பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2009 இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளும் - அரசும் தத்தம் மக்களை ஒடுக்குகின்ற, தங்கள் சொந்த இன அதிகாரத்துக்காகவே நடத்தினர். யுத்த நிறுத்தம் - பேச்சுவார்த்தையிலிருந்து விலகிய  புலிகள், வலிந்து தொடங்கிய யுத்தத்தில் தோற்றுப்போக, பேரினவாத அரசு வெற்றி பெற்றது. இதன் மூலம் அரசு ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்தப் வரலாற்றுப் பின்னணியில் உருவான முள்ளிவாய்க்கால் நினைவுகள் என்பது
1.தங்கள் சொந்தப் பிழைப்புக்காக தமிழினவாதத்தை முன்னிறுத்துகின்றவர்கள்,  புலிகளுக்கான அஞ்சலியாக அரங்கேற்றுகின்றனர்.

2.ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளை முன்னிறுத்தி, தங்கள் மனிதவுணர்வுகளை வெளிப்படுத்தும் சமூக அஞ்சலியாக செய்கின்றனர்.

இப்படி இரு வேறுபட்ட பின்னணியிலேயே, வருடாவருடம் முள்ளிவாய்க்கால் நினைவுகள் பல்வேறு இழுபறிகள் - முரண்பாடுகளுடன் நடக்கின்றது.  2009 இல் முள்ளிவாய்க்கால் வரை நடந்தேறிய இறுதி யுத்தமானது, புலிகள் பலி கொடுக்க பேரினவாத அரசு பலியெடுத்;தது. இதில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பலியெடுக்கப்பட்டனர். இப்படி பலி கொல்லப்பட்டவர்களை இன்று நினைவுகொள்வதன் மூலம், பலிகொடுத்தவர்களுக்கும் - பலியெடுத்தவர்களுக்கும் எதிரான உணர்வு தான் - முள்ளிவாய்க்கால் அஞ்சலியின் பொதுச் சாரமாக இருக்க முடியும். இவை இரண்டையும் உள்ளடக்கி செய்யாத அஞ்சலிகள் போலியானது, எதாhர்த்தத்தில் சொந்த பிழைப்புக்கானதாகவே அரங்கேறுகின்றது.

 

இனவொடுக்குமுறையை தங்கள் அரசியல் அதிகாரத்துக்காக இன்று வரை தொடரும் பேரினவாதமானது, அன்று கொல்லப்பட்ட மக்களை புலிகள் என்றே இன்று வரை முத்திரை குத்துகின்றது. இதன் மூலம் நேரடியாகவும் - மறைமுகமாகவும், கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை மறுதளிக்கின்றது. தமிழினவாதிகளோ அரசு அனைவரையும் புலியாக கூறுவதை பிரித்துப் பார்க்கவும் - காட்டவும் மறுப்பதன் மூலம், புலிகளை பாதுகாப்பதன் பெயரில் அரசின் குற்றங்களை பாதுகாக்கின்றனர்.

புலிகளாக அரசு முத்திரை குத்தப்பட்டவர்கள் யார்?

1.யுத்தப் பிரதேசத்தில் இருந்து தப்பியோடாத வண்ணம், புலிகளால் பணயமாக பிடித்து வைக்கப்பட்டவர்கள். இதை மீறி தப்பியோடிய மக்களை புலிகள் சுட்டுக் கொன்றனர். இந்த பின்னணியில் கொல்லப்பட்ட மக்கள்.
2.கட்டாயப்படுத்தி யுத்தமுனைக்கு புலிகளால் கொண்டு வரப்பட்டவர்கள், ஆயிரக்கணக்கில்  பலியானார்கள்.
3.குழந்தைகளின் அறியாமையை பயன்படுத்தி யுத்தமுனையில் பலியிடப்பட்ட குழந்தைகள்.
4.இதுதான் விடுதலைப் போராட்டம் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையில் - யுத்த முனையில் தங்களை தியாகம் செய்தவர்கள்.

இவர்களே அஞ்சலிக்குரிய மனிதர்கள். இவர்களை பலிகொடுக்கும் ஒரு யுத்தத்தை முன்னின்று நடத்திய புலித் தலைவர்களுக்கு அல்ல அஞ்சலி. புலித் தலைவர்கள் தங்கள் இன மக்களையே ஒடுக்கினார்கள். நன்கு தெரிந்தே மக்களை பலியிட்டவர்கள். மேற்குநாட்டு தலையீடு மூலம் தாங்கள் தப்பிச்செல்ல முடியும் என்று நம்பி, சொந்த இன மக்களை பலிகொடுத்து - பிணங்களை எண்ணிப் பிரச்சாரம் செய்த புலித் தலைவர்கள்.  வெறுக்கத்தக்க இந்த புலியின் அரசியல், இந்த அரசியலுக்கு தலைமை தாங்கிய அனைவரும் மானிட விரோதிகளே. கொலைகார பேரினவாத ஒடுக்குமுறையாளருக்கு நிகரானவர்கள்.

இந்தப் புலித் தலைவர்களை வழி நடத்திய, முன்னிறுத்துகின்ற

1.புலத்தில் இருந்து வழிநடத்திய மேற்கு கைக்கூலிகளின் அஞ்சலிகள் போலியானவை, புரட்டுத்தனமானவை.
2.தன் இனத்தாலேயே ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி  போராடாமல் தேர்தல் அரசியல் செய்து பிழைக்கும் கூட்டத்தின் அஞ்சலிகள் போலியானவை.
3.தமிழகத்தில் இனவாதம் பேசி தேர்தல் அரசியல் செய்கின்ற போலிகளின் புரட்டு அஞ்சலிகள் - அவர்களின் சுயநலத்துக்கானது. 
4.கண்ணை மூடிக்கொண்டு தன் இனத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக புலிகள் தலைமை தாங்கி போராடியதாக கூறும் கண்கட்டுவித்தை மூலம், தமிழகத்தில் நடந்தேறுகின்ற போலி அஞ்சலிகள் அரசியலற்ற – பகுத்தறிவற்ற குருட்டு வழிபாட்டுத்தனமானதாகும்.

தன் இனத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி, அனைத்து வகையான ஒடுக்குமுறையாளர்களை இனம் கண்டும் - இனம் காட்டியும், முள்ளிவாய்க்காலில் மரணித்த மானிடத்தை நினைவு கொள்வோம்.
அனைத்து இனவாதத்திற்கும் எதிராகவும், இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், அனைத்து சமூக விடுதலைக்காகவும்; ஒருங்கிணைத்து போராடுவோம் - குரல் கொடுப்போம்.