புலிகளின் தோல்விக்கான காரணமும், அரசியல் எதார்த்தமும்

புலிகள் தோல்விக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற நாடுகளின் உதவிதான் காரணம் என்கின்றனர் புலிகள். வேறு சிலர் புலிகள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகள் காரணம் என்கின்றனர். இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை காரணம் என்கின்றனர். இப்படி புலி, புலி ஆதரவாளர்கள் பல காரணத்தைக் கூறுகின்றனர்.

 

அரசு தாம் வென்றதுக்கு இந்தியா சீனா, பாக்கிஸ்தான்.. உதவிகள் தான் காரணம் எண்கின்றது. தமது உறுதியான தலைமை தான் காரணம் என்கின்றது. கொழும்பு பல்கலைக்கழகம் பேரினவாத மேலாதிக்கத்தை வாழ்த்தி, கொலைகாரர்(கலாநிதி) பட்டத்தைக் கூட வழங்க முன்வந்;துள்ளது. இப்படி வெற்றி தோல்வி பற்றிய காரணங்கள், நியாயப்படுத்தல்கள், அங்கீகாரங்கள், விளக்கங்கள்.

 

இந்தத் தோல்வி பற்றி, தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் சொல்லும் விதம், எந்த சுயவிமர்சனமுமற்றது. இதன் மூலம் சமூகத்தை மந்தைகளாகவே தொடர்ந்தும் வைத்திருக்க முனைகின்றனர்.

 

இதற்காக இவர்கள் புலிகளின் தவறுகளை அரசியல் ரீதியாக இனம் காணமறுக்கின்றனர். இப்படி காணாது இருக்க முனைகின்றனர். தமக்குள் புதிய துரோகிகளைக் காட்டி, காய் நகர்த்த முனைகின்றனர். புலித்தலைமையே அழியவில்லை என்று சொல்ல முனைகின்றனர். தவறுகளை எல்லாம் மூடிமறைத்தபடி, தாம் மீண்டும் பிள்ளையைப் பெறவே முக்குவதாக காட்டி நடிக்க முனைகின்றனர். தம்மைச் சுற்றி நடந்த குற்றங்கள் மூடிமறைக்கின்றனர்.

 

அரசு மனிதப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்லும் அதேநேரம், அங்கு யாரையும் அனுமதிக்க மறுக்கின்றது. யுத்தப் பிரதேசத்தில் நடந்த குற்றத்துக்கான அனைத்து இனவழிப்பு தடையங்களையும் திட்டமிட்டு அழிக்கின்றது. புலிகள் தம் தலைமை தப்பிவிட்டதாக கூறும் அதேநேரம், அதை காட்ட வேண்டிய தேவையில்லை என்கின்றது. இப்படி இரண்டு தளத்திலும் குற்றங்களும், பொய்களும், புரட்டுகளும் இன்று அரசியலாகின்றது. புலிகளின் தோல்வியின் பின்னான, அரசியல் நிலைமையும் இதுதான்.

 

புலிகள் ஏன் தோற்றனர்!? புலிகளின் அரசியல் தான் இந்தத் தோல்விக்கான முழு அடிப்படையாகும். அதன் மேல் தான், புறநிலையான மற்றைய காரணங்கள் அமைகின்றது. புலிகள் கொண்டிருந்த அக நிலையான அரசியல் காரணங்கள் தான், புறநிலையான காரணத்துக்கு உதவியது.

 

தேசியம் மேல் கட்டப்பட்ட இந்தப் போராட்டம், அது சார்ந்த மக்களை தன் பின்னால் அணிதிரட்டவில்லை. மாறாக ஒரு குழுவின் சொந்த நலன் சார்ந்த போராட்டமே, தேசிய போராட்டமாக காட்டப்பட்டது. ஏகாதிபத்திய அமைப்புக்கேற்ற உலகமயமாதல் என்னும் சமூக அமைப்பில், தேசியம் என்பது ஓடுக்கப்பட்ட மக்களின் அரசியல் குரலாகும். அது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களினதும், ஒடுக்கப்பட்ட சமூகங்களினதும் பொதுக் குரலாகும். இதில் இன அடையாளமும், இணைந்து கொண்டது.

