை. ஒரு இயந்திரத்தின் ஒரு புரியாக மட்டும், குழந்தையின் கல்வி சிறுக்க வைக்கப்படுகின்றது. ஒட்டுமொத்த சமூகத்தின் சமூகக் கல்வியின்மை, அது சார்ந்த அறிவின்மையும், சமூகத்தின் வீழ்ச்சியை பறைசாற்றி நிற்கின்றது. இதைப் பாதுகாக்கும் அரசியல் தலைமையே எம்மை சர்வாதிகாரமாக ஆட்சி செய்கின்றது.

 

இந்த நிலையில் இதை புரிந்துகொண்டு மாற்றியமைக்கும், நடைமுறை சார்ந்த ஒரு சமூக இயக்கத்தை உருவாக்க முடியாத அரசியல் சூழல் காணப்படுகின்றது. தனித்த ஒரு மனிதனாக நான் இதை மாற்றிவிட முடியாது. இன்று இலங்கையில் நான் மட்டும்தான் பெருமளவில் சமூகம் சார்ந்த உணர்வுடன், சமூக விடையங்கள் மீது எழுதுகின்றேன். அதற்காக தனித்து குரல் கொடுக்கின்றேன்;. இதைப் பைத்தியக்காரத்தனம் என்று என்னைச் சுற்றியுள்ள, சமூக அறிவில் குறைந்துள்ள சமூகம் எள்ளி நகையாடுகின்றது.


எந்த சமூக ஆதரவுமின்றி, எள்ளி நகையாடும் பலவிதமான சமூக எதிர்வினைகளை எதிர்கொண்டு எதிர் நீச்சலிடுவது என்பது கூட, கடினமான ஒரு போராட்டமாகவே என ;முன்னுள்ளது. லெனின் கூறியது போல் "கஸ்டங்களையும் தவறுகளையும் கண்டு அஞ்சுவது கோழைத்தனம்@ பொறுமையான, தொடர்ச்சியான, உறுதியான பாட்டாளி வர்க்க முயற்சிக்கு அறிவாளியின் "கூச்சல்" மாற்றாக உள்ளது." என்ற அடிப்படை உள்ளடகத்தில் நான் செயல்பட முனைகின்றேன்;. இந்த நிலையில் சமூகம் சார்ந்த எனது எழுத்தை, பத்து பேர் படித்தால் கூட மிகப்பெரிய விடையம்தான். இது நான் சந்திக்கும் எதார்த்தம்;. இந்த நிலைமையை நான் முதலில் தெளிவாக புரிந்து கொண்டுள்ளேன்;. எனது சொந்த உழைப்பில் தான், எனது நூல்களை அச்சில் கொண்டு வந்துள்ளேன்;, கொண்டு வருகின்றேன். இருந்தும் இந்தப் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவோர் கிடையாது. இதுவும் உண்மை. சமூகத்தில் உழைப்பை வீடாகவும், ஆடம்பர நுகர்வாகவும் மாற்றும் போது, நான் எனது உழைப்பை இப்படி நூலாக்குகின்றேன்;. இதைக் கூட சமூகத்தில் ஒரு முரண்பாடாகவே பலர் பார்ப்பதுடன், பைத்தியக்காரத்தனமானதாக கூட சமூகம் இழிவாடுகின்றது.

 

