பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபாகரன் உயிர் வாழ்ந்திருக்க முடியாதா? முடியும் என்றால்! என்னதான் செய்திருக்கவேண்டும். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள், குறைந்தபட்சம் சில உண்மைகளைத் தன்னும்   அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதை இன்றுவரை மறுப்பவர்கள் தான், பிரபாகரனை கொன்ற உண்மையான கொலைகாரர்கள். இதுதானே உண்மை. சரி அவர்கள் யார்? நீ யாரை நம்பி, ஏன் எதற்கு என்று எந்தக் கேள்வியுமின்றி யார் பின்னால் சென்றாயோ, அவர்கள்தான்; பிரபாகரனைக் கொன்றனர். இது ஒரு உண்மையில்லையா? இதற்கு மாறாக உன்வழியில் சென்று இருந்தால், அவர்கள் உயிர்வாழ்ந்திருக்க முடியுமல்லவா? இதை நீ உணர்ந்தால், யார் அந்தக் கொலைகாரர்கள் என்பதை தெளிவாக இனம் காண்பாய்.

 

    

பிரபாகரனையும், புலித்தலைவர்களையும் அரசு கொல்லவில்லை. புலிதான் அவர்களைக் கொன்றது. பிரபாகரனை கொன்றொழிக்க வழிகாட்டியது அவர்களின் அரசியல் தான். தங்கள் இந்த அரசியல் வழியைத்தான், இன்றும் சரியென்கின்றனர், புலத்துப் புலி மாபியாக் கூட்டம். இதை யாரும் வரலாற்றில் இருந்து மூடிமறைக்க முடியாது. புலத்துப் புலி மாபியாத் தலைமையோ, தாங்கள் வழிநடத்திய அரசியல், தங்கள் தலைவர்களைக் கொல்லவில்லை என்று, இன்றும் அதை மூடிமறைகின்றனர். இதற்கு பற்பல கதைகள் சொல்லுகின்றனர். குழந்தைக்கு உணவூட்ட, குழந்தையை ஏமாற்றி வாய்க்குள் அடைவது போல், உன்னை ஏமாற்ற பல காரணங்கள் சொல்லி, உன் மூளைக்குள் தங்கள் துரோகத்தை சரியென்று திணிக்கின்றனர். இதுதான் எதார்த்தம்.  

 

பிரபாகரனும், புலித்தலைவர்களும் உலகறிய கொல்லப்பட்டுவிட்டனர். இப்படிக் கொல்ல வழிகாட்டிய அரசியல், தனது தவறை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இதுதான் இன்றும் புலிமாபியா அரசியல். தாங்கள் கடந்தகாலத்தில் வழிநடத்திய அரசியல் மூலம், பிரபாகரனைக் கொன்று போட்டதை தொடர்ந்தம் தங்கள் அரசியல் மூலம் சரி என்கின்றனர். இப்படி பிரபாகரனைக் கொன்ற கொலைகாரர்கள், புலிக்குள் தான் இருக்கின்றனர். 

 

புலிகள் தாங்கள் இறுதிஅழிவிலிருந்து தப்பியிருக்க முடியாதா!? அவர்கள் தப்பியிருக்கவே முடியாது என்று கூறுவது தான், இன்று வரையான புலி அரசியல். இல்லை அவர்கள் தப்பியிருக்க முடியும் என்றால், கடந்த போராட்ட வழியை விமர்சனம் செய்திருக்க வேண்டும், தங்களைத் தாங்கள் சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். சரி இதை நீ செய்தாயா? இதை செய்யாதவர்கள் தான், புலத்துப் புலிமாபியாக்கள். புலியின் சொத்தைத் திருடி அதை கட்டிப் பிடித்துக்கொண்டு, புலித்தலைமையை கொன்ற அரசியலை சரியென்று தொடர்ந்து வக்காலத்து வாங்குகின்றனர்.   

