புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

10_2006.jpg

கோக் எதிர்ப்புப் போராட்டக் குழு, கடந்த செப். 3ஆம் நாளன்று நெல்லையில் கோக் எதிர்ப்பு கருத்தரங்கை நடத்தியது.


""உயிரை உறிஞ்சும் கோக்பெப்சியைப் புறக்கணிப்போம்! தாமிரவருணியை உறிஞ்சும் கோக் ஆலையை விரட்டியடிப்போம்!'' என்ற தலைப்பில் நெல்லை எம்.எச். பிளாசாவில் நடந்த இக்கருத்தரங்கிற்கு கோக் எதிர்ப்புப்

 போராட்டக் குழுவின் தலைவரான வழக்குரைஞர் இரா.சி. தங்கசாமி தலைமை வகித்தார். ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன், எழுத்தாளர் சிவசுப்பிரமணியன், ம.உ.பா. மையத்தின் வழக்குரைஞர் இராமச்சந்திரன், மானூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சி.எஸ். மணி, சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் அரிகர மகாதேவன், வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் மறுகாலனியாக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான சான்றாக உள்ள அமெரிக்க கோக்கிற்கு எதிராகவும் சிறப்புரையாற்றினர். இக்கருத்தரங்கில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவினர் தமது புரட்சிகர கலைநிகழ்ச்சி மூலம் கோக் எதிர்ப்புப் போராட்ட உணர்வூட்டினர். இறுதியாக,

 

* அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனப் பேசி, கோக்பெப்சியின் கையாளாகச் செயல்படும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியை கண்டித்தும்,


* மேற்கண்ட நிறுவனங்களின் மனங்கோணாமல் முழுமையான விசுவாசியாகச் செயல்படும் தி.மு.க. அரசைக் கண்டித்தும்,


* நெல்லை மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கங்கை கொண்டான் கோக் ஆலைக்கு உரிமம் வழங்கிய அ.தி.மு.க.வுக்கும் தொண்டூழியம் புரிந்து வரும் தி.மு.க.வுக்கும் கொள்கை வேறுபாடு இல்லை என்பதை அம்பலப்படுத்தியும்,


மு கோக்கும் பெப்சியும் மக்கள் விரோத நிறுவனங்கள்தான் என அம்பலமான பின்னரும், அதன் விளம்பரங்களில் நடிப்பவர்கள் மக்கள் விரோதிகள்தேச விரோதிகள் என அறிவித்தும்,


* நாடு முழுவதிலும் கோக்பெப்சி விற்பனையைத் தடை செய்வதோடு அந்த நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்களை மூட மத்திய அரசு உத்திரவிட வேண்டுமென்றும்,


* கங்கை கொண்டான் கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்,


* தண்ணீரை வியாபாரப் பொருளாக மாற்ற உத்திரவிடும் உலக வர்த்தகக் கழகம் ""காட்'' ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசு உடனே வெளியேற வேண்டும் என்றும் இக்கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இத்தீர்மானங்களை மக்களிடம் விளக்கி, தொடர்ந்து பிரச்சார போராட்டப் பணிகளில் ஈடுபட கோக் எதிர்ப்புப் போராட்டக் குழு உறுதியேற்றது.

 

இக்கருத்தரங்கைத் தொடர்ந்து, மாலையில் நெல்லை தாழையூத்து சந்தையில் திரளான மக்கள் பங்கேற்புடன் கோக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இப்போராட்டக்குழு நடத்தியது.

 

கேரளத்தில், கோக்பெப்சி மீதான தடையை அம்மாநில உயர்நீதி மன்றம் அண்மையில் நீக்கியுள்ளதை எதிர்த்து, அம்மாநில மக்கள் கோக் ஆலை மீது தாக்குதல் நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்தகையதொரு போராட்டம் நெல்லையிலும் மூண்டெழுவதற்கான முன்னறிவிப்பாக கோக் எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தொடர் பிரச்சாரமும் கருத்தரங்கும் ஆர்ப்பாட்டமும் அமைந்துள்ளன.

 

பு.ஜ. செய்தியாளர்.