13வது திருத்தச் சட்டத்தை நீக்க முனைவதன் மூலம், இனவக்கியத்தை மேலும் சிதைக்க முனைகின்றனர்

13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வல்ல. அதேநேரம் தீர்வல்லாத இந்த சட்டத்தை நீக்குவதையும் நாம் எதிர்க்கின்றோம். இதை நீக்குவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான இனநல்லுறவை சிதைப்பதுடன், இனவொடுக்குமுறையை தீவிரமாக்கவே அரசு முனைகின்றது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுவதை தடுப்பதன் மூலம், மக்களை இன முரண்பாட்டுக்குள் தள்ளி அவர்கள் முரண்பட்டுக்கொண்டு வாழ்வதையே அரசு விரும்புகின்றது. அதையே அரசு மக்களுக்கு தொடர்ந்தும் திணிக்க முனைகின்றது. யுத்தத்தின் பின் தொடர்ந்து மக்களை பிரித்தாள்வதை அடிப்படையாகக் கொண்டு, தீர்வு காண மறுக்கின்றது. இந்த அடிப்படையில் இனங்கள் கொண்டிருந்த உரிமைகளையும் பறிக்கின்றது.

இலங்கையில் மக்களைப் பிளந்து அவர்களை மோத வைப்பதன் மூலம் தான், மக்களை அடக்கியாள முடியும் என்ற கடந்தகால உண்மையைத்தான், அரசு தன் பாசிச அரசியல் கட்டமைப்புக்கு ஏற்ப இன்று முன்தள்ளி வருகின்றது. இந்த நிலையில் அரசின் இந்த தொடர்ச்சியான பிளவு முயற்சிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்துவது என்பது, சவால்மிக்க ஒன்றாகவே தொடருகின்றது. அரசை மட்டுமல்ல, இந்த பிளவுவாதத்தை உருவாக்கும் குறுந்தேசியம் சார்ந்த பிளவுவாதத்தையும் கூட, நாம் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் 13வது திருத்தச்சட்டம் இந்திய நலன்களுடன், இந்திய மேலாதிக்கத்தனத்துடன் திணிக்கப்பட்ட ஒரு சட்டமூலம் தான், இந்திய மேலாதிக்கம் சார்ந்த தன்னிச்சையான செயல் மூலம், இச்சட்டமூலம் திணிக்கப்பட்டதல்ல. இலங்கை அரசு தொடர்ந்து கையாண்டு வந்த இனவொடுக்குமுறையின் விளைவாலானது. கடந்தகாலத்தில் இந்தியாவின் இராணுவப் பயிற்சிகள் முதல் இன்றைய தலையீடுகள் வரை, இலங்கை அரசின் இனவாத கொள்கையை பயன்படுத்திக் கொண்டுதான் இந்தியா தொடர்ந்து களமிறங்கியது, களமிறங்குகின்றது. இப்படி புண்ணை உருவாக்கியவர்கள் அரசாக இருக்க, மருத்துவரின் பெயரில் இந்தியா தலையிட்டு, தன் நலனை முன்னிறுத்திச் செயல்படுகின்றது.

இதே போல் தான் தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா தன் பயிற்சி மூலமாக அவற்றைச் சீரழிவுக்குள்ளாக்கி அவர்களை அழிக்க, இதே இயக்கங்கள் கொண்டிருந்த அரசியலை பயன்படுத்தியே தான் அதையும் செய்து முடித்தது.

இப்படி இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரையான, பலமுனையில் தலையீட்டுக்குரிய சூழலை உருவாக்கியவர்கள் தான், உருவாக்கி வைத்திருப்பவர்கள் தான், இன்று 13வது திருத்தச்சட்டம் நீக்கம் பற்றி பேசுகின்றனர். இந்தியாவின் மேலாதிக்க தலையீட்டை உண்மையில் இலங்கையில் நீக்க அரசு விரும்பினால், இனப் பிரச்சனைக்கு உயர்ந்தபட்ச தீர்வு ஓன்றை வழங்குவதன் மூலம் அதை செயலிழக்க பண்ணுவதன் மூலம் நீக்க முடியும். தமிழ்-சிங்கள இனவொற்றுமை மூலம் இதை செய்யமுடியும். அரசின் நோக்கம் இதுவல்ல, என்பது வெளிப்படையானது.

மறுபக்கத்தில் 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கபபட்டதல்ல. இலங்கை மக்களின் நலன் சார்ந்து திணித்தல்ல. இந்திய நலன்சார்ந்து முன்வைக்கப்பட்டது. தமிழர் நலன் கொண்டதாக பறைசாற்றியபடி, மக்களின் உரிமையை மறுத்தபடி, தமிழ் மக்கள் மேல் திணித்தது. இந்த 13வது திருத்தச் சட்டத்தை இனவாதிகள் தங்கள் இனவாத அடிப்படையில், இலங்கை தளுவிய அதிகாரப்பரவலாக்கமாகக் காட்டி இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவந்தனர்.

இப்படி 13வது திருத்தச்சட்டமே மோசடியானது. ஆனால் இனவொடுக்குமுறை பாசிச அரசியல் அடித்தளத்தில் மேலெழுந்து வரும் சூழலில், இன அழிப்பை அரசியலாக்கிக் கொண்டு இந்த சட்ட மூலத்தை அணுகுகின்றது. 13வது திருத்தச்சட்டம் கொண்டிருக்கக் கூடிய சட்ட மூலங்களை, தன் பாசிச அரசியல் நடைமுறைக்கு தடையாகக் காண்கின்றது.

இதை இல்லாதாக்க முனைவதன் மூலம், இனவழிப்பை தீவிரமாக்க முனைகின்றது. இன்று இலங்கை அரச பாசிசம் இனவொடுக்குமுறையை தன் அச்சாகக் கொண்டு இயங்குகின்றது. இந்த வகையில் எதிர்க்கும் நாம் 13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்னைக்குரிய தீர்வாக கருதி எதிர்க்கவில்லை. மக்களை ஒடுக்குவதை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பிலான எந்த தீர்வும், மக்களுக்கு எதிரானது தான். இந்த வகையில் இந்த அமைப்பை எதிர்த்து போராடுவதன் மூலம் தான் தீர்வு காணமுடியும். இதற்கு வெளியில் அல்ல. இந்த வகையில் தான் 13வது திருத்தச்சட்டத்தை ஓட்டி, எமது அணுகுமுறை அமைய வேண்டும். நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், மௌனம் சாதிக்கவோ, அரசு இதை நீக்குவதற்கு துணைபோக முடியாது. செயல்பூர்வமான எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியம்.

பி.இரயாகரன்

25.10.2012

 

 

Last Updated on Thursday, 25 October 2012 14:07