பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இப்படி எம்மைப் பற்றி இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லித் திரித்துப் புரட்டுகின்றனர், தம்மை "முன்னேறிய பிரிவினர்" என்று கூறிக்கொள்வோர். அதேநேரம் அவர்கள் கூறுகின்றனர் "ஜக்கியம்" என்பது "அடிமைத்தனமாம்"! "அயோக்கியத்தனமாம்"!! மக்கள் தங்கள் மத்தியில் ஐக்கியப்படுவதை விரும்பாதவர்கள், அதற்காகப் போராடாதவர்கள், தங்களைத் தாங்கள் "மார்க்சியவாதிகள்" என்கின்றனர். "முன்னேறிய பிரிவுகள்" என்கின்றனர். “முற்போக்கு-ஜனநாயகவாதிகள்” என்கின்றனர். சிலர் தம்மை "சுதந்திர ஊடகவியலாளர்கள்" என்கின்றனர். ஆளும் வர்க்கங்களோ, மக்களைப் பிளந்து அதில் குளிர்காய்கின்றது. அதை எதிர்த்துப் போராட, மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தாத கருத்துகள், பிரச்சாரங்கள் அனைத்தும் இனவாதம் சார்ந்தவை தான். இந்த வகையில் திடீர் "மார்க்சியம்" பேசுகின்றவர்கள், அரசு சார்பானவர்கள், புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, தங்கள் இணையங்கள் மூலம் எமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தவகையில் "இனியொரு" இணையத்திலும், "தேசம் நெற்" இணையத்தி;லும், "குளோபல் தமிழ்"நியூஸ்" இணையத்திலும் "ஐக்கியம்" "அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாக" வோ இருக்கும் என்கின்றனர்.

சிங்கள மக்களுடன் இணங்கி வாழும் ஐக்கியத்தை முன்வைத்துப் போராடும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக்கு எதிரான விசமப் பிரச்சாரத்தில் இவர்கள் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் எமக்கு எதிராக "சம்பந்தப்பட்ட “முற்போக்கு-ஜனநாயகவாதிகள்” சிங்கள தேசத்துடன் ஐக்கியம் பற்றி பேசுவதை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதுதான். ஒன்றில் இது அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாகவோதான் புரிந்துகொள்ள முடியும்" என்கின்றனர்.

இப்படி தங்கள் இனவாத அரசியலுடன் ரகுமான் ஜானுடன் கூட்டுச்சேர்ந்து நடத்தும் இந்த இனவாத பிரச்சாரம், தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்து விடக் கூடாது என்ற தொடர்ச்சியான மார்க்சிய விரோத பிரச்சாரத்தின் ஒரு அங்கம் தான். சிங்கள மக்களுடன் இணங்கி வாழும் ஐக்கியத்துக்கான எந்தவிதமான அரசியல் முன்முயற்சியையும் எடுக்காத, அதை அரசியல் கிளர்ச்சியாக பிரச்சாரமாக முன்னெடுக்காதவர்கள் தான் இவர்கள்.

இந்த அரசியல் பணியில் மிகத் தீவிரமாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மட்டும் தான் அரசியல் ரீதியாக இயங்குகின்றது. இதை பலவிதத்தில் முடக்க முனைவது மட்டுமல்ல, முஸ்லிம் மக்களின் எதிரியாகவும் எம்மைக் காட்டிவிட வலிந்து முனைகின்றனர். இந்த வகையில் இட்டுக்கட்டிய அவதூறுகளையும், பிரச்சாரங்களையும் தங்கள் இணையங்கள் மூலம் எமக்கு எதிராக செய்கின்றனர். யாழ் முஸ்லீம் இணையத்திலும் ரகுமான் ஜான் தன் "இஸ்லாமிய" அடையாளம் மூலம் எடுத்து சென்று இருக்கின்றார்.

