முழுமையான அழிவிலிருந்து புலிகள் தப்பியிருக்க முடியாதா!?

சரியான தலைமையால் அதை செய்திருக்க முடியும். தவறுகளை உடனுக்குடன் திருத்தக் கூடிய, தன் சுயவிமர்சனத்தைச் செய்யக் கூடிய எந்த தலைமையாலும் அதைச் செய்திருக்க முடியும். இது அரசியல் பண்பும், அரசியல் அடிப்படையும் இல்லாமையால் தான், புலிகள் தமது புதைகுழிக்குள் நின்று போரிட்டனர்.

தாம் தம் சாவு நோக்கி நகர்கின்றோம் என்று அவர்கள் தெரிந்து கொள்ளாது இருந்தனர். தமக்கு ஏன் இந்த நிலை என்று, தம் மரணம் வரை தெரிந்து கொள்ள அவர்களால் முடியவில்லை. தலைவருக்கு வெளியில் யாரும் இதைப்பற்றி சிந்திக்க முடியாது என்பது இயக்க நடைமுறை.  

 

இன்றைக்கு இந்த நிலைமை ஏற்படுவதை தடுக்க, இதுவே தடையாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் தப்ப, அதற்கான சந்தர்ப்பங்கள் பல வந்து போனது. இதை நாம் குறித்த அக்கால கட்டத்தில் தெளிவுபடுத்தி வந்தோம்.

 

ஒரு இனத்தின் மீதான அழிவு அரசியலை புலிகள் கையாண்டு வந்தனர். நாம் இதில் இருந்து மக்களை பாதுகாக்கவும், போராட்டத்தை சரியாக இட்டுச் செல்லவும்,  சில அடிப்படையான அரசியல் தெரிவுகளை முன்னிறுத்தினோம்.

 

இன்று அவற்றில் ஒரு சிலவற்றை திரும்பிப் பார்ப்பதன் மூலம் தவறுகளை இனம் காணவும், சுயவிமர்சனம் செய்யவும் உதவும்;. எதிர்காலத்திலாவது இது மக்களை சரியாக வழிநடத்த உதவும்.

 

புலிகள் மேலான நெருக்கடி தெளிவாகிய போது, புலம்பெயர் மற்றும் தமிழகத்தில் புலி சார்பு பிரிவினர் வீதிக்கு இறங்கினர். இப்படி இறங்கிய போது, அங்கு சிக்கியிருந்த மக்களைப்பற்றி  மக்கள் விரோத கோசத்துடன் தான் இறங்கினர். இதை கையில் எடுத்த ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை, புலியிடம் மக்களை விடுவிக்கும் படி கோரியது. புலி அதை மறுக்க, நொண்டிச்சாட்டுகளையே மீளமீளக் சொன்னார்கள். இதைப் பயன்படுத்தியே தான், இலங்கை முதல்  உலக நாடுகள் வரை புலியின் இறுதிப் போராட்டத்தை உலகம் முழுக்க அன்னியப்படுத்தினர்.

 

இந்த இடத்தில் நாங்கள் புலிகளிடம் அவர்களின் கோரிக்கையை மாற்றக்கோரினோம். மக்களை சர்வதேச சமூகம் பொறுப்பெடுக்க கோரும் வண்ணம், கோரிக்கையை முன்னிறுத்தக் கோரினோம். இதை எந்த நாடும் தட்டிக்கழிக்க முடியாது. ஒவ்வொரு மரணத்துக்கும் சர்வதேச சமூகத்தை பொறுப்பாக்க கோரினோம். இப்படி இதன் மூலம் ஆக்கபூர்வமான வழியில், உலகத்தை பதிலளிக்க வைத்திருக்கமுடியும்;. நாங்கள் மக்களை பொறுப்பெடுக்க முடியாது என்று, யாரும்  சொல்ல முடியாது. இதன் மூலம், பல ஆயிரம் மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்;. திறந்தவெளிச் சிறைச்சாலையை இல்லாததாக்கியிருக்க முடியும். புலிகளுக்கு இன்று ஏற்பட்ட கதியை தவிர்த்திருக்க முடியும். இப்படி பல விடையங்கள் நடந்திருக்கும்.    

 

நாங்கள் இதை முன்வைத்த போது, எம்மை எதிரியாக பார்ப்பதன் மூலம் சரியான அரசியல் வழிகளைக் கூட மறுதலித்து வந்தனர். இன்று இவைதான் அவர்களது சொந்த தற்கொலை அரசியலுக்கு இட்டுச் சென்றுள்ளது.

 

நாங்கள் இக்காலட்டத்தில் புலிகளின் இராணுவ யுத்த தந்திரத்தை மாற்றக் கோரினோம்.


1. முற்றுகையை உடைத்து,  இராணுவம் புலிகளிடம் கைப்பற்றிய பிரதேசத்துக்குள் மீள ஊடுருவக் கோரினோம்.


2. ஒன்றுக்கு மேற்பட்ட படைப் பிரிவுகளாக பிரித்து, இராணுவம் கைப்பற்றிய பின்னணி பிரதேசத்தில் இயங்கக் கோரினோம்.

 

இப்படி எதிரியின் முற்றுகைக்கு ஏற்ற பின்புலத்தை இல்லாததாக்கக் கோரினோம். எதிரிக்கு இப்பிரதேசம் புதிதானது கூட.

 

இவை எல்லாம் நிராகரிக்கப்பட்டது. மறுபக்கத்தில் நாம் இவற்றை வைத்ததன் நோக்கம் புலியின் வர்க்க அரசியலையும், அதன் நடத்தையையும் பாதுகாப்பதற்காக அல்ல.


மாறாக


1. மக்களை பாதுகாக்க


2. இதன் மூலம் தம் தவறுகளை திரும்பிப் பார்க்கும் அரசியல் சந்தர்ப்பத்தை இது வழங்கும் என்று கருதினோம்.

 

இப்படி நாங்கள் இவற்றை வைத்த போது, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்து, அதன் அடிப்படையில் நின்றே கோரினோம். இதை எப்போதும் எதிராகவே பார்க்கின்ற புலி அரசியல், எம்மை எதிரியாக முத்திரை குத்தி வந்தது. இந்த அடிப்படையிலேயே, எம் வரலாற்றில் பலர் கொல்லப்பட்டனர்.

 

நாங்கள் இலங்கை அரசை எம் மக்களின் வர்க்க எதிரியாக காட்டியதும், இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை எம் மக்களின் வர்க்க எதிரிதான் என்று கூறியது, புலியால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்களை வழிநடத்தி செல்லக் கூடிய அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தனர்.

 

இதன் மூலம் தம்மை அழித்துக்கொண்டனர். தம் அழிவின் போது கூட, இதைத் திரும்பிப் பார்க்க மறுத்தனர்.   

 

இப்படி வழிகாட்ட சரியான தலைமையின்றி, தன் சவக்குழியையே தானே வெட்டி வைத்துக் கொண்டு மடிந்து போனது. இந்த துயரத்துக்கான காரணத்தை, உணர்ச்சிக்கு பதில் அறிவுபூர்வமாக பரிசீலிப்பதன் மூலம் தான் மக்களை சரியாக வழிகாட்டமுடியும். இதை செய்ய நீங்கள் தயாரா?  

 

பி.இரயாகரன்
19.05.2009


   

 

Last Updated on Tuesday, 19 May 2009 08:05