புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

03_2006.jpg

இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்கப் போவதாகவும் முன்னேற்றப் போவதாகவும் கூறிக் கொண்டு உலக மேலாதிக்கப் பயங்கரவாதியும் அமெரிக்க அதிபருமான புஷ் நம் நட்டிற்கு வருவதும், இந்தப் போர்க் கிரிமினலுக்கு தேசத்துரோக காங்கிரசு கூட்டணி அரசு தடபுடலான வரவேற்பு அளிப்பதும் நம் அனைவருக்கும் நேர்ந்துள்ள தேசிய அவமானம்.

 

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற பெயரில் பல்வேறு நாடுகளைச் சூறையாடி, அந்நாடுகளின் பொருளாதாரத்தை நாசமாக்கி, மக்களை மரணப்படுகுழியில் தள்ளிவருகிறது மறுகாலனியாக்கம். பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்காக ஏகாதிபத்திய வல்லரசுகள் திணித்துவரும் இந்தப் புதியவகை காலனியாதிக்கத்திற்குத் தலைமை தாங்குகிறது, உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்கா.

 

அமெரிக்கா வகுத்துக் கொண்டுள்ள ""புதிய நூற்றாண்டுக்கான திட்டம்'' எனும் இந்த மறுகாலனியாக்க நடவடிக்கைகளையோ, அமெரிக்காவின் தலையீடுகளையோ எதிர்க்கின்ற நாடுகளை ஆக்கிரமிப்பது; அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக பேரழிவுக்கான ஆயுதங்களை அந்நாடுகள் இரகசியமாகத் தயாரிப்பதாகவும், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், ஜனநாயகம் மனித உரிமைகளை மீறுவதாகவும் கோயபல்சு பாணியில் புளுகுவது; தன்னுடைய அடாவடித்தனம், பித்தலாட்டம் அனைத்திற்கும் ஐ.நா. மன்றம் முதலான சர்வதேச அமைப்புகளைத் தனது கையாளாகப் பயன்படுத்திக் கொள்வது என எல்லா அட்டூழியங்களையும் கேள்விமுறையின்றிச் செய்து வருகிறது, அமெரிக்க மேலாதிக்க வல்லரசு.

 

பணியாத நாடுகளுக்கு எதிராக நடத்தும் போரில் எவ்வித நியதிகளையும், சர்வதேச விதிமுறைகளையும் அமெரிக்கா மதிப்பதில்லை. குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது, வீரியம் குறைந்த அணு ஆயுதங்களையும் வெள்ளை பாஸ்பரஸ் போன்ற கொடிய இரசாயன ஆயுதங்களையும் மக்கள் மீது வீசுவது மட்டுமின்றி, போரில் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று திமிராகக் கொக்கரிக்கிறது. இராக்கும் ஆப்கானும் நம் கண்முன்னால் இவ்வாறு நாசமாக்கப்படுவதை நாம் அறிவோம்.

 

நேரடியான ஆக்கிரமிப்புப் போர் மட்டுமல்ல் பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள், ஆட்சியைக் கவிழ்க்க சதிகள் என எல்லா வகையான கிரிமினல் வேலைகளையும் கியூபா, வெனிசுலா, பொலிவியா, வடகொரியா, இரான், சிரியா முதலான பல நாடுகளில் தட்டிக் கேட்பாரில்லாத ரவுடியைப் போல அமெரிக்கா செய்து வருகிறது. இவையனைத்தையும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, பயங்கரவாதத்தை ஒழிப்பது, கடவுளின் ஆணைப்படி தீயசக்திகளை நசுக்குவது என்ற பெயரால் நியாயப்படுத்தியும் வருகிறது.

 

அமெரிக்காவின் புதிய நூற்றாண்டுக்கான ஆக்கிரமிப்புத் திட்டத்தின்படி, இராணுவ நடவடிக்கைகள் மூலமும் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த மூலவளங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலமும் தனது உலக மேலாதிக்கத்தை மறுஉறுதிப்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஏற்கெனவே எல்லைமீறி ஆதிக்கம் செய்துவரும் அமெரிக்கா, உலகெங்கும் இராணுவச் சாவடிகளையும் முகாம்களையும் தலையீடுகளையும் மிக வேகமாகப் பல்கிப் பெருக்கியுள்ளது. தென்கிழக்கே பிலிப்பைன்சிலிருந்து மத்தியதெற்கு ஆசியாவுக்கும் லத்தீன் அமெரிக்காவுக்கும் இவற்றை நீட்டித்துள்ளதோடு இராக்கையும் ஆப்கானையும் ஆக்கிரமித்து கொட்டமடிக்கிறது.

 

இத்தகைய பயங்கரவாத அமெரிக்க மேலாதிக்க வல்லரசுக்கும் அதன் தலைவரான புஷ் திணிக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கும் விசுவாசமாக அடிபணிந்து சேவகம் செய்து வருகிறது காங்கிரசு கூட்டணி அரசு. மறுகாலனியாக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் முந்தைய பா.ஜ.க. கூட்டணி அரசையே விஞ்சி விடுமளவுக்கு வெறித்தனமான தீவிரமும் காட்டுகிறது. பொருளாதாரத் துறையில் மட்டுமின்றி, அரசியல் இராணுவத் துறைகளிலும் நாட்டை அமெரிக்காவின் அடிமையாக்கி, இந்தியாவை நிரந்தரமாக அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்த் தேரில் பிணைப்பததற்கான ஒப்பந்தங்களில் மன்மோகன் சிங்கும் பிரணாப் முகர்ஜியும்கையெழுத்திட்டுள்ளனர். சீனாவுக்கு எதிரான இராணுவத் தளமாகவும் அடியாளாகவும இந்தியாவைப் பயன்படுத்துவதுதான் அமெரிக்கா வகுத்துள்ள ஆசியாவுக்கான போர்தந்திரத் திட்டம். அதற்கு விசுவாசமாகச் சேவை செய்து பிராந்திய வல்லரசாக தெற்காசிய பேட்டை ரவுடியாக இந்தியாவை மாற்றுவதே ஆளுங்கும்பலின் நோக்கம்.

 

இவற்றை இறுதியாக்கி செயல்படுத்தும் தீர்மானத்தோடு அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகிறார். பயங்கரவாதத் தளபதி புஷ்ஷிற்கு ஒரு நாட்டின் தலைவருக்குரிய தகுதியோ, அறிவோ, பொறுப்போ அறவே கிடையாது என்பதை ஏகாதிபத்திய உலகத்தாலேயே மறுக்க முடியவில்லை. அமெரிக்காவிலேயே எந்த ஒரு அதிபரும் இந்த அளவுக்கு மக்களின் வெறுப்புக்கும் ஆளானதில்லை. தனது சொல்லிலும் செயலிலும் அமெரிக்க காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு மாஃபியா கும்பலின் தலைவன்தான் புஷ்!

 

கையில் மாலையுடன் அமெரிக்க அடிமைகள் இந்தக் கிரிமினல் பேர்வழியை வரவேற்கும் இந்த அவமானகரமான தருணத்தில், நமது மண்ணின் கௌரவத்தையும் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போரில் உயிர்நீத்த ஆயிரமாயிரம் போராளிகளின் தியாகத்தையும் நிலைநாட்டும் வகையில், பயங்கரவாத புஷ்ஷிற்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கும் சுழன்று வீசட்டும்! பொங்கி எழட்டும் சுதந்திர வேட்கை! பொசுங்கி அழியட்டும் மறுகாலனியாதிக்கம்!