உலகப்பொருளாதார நெருக்கடி

ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் இழப்பதன் மூலம் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். மற்றவனுடைய செல்வத்தை அனுபவிப்பது தான் மகிழ்ச்சி. இதுதான் இந்த தனியுடமை சமூக அமைப்பின் அறம் மற்றும் கோட்பாடாகும். இதை அமெரிக்க அரசின் முன்னைய முக்கிய கொள்கை வகுப்பாளரும், முக்கிய மந்திரியுமாக இருந்த கொலின் பாவெல் நறுக்குத் தெறித்தது போல் மிக எடுப்பாகவே கூறியிருந்தார். "தனிச் சொத்துரிமையை மதிப்பது மனித கௌரவத்தின் அடையாளம் இதில் சமரசம் செய்து கொள்வது கூடாது. சுதந்திரச் சந்தையும், சுதந்திர வாணிபமும் நமது தேசியப் பாதுகாப்புத் திட்டத்தில் முன்னுரிமை பெறுகின்றது" என்றார். தனியுடமைச் சமூக அமைப்பு இதைத் தாண்டி மனிதனை மனிதனாக மதிக்காது. இந்தத் தனியுடமை சார்ந்த பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாற்றப்பட்டு விடுகின்றான். இந்த சமூக அமைப்பில் ஏற்படும் அதிர்வுகளில் ஒன்றுதான் உலகப் பொருளாதார நெருக்கடி.

இதன் போது வேலை இழந்துவிடும் நிலை, சம்பளக்குறைப்பு, அதிக வேலைப்பளு, சமூக நலத் திட்டங்கள் வெட்டு, தொழிலாளர் உரிமைகள் பறிப்பு, வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சி, விலைகள் அதிகரித்தல் ... என்று அடுக்கடுக்காக சாதாரண மக்கள், உலகப் பொருளாதார நெருக்கடியை தங்கள் சொந்த வாழ்வுடன் உணரத் தொடங்குகின்றனர். இது ஏன் நிகழ்கின்றது? பொருளாதார நெருக்கடி என்கின்றார்களே அது என்ன? இவை எதையும் பொது மக்கள் தெரிந்து கொள்ள முடிவதில்லை. தங்கள் சொந்த வாழ்வுடன் உணரும் இந்த நெருக்கடியை, ஏன் நிகழ்கின்றது என்று, உணர்வுபூர்வமாக உணர்ந்தால் மட்டும் தான் இதற்கு தீர்வையும் மனிதன் காணமுடியும்.

மூலதனம் என்பது என்ன?

இதை மார்க்ஸ் மிக அழகாக எங்கெல்ஸ்சுக்கு எழுதிய கடிதத்தில் 'ஒரு துண்டுச் சதை, ஒரு நரம்பு, ஒருதுளி இரத்தம் இருக்கும் வரை கதையில் வருகின்ற உயிருள்ள மனிதனின் இரத்தத்தை உறியும் பணம் போன்று, மூலதனமானது அவனை முழுதும் சுரண்டாமல் அவன் மீது தான் கொண்ட பிடிப்பைத் தளர்த்தாது" என்றார். மூலதனத்தின் குணம் இதுதான். இந்த மூலதனத்தை குவிக்கும் போட்டி மூலதனத்துக்கு இடையில் கூர்மையாகின்ற போது, அது உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறுகின்றது.

உலகப் பொருளாதார நெருக்கடி என்பது என்ன?

மூலதனத்தின் சொந்த நெருக்கடி. அதாவது முதலீட்டைப் போட்ட முதலாளி, பணத்தை பெருக்க நடத்தும் போட்டியினால் ஏற்படும் பொது நெருக்கடி. போட்ட மூலதனத்திற்கு இலாப விகிதம் குறைகின்ற போதும், இலாபத்தை பெருக்கும் போது ஏற்படும் பொது நெருக்கடி. பணத்தைப் பெருக்குவதற்கான போட்டியின் பொது விளைவு தான், உலகப் பொருளாதார நெருக்கடி. இந்த வகையில் நிதிமூலதனமும், முதலீட்டு மூலதனமும் இதை உருவாக்குகின்றது.

நிதி மூலதனம் என்பது என்ன?

