சமர் - 23 : 07 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகப்பத்திரிகைகள், மக்கள் முன் டயானாவின் மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. இந்த வகையில் வீரகேசரி, ஈழநாடு, ஈழமுரசு, சரிநிகர், வெளி என அனைத்துப் பத்திரிகைகளும் ஒரே விதமான ஆறுதல் ஒப்பாரிகளை முன்வைத்தபோது தான், இந்தப் பத்திரிகைகளின் ஒரே அரசியல் நிலைப்பாடு அப்பட்டமாக நிர்வாணமாகத் தெரிந்தன. சரிநிகர் 130 இல் ரத்னா என்பவர் " பரந்துபட்ட உலகமக்கள் டயானாவின் மூலமாக ஒரு பழம் பெருமிதம் உடைபடுவதைக் கண்டார்கள். ---- அவர் இன்னொரு திரேசாவாக இயங்குவதை வரவேற்றார்கள். --- அன்று தொடக்கம் இன்றுவரை பெண் என்ற ஒரே காரணத்துக்காக சமூக, கலாசார ரீதியான துன்பங்களை அவள் எந்த உயர்குடும்பத்தைச் சேர்ந்த வகையிலும் சரி அநுபவித்தேயாக வேண்டும். ... ஒரு பெண் என்ற விதத்தில் தான் விரும்பியபடி வாழ்வதற்கு அவருக்கு இருந்த நெருக்கடிகள் வேறெந்தப் பெண்ணுக்குமிருந்த பொதுவான நெருக்கடி தான். .... இந்த வகையில் இரக்க சுபாவமும் பிறருக்கு உதவும் மனப்பான்மையும் கொண்ட டயானா என்ற பெண்ணின் மரணத்தில் இரத்தக்கறை ஆணாதிக்க சமூகத்தின் கைகளில் படிந்திருப்பது மறுக்க முடியாததே ".

அதே சரிநிகரில் நாசமறுப்பான் " டயானாவின் இறப்பு எமக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியும் இளவரசர் ஹரி தேவாலயத்தில் விம்மி விம்மி அழுததும் எமது நெஞ்சை உருக்கி விட்டன. இக் கவலைக்கு மத்தியில் ....." .

அதே சரிநிகரில் மேலும் ஆழ்வார்க்குட்டி " அவர் நேர்மையாக இருந்தார். தனது வேரிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முயலவில்லை. அவரால் அது முடியவுமில்லை. அரச குடும்பத்தின் போலி கவுரவத்திற்கும், விறைப்புக்கும் அவர் அடிபணியவில்லை. ..... மிகவும் சாதாரணமான ஒரு பணக்காரச்சீமாட்டியாக அவர் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.  அதற்காக அவரைப் பாராட்டலாம். அவரது துன்பியல் முடிபுக்காக அநுதாபப்படலாம். --------- அரச குடும்ப அங்கத்தவராகிவிட்ட பின்னரும் டயானா சாதாரண மக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. அவர்களுடன் சுமுகமாகப் பேசினார். அரச மிடுக்கு அவரிடம் இருக்கவில்லை. சாதாரண மக்களைத் தொட்டுப் பேசினார். " என சரிநிகர் ஆறதல் ஒப்பாரி முன்வைத்துப் புலம்பியிருந்தது. யமுனா ராஜேந்திரன் ஈழமுரசு 30-09 , 06-10 இதழ்களில் இரட்டை வேடம் போட்டு புலம்பும் பகுதியைப் பார்ப்போம்.

