ஆசியாவின் ஆச்சரியம்!

விடைபெற்றுச் செல்லும் 2013 புதிய செய்திகளையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு விடைபெற்றுச் செல்கிறது. இலங்கையிலே CHOGMஒரு சர்வாதிகாரத்திற்கு மகுடம் சூட்டியதோடு அதற்கான செலவை நாட்டு மக்களின் தலையில் சூடிவிட்டு நடையைக் கட்டிவிட்டது. அனைத்து சர்வாதிகார, முதலாளித்துவ நாடுகளின் தலைவர்களும், காலனித்துவ எஜமானர்களும் ஆசி வழங்கி விட்டு சென்று விட்டார்கள்.


களியாட்டங்களில் குதூகலித்த மக்கள், செய்த தவறுக்காக தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதோவொரு பகுதியில் தேர்தலை நடத்தும் ஒரே நாடான இலங்கையின், வடக்கு மக்கள் தாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டார்கள். அரசாங்கமோ தேர்தலை கொடுத்தது. இனவாதம் நன்றாகவே விலைபோன தேர்தலில் அதிகார வர்க்கத்தோடு இன்னொரு குழுவையும் மக்கள் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது தங்களை ஆள்வது யார் என்று தெரியாத நிலையில் மக்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் ஆள்கிறதா, ராஜபக்ஷ ஆள்கிறாரா அல்லது விக்னேஸ்வரன் குழு ஆள்கிறதா என்பதை தெரியாமல் மக்கள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பேதமில்லாமல் எல்லோரது உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. பணம் படைத்தவனுக்கு மாத்திரமே இனி கல்வி என்ற நிலை உருவாகிவிட்டது. பொருளாதாரச் சுமையை தாக்குப்பிடிக்க முடியாமல் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன. நாட்டில் கலாச்சாரம் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

 

சமீபத்தில் தம்புத்தேகம எப்பாவல பிரதேசத்தில்பெற்றோரால் கைவிடப்பட்டு பலநாட்கள் பட்டினியில் கிடந்து, சாகும் தறுவாயிலிருந்த ஐந்து குழந்தைகள் அயலவர்களினால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். குடும்பச் சுமையை தாங்கமுடியாமல் குடும்பப் பெண்கள் விபச்சாரத்தின்பால் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல குடும்பங்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும்போது சக்கரவர்த்தியின் செல்வப் புதல்வர்கள் பந்தயக் கார் ஓட்டுவதற்காக மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் வாரி இறைக்கிறார்கள். மனிதர்கள் கடத்திச் செல்லப்படுகிறார்கள், காணமலாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். தந்தையே மகளைக் கற்பழிக்கிறார். அண்ணன் தங்கையை; கற்பழிக்கிறார், தாத்தா பேத்தியை கற்பழிக்கிறார். தாய் மகனிடம் தான் பெற்ற குழந்தைக்காக ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடுத்ததும் இந்த நாட்டில்தான்.

 

கலாச்சாரத்தை சீரழித்த, பண்பாட்டை படுகுழியில் தள்ளிய, மனிதநேயத்தை துச்சமென மதிக்கும், மனிதர்களை விபச்சாரிகளாகவும், சூதாடிகளாகவும் திருடர்களாகவும், பிச்சசைக்காரர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெட்கமாக இல்லையா? இந்த சர்வாதிகாரத்தின் கீழ் எல்லாமே விற்கப்படுகின்றன. சூறையாடப்படுகின்றன. மக்கள் சிந்திக்க வேண்டும். காலனித்துவ அடிமைகளின் மாநாடு முடிந்த கையோடு அரை நித்திரையிலிருந்த இனவாதம் தன்னைத் தானே சுதாகரித்துக் கொண்டு எழுந்துவிட்டது.

 

வடக்கில் மக்களுக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு, மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தெற்கில் நூற்றாண்டுகளாக முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை சூட்சமமாக நடந்தேறி வருகின்றன. கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த தெவனகலை என்ற இடத்தில் காணி உறுதியுடன் நான்கு நூற்றாண்டுகளும் மேலாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களை அவ்விடடத்திலிருந்து விரட்டுவதற்காக புனித பூமி என்ற நாடகம் இனவாதிகளால் அரங்கேற்றப்படுகிறது. புனித பூமியில் கள்ளச் சாராயம் காய்ச்சலாம், விபச்சார விடுதிகளை நடத்தலாம், போதைப் பொருட்களை தாராளமாக விற்கலாம், சூதாட்ட நிலையங்களை அமைக்கலாம். ஆனால் மக்கள் குடியிருக்கக் கூடாது. வடக்கில் காணிகள் இராணுவத்திற்கு சொந்தமாகின்றன. தெற்கில் காணிகள் புனித பூமிகளாகின்றன. புத்தரின் போதனைகளை கடைபிடிப்பதை கைவிட்டு விட்டு புத்தரை வணங்கத் தொடங்கியதால் வந்த விளைவுதான் இது. இது தான் ஆசியாவின் ஆச்சரியம்!

