மூன்றாவது பாதைக்கான திட்டம்

சமர் ஏழாவது இதழில் முன்வைத்த மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டம் ஆடிமாதம் 17-18 திகதிகளில் ஜரோப்பிய நாடுகளில் உள்ள வர்க்க சிந்தனை கொண்டோர், ஜனநாயக தேசபக்த சக்திகளால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, திட்டத்தில் திருத்தங்கள் செய்ததனினூடாக மூன்றாவது பாதைக்கான ஜக்கியமுன்னணியை ஒரு ஸ்தாபனமாக உருவாக்கியுள்ளனர்.

 

சமர் ஓர் அரசியல் பத்திரிகையென்ற அடிப்படையில் கருத்து கூறுவதற்கு அப்பாற்பட்டு, பங்கேற்கும் பணியுடனேயே மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டத்தை வெளியிட்டது. இவ்வேலைத்திட்டத்தை விவாதத்துக்காக தேர்ந்தெடுத்த சக்திகள், விவாதத்தின் வெளிப்பாடாக முன்னணிக்கான ஸ்தாபன வடிவத்தை உருவாக்கியதையிட்டு சமர் மகிழ்வுறுவது மாத்திரமல்லாமல் அனைத்து வழிகளிலும் முன்னணியின் வளர்ச்சிக்காக சமர் செயற்படும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றோம்.

 

எமது பார்வையில் ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உதிரியாகவும் மற்றும் குழுக்களாகவும் தேசத்தை மறந்து விடாது முடிநதவரை செயலாற்றும் தேசபற்றுள்ள, வர்க்கசிந்தனை கொண்ட ஜனநாயக சக்திகள் பலவகையாகச் செயற்படுகின்றனர். இவர்களோடு விவாதங்கள் நடத்துவதன் ஊடாகவும் கருத்துக்ளை கேட்டறிவதனூடாகவும் இந் நேசசக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய முக்கிய கடமை இவ் ஜக்கிய முன்னணியின் முன்னுள்ள மிகப்பெரும் பொறுப்புக்களில் ஒன்று என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். புலிகள் அரசுக்கு எதிராகப் போராடுகின்றனர் என்னும் ஒரேயொரு அடையாளத்தை வைத்து இவர்களின் வர்க்கத்தன்மையை பலர் ஆராய்ச்சி செய்கின்றனர்.

 

புலிகளின் சமரசத்துக்காகன சமிக்ஞையை (தனித்துவமான பேச்சுவார்தைக்கல்ல) இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. இவைகட்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் புலிகளின் உத்தியோகபூர்வ வீடியோ வெளியீடான தரிசனம் 9வது இதழில் தனியுடமை சமுதாயம் அமைத்திடுவோம் என்றும் அறிவித்துள்ளனர். புலிகளால் பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் தஞ்சம் அடைந்துள்ள அடிவருடிகளால் தமிழ் மக்களின் விடுதலை காட்டிக்கொடுக்கப்படுகின்றது. சிங்களப் பேரினவாத சக்திகள் எமது இனத்தை பூண்டோடு அழிப்பதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். சிஙகள இடதுசாரிகள் தமிழ்மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கத் தயங்குவதோடு, பேரினவாதத்தை முழுமையாக எதிர்க்க திராணியற்று இனவாதத்தில் மறைந்து நிற்கின்றனர்.

 

எமது சகோதர இனமான முஸ்லீம்கள் எம்மை சந்தேகத்தோடு நோக்குகின்றனர். இதுபோன்ற தீவிர முரண்பாட்டு சூழ்நிலையில் ஜக்கிய முன்னணிக்கான முனைப்பு வரலாற்றின் நியதியேயாகும். ஆனால் ஜக்கிய முன்னணியின் செயற்பாடு தேசத்:தின் பாதிப்பை உண்டுபண்ணும் அளவுக்கு தீவிர முன்னேற்றத்தை பெறவேண்டும் என்பதே எமது அவாவாகும்.

 

சமர் ஆசிரியர் குழு