"அன்னை தெரேசா பற்றி நிறைய அதிதீவிர இடதுசாரி விமர்சனங்கள் உண்டு. எந்தவிதமான விமர்சனமற்ற வலதுசாரி துதிபாடல்களும் உண்டு" எனக் கூறி நடுநிலையாகக் கூறுவது போல் பாசாங்குபண்ணி" அன்னையைப் பரிவான கண்ணோட்டத்துடன் அணுகியவர்களே பெரும்பான்மையான இந்திய இடதுசாரிகள் அன்னையின் செயல்களின் விளைவுகளை அரசியல் ரீதியில் பார்க்கத்தான் வேண்டும். ஆயினும் அன்னை தெரேசா அரசியல்வாதி இல்லை. அரசியலால் போரினால் பிளவுண்ட உலகத்தில் வாழநேர்ந்த தியாக சிந்தையுள்ள தெரேசா அன்னையின் அந்தரங்க சுத்தியை சேவா மனத்தை நிச்சயமாகச் சந்தேகிக்க முடியாது." எனக் கூறி அவரைப் புனிதர் எனப் பிரகடனம் செய்த யமுனா டயானாவைப் பற்றிய தனது கருத்தில் " ------ அவர் வெறுக்கத்தக்க மனுஷியாக வாழவில்லை. பரிதாபத்துக்குரிய ஜீவனாகவும் முடியாட்சி குறித்த பிரம்மை உடைத்தவராகவும் புனித வழிபாட்டுக்குரிய உருவமாகவுமே (ஐஊழுN) அவர் காணப்பட்டார்.

"அவரோடு ஒப்புநோக்கத்தக்கவர்கள் வரலாற்றில் முன்பும் இருந்தார்கள் பின்பும் இருப்பார்கள். மர்லின் மன்றோ, ஜாக்குலின், ஒளாஸில், எலிட்பா, ஸின்டி, கிராட்போர்டு, மடோனா போன்றவர்கள் இவ்வாறு புனித வழிபாட்டு உருவங்களாக ஆனார்கள். தமிழகத்தில் நாம் ஜெயலலிதாவையும் இவ்வகையில் நோக்கமுடியும். ---- ஐரோப்பிய மதிப்பீடுகளின்படி குடிமக்கள் மனோநிலையுடன் (சுநிரடிடiஉயn) விடுதலைக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டார். ----- தொழிற்கட்சியை ஆதரித்தார். வெகுஜனங்களின் பார்வையில் வெறுக்கப்படக்கூடிய எந்தத் தன்மைகளையும் கொண்டிருக்கவில்லை. செயல்களையும் அவர் மேற்கொள்ளவில்லை." என யமுனா டயானாவையும் தெரேசாவையும் மக்கள் முன் பிரமைகளை தமிழில் விதைத்ததன் நோக்கம் இந்த உலகக்கட்டமைப்புக்கு சேதம் ஏற்படக்கூடாது என்ற ஒரே ஒரு பிரேமைதானே ஒழிய வேறல்ல.

இலண்டன் |வெளி| இரண்டில் "டயானா சமூகசேவகியாக வலம் வரத்தொடங்கினர். ----- மிதிவெடிகளுக்கு எதிரான இவரது பிரச்சாரம் உலகளாவிய ரீதியில் அவருக்குப் பாரராட்டைத் தேடித்தந்தது.

அதே இதழில் ஒரு கவிதை " காலனித்துவக் கொள்ளையரைக் கரம்காட்டி எதிர்த்தாய்

பெண்ணின் உரிமைக்காய் முடி துறந்த மன்னர்கள் விழிபிதுங்கி நிற்க மானுடம் காக்க மனிதரை நேசிக்க எதையும் செய்வேன் என்றாய் ..... " எனப் பலவாறாக பல பல பத்திரிகைகள், பிற்போக்கு முற்போக்குகள் எல்லாம் ஒன்று ஒன்றாய் சலிப்புக்களை எழுதிய போதுதான், இவர்கள் தத்தம் சொந்த அரசியல் முகம் ஒன்றே தான் என்பதை இனம் காட்டினர். இவர்கள் டயானா குறித்து பொதுவாக

1.         அரச குடும்பத்தை எதிர்த்தார் என்கின்றனர்.

2.         பெண் விடுதலையைக் கோரினார் என்கின்றனர்.

3.         மனிதநேயத்தை நேசித்தார் என்கின்றனர்.

4.         ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்தார் என்கின்றனர்.

5.         ஒரு சமூக சேவகி என்கின்றனர்.

6.         பழைய காலனியாதிக்கத்தை எதிர்த்தார் என்கின்றனர்.