 

தெஹிவளை பிரதேசத்தில் மூன்று பள்ளிகளில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடக் கூடாதென பொலிஸார் கூறுமளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது. கோயில்கள் உடைக்கப்பட்டு அங்குள்ள பொருட்கள் திருடப்படுகின்றன. இவற்றையெல்லாம் நியாயப்படுத்த நாடாளுமன்றத்தில் கோமாளிகளும் உள்ளனர். சமீபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்த ஒரு கவர்ச்சி நடிகை இந்த 'சிஸ்டத்தை" மாற்றவதற்காகவே தான் அரசியலுக்கு வந்ததாகக் கூறுகிறார். ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றை மாற்றியது எப்படி என்பதை இந்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்ளுக்குத் தெரியும். இவர் எந்த 'சிஸ்டத்தை" மாற்றப் போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

 

நாட்டில் நீதி செத்து எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. நீதி தேவதையின் கண்ணை கட்டிவிட்டு அவளை நிர்வாணமாக்கி விட்டார்கள். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இன்றைய அமைச்சரொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் கொலையை கண்ணால் கண்ட சாட்சியாக அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் இன்றைய அமைச்சருமான ஒருவர் இருக்கிறார். 27 வருடங்களுக்குப் பின்னர் வழக்கின் தீர்ப்பு வருகிறது, சாட்சிகள் திருப்தியாக இல்லாததால் சந்தேக நபர் நிரபராதி என்று விடுதலை செய்யப்படுகிறார். 1987ல் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் தலையில் ஆணியடித்துக் கொல்லப்படுகிறார்கள். ஆணியடித்தவர் மேற்படி சந்தேகநபர் தானென்பதை நாடே அறியும். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. உறுப்பினர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்திருக்கிறார். மாணவர்கள் தமது தலையில் தாமே ஆணி அடித்துக் கொண்டு செத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

 

பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால் இந்திய முதலாளித்துவ ஊடகங்களின் முக்கிய செய்தியாக இருப்பது தேவயானி என்ற அமெரிக்காவுக்கான துணைத்தூதுவர் கைது செய்யப்பட்டு சிலையில் அடைக்கப்பட்டிருப்பதுதான். தமது வீட்டில் வேலை செய்த சங்கீதா ரிச்சட் என்ற பெண்ணை மும்பையில் சந்தித்து தமது பணியாளாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதாகவும்,அதற்காக அவரது திறமையை பரீட்சிப்பதற்கு என்று கூறி வீட்டில் தங்கவைத்து சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கியிருக்கிறார். 25,000 ரூபாய் சம்பளமும் மேலதிக வேலைக்காக 5000 ரூபாயும் தருவதாகக் கூறி அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று உரிய சம்பளத்தையும் கொடுக்காமல், அமெரிக்கத்தொழில் சட்டத்தை மீறி தொழில் ஒப்பந்தத்தையும் மீறி நீண்ட நேரம் வேலை வாங்கியிருக்கிறார். அங்கிருந்து தப்பிச் சென்ற சங்கீதா அமெரிக்க வழக்கறிஞரொருவரிடம் தஞ்சமடைந்துள்ளார்.

 

அமெரிக்க விசா விதிமுறைகளையும் மீறிய தேவயானி அமெரிக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். அவருக்காக இந்திய ஊடகங்களும், காவல்துறையும், அரசாங்கமும் வரிந்து கட்டிக் கொண்டு அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த அபலைப் பெண்ணுக்காக, அவளுடைய உரிமைகள் பறிக்கப்பட்டதற்கெதிராக யாருமே குரல் கொடுக்கவில்லை. அமெரிக்காவின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ. துணைத் தூதுவரின் செயலை நியாயப்படுத்த முடியாது. இந்த சம்பவத்தை வைத்து அமெரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில், இந்தியாவிற்கு நான்கு போர்க்கப்பல்களை அமெரிக்கா வழங்கியிருக்கின்றது. மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் முதலாளித்துவத்தின் வியாபாரங்களும் செவ்வனே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 

போதைப் பொருள் கடத்துபவர்களும், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களும், உழைப்பைச் சுரண்டுபவர்களும், சூதாடிகளும் அதிகாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்த நவ தாராளமய முதலாளித்துவம் உலகெங்கும் செய்துவரும் அநியாயங்களுக்கும் அநீதிகளுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களும் ஒன்று சேரவேண்டும். ஓரணியில் திரள வேண்டும். மீட்பர் வரும் வரை காத்துக் கொண்டிருக்க முடியாது. தானாய் எல்லாம் மாறும் என்ற பழைய பொய்யை துடைத்தெறிந்துவிட்டு புதிய பாதையில், சமவுடமையை நோக்கிய பாதையில் பயணிக்க தயாராக வேண்டும் அதற்காக திடசங்கற்பம் பூணுவோம். இன்னும் பல ஆச்சரியங்கள் 2014 புத்தாண்டில் காத்துக் கொண்டிருக்கின்றன. சவால்களை சந்திப்போம்! சாதிப்போம்!!

Last Updated on Wednesday, 29 January 2014 13:44