உற்பத்தியில் ஈடுபடாது தன்னைத்தான் பெருக்கும் மூலதனம். இது இன்று பெரும் கடன் மூலதனமாக மாறி இருக்கின்றது. இது உற்பத்தி மூலதனத்தில் இருந்து தான் தன்னை பெருக்குகின்றது. உலகில் அமெரிக்கா உள்ளிட்ட பெரும் பொருளாதார நாடுகள் கூட, வாங்கிய கடன் அதன் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிமாகும். இதற்கான வட்டி முதல் கடன் மீளக் கொடுப்பனவுக்காகவே, தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை செலவு செய்கின்றது. இதைச் செலுத்த முடியாத பொது நெருக்கடி, உலகப்பொருளாதார நெருக்கடியாக மாறுகின்றது. இதை இன்று செலுத்த முடியாத போக்கு, இன்று உலகெங்கும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்று ஐரோப்பாவில் இந்த நெருக்கடி அலையலையாக வருகின்றது. இதைக் கொடுக்க சமூக வெட்டுகள் மற்றும் அரசு துறையை இல்லாதாக்குவது, சம்பளக் குறைப்புகள், புதிய வரிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தை கடன் தவணைக்கும், வட்டியாகவும் கொடுக்க முனைகின்றனர். மக்கள் மேல் இதை சுமத்துவதன் மூலம், இதற்கு தற்காலிக தீர்வு காண முனைகின்றனர்.

அதேநேரம் இந்த நிதி மூலதனத்தின் இன்னுமொரு பகுதி தான் பங்குச் சந்தை, ஊக வாணிபம், எங்கும் இயங்குகின்றது. இதன் மூலம் உற்பத்தியில் ஈடுபடாது, தன்னை உற்பத்தியில் இருந்து பெருக்கிக் கொள்ளுகின்றது. மக்களை எதுவுமற்ற பரதேசிக் கூட்டமாக்குகின்றது. உற்பத்தி மூலதனத்துக்கு கடன் கொடுக்கும் நிதி மூலதனம், அதை ஓட்ட உறிஞ்சுகின்றது. இப்படி நிதி மூலதனம் உற்பத்தியில் ஈடுபடாது உறிஞ்சுவதால், இறுதியில் உறிஞ்ச எதுவுமற்ற நிலையில் நிதி மூலதனம் கூட பொது நெருக்கடியில் சிக்கி திவலாகின்றது.

முதலீட்டு மூலதனம்

மார்க்ஸ் மூலதனத்தில் கூறியது போல் 'உற்பத்தித்துறைகள் மீது பாட்டாளிகளின் பொது அமைப்பு கட்டுப்பாடு செய்யவேண்டும் என்ற கருத்தை எதிர்க்கும் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் சமுதாயம் முழுவதையும் அடிமைப்படுத்தும் ஒரு மாபெரும் தொழிற்சாலை அமைப்பாக மாற்ற விரும்புகின்றனர்." என்றார். இதன் விளைவு இன்று உலகப் பொருளாதார நெருக்கடியாகின்றது.

இது என்ன செய்கின்றது. மூலதனத்தைப் பெருக்க அது ஒன்றையொன்று அழிக்கும் போட்டியாக மாறுகின்றது. இந்த நெருக்கடி, இறுதியில் சங்கிலித் தொடராக மாறிவிடுகின்றது. பணத்தை பெருக்குவதற்காக சந்தையைக் கைப்பற்ற முனைகின்றது. விலையைக் குறைப்பதன் மூலம், தனது போட்டி மூலதனத்தை அகற்ற முனைகின்றது. உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்துவதன் மூலம், சந்தையை ஆக்கிரமிக்க முனைகின்றது. போட்டியாளனை இல்லாதாக்க எல்லாவிதமான இழிவான செயலிலும் ஈடுபடுகின்றது.

அதேநேரம் மூலதனம் தனக்கான புதிய சந்தையைத் தேடுகின்றது. சந்தையைக் கைப்பற்ற எல்லாவிதமான குறுக்கு வழியையும் நாடுகின்றது. யுத்தங்களை நாடுகின்றது. நாடுகளை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்துகின்றது. நாடுகளை ஆக்கிரமிக்க முனைகின்றது. தனது மூலதன சந்தையை பாதுகாக்க படைகளை உலகெங்கும் நிறுத்துகின்றது.