7.         தரைக்கண்ணிவெடி, யூகோசிலவாக்கியா யுத்தம், வறுமைப்பட்ட மக்களுக்கு என எல்லாம் மக்குகளுக்காகவும் நின்றார் எனப் பலப்பலவாக இனம் காட்டுகின்றனர்.

டயானா கொல்லப்பட்டவுடன் ஏகாதிபத்திய செய்தி நிறுவனங்கள், தொடர்புசாதனங்கள் எதை எல்லாம் ஒப்பாரி வைத்தனவோ, அதை எல்லாம் கூட்டி அள்ளி வாந்தி எடுத்து வைத்துள்ளனர் இன்றைய முற்போக்குகள் எனக் கூறிக் கொள்வோர். ஏகாதிபத்திய தலைவர்களும் இந்த முற்போக்குகளும் ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். டயானா யார்? டயானாவுக்கும் மக்களுக்கும் இடையில் என்ன உறவு இருந்தது? என்ற கேள்விகளை சொந்த மூளையுடன் ஆராயும் சொந்தப்புத்தி உள்ள மனிதன் புரிந்து கொள்வான் யார் இந்த டயானா என்று ?

ஒரு கவர்ச்சிக்கன்னி, ஒரு மொடலிஸ்ட் ஒரு பணக்காரச் சீமாட்டி, ஏகாதிபத்திய பண்பாட்டைக் கோரிய ஒரு பெண் இதை மூடி மறைக்க வேடமிட்ட ஒரு பம்மாத்துப் பொம்மை. இது தான் டயானாவின் உண்மை முகம்.

டயானா நேர்மையானவர். எதில் நேர்மையானவர் சொல்ல முடியுமா? டயானாவின் ஆடம்பரக் களியாட்ட கொட்டடிப்புக்கு மக்கள் பற்றி வித்தை காட்டவும் எல்லாம் எப்படிப் பணம் வந்தது? நேர்மையாக உழைத்தாரா? எங்கே உழைத்துக் கை கால் தேய்ந்தது? மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, அதில் தான் டயானாவின் எல்லா ஆர்ப்பாட்டமும். மறுக்க முடியுமா? அப்படியாயின் எதற்கு உங்களின இந்த உடன்சலிப்பும், பழஞ்சலிப்புக்களும். டயானாவுக்குத்தான் நேர்மை கிடையாது அதை எழுதிய நீங்கள் நேர்மையாகக் கூறுவீர்களா? முடியாது. ஒருக்காலும் உங்களால் முடியாது.

ஏழைகளைத் தொட்டுப் பழகினார். அவர்கள் உடன் ஏதோதோ செய்தார் என்கின்றீர்கள். நீங்கள் கனவு காண்கிறீர்களா? எம்.ஜி.ஆர், பிரேமதாச முதல் இப்படி எத்தனை பேர். ஏன் உலக அழகுராணிகள் எத்தனை பேர் இதே வேசம் இதே நாடகம். ஏன் அண்மையில் ஊNN  தொலைக்காட்சி உரிமையாளர் நலிவுற்ற மக்களுக்கு 100 கோடி டொலரை ஐக்கிய நாட்டு சபைக்கு வழங்கியபோது உலகம் மூக்கில் கைவைத்தது. அண்மையில் உலக பன்னாட்டு நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறும்போது "எனது மூளை முதலாளித்துவ சிந்தனையுடையது. எனது நடைமுறை சமூக ஜனநாயக வடிவமுடையது என்றார்.

உலகில் 40 பெரிய பணக்காரர்களில் ஒருவரும் ஊNN சொந்தக்காரனுமான (வுநுனு வுருசுNநுசு) ரெட் ரீயுணர். 100 கோடி டொலர் பணத்தை ஐ.நா .சபையின் மனித சமூக நலச் சேவைக்கு வழங்கி உள்ளார். ஊNN மாத இலாபம் ஐ.நா.வின் ஒருவருட நிர்வாகத்துக்குப் போதுமானது. உலகை ஆட்டிப்படைக்கும் இந்த கூத்தாண்டியை உலகப் பொலிஸ்காரத் தலைவன் கிளிங்ரன் பாராட்டியதுடன் இதைப் போல் செய்ய வேண்டும் என வேறு பலரையும் கோரியுள்ளார். அதாவது உலகை மேலும் மேலும் சூறையாட அற்ப எலும்பு துண்டுகளை வீசுவது அவசியம். இதை செய்வதன் மூலம் டயானா போல் வேஷம் போடவும், சூறையாடி குதித்து அடக்கி ஆள முடியும் என்ற கனவுதான் மனித உதவிகளின் பின்னுள்ள கபட நோக்கமாகும்.

