பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, முதலாளித்துவம் பொருளாதாரத்தின் வளர்ச்சியாக கருதுகின்றது. அனைத்துச் செல்வத்துக்குமான மனித உழைப்பு நின்று போகும் போதும், உற்பத்தியில் இலாபம் குறையும் போது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொது நெருக்கடியாக மாறுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று உலக உற்பத்தியை நிறுத்தியதுடன், தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலையை உருவாக்கி இருக்கின்றது. கொரோனா முடிவுக்கு வராத (மே மாதம்) இன்றைய சூழலில் 8.8 ரில்லியன் டொலர் (8 800 000 000 000), அதாவது உலகப் பொருளாதாரத்தில் 5.8 – 8.8 சதவீதமான பொருளாதார இழப்பு குறித்து ஆசியன் வளர்ச்சி வங்கி எதிர்வு கூறியிருக்கின்றது.

இதன் பொருள் உலகம் பொருளாதார நெருக்கடியை நோக்கிப் பயணிக்;கின்றது. அது அரசியல் நெருக்கடியாக, வர்க்க முரண்பாடுகளாக எழும். கொந்தளிப்பான இந்த சூழலை முதலாளித்துவமானது

1.மக்களை இன – மத - சாதி - நிற ஒடுக்குமுறை மூலம் பிளந்து, வர்க்க மோதலை  தவிர்க்க முனையும்.

2.நிதி மூலதனத்தைக் கொண்டு இலாபத்துக்கான சந்தையை சரியவிடாது பாதுகாக்கும்.

3.அரசுடமைகளை தனியுடமையாக்குவதன் மூலம் முதலாளித்துவத்தின் இலாபத்தை தக்கவைக்கும் அதேநேரம், நிதிமூலதனத்தைத் திரட்டிக் கொண்டு தன்னை தகவமைக்க முனையும்.

இந்த வகையில் முதலாளித்துவம் ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள எல்லாவிதமான ஏற்றத்தாழ்வான – நெளிவுசுழிவான வழிமுறைகளைக் கையாளும்.

பாட்டாளி வர்க்கம் அரசியல்ரீதியாக இதை விளங்கிக் கொண்டு தன்னை தயார் செய்வதும் - அரசியல் நெருக்கடியின் போது அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு தயாராக - தன்னை அரசியல்ரீதியாக அமைப்பாக்கி இருக்கவேண்டும்.    இன்றைய உற்பத்திமுறையும், நுகர்வும் மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்காக    உருவானதல்ல. மாறாக செல்வந்தர்கள் மேலும் செல்வந்தராவதற்கானதாக இருக்கின்றது. இதனால் இது இயற்கை குறித்து அக்கறைப்படுவதில்லை. வாழ்வியல் சார்ந்த மனித உரிமைகள், தேவைகள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை.

இந்த வகையில் முதலாளித்துவ உற்பத்தியில் செல்வத்தைத் திரட்ட முடியவில்லை என்றால், உற்பத்தி நின்று விடும். இலாபம் இல்லை என்றால், முதலாளித்துவத்தில் உற்பத்தி இல்லை என்பது தான் பொருள். மனித தேவைக்கான உற்பத்தி இலாபத்தை தராது என்றால், முதலாளித்துவ உலகம் நின்று விடும். இதனால் தான் முதலாளித்துவத்தில் மனித தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது போகின்றது.

கொரோனா வைரஸ் புறநிலையில் இருந்து செல்வம் திரட்டுவதை நிறுத்தி இருக்கின்றது. உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இலாபம் அடையும் முதலாளித்துவ செயல்கள் நின்று போனது. முதலாளித்துவ ஆன்மாக்கள் உளறுவதும் - கூச்சல் போடுவதுமே, உலகெங்குமான அரசுகளின் கொள்கையாகவும் - தேர்தல் அரசியலாகவும் - ஊடகவியலாகவும் புளுக்கின்றது.

முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் ஏற்பட்ட முடக்கம், உலகின் பெரும்பான்மையான உற்பத்திகளின்றி - இலாபமின்றி முடங்கி வருகின்றது. கொரோனா முடக்கம் மட்டுமல்ல, முடக்கத்துக்கு உட்படாத பகுதிகளின் உற்பத்தி கூட, சந்தைப்படுத்த முடியாத நிலையில்  முடங்கி வருகின்றது.