நான் எனது சேமிப்பில் வைத்துள்ள 3000 மேற்பட்ட நூல்களின் பெறுமதி கூட, 12 முதல் 15 ஆயிரம் ஈரோ (டொலர்) பெறுமதியானவை. பணத்தை செலவு செய்து இப்படி சேகரித்துள்ள நூல்கள் பைத்தியக்காரத்தனமானதாகவும், வீட்டில் அவை வெறும் குப்பையாகவும், அழகுணர்ச்சியற்ற நடவடிக்கையாகவும் கூட இழிவுபடுத்தப்படுகின்றது. அந்தளவுக்கு எமது சமூகத்தின் அறிவுசார் கண்ணோட்டம் மிக மோசமானதாகவும், வெறுப்பூட்டுவதாகவும் கூட அமைகின்றது. நான் எனது உழைப்பில் சேகரித்த இந்த நூல்களை எனது மரணத்தின் பின், சமூகத்தின் ஒரு பொதுச் சொத்தாக இலங்கை அல்லது இந்திய அல்லது பிரான்சில், ஒரு பொது நூலகத்துக்கு கொடுக்கவே எனது குடும்பத்திடம் கோரியுள்ளேன்;. சமூகத்தின் இன்றைய அறிவு சார்ந்த உணர்வு மட்டும், இதையும் கூட முன்கூட்டியே கோரவைக்கின்றது. உழைப்பு, வாழ்க்கை எங்கும் சமூகம் சார்ந்த உணர்வுடன் இயங்க முனைகின்றேன். ஆனால் வெறும் நடைப்பிணமாகவே தனித்து நிற்கின்றேன். அந்தளவுக்கு எமது சமூகத்தில், சமூக உணர்வு கொண்டோரை காண்பதரிது.

 

இதுவரை நான் எட்டு நூல்கள் எழுதி வெளிவந்துள்ளது. மூன்று நூல்கள் வெளிவர வேண்டிய நிலையில் உள்ளது. நான் உழைத்து வாழவும், இந்த நூல்களை வெளிக் கொண்டுவரவும் எனது சொந்த உழைப்பையே பயன்படுத்துகின்றேன்;. சமூகம் எனக்கு எந்த வகையிலும் உதவவில்லை. சமூகம் எனக்கு உதவியிருப்பின், நான் நூல்களை எழுதுவதற்காக எடுத்துள்ள சமூகக் குறிப்புக்கள் (சாதியம், இலக்கியம்...) சார்ந்து குறைந்தது 30 நூல்களை வெளிக்கொண்டு வந்திருக்க முடியும்;. சமூகம் சார்ந்த எனது வாழ்வை, சமூக புறக்கணிப்புக்கு உள்ளாக்கும் போது ஏற்படும் துன்பம் மிகவும் கடுமையானது. ஆனால் இதைப் புரிந்து கொண்டு எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. உண்மையில் லெனின் கூறியது போல் "மாபெரும் உண்மைகளைக் கூடக் கொச்சைப்படுத்திவிட முடியும், மிகவும் உயர்ந்த நோக்கங்களைக் கூட வெறும் வாய்வீச்சு என்ற அளவுக்குக் குறைத்துவிட முடியும்." இந்த எதார்த்தம் தான் இன்று நான் சந்திக்கும் நிலை.

 

இந்த நிலையிலும் கூட நான் எனக்காக அல்ல, சமூகத்துக்காகவே என்னை வருத்தியே உழைக்கின்றேன். ஏன்? எனது நண்பர் கூறியது போல் சமூக அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம், எழுதியவை புத்தகமாக வெளிவராமல் கூட இருக்கலாம், ஆனால் எழுதுவதை நிறுத்த வேண்டாம் என்று வேண்டுகோளை என்னிடம் விடுத்தார். இந்த சமூகம் காணாத ஒரு சமூக உண்மையை, எதிர்கால தலைமுறை தன்னும் காணும் என்றார். தீர்க்கதரிசமான உண்மையும் கூட. அவர் இதைக் கூறுவதுற்கு முன்பும், இதே உள்ளடகத்தில் தான் நான் எழுதுகின்றேன்;. இந்த சமூகத்தில் ஒருவர் கூட படிக்காவிட்டாலும் கூட, சமூக உண்மைக்காக, சமூக விடுதலைக்காகவும் எழுதுகின்றேன்;. அதை பாதுகாக்க வாழ்வின் தேவைகளை வரையறுப்பதன் மூலம், எனது உழைப்பையே இதற்கு பயன்படுத்துகின்றேன்.