எல்லோரும் மக்கள் பற்றிப் பேசுகின்றனர். அடிமட்ட சாதிப்பிரிவுகள் எழுச்சியுற்று எழுந்து போராடும்போது மேல்மட்ட தலைவர்கள் சமபந்தி முதல் எல்லா வேஷமும் போடுகின்றனர்.

நாம் வாழ்க்கை முழுக்க இந்த வேஷங்களை அடிக்கடி காண்கின்றோம். டயானாவின் வேஷம் இதைத்தாண்டியது அல்ல. அந்தச் சீமாட்டி போடும் உடுப்பின் விலை கூட அவர் தொட்ட ஆபிரிக்க மனிதனின் பல ஆயுள் உழைப்புக்குச் சமனாகும். ஏன் டயானாவால் ஒரு சாதாரண மனிதனாக மாறமுடியவில்லை. அந்த மனிதனுடன் சேர்ந்து போராடமுடியவில்லை. நிலத்தில் கை ஏந்தி நிற்கும் மனிதன் எப்போதும் வான் வரை உயர்ந்து நின்று மக்களின் உழைப்பை சுரண்டும் அதில் வாழும் டயானாவை எட்டிப் பார்க்க முடியாது. இந்த அற்ப மனிதர்கள் டயானாவின் விளையாட்டுப் பொம்மைகளாக கைகளில் சிக்கியவை தான். இந்த விளையாட்டுக்குள் சிக்கும் ஏழைகள் மூலம் அவர்களுக்கு புகழ் அந்தஸ்து கிடைத்தன. அதனால் தான் இந்த வேஷம் தேவைப்படுகிறது.

உலகில் கொள்ளைக்கார ஏகாதிபத்தியங்கள், காலனிகளை வைத்திருந்த போது புகையிரத தண்டவாளங்களை அமைத்தது முதல் இன்று தன்னார்வக் குழுக்களை  விதைப்பது வரை எல்லாம் சேவையாகிவிடுமா? இல்லை இங்கு சேவைக்குப் பின்னால் கொடுரமான கைகள், நோக்கங்கள் தான் உள்ளன. இதுமட்டும் தான் உண்மையானவை.

டயானா அரச குடும்ப முரண்பாடு முற்போக்கான திசைவழிப்பட்டதா? அவரின் நடவடிக்கை பெண்விடுதலை வழிப்பட்டதா? வழிப்பட்டது தான் என ஏகாதிபத்திய சக்திகள் இருந்து ஒப்பாரி வைக்கின்றனர்.

டயானாவுக்கும் அரச குடும்பத்துக்கும் இடையிலான முரண்பாடு எந்த வகைப்பட்டது என ஆராயின் - ஏகாதிபத்தியத்துக்கும் (முதலாளித்துவத்தை உள்ளடக்கிய) நிலப்பிரபுத்துவத்துவ மதவாதத்துக்கும் இடையிலானதே. டயானா நிலப்பிரபுத்துவ மதவாதத்துக்குப் பதிலாக ஏகாதிபத்திய கலாசாரத்தைக் கோரினார். இதுதான் டயானா அரச குடும்ப மோதலாகும். இங்கு பெண்ணியம் கூட ஏகாதிபத்திய பெண்ணியத்தைக் கோரியதே ஒழிய வேறு ஒன்றும் சமூகத்தைப் புரட்ட அல்ல. டயானா ஏகாதிபத்திய இன்றைய  உலக மயமாதலில் எது எதுவெல்லாம் தேவைப்பட்டதோ, அவை எல்லாவற்றையும் கோரினார் அவ்வளவே. வெளியில் உங்களால் காட்ட முடியாது.