இலாபமற்ற முதலாளித்துவ உற்பத்தியை நிறுத்தி விடுவதை (முதலாளித்துவ கொள்கை) நிறுத்தவே, அரசுகள் கொரோனாவில் மக்கள் இறப்பதை அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற பொது உளவியலை உருவாக்கி - மீள உற்பத்தியைத் தொடங்கி வருகின்றது.

இப்படி அரசுகளின் முயற்சி கொரோனாவுக்கு முந்தைய நுகர்வு சந்தையை பழைய நிலைக்கு கொண்டு வரவே முடியாது. இயல்பு வாழ்க்கை என்பதன் பொருள், பழையபடி நுகர்வுச் சந்தையை பழைய இடத்தில் இருந்து தொடங்குவது தான். முதலாளித்துவத்தின் முரண்பாடுகளால் இது சாத்தியமற்றது.

உழைப்பை விற்று பெறும் கூலியைக் கொண்டு நுகரும் திறனை, கொரோனா காலத்தில் பெரும் மக்கள் கூட்டம் இழந்து போனது. இதன் மூலம் பணப்பரிவர்த்தனை என்பது சுருங்கி விட்டது. இதனால் வேலையின்மையும், எதிர்காலத்தில் வேலை உத்தரவாதமுமற்ற சூழல் என்பது, பல பத்து கோடி மக்களின் கதியாக மாறி வருகின்றது. அதேநேரம் அதிக வேலை நேரம் என்ற முதலாளித்துவ லாபவெறி - வேலையின்மையை மேலும் அதிகமாக்கும்.

உழைப்பிலான கூலியின்றி மக்கள் நுகர முடியாமையும், வேலை இழப்பு ஏற்படும் நுகர்வின் வீழ்ச்சி, அதிக வேலை நேரத்தால் ஏற்படும் நுகர்வுத் தேக்கம், உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத தேக்கமாகவும், புதிய வேலையின்மையாகவும் மாறும்.

வேலை இழப்பு உற்பத்தியில்; பண்புரீதியான - அளவுரீதியான இழப்பாக இருப்பதால், முதலாளித்துவத்தில் இலாபம் பார்க்கும் அளவு குறையும்.

அதேநேரம் உலகளாவிய உற்பத்திகள் பிறநாடுகளின் நுகர்வுச் சந்தைச் சார்ந்த ஒற்றை பொருளாதார முறைமையிலானது. பல ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மய்யங்களையும் - நாடுகளையும் சந்தைப்படுத்தலின்றி அழித்துவிட்டது. அதாவது உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நுகர்வுக்கு செல்ல முடியாது - தேங்கி அழிந்து போனது. இந்த உற்பத்திகள் மீள முடியாத சூழலில், உழைப்பை இழந்துவிடுவது என்பதே - முதலாளித்துவ பொருளாதார விதியாகி வருகின்றது.

நிதிமூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட தேசங்களின் வரவுசெலவு திட்டமிடல், கடனையும் - வட்டியையும் கட்டும் அடிப்படையிலான ஏற்றுமதிப் பொருளாதாரம் - சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் என்பது – தேசங்களின் பொது அரசியல் நெருக்கடியாக மாறும். புதிய கடனும் சேர்ந்து மக்களை சூறையாடவும் ஒடுக்கவும் கோரும்.          
உலகில் அதிக வேலை கொண்ட சுற்றுலாத்துறையை மைய்யப்படுத்திய முடக்கம், மீள முடியாத அளவுக்கு நீண்ட காலத்திற்கு மீள முடியாத பாரிய வேலையின்மையை உருவாக்கி வருகின்றது.

இன்று கொரோனா தொற்றால் அல்லாடுவது அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்ல, கொரோனாவில் இருந்து விடுபட்ட சீனா உற்பத்தியைக் கூட விற்க முடியாது முடக்கி வருகின்றது. சந்தைத் தேக்கம் என்பது, சீனாவில் வேலையின்மையாக மாறுகின்றது.