 

உண்மையைச் சொல்லப்போனால் எனது நிலையை ஊக்குவிப்போர் யாரும் கிடையாது. ஒருவர் இருவர் ஒரிரு சந்தர்ப்பங்களில் உதவிகளை செய்ததை நான் மறுக்கமுடியாது. ஆனால் இந்த எதார்த்தம் வேறு ஒன்றே. புத்தகத்தின் விலையைக் கூட கொடுத்து வாங்குவதில்லை. சிலர் புத்தகத்தை பெறுவார்கள், ஆனால் பணத்தைத் தருவதில்லை. இது நான் சந்திக்கும் எதார்த்தம்;. உண்மையில் இந்த சமூகம் பற்றிய ஆய்வு சார்ந்த அறிவிற்கான எனது முயற்சியை, உண்மையில் யாரும் புரிந்துகொண்டது கிடையாது. நான் இறந்த பின் அஞ்சலிகளை விடுவதிலும் அல்லது என்னைப் போற்றுவதிலும் கூட எந்தவிதமான அர்த்தமும் இருப்பதாக நான் கருதவில்லை. நான் வாழும்போது, எனது முயற்சிகளுக்கு கிடைத்த சமூக ஊக்குவிப்பு என்ன என்பதே, அரசியல் ரீதியாக முக்கியத்துவமானது. எனது சமூகம் சார்ந்த எழுத்தின் வரவுக்காக, என்ன பங்களிப்பைச் செய்தீர்கள் என்பதே முக்கியமானது. பாசிசம் சூழந்துள்ள எமது இந்த அமைப்பில், அதை மாற்றுவதற்கான அறிவு சார்ந்த சிந்தனை சார்ந்த நடைமுறை முயற்சிக்கு பங்களிப்பு செய்யாதவர்கள் கூட, பாசிசத்துக்கு துணைபோனவர்கள் தான்.

 

மாறாக அதீதமான தூற்றுதலை நான் அனைத்து தரப்பிலும் இருந்து சந்திக்கின்றேன். பாசிசம், பாசித்தை ஒத்த ஏகாதிபத்திய சார்பு எதிரணியும், அத்துடன் இதனுடன் சேராத ஆனால் கலவைக் கோட்பாடுகளைக் கொண்ட அணியினர் அனைவரிடமும் இருந்து, நான் வசவுகளையும் தூற்றுதலையும் எப்போதும் சந்திக்கின்றேன். கருத்தை கருத்தாக எதிர்கொண்டு பதிலளிக்க முடியாத இந்த பிராணிகள், என்னை தூற்றுவதே அவர்களின் சொந்த அரசியலாகிவிட்டது. உண்மையில் இவர்கள் முன் நான், நான் சார்ந்த கோட்பாட்டின் சரியான தன்மை மூலம் வானளவுக்கு உயர்ந்து நிற்கின்றேன். மக்களை நேசிப்பதில், அவர்களை தமது சொந்த விடுதலைக்காக சமூக இயக்கத்தில் அவர்களை இயங்கக் கோருவதன் மூலம், ஒரு நடைமுறைவாதியாகவும் கூட உயர்ந்து நிற்கின்றேன். மக்கள் மட்டும் தான் தமது சொந்த விடுதலைக்காக போராடமுடியும் என்ற அரசியல் உள்ளடகத்தை, நான் மட்டும் தான் இலங்கையில் பகிரங்கமாக இதைக் கோருபவனாக உள்ளேன். இதற்காகவே நான் போராடுகின்றேன்;. ஆச்சரியமானது, ஆனால் இதுவே உண்மை. இதற்கு வெளியில், எனக்கு என்று ஒரு தனிவாழ்க்கை கிடையாது. இதற்கு வெளியில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் கோட்பாடுகள் என அனைத்தும், ஏன் இலக்கியத்தில் கூட மக்கள் தான் வரலாற்றை படைக்க வேண்டும் என்று கோருவதில்லை. இது இன்றைய எதார்த்தம்.