அதேநேரம் மூலதனம் சார்ந்து ஏகாதிபத்திய முரண்பாடுகள் தீவிரமாகி முன்னுக்கு வருகின்றது. மூலதனத்தை பாதுகாக்க, புதிய சர்வதேச அணி சேர்க்கைகள் உருவாகின்றது. மறுதளத்தில் குறைந்த கூலியைத் தேடி உலகெங்கும் மூலதனம் ஓடுகின்றது. உழைப்பிற்கான நேரத்தைக் கூட்டுகின்றது. கூலியை குறைக்கின்றது. ஆட்குறைப்பைச்செய்கின்றது. உற்பத்தி (உற்பத்தி திறனை) செய்யும் வேகத்தைக் கூட்டுகின்றது. சந்தையைக் கைப்பற்ற, பொருளின் விலையைக் குறைத்து போட்டி மூலதனத்தை அகற்ற முனைகின்றது. இதில் இருந்து மூலதனத்தை காப்பாற்ற, உற்பத்தியைக் கூட நிறுத்திவிடுகின்றது.

மூலதனம் ஒன்றையொன்று அழிக்கும் போட்டியில், போட்டி மூலதனம் அழிகின்ற போது உற்பத்தி நிறுத்தப்படுகின்றது. வேலை இழப்பு ஏற்படுகின்றது. இந்தப் போட்டியை ஈடுகொடுக்க மூலதனங்கள் தமக்குள் இணைந்து அல்லது தனித்தும் போட்டியிடுகின்றன. அதேநேரம் ஆட்குறைப்பைச் செய்கின்றது. தொழில் நுட்பத்தை புகுத்தி உற்பத்தியை பெருக்குவதன் மூலம், குறைந்த விலை மூலம் சந்தையை ஆக்கிரமிக்க முனைகின்றது.

இந்தப் பொது நெருக்கடியின் விளைவு, நுகரும் தரப்பின் வாங்கும் சக்தியை இல்லாதாக்குகின்றது. சந்தை தேக்கத்துக்கு உள்ளாகின்றது. ஒருபுறம் மூலதனத்துக்கு இடையிலான போட்டி சந்தையின் பொதுத் தேக்கமாகவும், மறுபுறம் உழைப்புக்குரிய சந்தை இருப்பதில்லை. நுகரக் கூடிய மக்களின் உழைப்பை மறுத்துவிடுவதால், நுகரப் பணம் இருப்பதில்லை. மனிதனை உழைப்பில் அன்னியமாக்குவதன் மூலம் தான், அவனின் கூலியை குறைப்பதன் மூலம், சந்தையில் பொருளை குவிக்க முடிகின்றது. ஆனால் சந்தையில் இதை நுகரக் கூடிய நிலையில் மக்கள் வாழ்க்கைத்தரம் இருப்பதில்லை. பொது பொருளாதார நெருக்கடியில், தொடர்ந்து நுகர்வு வீழ்ச்சி காண்கின்றது.

மூலதனம் தனது போட்டி மூலதனத்தை மட்டும் அழிப்பதில்லை, நுகரும் மக்களின் தரத்தை அழிக்கின்றது. இதனால் உற்பத்தியை நுகர முடியாத சூழல் உருவாகின்றது. மூலதனம் இதை செய்யும் போது, மக்களின் தேவைகள் குறைந்து விடுவதில்லை. நுகர முடியாததால், தேவைகள் அதிகரிக்கின்றது. தேவைகளைப் பூர்த்தி செய்ய, அவர்களிடம் பணம் இருப்பதில்லை. உழைப்பை விற்று பணத்தைச் சம்பாதிக்க மூலதனம் அனுமதிப்பதில்லை. உண்மையில் மனித தேவைகள் இதனால் மறுக்கப்படுகின்றது. சந்தையில் அது குவிந்து நுகரப்பட முடியாத பொருளாகி தேங்கிவிடுகின்றது. நுகர்வுக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளி, இதனால் மேலும் அதிகரிக்கின்றது. மக்கள் வாங்கும் திறனை மேலும் மேலும் இழக்கின்றனர்.