உற்பத்தி தேக்கமும், வேலையின்மையாக மாறும். பல பத்து கோடி மக்களை வேலையற்றவராக்கும் போது, நூறு கோடி மக்களை நேரடியாக பாதிக்கும். பணமின்றி நுகர முடியாத நிலை, மக்கள் மத்தியில் உருவாகும் போது, ஒட்டுமொத்த பொருளாதாரமும் தேக்கத்துக்கு உள்ளாகி - அரசியல் நெருக்கடியாக மாறும். 
முதலாளித்துவம் இதிலிருந்து மீள, நிதிமூலதனத்தைப் பாய்ச்ச வேண்டும். அதாவது உழைப்பை இழந்து வரும் மக்களின்; நுகர்வை அதிகரிப்பதன் மூலம், முதலாளித்துவ தேக்கத்தை தடுக்கவேண்டும். இன்று உழைப்பை இழந்து நிற்கும் மக்களும், சமூக நிதியாதரங்களை கொடுத்து நுகர்வை அதிகரிக்க வைப்பதன் முலம், முதலாளித்துவத்;தை பாதுகாத்தல்.

இதை ஜரோப்பிய முதலாளித்துவம் செய்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே வேலையற்ற காலத்திற்கு, (முதலாளியூடாக) சம்பளத்தைக் கொடுக்கின்றது. சில நாடுகள் (உதாரணமாக அவுஸதி;ரேலியா) வழமையான சம்பளம் போக, பிற கொடுப்பனவை கூடுதலாக அல்லது இரண்டு மடங்கு வரை கூட்டிக் கொடுக்கின்றது. இதன் மூலம் வேலை உத்தரவாதம், அதேநேரம் நுகர்வை தக்கவைத்தல் - நுகர்வை அதிகரிப்பதன் மூலம், சந்தையை சேதமின்றி மீட்க முனைகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன்.. சமூகநிதியாக வரம்புக்குட்பட்ட தொகையைக்  கொடுப்பதன் மூலம், வேலைக்கான உத்தரவாதத்தை மறுதளிக்கின்றது.  இந்தியா, பிரேசில் .. இதில் எதையும் செய்யவில்லை. அதாவது எதையும் கொடுப்பதில்லை - குறைவாக கொடுப்பது - காலம் இழுத்தடிப்பது.

பொதுவாக நுகர்பவனுக்கு நிதிமூலதனத்தைக் கொடுக்காது, முதலாளிக்கு கொடுப்பது. இதன் மூலம் சந்தையைத் தக்கவைக்க முடியாது.  
இப்படி ஒவ்வொரு நாடும் கொரோனாவை கையாண்ட குளறுபடியான கூத்துகள் போல்,

1.மக்களுக்கு நிதிமூலதனத்தை நேரடியாக கொடுப்பதன் மூலம், தங்கள் சந்தைப் பொருளாதார வழிகளில் மீள உறிஞ்சிக் கொள்கின்றது. அதேநேரம் வேலை, சந்தையைப் பாதுகாக்கின்றது.

2.நிதிமூலதனத்தை மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்ற முதலாளித்துவக் கொள்கை மற்றும் கண்ணோட்டமானது, தனக்குத்தானே சவக் குழியைத் தோண்டுகின்றது. சந்தையை தேக்கத்துகுள்ளாக்கி அழிவை கோருகின்றது.

3.நிதிமூலதனத்தை முதலாளிக்கு கொடுப்பதன் மூலம், சந்தையில் நுகர்வு அதிகரிக்காது. தங்கள் உள்நாட்டு சந்தை தேங்கிவிடுவதும், சந்தையுள்ள பிற உலக சந்தையைப் பிடிக்கும் யுத்த வெறியாக மாறும்.

உலக முதலாளித்துவம் பல வடிவங்களிலான முரண்பாட்டுக்குள் சிக்கி, தனது சொந்தக் சவக்குழியை தோண்டுகின்றது. பாட்டாளிவர்க்கம் வர்க்க உணர்வு கொண்ட அரசியல் தளத்தில் - தன்னை அணிதிரட்டிக் கொள்வதன் மூலம், அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான எதார்த்தமானது - மனித வரலாற்றின் மீண்டும் ஒரு முறை எம் முன்.

Last Updated on Tuesday, 26 May 2020 14:04