புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"பெரியார் எழுதியவைகளும் பேசியவைகளும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் – சொத்துகளாகும்'' என்று பெரியாரின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் வீரமணி அண்மையில் அறிவிப்புச் செய்திருக்கிறார்.


அறிவுசார் சொத்துடைமை என்பது ஏகாதிபத்தியத்தின் கண்டுபிடிப்பு. அதுவும் விற்பனைச் சரக்குகளுக்குத்தான் பொதுவாக இதனைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் கொள்கைகள், சிந்தனைகளுக்கும் காப்புரிமை பெற்றிருப்பது உலகிலேயே தி.க. மட்டுமாகத்தான் இருக்கும்.


பெரியார் தி.க.வினர், பெரியார் நடத்திய "குடியரசு'' இதழ் முழுவதையும் மறு அச்சு செய்து வெளியிட முன்வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி, இவ்வாறு தனது அறிவுசார் சொத்துடைமையை யாராவது வெளியிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


எவ்வளவு பெரிய கோபம்? பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சிக் கருங்காலிகள் உடைத்தபோது வராத கோபம்! பெரியார் சிலைகள் அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் இருக்காது என எச்.ராஜா எனும் இந்துவெறி பயங்கரவாதி மேடையேறி முழங்கியபோது வராத கோபம்!


பெரியார் என்ன சினிமாவுக்கா கதை எழுதினார்? வழக்கமாக சினிமாக் கழிசடைகள்தான் என் கதையை திருடிவிட்டார்கள் என்று நீதிமன்றம் போய்க் காசு பார்ப்பார்கள். இப்போது வீரமணியும் அதே வழிமுறையைக் கையில் எடுத்து விட்டார்.


சமூக நோய்க்கான மருந்து பெரியார்தான் என்றும் சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்றும் மேடைதோறும் முழங்கும் "தமிழர் தலைவரோ'' அந்த மருந்துக்குத் தான் மட்டுமே ஏகபோக முதலாளி என்கிறார்.


வீரமணி கூறும் சுயமரியாதைச் சுகவாழ்வு என்பதுதான் என்ன? பார்ப்பனியத்தை எதிர்க்காமல் வாழவும், வாழ்வியல் சிந்தனை எனும் பெயரால் "போராடாதே, கோப்படாதே, வயிற்றுப்புண் வந்துவிடும்'' என்றும் கற்றுத் தந்து சுயமரியாதையைக் காயடித்து மலடாக்குவதும்தானே?


இனி, வீரமணி கும்பலிடமிருந்து பெரியாரை விடுவிக்க வேண்டும் என்றால் ஒரே வழிதான் இருக்கிறது. பெரியாரின் படைப்புகளை மட்டுமல்ல; அவர் விட்டுச் சென்ற சொத்துக்களையும் மக்களுடைமையாக்க வேண்டும். போலிப் பகுத்தறிவுவாதி வீரமணியிடமிருந்து பெரியார் சம்பந்தப்பட்ட அனைத்தையும் மீட்டு மக்களுக்குச் சொந்தமாக்கத் தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.

· கதிர்