 

இந்த நிலையை சமூக முன்னோடிகளாக காட்டிக் கொள்வோர் இடையில் எனது கருத்துக்கள் புரியாமல் நடிப்பது அல்லது புரிந்துகொள்ள முடியாது இருப்பது இயல்பானது. பொது சமூக மட்டத்தில் விளங்காமை, நீண்ட கட்டுரை என்ற விமர்சனங்கள், என் மீதான விமர்சனமாக வைப்பதில் அர்த்தமற்றது. இதற்கு மாறாக சமூகத்தின் அறியாமை மீது, அதை விமர்சனமாக இனங்கண்டு கொண்டு அதை மாற்றமுனைவது தான், இன்றைய அரசியல் கடமையில் ஒன்றாகும். உண்மையாக இதுவே இன்றைய சமூக பணியும் கூட. சொந்த அறிவை விருத்தி செய்யும் வகையில் படிக்கவும், சமூக அறிவை விருத்தி செய்யும் வகையில் சமூகங்களிடையே வாசிப்புத் திறனை அதிகரிக்க வைப்பது அவசியமானது. இதை மையமாக வைத்து போராடுவது இன்றைய சமூகப்பணிகளில் ஒன்றாகும்.

 

இதை நாம் வறட்டுத்தனமாகவும் ஒருதலைபட்சமாகவும் திணிக்க முடியாது. இது எவ்வளவு பெரிய உண்மையாக இருந்தாலும் கூட இது தான் நிலைமை. அதற்காக உண்மை பொய்யாகிவிடாது. உண்மையை கைவிட வேண்டுமென்பதல்ல. ஆனால் சமூகத்தின் உயிர்துடிப்பள்ள சமூக வாழ்வியலுடன் ஒன்று கலந்த வகையில் மிக நெருக்கமாகவே அவர்களை ஊடறுத்து அணுக வேண்டும். மக்களை ஆழ ஊடுருவி அது அவர்களை அடிமையாக்கும் மதத்துக்கு எதிராக எப்படிப் போராட வேண்டும் என்பது பற்றி லெனின் கூறும் கூற்று, இந்த கட்டுரையைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

 

லெனின் ".. நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். இது அனைத்துப் பொருள்முதல் வாதத்தின், ஆகவே மார்க்சியத்தின் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள் முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும்@ அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள் முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான - சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது@ அத்தகைய போதனையாக அதைச் சுருக்கிவிடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்... விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான.. மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்கு காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார் முதலாளித்துவ வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே@ மதம் ஓழிக@ நாத்திகம் நீடூழி வாழ்க@ நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை. இது உண்மை அல்ல@ இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடைய, கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார்.


இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லை@ அவற்றைப் பொருள் முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை, இன்று மதத்தின் மிக ஆழமான வேர், பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமூக ரீதியில் கீழே அழுத்தப்பட்டுக் கிடக்கும் நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் முதலாளித்துவம் யுத்தங்கள், பூகம்பங்கள், இதரவைகளைப் போன்ற அசாதாரணமான சம்பவங்களால் ஏற்படுவதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமான கடுமையைக் கொண்ட மிகவும் அதிகமான அளவுக்கு மோசமான துன்பம், மிகவும் அதிகமான அளவுக்குக் காட்டுமிராணடித் தனமான சித்திரவதையைச் சாதாரணமான உழைக்கின்ற மக்கள் மீது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஏற்படுத்துகிறது. ~அச்சம் கடவுள்களைப் படைத்தது| மூலதனத்தின் குருட்டுச் சக்தியை - பெருந்திரளான மக்கள் அதை முன்னறிய முடியாது என்பதால் அது குருட்டுத் தனமானது - பற்றிய அச்சம் பாட்டாளி மற்றும் சிறிய உடைமையாளரின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலடியிலும் ~தீடிரென்ற|, ~எதிர்பாராதவிதமான|, ~தற்செயலான| அழிவை நாசத்தை, ஏழையாகவும் பாப்பராகவும் விபச்சாரியாகவும் மாற்றுவதை, பாட்டினிச் சாவை ஏற்படுத்தப் போவதாகப் பயமுறுத்துகிறது, அப்படியே ஏற்படுத்துகின்றது. இது தான் நவீன மதத்தின் வேர்@... முதலாளித்துவத்தின் குருட்டுத் தனமான அழிவுச் சக்திகளின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான மக்கள் மதத்தின் இந்த வேரையும் மூலதனத்தின் ஆதிக்கத்தின் எல்லா வடிவங்களையும் எதிர்த்து ஒற்றுமையான, அமைப்பு ரீதியான, திட்டமிட்ட மற்றும் உணர்வுபூர்வமான வழியில் தாங்களே போராடக் கற்றுக் கொள்கின்ற வரை எந்தக் கல்வி புகட்டும் புத்தகமும் அவர்களுடைய மனங்களிலிருந்து மதத்தை ஒழித்துவிட முடியாது.

 

ஒரு மார்க்சியவாதி பொருள்முதல்வாதி, அதாவது மதத்தின் விரோதியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு இயங்கியல் பொருள்முதல்வாதி, அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தைச் சூக்குமமான முறையில் நெடுந்தொலைவே உள்ள, முற்றிலும் தத்துவஞான ரீதியான, ஒருபோதும் மாற்றமடையாத போதனையை அடிப்படையாகக் கொள்ளாமல் ஸ்தூலமான முறையில் செய்முறையில் நடைபெற்று வருகின்ற மற்றும் பெருந்திரளான மக்களிடம் வேறு எதையும் காட்டிலும் அதிகமாகவும் சிறப்பாகவும் பாடம் புகட்டுகின்ற வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் செய்பவராக இருக்க வேண்டும்" என்றார். இங்கு ஒரு விடையத்தின் இரண்டு பக்கங்ளையும், அதாவது மதத்தை எதிர்க்காது அதை அப்படியே பாதுகாத்தல் என்ற வர்க்கப் போராட்டத்தின் பின் மதத்தை ஒழித்தல் அல்லது மதத்தை முதலில் ஒழித்த பின் சமூக இயக்கம் என்ற இரண்டு பிற்போக்கு தத்துவக் கூறுகளை எதிர்த்து எப்படிப் போராட வேண்டியுள்ளது என்பதை லெனின் தெளிவாக மதம் சார்ந்து எடுத்துக் காட்டுகின்றார். இதுவே எனது அனைத்துக் கருத்திலும் தெளிவாக வெளிப்படும் வகையில் முன்வைக்கின்றேன்.


இதை விடுத்து சிலர் தமது சொந்த அரசியல் அரிப்புக்கு ஏற்பவே, என்னிடம் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றனர்.


உதாரணமாக புலிசார்பு, புலியெதிர்ப்பு அணியினர் குறிப்பாக தமது சொந்த அரிப்புக்கு ஏற்பவே சிறிய கட்டுரையை எதிர்பார்க்கின்றனர். இதை நான் செய்யவே முடியாது. சமூக விடுதலை என்ற அடிப்படையில் சமூகத்தைச் சிந்திக்கத் தூண்டுவதே, எனது சமூக கடமையாக நான் கருதுகின்றேன்;. இதையே அனைவரும் கட்டாயம் செய்யவேண்டியதும் கூட. இதைவிடுத்து நாம் வம்பளக்க முடியாது. எனது சக்தியை விரயம் செய்ய முடியாது. சமூக அடி நிலையில் உள்ள மக்களுக்கு விளங்கும் வகையில், நான் எனது எழுத்தை மாற்ற முடியாது. மாறாக சமூகத்தை வழிநடத்தக் கூடிய முன்னணியாளர்களை உருவாக்கும் அடிப்படையில் தான், நான் எழுத வேண்டியுள்ளது. சமூகத்தையே புரட்சிக்கு இட்டுச் செல்லக் கூடிய சமூக முன்னோடிகளே, இன்று சமூகத்துக்கு தேவையாக உள்ளனர். சமூகத்தை தலைமை தாங்கக்கூடிய முன்னணி சமூக சிந்தனையாளர்களை உருவாக்கும் வகையில், அவர்களின் சமூக அறிவின் பரந்த தளத்தை உருவாக்கும் அடிப்படையில் தான், எனது எழுத்து குறிப்பான திசையில் நகர்கின்றது.



