வட-கிழக்கில் பெண்கள் ஆயுதமேந்தியமை முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியது.


வடக்கு-கிழக்கில் பெண்கள் போராளி குழுக்களில் இணைந்து ஆயுதமேந்தி வீரத்துடன் ஆண்களுக்கு நிகராக, ஆண்களுடனே மோதி இருந்தார்கள். இந்நிலைமை சமூகத்தில் பெண்கள் தொடர்பான முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியிருந்தமை குறிப்பிடதக்கது. ஆனால், அவர்கள் மீதும் இன்று அதிகமான அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. அவர்கள் யுத்தத்தின் போது கீழ்த்தரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அண்மையில் வன்னிப்பிரதேசத்தில் இராணுவத்திற்கு பலவந்தமாக பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படடதாக செய்திகள் வெளியாகின. வடக்கு-கிழக்கில் நடைபெறுபவற்றில் பெருமளவிளானவை வெளியுலகிற்கு தெரிய வருவதில்லை என சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல தெரிவித்தார். போராட்டம் பத்திரிக்கைகாக திமுது ஆட்டிகல வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவிபரம் பின்வருகிறது.

போராட்டம்- சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பு பெண்களின் உரிமைகள் என்பதினை எவ்வாறான நிலையில் இனங்காண்கிறது?

தோழி திமுது-  பெண்களை இடதுசாரி இயக்கத்தினுள் ஒன்றிணைக்கும் நோக்கத்துடனேயே சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்டது. பெண்கள் கொடுமையான சமத்துவமின்மையை எதிர் நோக்குகின்றார்கள். கடுமையான ஒடுக்கு முறைக்கு இலக்காகின்றார்கள். நாட்டில் பல பெண்கள் அமைப்புக்கள் செயற்படுகின்றன. ஆனால் பெண்களின் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணத்தை அறிந்திடாமல் செய்படுவதினால் பலனேதும் இல்லை. அதன் காரணமாக தான் அநேக பெண் இயக்கங்கள் பெண்கள் எதிர்நோக்கும் சமத்துவமின்மைக்கும் அநீதிக்கும் எதிரான போராட்டத்தை ஆண்களிற்கு எதிரான போராட்டமாக நடத்துகின்றனர்.
போராட்டம்- அப்படியானால் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்கு முறையினதும் சமத்துவமின்மையினதும் அடிப்படை காரணம் என்ன?
தோழி திமுது- பெண்களின் பிரச்சினைகளின் அடிப்படை சமூக முறைமைக்குள் தான் இருக்கின்றது. சமூக முறைமைக்குள் இருந்து தான் பிரச்சினைகள் உருவெடுக்கின்றன. எனினும் முதலாளித்துவத்திற்குள் தற்போதைய நிலைமையை விட இன்னும் அதிகமான உரிமைகளும் சுதந்திரமும் இருக்க வேண்டும் என நாம் நம்புகின்றோம்.


போராட்டம்- முதலாளித்துவத்திற்கு எதிராக அமைப்பு ரீதியாக ஒன்றிணையும் நீங்கள் எவ்வாறு முதலாளித்துவத்திற்குள் பெண்களின் உரிமைகள் தொடர்பாக எதிர்பார்ப்புக்களை கொண்டு இருக்கின்றீர்கள்?

தோழி திமுது- முதலாளித்துவத்திற்குள் பெண்களுக்கு விடுதலை கிடைக்குமென நாம் நம்பவில்லை. அது ஒரு போதும் நடக்காத விடயம். ஆகவே பெண்களின் சுதந்திரத்தை உறுதி செய்திட வேண்டும் எனின், சமூக முறைய மாற்றியமைத்திட வேண்டும். அதற்காக பெண்களை தெளிவுபடுத்தும் நிறுவன மயப்படுத்தும் இயக்கம் என்ற வகையில் தான் எமது போராட்ட பாதையை நாம் நெறிப்படுத்தி இருக்கின்றோம். அதற்கும் மேலாக நாம் செய்ய வேண்டியவைகளும் இருக்கின்றது. ஆனாலும் சமூக முறையை மாற்றியமைத்திடும் வரை பெண்களை அடிபணிந்திருங்கள் என்று கூற முடியாது. ஆகவே இந்த முறைக்குள்ளிருந்தே நாம் உரிமைக்காக போராடிட வேண்டும். ஆனால் இதனை சமூக முறைமையை மாற்றி அமைப்பதன் மூலமே யதார்த்தமாக்கிட முடியும்.