 

ஆனால் இன்னொரு இனத்துக்கு எதிரான போராட்டமல்ல தேசியம். ஆனால் புலித் தேசியமோ,  இன்னுமொரு இனத்துக்கு எதிரான போராட்டமாக அதைக் காட்டியது. சிங்கள இனத்துக்கு எதிரான தமிழன் போராட்டமாக காட்டியது. இதை பின் முஸ்லீம் மக்களுக்கு எதிரான போராட்டமாகவும் காட்டியது. இதுவே பிரதேச சாதி மேலாதிக்க போராட்டமாக குறுகிச் சென்றது.

 

இதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட வர்க்கங்களினதும், ஒடுக்கப்பட்ட சமூகங்களினதும் போராட்டமாக தேசியப்  போராட்டம் நடைபெறுவதை, புலிகள் வன்முறை மூலம் ஒடுக்கினர். ஓடுக்கப்பட்ட வர்க்கங்களின், ஓடுக்கப்பட்ட சமூகங்களின் தேசியத்தை நிராகரித்த புலித்தேசியம், ஒடுக்கும் வர்க்கத்தின் நலனை தேசியமாகக் காட்டினர்.

 

தேசியத்தின் எதிரியுடன் கூடி, ஏகாதிபத்திய நலனை அடைவதே தேசியம் என்றனர். இப்படி முழு மக்களின் தேசியநலனுக்கு எதிராக, தம் சொந்த வர்க்கநலனை முன்னிறுத்தினர். இந்த வரையறை மக்களை அடக்கியாளும் நிலைக்குள், மக்களை மந்தைகளாகவே வைத்திருந்தனர். படிப்படியாக தேசியம் பற்றிய தமது முன்னைய அரசியல் நிலைப்பாடுகளை எல்லாம் இழந்தனர். பிரபாகரன் என்ற தனிநபரை மையப்படுத்தி, தனிமனித வழிபாடு முன்னிலைக்கு வந்தது. இது சார்ந்த மிகை விம்பம், தேசியமாகியது. சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளை ஒடுக்கும் பாசிசமும், மாபியாத்தனமும் புலியிசமாகியது. இப்படி தேசியம் மக்களிடமிருந்து தோற்கடிக்கப்பட்டது.

 

தனிநபர் நம்பிக்கை, விசுவாசம், வழிபாடு, இவற்றுக்கு அப்பால் அரசியல் அடிப்படை எதுவும் இருக்கவில்லை. இரகசியம், சதி, பொய், நேர்மையீனம், வன்முறை, அவதூறு, .. இவைகளே, புலி இருப்பு சார்ந்த அமைப்பு வடிவமாகியது. இதைச் சுற்றி பிழைத்துக் கொள்ளும் எல்லாவகையான சந்தர்ப்பவாதிகளும் குழுமியிருந்தனர். தேசியத்தை வர்த்தகத்துக்கு ஏற்ற ஒன்றாக மாற்றியிருந்தனர். இப்படி தேசியத்தை குழிவெட்டிப் புதைத்தனர். தேசிய போராட்டத்துக்கான அடிப்படைகளை, புலிகள் தோற்கடித்தனர். இப்படி மக்களிடமிருந்து விலகி, தம்மைத் தாம் தோற்கடித்தனர். இதனால் மக்கள் எப்போதோ புலிகளை தோற்கடித்துவிட்டனர். வெற்றுடலைத்தான் அரசு இலகுவாகத் தோற்கடித்தனர்.

 

உண்மையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தமது தேசியக் கோரிக்கைக்காக போராட முடியாத வண்ணம், புலிகளால் அவர்கள் ஒடுக்கப்பட்டனர். போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் இருந்தும், அன்னியமாகியது. இதைப் பயன்படுத்திப் பிழைத்த கூட்டத்தின் நலன்களே, தேசியமாகக் காட்டப்பட்டது.