இதை ஒருவர் அடைந்தாலும் கூட அது எனது வெற்றிதான். இதுவே எனது உடனடி இலட்சியமாக உள்ளது. இதை அடைவது என்பது ஒரே நாளில் சாத்தியமில்லை. குறிப்பாக எனது அறிவு என்பதும், அறிவு சார்ந்த சமூக நடைமுறை என்பதும் ஒரு நாளில் ஏற்பட்டதல்ல. கடந்த 25 வருடமாக சமூகம் சார்ந்த அரசியலில் ஈடுபட்டதன் மூலம், முரணற்ற வகையில் சமூகத்துடன் செல்லும் ஒரு உறுதியான போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. சமூக நடைமுறை மற்றும் சமூகம் சார்ந்த தேடுதல் அறிவை, ஒரு நாளில் ஒருவருக்கு ஏற்படுத்திவிட முடியாது. நான் எனது குடும்ப வறுமை காரணமாக, சமூகத்தில் சிறுவயது முதலே உழைத்து வாழவேண்டிய நிலைமைக்கான சமூகக் காரணத்தைக் தேடத் தொடங்கியவன். சிறுவயது உழைப்பு, அது சார்ந்த வாழ்வின் அனுபவம் கூட, எனது பிந்திய அரசியல் வாழ்வில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

 

அனைத்தையும் ஒருங்கு சேர உருவான எனது அறிவு சமூக நடைமுறையில் இருந்து அன்னியமான ஒரு புதிய சூழலில், கடந்த 15 வருடங்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். ஒட்டும் உறவுமான எனது சமூகத்தில் இருந்து அன்னியமான ஒரு நிலையிலும், எனது சமூகத்தை புரிந்து கொள்வதில் பிழையற்ற ஒரு சமூக அணுகுமுறைக்கு சமூகத்தின் உணர்வுடன் ஒன்றி நிற்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. சமூகத்தை நெருங்கிப் பார்த்தல் என்பது, இலகுவாக உருவாகிவிடுவதில்லை.

 

இதுவும் ஒரு நாளில் நடந்து முடிவதில்லை. இங்கும் ஒரு போராட்டமே அவசியமானது. நான் வாழும் பூர்சுவா சூழல், தனிமைப்படுத்தப்பட்ட எனது சிந்தனையும், தனிமனித வாழ்வைத் தாண்டி முன்னேறவே போராடுவது அவசியமானதாக இருந்தது. இதை யாரும் எடுத்த மாத்திரத்தில் வந்தடைந்து விடமுடியாது. அப்படி சிலர் எண்ணுகின்றனர். முற்றிலும் தவறானது, அபத்தமானதும் கூட. சமூகத்தை முரணற்ற இயங்கியல் வகையில் புரிந்து கொள்வது அவசியம். சமூகத்தின் பிரச்சனைகளை அவர்களின் வாழ்வில் இருந்து புரிந்து கொள்வது அவசியமாகின்றது. அதனடிப்படையில் நான் எனது வாழ்வையே, முரணற்ற வகையில் இட்டுச் செல்வது அவசியம். மார்க்ஸ் கூறியது போல் "கண்டிப்பான விஞ்ஞானக் கருத்தும் சாதகமான போதனையும் இல்லாமல் வேலை செய்யும் மனிதனை நாடுவது என்பது நேர்மையற்ற, வெற்றுப் பிரச்சார விளையாட்டிற்குச் சமமானது. இது ஒருபுறம் உத்வேகம் நிறைந்த தீர்க்கதரிசியையும் மறுபுறத்தில் வாயைப் பிளந்து கொண்டு இவனைக் கேட்கும் கழுதைகளையும் ஊகிக்கிறது. இதுவரை எப்போதும் யாருக்கும் அறியாமை உதவியதில்லை" நாம் சமூக விஞ்ஞானத்தின் உண்மைகளை, உண்மைகளாகவே எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ப+ர்வமாகவே உள்வாங்க வேண்டியிருந்தது. உணர்பூர்வமாகவே அதை செறிவூட்டி மீள சமூகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கின்றது. சமூக விஞ்ஞானம் என்பது எப்போதும் எங்கும் சமூகத்துக்கு முரணற்றதாக இருப்பதை, சரியாக உள்வாங்க வேண்டியதன் அவசியத்தைக் புரிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது.