உலக அழகுராணிகள் எதை எதையெல்லாம் செய்ய வேண்டுமென ஏகாதிபத்தியம் வழிகாட்டுகின்றதோ அதை எல்லாம் டயானா செய்தார். ஓர் அழகியாக, ஒரு மொடலாக, ஒரு விபச்சாரியாக, வேஷம் போடுபவராக, ஆட்டம் போடும் ஒரு பணக்காரச் சீமாட்டியாக எல்லாமாக எதுவெதுவாக இருக்கமுடியுமோ அப்படியே இருந்தார். அடுத்து கண்ணிவெடிக்கு எதிராக, யூக்கோசிலாவியா யுத்தக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தார் என்கின்றனர். அதாவது அமெரிக்கா அணுகுண்டு தடைக்கு கையெழுத்து கோரியது போன்றும், உலக ஆளும் அரசு தலைவர்கள் கண்ணிவெடிக்கு எதிராக குரல் கொடுத்தது போன்றதுதான் டயானாவின் புலம்பல் நாடகம் .

ஆயுதத்தைச் செய்தவன், யுத்தத்தை நடத்துபவன், வன்முறையைக் கையாள்பவன், அடக்குமுறையைக் கையாள்பவன் பயங்கரவாதத்தை செய்பவன்தான் அடிக்கடி அதற்கு எதிராக குரல் கொடுக்கின்றான். இதில் டயானா என்ற அழகி மொடலிஸ்ட் குரல் கொடுத்ததனால் தான் உங்களுக்கு நா ஊறப் புல்லரிக்கின்றதோ?

ஆயுதத்தின் நோக்கம், யுத்தத்தின் நோக்கம் அனைத்தினதும் அடிப்படை நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்காது அதன் காரண கர்த்தாக்களைப்பற்றி மௌனம் சாதித்து அங்கீகரித்தபடி புலம்பி நடிப்பதில் உலகம் மாறிவிடுமா? இதைவிட இன்று மனிதர்களுக்காக நாள்தோறும் போராடிப்போராடி இந்தச் சீமாட்டிகள் பாதுகாக்கும் அரசுநிறுவனத்தால் கொல்லப்படும் மனிதர்கள் இவர்களைவிட ஆயிரம் ஆயிரம் மடங்கு வான் உயர எழுந்து நிற்கின்றனர். கால் தூசுக்கு கூட அருகதையற்ற சீமாட்டி டயானாவைப்பற்றி இன்று புலம்ப ஏகாதிபத்திய உலகம் உள்ளது. ஆனால் மக்களுக்காக அவர்களுக்காகவே இறக்கும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களை நினைவு கொள்ள ஓர் உலகம் இல்லைத்தான். அதனால் தான் டயானாவைப் பற்றி ஒப்பாரிகள் புலம்பல்கள் நிரம்பிப்போயுள்ளது.

