சோவியத் பற்றிய சிறு குறிப்பு

யெல்சின் ஆர்ப்பாட்டமாக ஆட்சிக்கு வந்தார். மேற்கத்தைய அரசுகளும், அரைகுறை மார்க்சிய முலாம் பூசிய பிதற்றல்களும் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதாக வாய் கிழிய முழக்கமிட்டனர். யெல்சின் ஜனநாயகத்தின் காவலன் என பாராட்டுக்கள் ஒருபுறம் நடைபெற, யெல்சின் ஆட்சியில் இருக்கும் வரை சில படங்களையாவது எடுத்து விட வேண்டுமென்ற துடிப்புடன் புகைப்படப் பிடிப்பாளருக்கும் தொலைகாட்சிகளுக்கும் பல்வேறு தோற்றத்தில் தன்னை பிரபல்யப்படுத்த முயல்கிறார்.

 

சமூகத்திலிருக்கும் முரண்பாடுகளைத் தீர்ப்பேன் என வாய்ச்சவாலடித்த யெல்சின் கம்யூனிசத்தின் போலியாக இருந்த குருசோவ்---பிரஸ்நோவ்...கோர்பச்சேவ் ஆகியோரிடமிருந்து, எந்த அரசியல் மாற்றமுமின்றி ஆட்சியமைத்ததுடன் மேலும் தீவிரமாக கம்யூனிசத்தின் அடிப்படைகளை தகர்த்து முதலாளித்துவத்தை செயற்படுத்த முயன்றார்.

 

மக்கள் மீண்டும் உண்மையை உணரத் தலைப்பட்டனர். இன்று கம்யூனிசக் கட்சியின் தலைமையில் நாளாந்தம் போராட்டம் தொடர்கின்றது. மக்கள் தெளிவாகவும், விரைவாகவும் உண்மையை இனங் காணத் தொடங்கியுள்ளார்கள். லெனின், ஸ்டாலின் ஆகியோரின் படங்களை தூக்கியபடி மக்கள் வீதிக்கு வருவது மேற்கத்தைய நாடுகள் மறைக்க முயன்றும் சிலவற்றை மறைக்க முடியாமல் வெளியிட நிர்பந்திக்கபட்டுள்ளார்கள். யெல்சினை பன்றியாகச் சித்தரித்ததுடன் ஒரு மாபீயாவாகவும், விபச்சாரத்தின் தலைவனாகவும் காட்டும் பல கேலிச்சித்திரங்களுடன் தொடரும் ஊர்வலங்கள், யெல்சின் மிக விரைவில் தூக்கி எறியப்படப்போகும் நிகழ்வைக் காட்டுகிறன.

 

ஒரு குறுகிய காலத்தில் மீண்டும் போராட்டம் தொடருமளவுக்கு மக்கள் யெல்சினையும் ஸ்டாலினுக்குப் பிறகு வந்த போலிக் கம்யூனிஸ்டுகளையும் இனம் கண்டுள்ளனர். மக்களின் தெளிவான நிலையையும், சரியான ஒரு கட்சியின் தலைமையையும் இன்று சோவியத் எதிர்கொண்டுள்ளது.

 

நாளாந்தம் நடைபெறும் ஊர்வலங்கள் மேற்கத்தைய நாடுகள் வெளியிடாமல் மறைத்தபோதும், ஒரு சில போராட்டங்கள் சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மேற்கத்தைய தொலைக்காட்சிகளில் வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. அவைகளையே ஆதாரமாக வைத்து அவை நடந்த திகதிகளை உங்கள் முன்வைக்கிறோம்.

 

(1) 07-11-1991 இல் அக்டோபர் புரட்சியின் நினைவாக ஆயிரக்கணக்கானோர் யெல்சினுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தினர்.

 

(2) 22-12-1991 இல் மீண்டும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.

 

(3) 12-01-1992 இல் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.

 

(4) 09-02-1992 இல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட ஊர்வலத்துக்கெதிராக யெல்சின் ஊர்வலத்தை நடத்தினார். இரு ஊர்வலங்களும் தமது பலத்தை காட்டும் வகையில் அமைந்தது. மேற்கத்தைய புள்ளிவிபரப்படி 10 ஆயிரம் பேர் யெல்சினை ஆதரித்து ஊர்வலத்தில் பங்குகொண்டதுடன், மதசிலுவைகளும் ஜார் மன்னனின் படங்களுடன் காணப்பட்டனர். இதற்கு எதிராக நடந்த கம்யூனிச ஊர்வலத்தில் 30-ஆயிரம் பேர் பங்குகேற்றதுடன் லெனின் ஸ்டாலின் படங்களுடன் காணப்பட்டனர்.

 

(5) 23-02-1992 இல் பல்லாயிரக் கணக்கானோர்கள் கலந்து கொண்டு ஊர்வலம் நடைபெற்றது.

