வடகிழக்கில் இராணுவ கெடுபிடிக்கு சவால் விட்ட "மாவீரர் தின" தீபங்கள்

புலிகளின் "மாவீரர்" தினமன்று, வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் தீவிரமாகியது. இதற்கு சவால் விடும் வண்ணம் தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் ஆங்காங்கே நடந்தேறியுள்ளது. இதற்கு எதிரான அரச வன்முறையை, ஆங்காங்கே அரங்கேற்றியும் இருக்கின்றது.

அரசுக்கு எதிரான இந்த உதிரியான எதிர்ப்பு நிகழ்வுகள் வெறும் இனத் "தேசியமாக" புலி சார்பு நிகழ்வுகளாக குறுக்கிக் காட்டி விட முடியாது. இப்படி இதை குறுந்தேசிய அரசியலாகக் காட்டி பிழைப்பவர்களுக்கும், அரச பாசிச நிழலில் ஒதுங்கி பிழைப்பவர்களுக்கும் இது எதிரானது. அதுபோல் மக்கள் அரசியலை முன்னெடுக்கத் தயாரற்றவர்களை, கேலி செய்தும் இருக்கின்றது.

இந்த நிகழ்வுகள் அரச பாசிசத்துக்கு எதிரான, சவால்மிக்க செயற்பாடாக, நாம் அரசியல் ரீதியாக அடையாளம் கண்டு புரிந்துகொள்ள வேணடும். புலிகளின் இந்த "மாவீரர் நாள்" இதை ஒருங்கிணைகின்றது என்பதால், இதை புறக்கணிக்க முடியாது. அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி வழிநடத்தாத அரசியல் வெற்றிடத்தில் இருந்துதான், இது தன்னெழுச்சியாக தோற்றம் பெறுகின்றது. இப்படி ஆங்காங்கே நடந்தேறிய நிகழ்வுகளை 2009 முந்தைய புலிகளின் "மாவீரர்" நிகழ்வுகளுடனோ அல்லது இன்று புலத்தில் புலிகளின் "மாவீரர்" தின நிகழ்வுகளுடனோ ஒன்றுபடுத்தி பார்க்க முடியாது.

இது அதிலிருந்து வேறுபட்டதாகவும், அதே நேரம் அதன் தொடர்சியாகவும் புரிந்து கொள்வது அவசியம். இவை அரச பாசிசத்தின் கெடுபிடி கொண்ட கண்காணிப்புகளுக்கு, இது சவால் விட்டு இருக்கின்றது. அடக்குமுறைகளை கண்டு அடங்கிப்போவதல்ல மனிதத் தன்மை என்பதை அறைகூவி சவால் விடுத்து இருக்கின்றது. அஞ்சி நடுங்கும் அரசியல் கோழைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் முகத்தில் அறைந்து பதில் சொல்லியிருக்கின்றது.

எங்கும் நிறைந்த எதிரி யார் என்பதையும், எங்கு எப்படி எந்த வடிவில் உள்ளான் என்பதையும் இனம் கண்டு, அதை தனிமைப்படுத்திக் கொண்டு தான் இந்த நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றது. அன்னிய சக்திகளின் தயவில் இலவு காத்த கிளி போல் இவர்கள் காத்திருக்கவில்லை. புரட்சி செய்ய "ஜனநாயகம்" வரும் என்று இவர்கள் கனவு காணவில்லை. மாறாக பாசிசத்தை நேருக்கு நேர் எதிர்ப்பாய், தங்கள் அறிவின் எல்லைக்குள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். வடகிழக்கு பல்கலைக்கழகங்களில் நடந்த நிகழ்வுகள், பல மாணவர்களின் கூட்டு செயற்பாடாக, சவால்மிக்க செயலாகவும் இருந்து இருக்கின்றது. எல்லாக் கண்காணிப்புகளையும் கொண்ட பாசிசமாக்கலை நடைமுறையில் எதிர்கொண்டு போராடும் நடைமுறையாக இருந்து இருக்கின்றது.

இங்கு அரசியல் செய்பவர்கள், சமூகம் பற்றி எழுதுபவர்கள் பாசிசத்தை நடைமுறையில் எதிர்கொள்வது எப்படி என்பதையும், எப்படி செயற்படுவது என்பதையும் இங்கிருந்து தான் கற்க வேண்டும்.

அரசுக்கு எதிரான இந்த அடையாளப் போராட்டங்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதற்கு, போராடுவர்களிடம் இருந்தான நடைமுறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். போராடுபவர்கள் தங்கள் நடைமுறையை மக்கள் போராட்டமாக்க, அரசியலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மக்களைச் சாராத இரு துருவ அரசியல் செயற்பாடுகளும், தொடர்ந்தியங்குவது தான் இங்கு தொடருகின்றது. இதற்கு மாறாக நடைமுறையுடன் கூடிய ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அல்லது ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலுடன் கூடிய நடைமுறையை மக்கள் கோருகின்றனர்.

இந்த அரசியல் முன்முயற்சியற்ற சூழலில், இனவாதிகளின் தேர்தல் வெற்றிகளும், உதிரியான தன்னெழுச்சியான அரச எதிர்ப்பு செயற்பாடுகளும், சமூகத்தை பார்வையாளராக்கி தனிமைப்படுத்திவிடுகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதில் அக்கறை கொண்ட புரட்சிகர சக்திகள், பாசிசத்தை எதிர்கொண்டு முறியடிக்கும் நடைமுறை மூலம் தான், அனைத்து அரச எதிர்ப்பு குறுகிய அரசியல் அடையாளங்களை கொண்ட போராட்டங்களையும் இல்லாதாக்கும். ஒடுக்கப்பட்ட மக்களை பாசிசத்துக்கு எதிராக அணிதிரட்டாத அரசியல் வெற்றிடத்தில் தான், தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் போன்ற உதிரியான தன்னெழுச்சியான மக்கள் சாராத இச் செயற்பாடுகள் தோன்றுகின்றன என்பதை புரட்சிகர சக்திகள் இனம்கண்டு கொள்ள வேண்டும். இதை மாற்றி அமைக்கும் பணியைத் தான், இந்த நிகழ்வுகள் பறைசாற்றுகின்றது.

 

பி.இரயாகரன்

29.11.2012

Last Updated on Wednesday, 28 November 2012 15:35