பொருள் தேங்க உற்பத்தியை நிறுத்துவதில் முடிகின்றது. இதன் மூலம் மேலும் வேலை இழப்பு ஏற்பட, நுகர்வின் அளவு மேலும் குறைகின்றது. உற்பத்தி நிறுத்தம் இறுதியில் சந்தையை வெறுமையாக்கி, விலையை உயர்த்துகின்றது. இது வாங்கும் திறனை மேலும் இல்லாதாக்குகின்றது. இப்படி சுழல் வட்டமாகவே இது நிகழ்கின்றது.

இந்த மூலதன நெருக்கடியில் பல ஆயிரம் தொழிலாளர்கள் நாள் தோறும் தங்கள் வேலையை இழக்கின்றனர். சுரண்டலின் அளவு அதிகரிக்கின்றது. சுரண்டலின் பண்பு கொடூரமானதாக மாறுகின்றது. உலகப் பொருளாதார நெருக்கடி, வர்க்கங்களை விழிப்படைய வைக்கின்றது. வர்க்கப் போராட்டமும் அரசியல் வடிவம் பெற்று கூர்மையாகின்றது. இது தான் இன்று நடந்து வருகின்றது.

இதற்கு எதிராக நாம் என்ன செய்ய முடியும்? உழைக்கும் மக்கள் தமக்கு எதிரான மூலதன கொள்கைக்கு எதிராக போராடுவதன் மூலம், மக்கள் தாமே மூலதனத்ததை கண்காணிக்கும் சொந்த அதிகாரத்துக்காக போராடவேண்டும். இன்று உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் இதற்கான போராட்டங்கள் நடக்கின்றது. அந்த வகையில் நாம், அதனுடன் இணைந்து போராட வேண்டும். உலக மூலதனத்துக்கு எதிராக எந்த நாட்டில் போராட்டம் நடந்தாலும், அது எமக்கான போராட்டத்தின் ஒரு பகுதி. இந்த வகையில் அதனுடன் கைகோர்த்து தோழமையுடன் இணைந்து போராடவேண்டும். உலக மூலதனம் எல்லை கடந்து சூறையாடும் உலகமயமாதலுக்கு எதிராக, சர்வதேசியவாதிகளாக நாமும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இன்றைய தேசம், தேசியவாதம் என்னும் ஆளும் வர்க்க கோட்பாடு, உலகமயமாக்கலின் கீழ் போலியானது பொய்யானது என்பதை அம்பலப்டுத்திப் போராடவேண்டும். மாறாக உலகமயமாதலுக்கு எதிரான சொந்த தேசிய பொருளாதாரத்தை முன்னிறுத்தி தேசிய நலனை தேசியமாகக் கொண்டு, உலகமயமாதலின் கீழான மக்கள் விரோத தேசியத்தை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்திப் போராட வேண்டும். இன்று அரசுகள் முன்னெடுக்கும் அபிவிருத்தி அரசியல் என்பது, நிதி மூலதனத்தை உள் திணித்து வட்டி அறவிடும் நிதி மூலதனத்தின் கொள்கையாகும். இதை இனம் காட்டி அபிவிருத்தி அரசியலுக்கு எதிராக போராட வேண்டும். இப்படி உலகமயமாதலின் கீழான தேசிய அரசு மட்டுமல்ல, மக்களை மந்தையாக்க முன்தள்னும் "ஜனநாயகம், சுதந்திரம், தேர்தல், சட்டம், நீதி, பாரளுமன்றம்,.. " என அனைத்தும், உலக மூலதனத்தின் நலனை சார்ந்துதான் செயற்படுகின்றது என்பதை அம்பலப்படுத்தி போராடவேண்டும்.

இதற்கு பதில் மக்கள் தங்கள் சொந்த அதிகாரத்துக்காக போராட வேண்டும். இதன் மூலம் இந்த மக்கள் விரோத உலக மூலதனக் கொள்கையில் இருந்து, மக்கள் தங்களைத் தாங்கள் விடுவித்துக் கொள்ள முடியும். இந்த வகையில் மக்களை விழிப்புறம் வண்ணம், உலக பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டும்.


Last Updated on Friday, 27 December 2013 15:55