 

சமூகம் சார்ந்த எனது உண்மையை யாராலும் நிராகரிக்க முடியாது என்ற அடிப்படை, எனது கருத்தின் சரியான தன்மைக்கான அடிக்கட்டுமானமாக உள்ளது. இதனால் தான் என்னால் தனித்தும் கூட, இந்த சமூகத்தின் முன் அச்சமின்றி நிமிர்ந்து நிற்க முடிகின்றது. பல தளத்தில் என்னைத் தூற்றுவோர், என்னைக் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளவே முடியாது வக்கற்றுப் போகின்றனர். சமூகத்தின் எதிரிகளாகவே உள்ள இவர்கள், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்து பலத்தில் உள்ள என்னை நெருங்கக் கூட முடிவதில்லை. அவர்களால் முடிந்ததெல்லாம் தனிமனித தூற்றுதல்கள் மட்டுமே. ஆனால் அவை எல்லாம் எப்போதும் வழமைபோல் சருகாகிப் போகின்றன.

 

எனது கட்டுரையின் வடிவம் சார்ந்த விமர்சனங்கள் என்னை நோக்கி அல்ல, சமூகத்தை நோக்கித் திரும்ப வேண்டும். சமூகத்தின் பின்தங்கிய அறிவின் நிலையை மாற்றவேண்டிய அவசியத்தையும், அதை நீங்களே செய்ய வேண்டியது உங்களின் சமூகக் கடமையாகும். மிகவும் சிரமானதும் கடுமையானதும் கூட. நீங்கள் ஒரு சமூக முன்னோடியாக, முன்னணியாளராக, சமூகத்தின் உண்மையான ஒரு தலைவனாக மாறவேண்டிய அடிப்படையில், நீங்கள் உங்களையே சுயவிமர்சனம் செய்து சமூகத்துக்காக போராடவேண்டும்;. என்னை பின்பற்ற முனைபவர்கள் நிச்சயமாக சமூகத்தை, முரணற்ற வகையில் புரிந்துகொள்ள வேண்டும்; எந்தக் கருத்தையும் சமூகத்தின் உண்மையான வாழ்வியல் நலன்களுடன் தொடர்புபடுத்தி, அதில் இருந்து சமூகத்தில் ஆழமாக ஊடுருவவேண்டும்;. எமது குறுகிய சிந்தனை முறைக்குள்ளும், எமது விருப்பு வெறுப்புக்குள்ளும் சமூகத்தை உட்படுத்தி, சமூகத்துக்கு ஒருக்காலும் யாரும் வழிகாட்டமுடியாது. குறைந்தபட்சம் சமூகத்துக்கு நேர்மையாக கூட அவர்களால் வாழமுடியாது.

11.11.2005

Last Updated on Friday, 18 April 2008 19:49