புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 "ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்'', "கொலைவெறி பிடித்த மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா?''  விண்ணதி ரும் முழக்கங்களை எழுப்பி, செங்கொடிகளையும், கண்டன முழக்கத் தட்டிகளையும் ஏந்தியபடி கடந்த 8.10.08 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையை மறித்து, நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கைதாயினர், ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள்.

 

  ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இறுதித் தாக்குதலுக்குரிய மூர்க்கத்துடன் இனப்படுகொலையை நடத்திவரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்திய அரசு கூட்டாளியாகவே செயல்படுகிறது என்பதை நாடே அறிந்த போதும்;  கசாப்புக்காரனிடமே காருண்யம் கோரும் கதையாக, கொலைகாரன் மன்மோகனிடமே, இங்குள்ள ஓட்டுக் கட்சிகள் "கோரிக்கை' வைத்துக் கொண்டிருந்த சூழலில், மக்களின் போராட்டங்கள் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமென்பதை அறிவிக்கும் வகையில் அமைந்தது சென்னை நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம்.


 சென்னையில் மட்டுமின்றி, ம.க.இ.க, பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள்  கடந்த 8.10.08 அன்று தமிழகம் தழுவிய அளவில் திருச்சி பாலக்கரையிலும்; கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாகவும்; தஞ்சை இரயிலடி எதிரிலும்; ஓசூர் ராம்நகர், அண்ணாசாலை அருகிலும்; தருமபுரி ராஜகோபால் பூங்கா முன்பாகவும்; கடலூரில் உழவர் சந்தை அருகிலும் திரளான மக்கள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.


 போலீசின் அனுமதி மறுப்பு மற்றும் மழை காரணமாகத் தடைபட்ட பகுதிகளில் பேருந்து, ரயில் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்கின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 17.10.08 அன்று துறையூர்  பேருந்து நிலையம் எதிரிலும், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும்; குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தெருமுனைக் கூட்டத்தையும் நடத்தின.


      திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கடந்த 20.10.08 அன்று ""ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்! பார்ப்பன இந்து மதவெறியைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பார்ப்பன பாசிஸ்டுகளின் சதியை முறியடிப்போம்'' என் கிற முழக்கத்தின் கீழ்  மாபெரும் பொதுக்கூட்டம்  கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.


        இனப்படுகொலையின் சூத்திரதாரியான இந்திய அரசின் குரல் வளையைப் பிடிக்கும் விதமாக  தோழர் துரை. சண்முகம் அவர்களும், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட இப்பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராய் உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கும் வகையில் பேரா.பெரியார்தாசன் அவர்களும் இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.


 பெருந்திரளான மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளது ஊக்கமான ஆதரவைக் கொண்டு தமிழகமெங்கும் இவ்வமைப்புகளின் பிரச்சார இயக்கங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 பு.ஜ. செய்தியாளர்கள்