வறுமை ஒழிப்பு

பூனைக்கு மெத்தையான
தன் வீட்டு அடுப்புக்கு
சுள்ளிகள் கிடைக்குமென்ற
நம்பிக்கையோடு
விடியற்காலையிலேயே வந்து
கடை விரித்தான்
இருளாண்டிக்கிழவன்.

நடராசர்களின் பாதவரம் வேண்டி
கையில் குத்தூசியோடு
தன் கண்களைப்
பாதையில் விதைத்திருந்த
அந்தக்
காலணி மருத்துவனின்
காலைத் தவத்தைக்
கலைத்தது “போலீஸ் லத்தி”.

யோவ் பெரிசு
“மந்திரி”
சாயங்காலம் இங்க
வறுமை ஒழிக்கிறதப்பத்தி
கூட்டத்தில பேசப்போறார்.
அதுக்கு மேடை போடனும்
நீ இப்பவே
எடத்த காலி பன்னு.

- செங்கதிர்

http://www.vinavu.com/2009/12/05/saturday-poems-13/

Last Updated on Saturday, 05 December 2009 08:32