 

இப்படிப் புலியை படுகுழியில் தள்ளிப் புதைத்த புலத்து சதிகாரர்களை, பிரபாகரன் தட்டுத்தடவி ஓடித்தப்பியிருந்தால் துரோகியாக அறிவித்திருப்பார். நீ அவரை துரோகி என்று சொல்லி இருப்பாயா!? சொல்லு!? பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைமையை போட்டுத் தள்ளிய அரசியலுக்கு வெளியில், அந்த யுத்ததந்திரத்துக்கு வெளியில் மாற்றுத் தெரிவுகள் பல இருந்தன. அப்படி இல்லையென்பது தான், புலியைக் கொன்றழித்த இன்றுவரையான புலி அரசியல். தங்கள் தலைவர்களையே கொன்ற இந்த அழிவு அரசியலை முன்வைப்பவர்கள் தான், புலித் தலைவர்களைக் கொன்ற கொலைகாரர்கள். புலிகள் ஒரு மாற்றுத் தெரிவை முன்னெடுத்து இருந்தால், அவர்கள் தப்பிப் பிழைத்து இருப்பார்கள். அதை அன்று மறுத்தவர்கள், இன்றுவரை அதை மறுப்பவர்கள் தான், புலித்தலைமையைக் கொன்றொழித்த கொலைகாரர்கள். இவர்கள் சதிகாரர்கள். அன்று இதுவே புலியின் இறுதியுத்தம் என்று கூறிய நாம், இதில் இருந்து தப்பிப்பிழைக்க மாற்றுவழிகளை முன்வைத்தோம். அதை நிராகரித்து, அதை மூடிமறைக்க துரோகிகள் என்று முத்திரை குத்தி, தங்களை அழித்ததுடன் தங்கள் தலைவர்களையே கொன்றனர். இப்படி உண்மையான துரோகிகள், தங்கள் தலைவர்கள் தப்பிப் பிழைப்பதற்கான அனைத்து மாற்று அரசியல்வழியையும் நிராகரித்தனர். ஏன் இன்றுவரை அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்தான். இந்தத் துரோகிகள் இன்றும் புலத்து மாபியாப் புலிக்குள் தான் கூடுகட்டியுள்ளனர்.  

 

புலியை வழிநடத்தி, அவர்களை படுகுழியில் தள்ளி கொன்றழித்த பாதையைச் சரியென்பதும், அதற்கான தங்கள் தலைமையே இன்றும் மிகச் சரியானது என்பதும்தான் இந்தத் துரோக அரசியல். தங்கள் தலைவர்களைக் கொன்றதை சரி என்கின்ற கொலைகார அரசியல்;. இந்த கொலைகாரர்கள், சதிகாரர்கள் இதைவிட தமக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை என்கின்றனர். இதைத்தான் அன்று புலி சார்பாக கேபி "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று மிக அழகாகக் கூறினான். தங்கள் அரசியல் மூலம் கொல்லக் கொடுத்தை விட, வேறு தெரிவு இல்லை என்பது காட்டிக்கொடுத்து கொன்றதை சரியென்று சொல்லுகின்ற சதிகாரர்களின் கொலை அரசியலாகும். இன்றுவரை இதுதான் புலிகளின் அரசியல். புலத்து புலித் தலைமை, "இல்லை வேறு வழிகள் இருந்தது" என்று எதையும் இன்றுவரை கூறியது கிடையாது.

 

மாற்றுவழிகள் பல இருந்தது. அதை கொல்லக்கொடுத்த இந்த பலிக் கொலைகாரர்கள் நிராகரித்தனர் என்பதே உண்மை. இதற்கு மாறாக தங்கள் தலைமையையே காட்டிக் கொடுத்து, கொன்றனர். இவர்கள் தான் தங்கள் தலைமை தப்பிப் பிழைப்பதை மறுத்து, அவர்களை  தங்கள் அரசியல் வழி மூலம் கொன்ற துரோகிகள். இன்று அவர்கள் தான், தங்கள் மாபியாத்தனத்துடன் அதை நியாயப்படுத்துகின்றனர். இப்படி நியாயப்படுத்தி, தமிழ் மக்களைக் கொன்று புதைக்கும் அதே அரசியல் பாதையில் தொடர்ந்து வழிகாட்டுகின்றனர். தங்கள் தலைவரை மட்டும் கொல்வதல்ல, தமிழ்மக்களை கொல்வதுதான் தங்கள் அரசியல் வழி என்கின்றனர். இதைப் புரிந்து கொண்டு போராடாத வரை, தலைவருக்கு நடந்த அதே கதிதான் தமிழ் மக்களுக்கும் நடக்கும் என்பதைத் தவிர வேறு எதையும் புலத்துப் புலி மாபியாக்கள் வழிகாட்டமுடியாது.

 

பி.இரயாகரன்
13.05.2010