வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல்! பத்திரிகை செய்தி

புதிய ஜனநாயகம் (செப்டம்பர்’2009) இதழில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைப் பற்றிய ஒரு விமரிசனக் கட்டுரை வெளிவந்ததை ஒட்டி ஆத்திரமடைந்த சென்னை, குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எமது தொழிற்சங்கத்தின் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது நேற்று (7.9.2009) நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

குரோம்பேட்டை நாகல்கேணி பகுதி இரட்டைமலை சீனிவாசன் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற எமது உறுப்பினரின் வீட்டில் சங்க முன்னணியாளர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த புரட்சிசேகர், ஷியாம், பிரபா, சசி, இளையராஜா, இளங்கோ ஆகியோர் அடங்கிய கும்பல் ஒன்று கையில் ஆயுதங்களுடன் தீடீரென்று உள்ளே நுழைந்தது. “எங்க தலைவனைப் பத்தியாடா எழுதுறீங்க, எவனையும் உயிரோடு விடமாட்டோம்” என்று வெறிக்கூச்சலிட்டபடி தாக்கத் துவங்கியது.

சங்கப் பணிக்காக குரோம்பேட்டை பகுதிக்கு வந்திருந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் செய்தி கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். “புதிய ஜனநாயகம் பத்திரிகையில் எழுதியுள்ள விமரிசனங்களில் என்ன தவறு அல்லது என்ன பொய்யைக் கண்டீர்கள்?” என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க வக்கில்லாத அந்த ரவுடிக் கும்பல் உடனே அவரது பின்மண்டையில் இரும்புக் கம்பியால் தாக்கியது. தோழர் முகுந்தன் மயங்கிச் சரிந்தார். தடுக்க வந்த மற்ற தோழர்களும் (விக்னேஷ், சிவா, ஜெயராம், நிதின், மனோகர்) சராமாரியாகத் தாக்கப்பட்டனர். பகுதி மக்களும் வீட்டு உரிமையாளரும் சப்தம் கேட்டு விரைந்து வரவே ரவுடிக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

படுகாயமடைந்த தோழர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த அராஜகத்தை அம்பலப்படுத்தி எமது சங்கம் மற்றும் எமது தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி முதலியன தமிழகமெங்கும் தீவிர பிரச்சாரம் செய்ய இருக்கின்றன.

தலித் மக்களின் விடுதலைக்கு பாடுபடுவதாக சொல்லிக் கொண்டு துவங்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இன்று தமிழகம் முழுவதும் கட்டைப் பஞ்சாயத்து, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சக்திகளுடைய கூடாரமாகவே மாறிவிட்டது. பல இடங்களில் ஆதிக்க சாதியினரிடம் காசு வாங்கிக் கொண்டு, தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. இந்த உண்மை தலித் மக்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் மென்மேலும் அம்பலமாகி வருகிறது.

தலித் மக்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்தும் இத்தகைய சக்திகளை அரசியல் அரங்கில் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். தாக்குதல்களுக்கும், மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டோம். எமது இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பத்திரிகையாளர்களும், ஜனநாயக சக்திகளும், குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
சுப.தங்கராசு,
பொதுச்செயலாளர்
பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

 

http://www.vinavu.com/2009/09/08/thiruma2/