ஆண் குழந்தை தாலாட்டு

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!
நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்
சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்
கனலேற்ற வந்த களிறே, எனது
மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!
தேக்குமரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே
ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில்,
பொன்முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச்
சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்!
அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
கொள்ளைநோய் போல்மதத்தைக் கூட்டியழும் வைதிகத்தைப்
போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்
வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா!
வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும்
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு!
"எல்லாம் அவன்செயலே" என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்,
காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்
வேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும்,
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே,என் செந்தமிழே கண்ணுறங்கு!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt141