பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விடுதலைப் போராட்டம் இதுவென நம்பிச்சென்ற ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், தங்கள் சொந்த அறியாமையில் இருந்து விடுபட்ட போது, அவர்கள் கண்டது தம்மீதான கோரமான கொடூரமான ஒடுக்குமுறையைத்தான். சிலர் இந்த ஒடுக்குமுறையைக் கண்ட போதுதான், தாம் போராடுவது விடுதலைப் போராட்டமல்ல என்பதைக் கண்டனர். இதனால் இதற்கு எதிராக போராட முற்பட்டபோது, சிலர் தம்மை பலிகொடுத்தனர். சிலர் தப்பியோடினர். சிலர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து ஒதுங்கினர். சிலர் மௌனமாக விலகினர். இதைத்தான் குற்றம் என்கின்றனர் ஜென்னி முதல் பல்லி வரை.

அன்று இதை எதிர்த்துத்தான் அமைப்புக்குள்ளான எதிர்ப்புப் போராட்டங்கள் உருவாகின. அவர்கள் கொடுமைகளையும், கொடூரங்களையும் எதிர்கொண்டு, தாங்களும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பில் இருந்து விலகினர், ஒதுங்கினர், எதிர்த்துப் போராடினர்.

 

 

 

அன்று மக்கள் விரோத அராஜகத்துக்கு எதிராக, அவர்கள் செய்யக் கூடிய குறைந்தபட்ச நேர்மையான செயலாக இது அன்று இருந்தது. தொடர்ந்து அந்த அராஜகத்துக்கு துணைபோவதோ, அதை கட்டிப்பாதுகாப்பதோ இழிவான மனிதவிரோத துரோகச் செயலாக இருந்தது.

இந்த வகையில் தான் புளட்டில் இருந்து காலத்துக்குகாலம் பலர் விலகினர். ஒரு வெளிப்படையான உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுக்காது, அதை இரகசிய குழுவாத எல்லைக்குள்ளும், உதிரியாகவும் முன்னெடுத்து வெளியேற்றங்கள் நடந்தது. இங்கு இந்த வழிமுறைகளில் விமர்சனங்கள் இருந்தபோதும், அவர்களின் வெளியேற்றம் நேர்மையின் பாலானது, உண்மையின் பாலானது. அவை மனிதவிரோதிகளுக்கு எதிரானது. தாங்கள் இருந்த அமைப்பு, தாங்கள் உருவாக்கிய அமைப்பு, விடுதலைப் போராட்டத்துக்குப் பதில், மக்களை ஒடுக்கும் கும்பலாக மாறி விடுதலையின் பெயரில் எதிர்ப்புரட்சிக் கும்பலாக இருப்பதை கண்டதன் பின்னணியில்தான், அதில் இருந்து விலகினர். இவர்கள் குற்றவாளிகளா? சம்பந்தப்பட்ட இயக்கம்தான் அப்படிச் சொன்னது என்றால், இன்று வலதுசாரி பல்லி போன்ற முகமூடி புல்லுருவிகளும் அதைத்தான் மீண்டும் சொல்லுகின்றனர்.

அன்று அமைப்பை விட்டு விலகியதற்கு எதிராக, அந்த அமைப்பின் கொலை வெறித்தனம் மட்டும் தன் கோரமுகத்தைக் காட்டவில்லை, இன்றுவரை வலதுசாரிக் கும்பல் தன் எதிர்வினையை, அவர்கள் மேல் காட்டுகின்றது. அன்று அந்தப் போக்குடன் உடன்படாது விலகியவர்கள் மேல் தன் வலதுசாரிய வக்கிரத்தை கொட்டித் தீர்க்கின்றது. இந்த வகையில் தேசம்நெற்றில் முகமூடி போட்டு வலம்வரும் பல்லி என்ற வலதுசாரிய ஒட்டுண்ணி, ஒடுக்கிய அந்த அராஜக கும்பலுடன் சேர்ந்து நிற்க மறுத்த குற்றத்துக்காக அவர்களை குற்றவாளியாக்குகின்றது.

மக்கள் விரோத அராஜகத்துடன் உடன்பட மறுத்தவர்கள், சாதாரண மனித வாழ்வில் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமைகளை கண்டு கொதித்த நேர்மையானவர்களை, குற்றவாளியாக காட்டுபவர்கள் யார்? இவர்களின் நோக்கம் தான் என்ன? விடுதலைப் போராட்டம் என்றால் என்ன, அது எப்படி மக்களை சார்ந்து போராட வேண்டும் என்ற குறைந்தபட்ட இடதுசாரிய அடிப்படைகளை கொண்டு எழுந்த இந்த எதிர்வினையை உள்ளடக்கியுள்ள அரசியல் சாரம் தான், பல்லி போன்ற முகமூடி மனிதர்களுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இன்றுவரை உள்ளது.

இதுதான் வலதுசாரி ஜென்னியின் கொலைகாரப் புரட்டு மீது, இந்தக் கொலைகாரர்களுக்கு ஆதரவாக பல்லி போன்ற முகமூடி போட்ட குடுமிகள் புரண்டு படுக்கின்றன. இங்கு "நடுநிலை" வேசம், அனைத்தையும் "விமர்சித்தல்", "பக்கச் சார்பற்றவர்கள்", "பொதுமக்கள்", இயக்கத்தில் எஞ்சிய அப்பாவிகள் மீதான அக்கறை என்று போடுகின்ற முகமூடிக்குப் பின்னால், தன்னையும் தம்மையும் மறைத்துக்கொண்டு தான், மக்களுடன் நின்றவர்கள் மேல,; இந்த அநியாயத்தைக் கண்டு கொதித்தவர்கள் மேல் வசைபாடுகின்றனர்.

இந்தளவுக்கு அன்று இந்த அநியாயத்தைக் கண்டு வெளியேறியவர்கள், இதற்கு எதிராக போராடியவர்கள் கூட, இந்தப் போராட்ட அலையில் சென்றவர்கள் தான். போராடச் சென்ற இடத்தில் தான், ஒரு எதிர்ப்புரட்சியைத் தெரிந்து கொண்டு அவர்களும் எதிர்த்துப் போராடக் கற்றுக் கொண்டார்கள். அவர்களா குற்றவாளிகள்! சொல்லுங்கள்!!

இன்று தேசம்நெற்றை ஜனநாயகம் என்று நம்பி, குமரன் (குமரன் தனக்கு தெரிந்த எல்லாம் கொண்டுவர போவதாக கூறியவர். அவர் விரும்பின் அதை நாம் கொண்டுவரத் தயாராக உள்ளோம்), ஜீவன் முதல் பலரும் பின்னோட்டம் போடவில்லையா? அப்படித்தான் அன்று அவர்களும் இயக்கத்துக்கு சென்றனர். அன்று இயக்கத்துக்கு சென்று பின் அங்கிருந்து தப்பியோடுவதற்கும், இன்று தேசநெற்றில் இருந்து வெளியேறுவது எப்படி என்று அங்கலாய்ப்பதற்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. அன்று போராடியவர்கள் தேசம்நெற்றில் வைத்து தாக்கப்படுவதற்கும், இயக்கத்தில் வைத்து தாக்கப்படுவதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

ஜனநாயகத்தின் பெயரில் தேசம்நெற்றில் வர்க்க அரசியல் இருக்கின்றது என்பதையும், அதன் பின் அரசியல் நோக்கம் உள்ளது என்பதையும் இன்றும் புரிந்து கொள்ள முடியாத எல்லையில்தான், அன்று ஜீவன் போன்றவர்கள் இயக்கத்துக்கு சென்றார்கள். இந்த உண்மை போல் தான், தேசம்நெற்றின் போலி ஜனநாயகத்தை நம்பி ஜீவன் முதல் பலரும் இங்கு களமிறங்கினர். இதில் இருந்து மீண்டும் தப்பி ஒடும் அவலம் இங்கு தவிர்க்க முடியாதது.

ஜனநாயகத்துக்கு வர்க்கமில்லை என்று கருதுகின்ற பொதுப்போக்கு, எதிரியை இனம் காண்பதில்லை. புளட்டில் உள்ளிருந்து அதைப் படிப்படியாக திருத்தும் ஜனநாயகம் இருப்பதாக சந்ததியார் கருதிய அதே எல்லையில்தான், பின்னோட்ட ஜனநாயகம் முதல் தங்கள் கருத்தை அதில் எழுதுகின்றவர்கள் வரை, அந்தத் தளத்தின் அரசியல் நோக்கத்தை காணாது உள்ளனர்.

அன்று சந்ததியார் எதிர்த்து போராடுவதற்குப் பதில் இணங்கி மாற்றமுனைந்த எதிர்ப்பரசியல், அவரையும் உண்மையான விடுதலைக்காகப் போராடிய பலரையும் கொன்றொழித்தது. இணங்கிய எதிர்ப்பரசியல் தொடர்ந்து போராட விரும்பிய பலரை, அரசியல் ரீதியாக வழிகாட்ட முடியாது வக்கற்றதாக்கியது. அரசியல் அனாதையாக்கியது.

இங்கு தேசம்நெற் ஜனநாயகமாக காட்டி எழுதும் கட்டுரைகள், பின்னோட்டங்கள், அவர்களே இதில் இருந்து தப்பியோடும் எல்லைவரை மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றது. இப்படி அரசியலைக் கடந்து தங்கள் அரசியலுக்கு முரணான தளத்தில் எழுதுகின்றவர்கள் வரலாற்றில் எதைக் கற்றுகொண்டனர் என்பதைக் கடந்து, அன்று போல் இன்று வரை பிழையான முறையில், பிழையான இடத்தில் நின்று தங்கள் கருத்தை சொல்வதைத்தான் மீண்டும் வரலாற்றில் செய்கின்றனர்.

இயக்கம், இணையம் என்றும் எங்கும் அரசியல் உண்டு. புரட்சி, எதிர்ப்புரட்சி என்று அவற்றுக்கு அரசியல் பாத்திரம் உண்டு. இதைக் கடந்து நாங்கள் செயல்படும் போது, புளட்டில் கொலைகாரரைப் போல், பல்லி போன்ற வலதுசாரிய எதிர்ப்புரட்சி கும்பல் புரட்சிகர கருத்துகளைக் கொன்று அதன் மேல் வசைபாடுகின்றனர்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

13.03.2011

1. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 1

2. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 2

3. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 3