போராட்டம்- இலங்கையில் பெண்கள் இச்சவாலை எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் ?

தோழி திமுது- உண்மையில் பெண்கள் தனக்கு பிரச்சினை இருக்கின்றது என்று உணராமையும் ஏற்று கொள்ளாமையுமே பிரதான சிக்கலாகும். நாம் ஒரு பெண்கள் இயக்கம் அல்லது சமூக அமைப்பு என்ற வகையில் 'உங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது, சமத்துவம் இல்லை, ஒடுக்கப்படுகின்றீர்கள்" என கூறும் போது அநேகமான பெண்கள் அவர்களின் பிரச்சனைகளை கடமையாகவும் பொறுப்பாகவும் நோக்க பழகி இருக்கின்றார்கள். ஆகவே பெண்கள் தனக்கு எதிரான ஒடுக்குமுறையை பிரச்சினையாக பார்ப்பதில்லை. பெண்ணாக பிறந்ததினால் இவற்றை சுமந்துதானாக வேண்டும் என நினைக்கின்றார்கள். இவ்வாறு பிரச்சினை இருக்கிறது என்பதனையும் அறியாத ஏற்றுக் கொள்ளாத நிலையிலிருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என கதைப்பதே சிக்கலான விடயமாகும்.

போராட்டம் -இதற்கான தீர்வை தேட பெண்கள் மட்டும் தான் செயற்பட வேண்டுமா?

தோழி திமுது - முழு சமூகமும் பெண்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என ஏற்று கொள்ளவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்களின் இயல்பு இதுதான் என்பதே முழுச் சமூகத்தின் சிந்தனையாகும். இப்படியான சமூகத்திற்குள் தான் பெண்களின் உரிமைகள் தொடர்பாக குரல் எழுப்ப வேண்டி உள்ளது. பிரச்சினை இருக்கும் இடத்தில் உரிமைக்காக போராடுவதை விட பிரச்சினை இல்லை என நினைத்துக் கொண்டிருப்பவர்களுடன் இணைந்து போராடி அவர்களை நிறுவனமயப்படுத்துவது பிரதான சவாலாகும். அந்த சவாலை நாம் எவ்வித சமரசமும் செய்யாமல் ஏற்றுக கொண்டிருக்கின்றோம்.


போராட்டம் - மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடும் போது எம் நாட்டில் பெண்களுக்கு பாரதூரமான பிரச்சனைகள் பெண்கள் மீதான கடுமையான ஒடுக்கு முறைகள் இல்லை என்று குறிப்பிடலாம் அல்லவா?

தோழி திமுது-மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும் போது கிழக்குலக நாடுகளில் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறை அதிகம் என்றும் ஆசிய நாடுகலுடன் ஒப்பிடுகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகம் எனவும் யார் ஒருவராலும் கூறிட முடியும். இவ்வாறு சிந்திக்காமல் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சுதந்திரம், உரிமைகள், சமூக அந்தஸ்து என்னவென்றுதான் சிந்திக்க வேண்டும். அவ்வாறு நோக்கும் போது தான் பெண்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பது புரியும்.


போராட்டம் -இதில் ஆண்களின் பங்கு என்னதாக இருக்க வேண்டும்?

தோழி திமுது- உண்மையில் ஆண்களுக்கு பெரிய பங்கு இருக்கின்றது. பெண்களின் பிரச்சனைகள் பெண் என்ற வட்டத்திற்குள் மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல. பெண்களால் மட்டும் அந்த பிரச்னையை தீர்க்க முடியாது. இது முழு சமூகத்தின் பிரச்சனையாகும். சமூக நிலையை மாற்றிடாமல் ஆண்களின் நிலைமையை மாற்றிடாமல் பெண்களின் பிரச்சனைகளை தீர்த்திட முடியாது. நாம் அதனை தெளிவாக விளங்கியிருக்கின்றோம். சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பின் நிறைவேற்று குழுவில் பல ஆண்களும் உறுப்பினர்களாக உள்ளனர். எமது அமைப்பின் செயற்பாட்டாளர்களாகவும் பல ஆண்கள் செயற்படுகின்றனர்.