 

இந்த நலன் சார்ந்த போராட்டம், ஒருவரை ஒருவர் குழிபறித்து, கழுத்தறுக்கும் போராட்டமாகியது. அது பிரபாகரனையும், அவருடன் நின்ற முழுத்தலைமையையும் கூட காட்டிக்கொடுத்துக் கொன்றுள்ளது.

 

இந்த அரசியல் சூழலை உள்வாங்கிய எதிரி, அதைப் பயன்படுத்தினான். இதன் மூலம் புலிகள் முழு அழிவையும் கச்சிதமாக செய்து முடித்துள்ளான். சீரழிந்து போன புலித்தலையின் வர்க்க குணாம்சம், இதை வைத்து பிழைத்த வெளிநாட்டு வர்த்தக சமூகத்தின் நலன் சார்ந்த குழிபறிப்பு, முழு அழிவுக்குமான ஒரு காட்டிக் கொடுப்பாகியது. கணக்கு காட்டுப்படாத பெருந்தொகைப் பணம், இதன் பின் செயற்பட்ட மாபியாத்தனம், பினாமி சொத்துக்கள், தலைமைக்கு எதிரான குறிப்பான குழிபறிப்பாகியது.

 

இதற்கு ஏற்ப அது தேசியத்தை துறந்திருந்தது. இதன் பின் தேசிய நலன் என்று ஒன்றையும், அது முன்னிறுத்தவில்லை. சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான யுத்தத்தை மட்டும், அது முன்னிறுத்தியது. இதன் மூலம், தன் நடவடிக்கையை தேசியத்துக்கானதாக காட்டியது. ஆனால் அதுவோ இனவழிவு யுத்தமாகியது.

 

மக்களின் சமாதானம் மீதான கோரிக்கைகளை அது நிராகரித்தது. யுத்தத்தை அவர்கள் மேல் திணித்தது. அவர்களிள் குழந்தைகளை யுத்தத்தில் பலி கொடுத்தனர். பலியெடுக்க பலாத்காரமாக குழந்தைகளை இழுத்துச் சென்றவர்கள், அவர்களின் பிணத்தைக் கொண்டு வந்து காட்டினர். இறுதியாக மக்களை பணயக் கைதியாக்கி, அவர்களை பலியிட்டனர். அதை காட்டித், தப்பிப்பிழைக்க முனைந்தனர். இறுதியாக தம்சொந்த விதிக்கு முரணாக, அவர்களே துரோகமிழைத்த வண்ணம் சரணடைந்தனர்.

 

மக்களுக்கு எதிரான அவர்கள் போராட்டம், தம் சொந்த துரோகத்துடன் முடிந்தனர். ஆயிரம் ஆயிரமாக வீர மரணங்கள் ஒருபுறம், மறுபக்கத்தில் எஞ்சிய தலைமை ஒரு துரோகத்தை செய்து அதன் மூலம் மரணிக்கின்றது.

 

அவலமான சாவு. தாம் வாழ விரும்பிய துரோகம், எண்ணிப் பார்க்க முடியாத இழிவான அவலமான ஒரு சாவாகியது. எமக்கு கோபத்தை தரக்கூடிய வகையில், நயவஞ்சகமாக கொல்லுகின்ற வக்கிரமாக அரங்கேறியது. இதன் மூலம் இனத்தையே அவமானப்படுத்துகின்றனர், மிரட்டுகின்றனர், அச்சுறுத்துகின்றனர்.

 

தனித்து அரச பாசிசமாக, அது உருவெடு;த்து நிற்கின்றது. புலிகள் பொய்களில் புழுத்து மிதக்கின்றனர். இதை எதிர்கொள்ள முடியாத வண்ணம், எங்கும் அரசியல் நேர்மையீனமே அரசியல் அடித்தளமாக உள்ளது. மக்கள் தம் மீட்சிக்கான சொந்த அறிவை, செயலை மறுக்கின்ற எல்லையில் எம்மைச் சுற்றிய அரசியல் எதார்த்தம் உள்ளது.

 

பி.இரயாகரன்
31.05.2009

 

Last Updated on Monday, 23 November 2009 21:44