இதுமட்டுமல்ல தமிழ்மக்கள் முன் எம்மைப்பற்றி மிக நுட்பமாக திட்டமிட்ட வண்ணம் திரித்துப் புரட்டிக் கூறுவதைப் பாருங்கள். நாங்கள் "சிங்கள தேசத்துடன் ஐக்கியம் பற்றி பேசுவ"தாக கூறுகின்றார். இது உண்மைக்குப் புறம்பானது. தமிழ் மக்களிடம் எம்மைப் பற்றி இப்படி இட்டுக்கட்டிக் காட்டும், அவர்களின் கற்பனையும், பொய்யுமாகும். நாங்கள் எந்த "சிங்கள தேசத்துட"னும் "ஐக்கியம் பற்றி" பேசவில்லை. நாங்கள் "சிங்கள தேசத்துடன்" அல்ல சிங்கள மக்களுடன் தான் பேசுகின்றோம். அதுவும் "ஐக்கியம்" பற்றிப் பேசவில்லை இணங்கி வாழும் ஐக்கியம் பற்றிதான், சிங்கள மக்களுடன் பேசுகின்றோம்.

இவ்வாறு தான் உண்மைகள் இருக்கின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் தெளிவான நேரெதிரான அரசியல் வேறுபாடு கூட. இங்கு "சிங்களதேசம்" வேறு சிங்கள மக்கள் வேறு. "ஐக்கியம்" வேறு, இணங்கி வாழும் ஐக்கியம் வேறு. வலதுசாரிகள் (புலிகள்) போல், "முன்னேறிய பிரிவு" போல் நாங்கள் அவற்றை ஒன்றாகக் கருதுவதில்லை. நாங்கள் மார்க்சியவாதிகள் என்பதால் இந்த வேறுபாட்டை தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளோம். அதை வேறுபடுத்தியே அணுகுகின்றோம். யார் எல்லாம் இனவாதிகளோ, அவர்கள் இப்படி அணுகுவது கிடையாது.

இந்தப் பின்னணியல் தான் இவர்களின் திடீர் அரசியல் வருகையும், அதன் பின் "மார்க்சியம்" பேசுகின்றதான இவர்களின் அரசியல் பின்னணியையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் இவர்களின் அரசியல் நோக்கத்தை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் இந்த அரசியல் பின்புலத்தில் நின்று கூறுகின்றனர் "சம்பந்தப்பட்ட “முற்போக்கு-ஜனநாயகவாதிகள்” "ஐக்கியம்" என்பது "அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாகவோதான் புரிந்துகொள்ள முடியும்" என்கின்றனர். நல்லது, நாங்கள் "அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாகவோ" இதை நடத்துகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எப்படி இதை நேர்மையாக அடிமைத்தனமில்லாமல் அயோக்கித்தனமில்லாமல் முன்னெடுக்கின்றீர்கள்? அதைப் பகிரங்கமாக முன்வையுங்கள்.

நீங்கள் இவற்றில் எதனையும் செய்யவில்லை. இதற்கு எதிராகவே இயங்கும் நீங்கள், இப்படிக் கூறுவதன் மூலம் இட்டுக்கட்டிக் காட்டும் அயோக்கியர்களாக இருக்கின்றீர்கள். மக்களை இனவாத அடிமைகளாக, உங்களின் கால்களின் கீழ் தக்கவைக்க முனைகின்றீர்கள். மக்களின் ஐக்கியம், "அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாக" வோ இருக்கும் என்று கூறி, அதைப் பிரச்சாரம் செய்கின்றீர்கள் என்பது தான் உண்மை. இதைத் தான் கனடா "தேடகம்" ஊடாகவும் முன்வைக்கின்றனர்.

சிங்கள மக்களுடன் இணங்கி வாழும் ஐக்கியத்தைக் கோராத அனைவரும், குறுந்தேசிய இனவாதிகள் தான். இது பிரிந்து செல்லும் உரிமையை முன்வைத்து இணங்கி வாழ்வதை மறுக்கும் பேரினவாதத்தை போன்றது தான். இதில் வேறுபாடு கிடையாது. இது மக்களை பிளக்கும், ஒடுக்கும் மக்கள் விரோத கோட்பாடும் அரசியல் பிரச்சாரமுமாகும். இதைத்தான் "இனியொருவும், "தேசம் நெற்றும்", "குளோபல் தமிழ்"நியூஸ்யும்" மக்கள் முன்னெடுத்துச் செல்லுகின்றது. இதைவிட வேறு அரசியல் இவர்களிடம் கிடையாது. இது தான் உண்மை.

 

பி.இரயாகரன்

02.06.2012