பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று இலங்கையில் தமிழ் - சிங்கள - மலையக - முஸ்லிம் என்று, இனரீதியாக மக்களை பிரித்து ஒடுக்கியாளும் இந்த அரசு, இன்று இனங்களுக்குள்ளான பிரதேச சாதிய ... முரண்பாடுகளைக் கொண்டு அவர்களை பிரித்தாள முற்படுகின்றது. இருக்கின்ற முரண்பாடுகளை கூர்மையாக்கி, அதை முதன்மைப்படுத்துவதன் மூலம் இனரீதியான ஐக்கியத்தை தகர்த்துவிட முனைகின்றது. சிலருக்கு எலும்பையும், மற்றவர்களுக்கு ஜனநாயகத்தையும், வேறு சிலருக்கு இரண்டையும் போட்டு வளர்க்கின்றது. வடக்கில் கட்டமைத்துள்ள இராணுவ பாசிசத்தின் வரைவிலக்கணம் இது.

இந்த வகையில் அரசு தேர்தலை வெல்ல, இனத்தைப் பிளக்கும் ஆயுதத்தைக் கொண்டு மக்களை பிளக்கும் மக்கள் விரோத செயலில் தொடர்ந்து இயங்கி வருகின்றது.

இலங்கையை இனரீதியாக பிளந்து ஆளும் மக்கள் விரோதிகள், தங்கள் இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறை மூலம் எழுகின்ற போராட்டத்தை முறியடிக்க முனைகின்றனர். அந்த இனத்தின் உள் முரண்பாடுகளை மட்டுமல்ல, எலும்பைப் போட்டு வாலாட்டச் செய்வதன் மூலம் மக்களுக்கு எதிரான அனைத்தையும் திணிக்கின்றனர்.

"ஜனநாயகம்", "போராட்டம்" என அனைத்தையும், தனது பேரினவாத பாசிச இராணுவ இருப்புக்கு சார்பாக முன்னெடுக்குமாறு பார்த்துக்கொள்கின்றது. தமிழ் மக்களைத் தோற்கடித்தல் மூலம், தமிழ் மக்கள் மேலான இராணுவ மயமாக்கத்தையும், இனவழிப்பிலான குடியேற்றத்தையும், மதரீதியான ஆக்கிரமிப்பையும் சட்டபூர்வமாக்க முனைகின்றது.

அதேநேரம் இந்த அரசுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து போராட தயாரற்று, "தேர்தல் ஜனநாயகத்தில்" வெல்லல் தான் தீர்வு என்று நம்பிக்கையூட்டி இனவாதத்தை முன்னெடுக்கின்றது தமிழ் தேசியம். வெல்வதன் மூலம் அன்னிய சக்திகளை நம்புமாறு கோருகின்றதும், தங்களுடன் சேர்ந்து தேர்தல் கூத்தாடுமாறு மக்களை கோருகின்றனர். 60 வருடமாக நடக்கும் இந்த இனவாத தேர்தல் கூத்து, அரசு மட்டுமல்ல அரசுக்கு எதிரான தளத்திலும், மக்கள் விரோத இனவாதமாகவே தொடருகின்றது.

சொந்த ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட மறுக்கும் இந்த (இனவாத) தேர்தல் அரசியல் தான், அரசுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை சார்ந்து போராடுவதை மறுக்கின்றது. இன ரீதியாக வாக்களிக்குமாறு கோருவதும், மற்றைய இன மக்களுக்கு எதிராக வாக்களிக்க கோருவதன் மூலமும், தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என்று ஏமாற்றிய அரசியல் மோசடியைத்தான் தொடர்ந்து செய்யமுனைகின்றனர்.

அரச எதைச் செய்கின்றதோ, அதைத்தான் அரசுக்கு எதிரான தேர்தல் களத்தில் செய்கின்றனர். அரசு மக்களை பிளக்கின்ற முரண்பாடுகளை தமிழ் இனத்துக்குள் கட்டிப் பாதுகாத்துக் கொண்டு, தமிழ்மக்களின் ஒற்றுமை பற்றி தேர்தலில் வேஷம் போட்டு தேர்தல் கூத்து ஆடுகின்றனர்.

இன்று அரசு செய்கின்ற அனைத்து மக்கள் விரோத செயற்பாட்டுக்குமான அரசியல் அடித்தளத்தை, தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளுமாறு கோருகின்ற அரசியல் அடித்தளத்தில் இருந்து தான் பெறுகின்றது.

அரசுக்கு எதிராக, இனத்தின் உள்ளான அனைத்து முரண்பாடுகளையும் களைய மறுத்தும், அரசுக்கு எதிரான சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து போராட மறுக்கும் குறுகிய இனவாதத்தை அடிப்படையாகயும் கொண்டு வாக்குக் கேட்கின்றனர். தமிழ் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தேர்தல் கூத்தில், அரசு தமிழ் மக்களை தோற்கடிக்கக் கூடிய அரசியல் பலத்தை இந்த இனவாதத்தில் பெற்று நிற்கின்றது.

இன்று இந்த இரண்டையும் தோற்கடிக்கும் போராட்டம் அவசியமானது. இனத்தின் உள்ளான முரண்பாடுகளை முரணற்ற வகையில் அணுகி முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு தீர்க்கவும், ஒடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லீம,; மலையக மக்களுடன் அணிதிரண்டு இனவாதத்தை இனவொடுக்குமுறையை எதிர்த்து போராடுவதன் மூலம் தான், பேரினவாதத்தை எதிர்கொள்ள முடியும். இதை விட இன்று மாற்றான, சாத்தியமான மாற்றுவழி கிடையாது.

வாழ்வுக்கான போராட்டத்தை கடவுளை நம்பி மனிதன் கைவிடாதது போல், தேர்தலை நம்பி இனவாதம், இனவொடுக்குமுறைக்கு எதிராக அணிதிரண்டு போராடுவதைக் கைவிட முடியுமா? கடவுள் மீதான தனிப்பட்ட நம்பிக்கை, தேர்தல் மீதான நம்பிக்கை வெளியில், வாழ்வுக்கான போராட்டம் என்பது மனிதர்களுக்கு இடையிலானது. இது இனம், மதம், சாதி, பால், நிறம் கடந்து செயல்படுகின்ற, அதற்காக சிந்திக்கின்ற மனித உணர்வு சார்ந்தது. ஒடுக்கப்பட்ட மனிதர்கள் தாங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஒன்றிணைந்து தங்கள் வாழ்வுக்கான போராட்டத்தை நடத்துவது அவசியமானது.

தேர்தல் வரும் போகும், இதைக் கடந்து மனித இருப்புக்கான வாழ்வுசார் போராட்டம் தொடருகின்றது. வாழ்வு சார்ந்த போராட்டம் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஜனநாயகத்தைப் பெறுவதும், மக்கள் விரோத தேர்தல் ஜனநாயகத்தைத் தோற்கடிக்கவும் வேண்டும். இதைத்தான் அரசு கட்டமைத்துள்ள இராணுவ பாசிசம், மக்களிடம் கோருகின்றது.

 

பி.இரயாகரன்

27.04.2013