போராட்டம் - பெண்களின் உரிமைகள் தொடர்பில் ஏனைய பெண்கள் அமைப்பினதும் அரசியல் கட்சிகளினதும் செயற்பாடுகள் எவ்வாறானதாக உள்ளன?

தோழி திமுது - பல பெண்ணிய இயக்கங்கள் ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்திக்கொண்டிருகின்றன. பெண்கள் இயக்கங்கள் ஒவ்வொன்றினதும் நோக்கங்கள் வெவ்வேறானவை. அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரனையில் இயங்கும் பெண்கள் இயக்கங்கள் உண்மையாக பெண்கள் பிரச்சனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றதா என்பது சந்தேகம் தான். ஒரு சில வழிகளில் குரல் எழுப்பிவிட்டு பணம் தேடும் வேலையை தான் அவைகள் செய்கின்றன. அவை ஆண்களின் மேலாண்மையை வரிந்து கட்டி கொண்டு செயற்படுபவை. அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்காக கொண்டவை. இவை இரண்டும் பெண்களின் உரிமைகளிற்காக குரல் கொடுப்பதில்லை. ஆகவே தான் இடதுசாரி இயக்கத்தினுள் பெண்கள் நிறுவன மயப்பட வேண்டும் என சொல்கின்றோம்.

போராட்டம் - இடதுசாரி இயக்கத்தினுள் பெண்களை நிறுவனமயபடுத்துவதன் முக்கியத்துவம் என்ன?

தோழி திமுது -இவ்விடத்தில் 'பெண்களின் உண்மையான பிரச்சனை என்ன? அதற்கான தீர்வு என்ன?" என்ற கேள்வி எழுகின்றது. இதற்கான விளக்கத்தையும் தெளிவு படுத்தல்களையும் வழங்கி நிறுவனமயபடுத்துவதற்கு இடதுசாரி இயக்கத்தினால் தான் முடியும். இது சவாலான விடயமாகும். இந்த சவாலான விடயத்தை சவாலாக ஏற்று கொண்டு செயற்படாமல் வழமையான ஆர்பாட்டங்கள் ஊடக நேருரைகள் நடத்துவதினால் பிரச்சனைகள் தீர போவதில்லை. பெண்களின் பிரச்சனைகளை விளங்கி கொள்ளும் நிலைக்கு அவர்களை கொண்டு வரல் வேண்டும். அதனோடு இணைந்ததாக தான் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த வேண்டும். அதனூடாக தான் பெண்களின் பிரச்சனைகள் தொடர்பான சமூக கவனத்தை ஈர்க்கலாம். "நாம் ஒரு பெண்கள் இயக்கம் அல்லது சமூக அமைப்பு என்ற வகையில் உங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது, சமத்துவம் இல்லை, ஒடுக்கப்படுகின்றீர்கள்" என கூறும் போதுஅநேகமான பெண்கள் அவர்களின் பிரச்சனைகளை கடமையாகவும் பொறுப்பாகவும் நோக்க பழகி இருக்கின்றார்கள்."


போராட்டம் - பெண்கள் தொடர்பாக கதைக்கும் போது வர்த்தக சந்தையை தவிர்த்து விட முடியாது. வர்த்தக சந்தையையும் பெண்களின் வாழ்வியல் கோலங்களையும் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?


தோழி திமுது - புதிய தாராளமயவாதம் பெண்களை பாலியல்போக மற்றும் விற்பனை பண்டமாக்கியுள்ளது. இதன்காரணமாக பெண்கள் மீது ஒடுக்குமுறை நிலவுகிறது என்பதினை மூடி மறைத்திட முடியும். இது மிக ஆபத்தான நிலையாகும். ஊடகங்களில் பெண்கள் அரை நிர்வாணமாக காட்டப்படும் போது தான் ஒடுக்கப்படுகின்றோம் தனக்கு பிரச்சனை இருக்கின்றது என்பது தெரிவதில்லை. தொலைகாட்சி விளம்பரங்கள், தொடர் நாடகங்களை பார்க்கும் போது பெண்களுக்கு பிரச்சனை இல்லை அவர்களின் வாழ்க்கை மிக ரம்மியமாக உள்ளது என்றே தோன்றும். ஆனால் இதனுள் மிலேச்சதனமான சுரண்டலே காணப்படுகிறது. இன்று எந்த ஒரு பண்டத்தையும் பெண்கள் இல்லாமல் விற்பனை செய்திட முடியாது. அதே போல் தான் உற்பத்தியிலும் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. பொருளாதரத்தை பார்த்தோமானால் பெரும் பங்களிப்பு செய்வது பெண்களாவர். ஆடை தொழிற்துறை, வெளிநாட்டு பனி பெண்கள் தேயிலை தோட்டங்கள் என இவை எல்லாம் பெண்களின் உழைப்பினால் இயங்குபவை. ஆனால் இங்கெல்லாம் பெண்கள் மனிதநேயமற்ற முறையில் நடத்த படுகின்றனர்.


