புதிய ஜனநாயகம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 110 டாலர் விலை இருந்தபோது, அதையொட்டியே விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறிய மைய அரசு, தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 93 டாலராகக் குறைந்துள்ள போது விலையைக் குறைக்காமல், ஏற்றிய விலையிலேயே விற்றுக் கொள்ளையடிப்பதை எதிர்த்து கடந்த ஜூன் 29 அன்று தஞ்சை ரயிலடியில் ம.க.இ.க் பு.மா.இ.மு; வி.வி.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

 

 

தஞ்சை ம.க.இ.க. கிளைச் செயலர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை உயர்த்தும் அரசு, பெருந்தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஜெனரேட்டர்களை இயக்க ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் டீசல் மானியம் வழங்குவதைத் தோலுரித்துக் காட்டியும், தற்போதைய சர்வதேசச் சந்தை மதிப்பில் பெட்ரோலை லிட்டர் ரூ.30க்கும் டீசலை ரூ.15க்கும் விற்றாலே ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் போது, ரூ. 2.5 இலட்சம் கோடியை மக்களிடம் சட்டபூர்வமாகக் கொள்ளையடிப்பதை' விளக்கியும், இப்பகற்கொள்ளைக்கு எதிராகப் போராட அறைகூவியும் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

பெட்ரோல்டீசல் விலை உயர்வுக்கான காரணத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் 16.7.2011 அன்று புதுச்சேரி காந்தி வீதி சின்ன மணிக்கூண்டு அருகே பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் நடத்தியது. தனியார் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஒயிட் பெட்ரோலுக்கு மானியம் அளிக்கும் அரசு, உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல்டீசலுக்கு மட்டும் விலையேற்றம் செய்து கொள்ளையடிக்கிறது என்பதை விளக்கியும், தனியார்மயதாராளமயத் தாக்குதலுக்கு எதிராகப் போராட அறைகூவியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் பெட்ரோல் விலையேற்றத்தை எதிர்த்து 9.7.2011 அன்று சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெ.வி.மு. செயலர் தோழர் உஷா சிறப்புரையாற்றினார். கட்டணக் கழிப்பறையை உருவ பொம்மையாக வைத்து கக்கூசுக்குக் கூடவா விலைவாசி உயர்வு என்றும், தண்ணீர் தாகத்திற்கா, இலாபத்திற்கா? எனக் குடிநீர் குடுவைகளைக் கொண்ட காட்சி விளக்கமும், மறுகாலனிய எதிர்ப்பு முழக்கங்களோடு தோழர்கள் பாடிய பாடல்களும் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

சேலம்  போஸ் மைதானத்தில், 18.7.2011 அன்று பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் "பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வு! இதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!' என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எண்ணெய் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காக அரசாங்கம் சட்டபூர்வ வழிப்பறி நடத்துவதை எதிர்த்து மாவட்டச் செயலர் தோழர் கந்தம்மாள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் மக்களைப் போராட்டத்துக்கு அறைகூவுவதாக அமைந்தது.

பு.ஜ.செய்தியாளர்கள்.