புரட்சி பேசுகின்ற ரொக்சிய  கம்யூனிச கட்சியின் பத்திரிகையான  தொழிலாளர் பாதை டயானாவுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணத்தைப் பார்ப்போம். தொழிலாளர் பாதை இலங்கை வெளியீடு 484 இல் (1997 அக்டோபர் ) 'டயானாவின் மரணமும் பிரித்தானியாவின் அரசியல் நெருக்கடியும் " எனத் தலைப்பிட்ட கட்டுரை தலையங்கம் எப்படி டயானாவின் மரணம் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது என்பதை விளக்கவில்லை. ஆனால் டயானாவுக்கு மறைமுகமாக கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் 'எதிர்காலம் எதுவிதத்திலும் உறுதியானது அல்ல. டயானாவின் மரணத்துடன் வெடித்த பலம் வாய்ந்த பொதுஐன உணர்வுகளும் அவை அரச குடும்பத்துக்கு எதிராக நெறிப்படுத்தப்பட்டமையும் அது முதலாளி வர்க்கம் மீது திரும்பிப் பாயும் சக்தியுடைய பூதம் அடைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது." எனப் புரட்சியின் பெயரால் தொழிலாளர் பாதை பிரகடனம் செய்து இருந்தது. டயானாவின் அரசியல் என்ன? என்ன செய்து கொண்டிருந்தார்? என்ற கேள்வியை கேட்கவோ, விமர்சிக்கவோ முன்வராத தொழிலாளர் பாதையின் ஒருபக்க கட்டுரையில் மனிதாபிமான டயானாவின் பின் திரண்டோர் முற்போக்குகள் என மறைமுகமாக பிரகடனம் செய்ததுள்ளதுடன், இனி அடுத்த புரட்சிக்கோ, பாசிசத்துக்கோ அணிதிரட்டக் கூடிய நிலையில் கனிந்து உள்ளது என பிரகடனம் செய்கின்றனர். அதாவது குடுவையில் இருந்து டயானாவின் முற்போக்கில் வெளிவந்துள்ளார்கள். எதிர்காலப் புரட்சிக்கு தயாராக உள்ளார்கள் என அத்தாட்சி செய்கின்றனர். இது தான் தொழிலாளர் பாதையின் புரட்சி வேஷம்.

இப்படி நாம் விமர்சிக்கும்போது யமுனா ராயேந்திரன் போன்றோர் தீவிர இடதுசாரிகளின் பார்வை எனக் கூறி சேறு அடிக்கும் வழியில் தான் ரொக்சிகளும் தீவிர இடதுசாரித்தனம் என சேறடித்து இந்த உலகை பாதுகாக்க அதீத பிரயத்தனம் செய்து உச்சுநடை போடுகின்றனர்.

காலனியாதிக்க அரசு குடும்ப வடுக்களையோ, அங்கு கொள்ளையடித்த சொத்துக்களைப் பெறுவதிலோ இன்று மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ வெட்கப்படாத, ஆடம்பர களியாட்ட ஏகாதிபத்திய கலாசார சீரழிவுகளை தனது வாழ்க்கையாகக் கொண்டு, அதற்குள்ளான சகதிக்குள் நடந்த இழுபறியில் தான் டயானா இறந்தார். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் ஏன்தான் ஒப்பாரி வைத்து அழுது புலம்ப வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் இதை அம்பலப்படுத்தி எதிர்த்து இதைப் போற்றுவோரையும், அதன் எடுபிடிகளையும் வேரறுக்க வேண்டும்.

குறிப்பு- இன்னுமொரு சாக்கடை நாயகியும் ஏகாதிபத்தியங்களின் புகழ்களைப் பெற்றுக் கொண்டவருமான அன்னை திரேசா, டயானா போன்று வேறு ஒரு வழியில் அதே சாக்கடைக்காக இயங்கியவர்.

வறுமை கடவுளின் கொடை எனப் பிரகடனம் செய்து, உலக ஏகாதிபத்தியத்திடமும், உலக சர்வாதிகாரிகளின் கை குலுக்கி அவர்களை மனித நேயவாதிகளாப் பிரகடனம் செய்து, அவர்கள் கொடுத்த பணத்தில் ஏழைக்கு சிரமதானம் செய்தார். அதுவும் ஏழைகளை நாயாக நடத்தி மருத்துவ உலகில் எவை தடை செய்யப்பட்டதோ அதை எல்லாம் அவ்ஏழைகளுக்கு கொடுத்தும் செய்து, பலரைப் பரலோகம் அடைய வைத்தார்.

ஏழைகள் உள்ளவரை தான் தமது பிழைப்பும் நிலைக்கும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டுதான், ஏழைகளை உருவாக்கும் சமூக அமைப்பைப் பாதுகாக்க அயராது உழைத்தார்.

ஏகாதிபத்தியம் ஏற்படுத்தி வைத்துள்ள வறுமையையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் தடுக்கத்தான் ஏகாதிபத்தியம் மனித உதவி திட்டங்களை முன்வைக்க, அதில் புரண்டு எழுந்தவர் தான் அன்னை திரேசா என்ற நச்சுக்காளான்.