போராட்டம் - வெளிநாடுகளிற்கு பெண்களை அடிமைகளைப் போல் பணிப்பெண்களாக அனுப்புகின்றமை தொடர்பான உங்கள் கருத்து என்ன?


தோழி திமுது - வெளிநாடுகளிற்கு பணிபெண்களாக செல்லும் பெண்கள் கடல் கடந்த தேசங்களில் தனித்து விடப்பட்ட நிலையில் பெரும் இன்னல்களையும், கொடுமைகளையும் அனுபவித்து வருகின்றனர். இவர்களின் உழைப்பின் பலனை அனுபவிக்கும் அரசாங்கம் இவர்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. இதற்கு மிக அண்மைய உதாரணம் தான் ரீசானா நபீக்யின் விவகாரம். அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமாயின், முறையான முயற்சி செய்யப்பட்டிருக்குமாயின் ரீசானா நபீக்கை காப்பாற்றி இருக்கலாம். இன்று பலர் பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிபெண்களாக செல்ல கூடாது என்று கூறி வருகின்றனர். ரீசானா நபீக்கின் விவகாரத்திற்கு பின் அரசாங்கம் வெளிநாட்டிற்கு பணிபெண்களை அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்தியது. இவ்வாறு செய்வதினால் பிரச்சினை தீர போவதில்லை. வெளிநாட்டிற்கு பெண்கள் செல்வதை நிறுத்த முடியாது. முதலாளித்துவத்தினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியும், பொருளாதார தேவைகளுமே வெளிநாட்டிற்கு செல்ல காரணம். பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்படாத வரை பெண்கள் வெளிநாடுகளிற்கு செல்வதை தவிர்க்க முடியாது. ஆனால், வெளிநாடுகளில் பணிபெண்களாக பணிபுரியும் பெண்களின் நலன்களும் உரிமைகளும் உறுதிசெய்யப்படல் வேண்டும்.


போராட்டம் - நீங்கள் குறிப்பிடுவதை போல் நிலைமை பாரதூரமானதாக இருபினும் பெண்கள் இயக்கங்களை தவிர்ந்த ஏனைய பெண்கள் இதற்கு எதிராக குரல் எழுப்புவதாக தெரியவில்லை?


தோழி திமுது - அது தான் இங்கிருக்கும் பிரச்சனை. உண்மை மறைக்கப்பட்டு போலிகள் காண்பிக்கப்படுகின்றன. இதனை வர்த்தக சந்தை மிக நுணுக்கமாக செய்கிறது. அதனால் தான் பெண்கள் தனக்கு பிரச்சனை இருக்கிறது என்பதனை உணர முடியாதவர்களாக இருக்கின்றனர்.
ஆகவே பெண்களை தெளிவான நிலைக்கு அழைத்து செல்ல வேண்டும். மாய கனவுலகில் வாழும் அவர்களை அதிலிருந்து வெளியே அழைத்து வர வேண்டும்.


போராட்டம் - யுத்தத்தின் பிந்தைய சூழலில் வாழும் பெண்கள் விசேடமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் அல்லவா?