 

(6) 15-023-1992 இல் ஊர்வலம் நடைபெற்றதுடன் ~பிராவ்தா பத்திரிகை மீண்டும் வெளியிடப்பட்டது. (அன்று1 1-2 கோடி பத்திரிகைகள் வெளிவந்தது.

 

(7) 17-03-1992  20-03-1992  ஆகிய இரு தினங்களிலும் ஊர்வலங்கள் நடைபெற்றன.

 

இவைகள் மேற்கத்தைய தொலைகாட்சிகள் காட்டியது மட்டுமே.

 

தினம் தினம் கிராமம் கிராமமாக நடைபெறும் சம்பவங்கள் பற்றி சரியான தகவல்களை எடுக்க முடியாமையினால், அவைகளை முன்வைக்க முடியவில்லை.

 

இவ்வூர்வலங்களை விட மக்களின் அன்றாட வாழ்க்கையையொட்டி தொலைக்காட்சிகளில் வெளிவந்தவை, அவைகளிற் சில.

 

(1) ஒரு பெண் கிரம்ளனில் உள்ளவர்கள் கிரிமினல்கள் என சொன்ன பொழுது பத்திரிகையாளர்கள் யெல்சினுமா என கேட்கையில் அவர் தான் முதலாவது கிரிமினல் எனச் சொன்னார்.

 

(2) ஒரு கடையில் பொருட்களை வாங்க நின்ற கூட்டத்தில் பொருட்கள் இருந்தும் வாங்க முடியாதளவுக்கு பணமில்லையாம், தங்கள் கையிலுள்ள பணத்தை எண்ணிப்பார்க்கும் பரிதாப நிலையைப் பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு பொருட்களின் விலை 5-15 மடங்கு உயர்ந்துள்ளது. இது பணக்காரர்களுக்குரிய கடை என அங்கு நின்ற மக்கள் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்தனர்.

 

(3) ஆயிரக்கணக்கானோர் யெல்சின் ஆட்சியமைந்த பின் வீதிகளில் கொட்டும் பனிகளில் படுப்பதையும், அவர்களின் அவஸ்தைகளையும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.

 

(4) கொர்பச்சேவ் ஆட்சிகாலத்தில் சிறைக்கூடத்தில் முடமாக்கப்பட்ட ஒருவன் தன் நெஞ்சின் ஒரு பக்கத்தில் லெனின் மறுபக்கத்தில் ஸ்டாலின் படங்களை பச்சை குத்தி இருந்ததை பார்க்க முடிந்தது.

 

(5) ஒரு பத்திரிகையாளர் ஒரு குடும்பத்தை 4மணி நேரம் கடந்தகாலம், நிகழ்காலம் தொடர்பாக பேட்டியெடுத்தபோது அக் குடும்பத்தவன் கம்யூனிஸ்ட்டாக ஸ்டாலின் காலத்தில் இருந்தவர் அவர் ஸ்டாலின் காலத்தில் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருந்தவர். அவர் கைது ஸ்டாலினின் தவறுகள் பக்கத்துக்குள் அடக்கலாம். அவர் ஸ்டாலின் பற்றிக் கூறும் பொழுது அவர் சில தவறுகள் விட்டார் எனவும், ஆனால் ஸ்டாலின் சரியாக இருந்தவர் எனவும் கூறிய அவர் குருசோவ்வும் பின் வந்த அனைவரையும் நிராகரித்தார். அதன் பின் இருந்த கம்யூனிசக்கட்சியில் அவர் இருக்கவுமில்லை.

 

(6) அண்மையில் சோவியத் இராணுவத்தின் ஒரு பிரிவு லெனின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய ஒரு வைபவம் நடைபெற்றது.

 

(7) நாளாந்தம் மக்கள் முண்டியடித்தபடி ஒவ்வொரு கடைகளிலும் பொருட்கள் வாங்க கூட்டமாக கூடும் மக்கள் கடைகள் திறந்தவுடன் அங்கு எதுவுமில்லாத நிலையில் யெல்சினையும் அவர் கூட்டத்தையும் கிரிமினல்கள் என சொல்வதை தொலைக்காட்சிகளே காட்டுகின்றன.

 

இப்படி சில நிகழ்வுகளை தொலைக்காட்சிகள் காட்டியதின் அடிப்படை. இதை நாம் எழுதும் பொழுது இவைகளை விட அங்கு நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகள் வெளிவராமலும் உள்ளன. மேலும் அங்கிருந்து வரும் தகவல்கள் புரட்சியின் தவிர்க்க முடியாத நிலைமையை கோடிட்டுக் காட்டுகிறது. இனி வரும் சோவியத் புரட்சியானது முதலாளித்துவாதிகள் அரைகுறை மாக்சிஸ்டுகளின் வாய்ச்சவடால்களுக்கு மீண்டும் ஒரு பேரிடியை மிக விரைவில் கொடுக்கும்.

 

 

 

Last Updated on Thursday, 10 September 2009 21:03