பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிரியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இனங் கண்டு விடாது தடுக்கும் கைக் கூலித் தனத்தின், துரோகத் தனத்தில் எழுந்ததே அ.மார்க்ஸின் தொகுப்புக்கள் மற்றும் வசனச் சொற்றாடல்கள்.


அடுத்து அ.மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம். "குறிப்பாக ஒரே மொழி பேசுபவர்களாக இருந்தும் கூட இன்று பஞ்சாபிகள், காஷ்மீரிகள் மத அடிப்படையில் இரு தேசிய இனங்களாகப் பிரிந்து கிடப்பதைப் பார்க்கிறோம்.


அதே சமயத்தில் ஒரே மதத்தினராக இருந்தும் கூட மேற்கு பாக்கிஸ்தானியரும், கிழக்கு வங்காளத்தினரும் ஒரே தேசிய இனமாக உருப்பெற இயலாமற் போனமையையும் ஒத்திணைத்துப் பார்க்கும் போது தான் "தேசம் என்பது கற்பிதம் செய்யப்பட்ட சமூகம்" ஒரே தேசத்தின் பாரம்பரியம், வரலாறு என்பவை திட்டுமிட்டு உருவாக்கப்பட்டவை தேசிய இனப் போராட்டங்கள் தான் தேசங்களை உருவாக்குகின்றனவே ஒழிய தேசங்கள் தேசிய உணர்வுப் போராட்டங்களை உருவாக்குவதில்லை." என அ.மார்க்ஸ் வாதிடும் போது வெளிப்படும் கருத்து முதல்வாத மார்க்சிய வெறுப்பைப் பார்ப்போம்.


பாரம்பரியங்கள், வரலாறு என்பன திட்டமிட்டு உருவாக்கப்பட்டது எனக் கூறுகின்றார் அ.மார்க்ஸ். அதாவது யார் திட்டமிட்டனர். பதில் இல்லை. பாரம்பரியங்கள், வரலாறுகள் யாரும் திட்டமிட்டு உருவாவதில்லை. மாறாக மக்களின் பொருளாதார வாழ்வுடன் நடக்கும் போராட்டத்தில் தான் பாரம்பரியங்கள், வரலாறுகள் உருவாகின்றன. யார் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ தாம் விரும்பியபடி ஒரு பாரம்பரியத்தையோ, வரலாற்றையோ கற்பிதம் செய்து விட முடியாது. மொத்த சமூகமுமே அதில் பங்கு கொள்கின்றன. அ.மார்க்ஸ் அப்படிக் கூறுவது என்பது ஏகாதிபத்தியம், மூன்றாம் உலக நாடு, வறுமை, சிறுவர் உழைப்பு, ஆணாதிக்கம், பாட்டாளி வர்க்கம் என்பன பாரம்பரியமாக வரலாறாக யாரோ திட்டமிட்டு உருவாக்கியது என்கின்றார்.


இல்லை யாரும் விரும்பினாலும் மக்களுக்கு புறம்பாக திட்டமிட்டு உருவாக்கிவிட முடியாது. இருக்கும் பொருளாதார அமைப்பு மீது கட்டமைக்கப்பட்ட அரசும், அதன் மீது இயங்கும் பல்வேறு சமூக இயக்கத்தின் தொடர்ச்சியில் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஒரு இயங்கியலாக அதாவது வரலாற்று இயங்கியலாக உள்ளது. அது இருக்கும் உற்பத்தி முறை மீது அரசு வடிவமும், வர்க்கப் போராட்டத்தின் மீதான ஆட்சி முறையும் நிட்சயமாகவே வரலாற்றில் தான், பாரம்பரியம் வரலாறு தோன்றுகின்றன. இதற்கு வெளியில் அல்ல அ.மார்க்ஸ் அவர்களே.


யாரும் எப்படியும் திட்டமிட்டு உருவாக்க முடியும் எனின், இயங்கியலை மறுத்து கருத்து முதல்வாதத்தை முன்வைப்பதாகும். வரலாற்றில் பாரம்பரியத்தில் தனி நபர்கள், கட்சிகள், வர்க்கங்களின் பங்குபற்றல்கள் என்பன தனித்துவமாகவும் சிறப்பாகவும் தனது பங்கை வழங்க முடியும். ஆனால் அது இருக்கும் பொருளாதார அமைப்பின் மீது, அதாவது உற்பத்தி முறை மீது மட்டுமே செயல்படுகின்றன. பொருளாதார அமைப்பை மீறி யாரும் திட்டுமிட்டு வரலாற்றை, மாற்றிவிடவுமில்லை, மாற்றிவிடப் போவதும் இல்லை.