தோழி திமுது - வடக்கு கிழக்கில் பெண்கள் மிக அவலமான ஒடுக்குமுறைக்கும் சீரழிவிற்கும் ஆளாகி உள்ளார்கள். யுத்தம் முடிந்து 4 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் அதிகமானோர் இன்னும் இடம் பெயர்ந்த நிலையிலேயே வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானோர் கணவரை இழந்த குடும்ப தலைவிகள். இல்லாவிடின் தந்தை சகோதரர்களை இழந்தவர்கள். ஆகவே பெண்கள் தான் அனைத்தையும் எதிர்நோக்குகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை அதே போல் பொருளாதார உத்தரவும் இல்லை. ஆசியாவின் புதுமை, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் தொடர்பாக கதைத்தாலும், சமூகத்தினுள் எப்படியான நிலை காணப்படுகிறது என்பதை பெண்களின் வாழ்கையை எடுத்து நோக்கினோமானால் தெரியும். நாம் வடக்கு கிழக்கில் செயற்படுவது போதுமானதல்ல. அது தொடர்பாக விசேட கவனம் எடுக்க வேண்டும். பெண்கள் தினம் தோறும் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றார்கள். மனித உரிமைகள் மதிக்கப்படும் நிலைமையும் இல்லை. கடந்த காலங்களில் வடக்கில் நாம் மேற்கொண்ட செயற்பாடுகளின் போது அதனை அறிந்தோம். வடக்கில் மக்களுக்கு மட்டுமல்ல, அங்கு சென்று உண்மையாக குரலெழுப்பும் கொழும்பை தளமாக கொண்ட அமைப்புகள் மீதும் ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது.
எல்லா பக்கத்திலும் சமமின்மையும் ஒடுக்கு முறையும் தான். அநேகமானோருக்கு யுத்தத்தின் போது தன் சொந்தங்களுக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அடக்குமுறையும் அநீதியும் நிலவுகிறது.


போராட்டம் - வட-கிழக்கை பொறுத்தவரை யுத்தம் நிலவிய காலங்களில் பெண்கள் ஆயுதமேந்தி போராடியமையும் போராளிகளாக இருந்தமையும் நாட்டின் ஏனைய பகுதி பெண்களை விட வேறுப்பட்ட நிலையை தோற்றுவித்தது அல்லவா?


தோழி திமுது - ஆம், வடகிழக்கில் பெண்கள் போராளி குழுக்களில் இணைந்து ஆயுதமேந்தி வீரத்துடன் ஆண்களுக்கு நிகராக ஆண்களுடனே மோதி இருந்தார்கள். இந்நிலைமை சமூகத்தில் பெண்கள் தொடர்பான முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியிருந்தமை குறிப்பிடதக்கது. ஆனால், அவர்கள் மீதும் இன்று அதிகமான அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. அவர்கள் யுத்ததின் போது கீழ்தரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அண்மையில் வன்னிப்பிரதேசத்தில் இராணுவத்திற்கு பலவந்தமாக பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகின. வட-கிழக்கில் நடைபெறுபவற்றில் பெருமளவிளானவை வெளியுலகிற்கு தெரிய வருவதில்லை.


போராட்டம் -இம்முறை மகளிர் தினத்தில் நீங்கள் அன்பு மலரும் சமூகம் என்ற தொனிப் பொருளில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளமைக்கான. காரணம் என்ன?


தோழி திமுது - அன்பு மலரும் சமூகம் என கூறும் போது எல்லோருக்கும் நினைவிற்கு வருவது முதலாளிதுவத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும் காதலர் தினம் அல்லது உடல் இச்சைக்கான காதல் தான். உண்மையில் அன்பு என்பது மனிதநேயத்தை அடிப்படையாக கொண்ட சமூக செயற்பாடாகும். தற்போது மனிதநேயத்தை இழந்த சமூகத்தினுள் பெண்கள் தினம்தோறும் வன்முறைக்கு பலிக்கடாவாகினறனர். மனித நேயமுடைய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் அங்குதான் மிலேச்ச தனத்திற்கு விடை கிடைக்கும். அதனை அடிப்படையாக கொண்டே 'அன்பு மலரும் சமூகம்" என்ற தொனிபொருளில் மகளிர் தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளோம்.


போராட்டம் - நீங்கள் குறிப்பிடுவது போல் மனிதநேயமற்ற சமூகத்தினுள் இதனை யாதார்த்தமாக்கி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?


தோழி திமுது -இந்த சமூகத்தினுள் அது தொடர்பான ஆரம்ப கருத்தியலை தான் உருவாக்க முடியும். ஏனென்றால் இந்த சமூக முறைமைக்குள் பெண்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு விடை கிடைக்காது. அதற்காக சமூக முறைமையில் மாற்றம் அவசியம். சமவுடமை சமூகத்தில் தான் அன்பு பிறக்கும் சமூகத்தை உருவாக்கிட முடியும். தெளிவுபடுத்தல்கள், விவாதங்கள். கருத்தாக்கங்கள் தான் தற்போது ஆரம்பிக்கப்பட வேண்டியவை.
-முற்றும்

Last Updated on Friday, 29 November 2013 08:34