புலியெதிர்ப்பு அரசியல், சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாக மாறியது ஏன்?

கடந்தகால புலியெதிர்ப்பு அரசியலோ, இன்று மகிந்த சார்பாக துதிபாடும் அரசியலாகி நிற்கின்றது. அது சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாகியுள்ளது. சரத்பொன்சேகாவை ஆளத் தகுதியற்றவராக, புலியெதிர்ப்பு இணையங்கள் இன்று கூப்பாடு போடுகின்றது. தேனீ இணையமே, இந்தப் பிரச்சாரத்தில் மையமாக திகழ்கின்றது.

இவர்களுக்கு பின் இரண்டு பிரதான சுயநலன்களை இனம் காணமுடியும்.   

 

1.புலியெதிர்ப்பு அரசியல் செய்ய, மகிந்தா கும்பல் புலியெதிர்ப்புக்கு கொடுத்து வந்த ஆதரவு மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய கவலை. சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால், அன்று அது நின்று விடும் என்ற அங்கலாய்ப்புகள்.

 

2.தமிழ்மக்கள் இயல்பாகவே மகிந்தாவுக்கு எதிராக கொண்டுள்ள எதிர்ப்பு, தங்களுக்கு எதிரான அரசியலாக இருப்பதால் அதையும் எதிர்க்கின்றனர். அரசியல் ரீதியாக தமிழ்மக்களை எதிர்த்து அரசியல் செய்து வந்த இந்தக் கூட்டத்தின் இருப்பு அரசியல், இயல்பான எதிர்ப்பு அரசியலாக மாறுகின்றது.   

 

இப்படி தமிழ்மக்களின் நலன்களை என்றும் அரசியலாக முன்வைக்;காத புலியெதிர்ப்புக் கும்பல், மகிந்தாவுக்கு ஆதரவுக் கும்பலாக மாறி இந்த தேர்தலை சுயநலத்துடன் அணுகுகின்றது. இந்த வகையில் கடந்தகாலத்தில், தமிழினத்தை பேரினவாதிகள் படுகொலை செய்ததை, புலிகளைச் சொல்லியே நியாயம் கற்பித்தவர்கள் தானே இவர்கள்.

 

இன்று சரத்பொன்சேகாவையும், இது போன்ற காரணங்களைக் கூறி எதிர்க்கின்றனர். இலங்கையில் நிலவும் பாசிச ஆட்சியையும், அதைச் சுற்றிக் கட்டமைத்துள்ள குடும்ப சர்வாதிகாரத்தையும் ஆதரித்தே, இவர்கள் அரசியல் செய்கின்றனர். தமிழ்மக்களின் சுய உரிமையை மறுத்து பேரினவாதம் நடத்தும் பேரினவாத நிகழ்ச்சி நிரலை, நியாயமானதாக காட்டி கையூட்டு பெற்று பிழைக்கின்றது இந்த புலியெதிர்ப்புக் கும்பல்.

 

மறுபக்கத்தில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக, புலி ஆதரவு கூட்டம் மறைமுகமாக மங்களம் பாடுகின்றது. இதன் மூலம் புலி பிழைப்புவாத சுத்துமாத்து அரசியலை முன்னிறுத்தி, தாங்கள் தொடர்ந்து பிழைக்க இதன் மூலம் வழிதேட முடியும் என்று நம்புகின்றது. அதிகாரத்தை இழந்த சரத்பொன்சேகா கும்பலுக்கு பின் நின்று, புலிகள் தாங்கள் இழந்த அதிகாரத்தை மீள பெற முனைகின்றது. இப்படி அதிகாரத்தை இழந்த இரு கூட்டமும், ஒரு அணியில் நிற்கின்றது. இனவழிப்பில் ஈடுபட்டவர்களும், இனத்தை வைத்து கொழுத்த புலிக் கூட்டமும், மகிந்த எதிர்ப்பை அரசியலைக் கொண்டு மையப்பட்டு நிற்கின்றது.      

 

இப்படி புலி, புலியெதிர்ப்பும் இரண்டு தளத்தில் எதிர்ப்புரட்சி அரசியலை, தேர்தலைச் சார்ந்து இன்று முன்தள்ளப்படுகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கும், இலங்கை மக்களுக்கும் கிடைக்கப்போவது அடக்குமுறையும் அடிமைத்தனமும் தான். இதைத்தவிர வேறு எதையும், மக்களுக்கு இவர்கள் முன் வைக்கவில்லை.

 

பி.இரயாகரன்
25.12.2009
      

 

Last Updated on Friday, 25 December 2009 19:26