சம உரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாம் இத்துண்டுப்பிரசுரம் ஊடாக உங்களைச் சந்திப்பது நாட்டின் ஒருபகுதியில் இனவாத, மதவாத கொடுந்தீ கொழுந்துவிட்டு எரியும் சந்தர்ப்பத்திலாகும். அண்மையில் தர்க்காநகரில் ஆரம்பித்த இந்தத்தீ அளுத்கம பேருவளை வழியாக பரவிவருகிறது. மதப்பற்றுள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கும் இடையிலான சிறு சிறு பிரச்சினைகளுக்காக, குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் படுகொலையாவுமளவுக்கு சென்றதேன்?. தற்போது வியாபார நிலையங்கள் பல தீயிடப்பட்டுவிட்டது, பல உயிர்கள் பலியாகியுள்ளன, மேலும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தனை கொடுமைகளும் எதனை பகிர்ந்துகொள்ள முடியாமல் போனதற்காக? இந்த வன்முறை ஆரம்பமாகியது எப்படி?

 

 

நாம் முற்படுவது இந்தப் பிரச்சினை எப்படி ஆரம்பமானது என்பது பற்றி ஆராய்வதற்காக அல்ல. இன்று இலங்கைச் சமூகம் தீப்பற்றி எரியக்கூடிய அளவிற்கு சூடாகியுள்ளது. மேலும் ஒருதசமளவு சூடு அதிகரித்தால் தீப்பற்றி எரியும். எமக்குள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த நிலைமைக்கு பதில் சொல்ல வேண்டியது யார் என்பது பற்றியல்ல. எமது சமூகத்தை சிறு சிறு பிரச்சினைகளுக்காக தீப்பற்றி எரியும் அளவிற்கு உருவாக்கியது யார்? இது திட்டமிடப்பட்ட செயலாகும். யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிங்களவர்களின் எதிரிகளாக தமிழர்களும், தமிழர்களின் எதிரிகளாக சிங்களவர்களையும் காண்பித்தார்கள். தற்போது எழுச்சி பெற்றிருக்கும் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கையீனம், சந்தேகம், எதிரித்தன்மை போன்றவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த் கொடுந்தீக்கு பெற்றோல் ஊற்றியவர்கள் வௌ;வேறு இனவாத, மதவாத குழுக்களாகும். இக்குழுக்கள் இயங்குவது அதிகாரவர்க்கத்தின் அங்கீகாரத்துடன் என்பது ஒன்றும் ஒளிவுமறைவானதல்ல.

 


ஞாயிற்றுக்கிழமை அழுத்கமையில் உருவான வன்முறை ஆரம்பிக்கப்பட்டது யாரால் என்பதைவிட, இந்த வன்முறைக்கான சுற்றுச்சூழலை நிர்மாணித்தது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும். எமது நாட்டு ஆட்சியாளர்கள் தமது கீழ்த்தரமான அரசியலுக்காக இனவாதத்தை உயர்த்தி நிற்கும் போது, அந்தப் பொறியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினராகிய நாம் அகப்படும் இவ்வாறான நடவடிக்கைகளின் பிரதிபலிப்புதான் 30 வருடகாலம் இரத்தத்தை ஆறாக ஓடச்செய்தது. தற்போது மீண்டும் அவ்வாறான சூழலை உருவாக்குவதற்கான நிலைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் இரவில் வீழ்ந்த குழியில் பகலிலிலும் வீழ்வதா என்பதையிட்டு சிந்திக்க வேண்டும். மீண்டும் இந்தப் பொறியில் சிக்கி 30, 60அல்லது 90வருடங்களுக்கு இரத்தம் சிந்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு உங்கள் கையில். ஆட்சியாளர் தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக எம்மை பலிக்கடாக்களாக்குகிறார்கள். இனவாதம், மதவாதம், போதைப் பொருள் போன்று போதை ஏற்படுத்தும் செயல்களுக்கும் பதில் சொல்லவேண்டிய காலம் வரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சிங்களவர்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தி பிரித்து வைத்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை நினைவிருத்திக் கொள்ள வேண்டும். எம்மை முரண்பாடுகளுக்குள் சிக்கவைத்து, இனவாத, மதவாத பொறிக்குள் வீழ்த்தி எமது உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கும் அதேவேளை மனிதத்தன்மையை இல்லாமல் செய்து எம்மை மிருகத்தனத்துக்குள் சிக்கவைக்கும் பொறிக்குள் மீண்டும் சிக்கிவிடக்கூடாது. சரியான வழியில் தெளிவாக சிந்தித்து புத்திசாதுரியமாக செயல்பட வேண்டும்.


சமஉரிமை இயக்கம்


2014 - ஜூன் - 17