புதிய ஜனநாயகம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பன்னாட்டு ஏகபோக ஹீண்டாய் நிறுவனத்துக்கு உதிரிப்பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கும் பல நிறுவனங்களில் ஒன்றான ஹனில் டியூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நிலவும் கொத்தடிமைத்தனம், அடக்குமுறை  அச்சுறுத்தலுக்கு எதிராக நிரந்தரத் தொழிலாளர்களும் தற்காலிகத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இணைந்து,   பு.ஜ.தொ.மு. தலைமையிலான கிளைச் சங்கத்தைக் கட்டியமைத்ததுள்ளனர்.  இத்தொழிற்சங்கத்தை முடக்கி அழிக்கத் துடித்த நிர்வாகம், கூலிப்படைத் தலைவனான விஜயபிரசாத் என்ற மனிதவள மேம்பாட்டு அதிகாரியை வேலைக்கு அமர்த்தியது. இவனும் அய்யாரப்பன் என்ற அதிகாரியும் கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவதாக மிரட்டுவது, தொழிலாளர் குடும்பத்தினரை அச்சுறுத்துவது, சங்கத்திலிருந்து விலகுவதாக எழுதித் தருமாறு நிர்பந்திப்பது, மறுத்தால் அத்தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது என அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர். ஆனால் இந்த அடக்குமுறைகளால் தொழிற் சங்கத்தையோ தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையோ இந்த கும்பலால் வீழ்த்த முடியவில்லை. அடுத்த கட்டமாக, சங்கத்தின் கிளைத் தலைவர் தோழர் ஞானவேலுவை கூலிப்படையினரை ஏவி  அடையாளம் தெரியாத வகையில் லாரியை ஏற்றிக் கொல்ல இந்த அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இந்தவிபத்து குறித்து விஜயபிரசாத் காட்டிய அக்கறையும் துடிதுடிப்பும் அவனது ஏற்பாடாகவே இந்த "விபத்து' நடந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

முதலாளித்துவ பயங்கரத்தால் ஹனில் டியூப் நிறுவனத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்கொண்டுள்ள இந்த அபாயம், தனிப்பட்ட பிரச்சினை அல்ல்  கோடானுகோடி தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை என்பதை விளக்கியும், இவ்வட்டாரமெங்கும் தொழிலாளர்கள் இத்தகைய முதலாளித்துவப் பயங்கரத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை விளக்கியும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மனிதவள அதிகாரி விஜயபிரசாத்தைக் கைது செய்யக் கோரியும், நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்தும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்ட போராட அறை கூவியும் பூந்தமல்லி முதலாக சுங்குவார் சத்திரம் வரை பரவலாக சுவரொட்டிப் பிரச்சாரம்  ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பு.ஜ.தொ.மு அதன் தொடர்ச்சியாக 23.9.2011 அன்று மாலை திருப்பெரும்புதூரில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஜெயராமன் தலைமையில்  இணைப்பு சங்கங்கள்  கிளைச் சங்கங்களின் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு முழக்கமிட்ட  இந்த ஆர்ப்பாட்டம், கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பு.ஜ. செய்தியாளர்கள், சென்னை.