கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐஸ்லாந்து என்ற பணக்கார நாடு திவாலாகின்றது, என்ற செய்தி கேள்விப்பட்டு பல சர்வதேச ஊடகங்கள் ஐஸ்லாந்தை மொய்த்தன. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் காட்சியை படம் பிடிக்க ஓடோடி வந்தன. ஆனால் அவர்களின் ஆசை நிறைவேறாத படி ஐஸ்லாந்து மக்கள் தமது நிதி நெருக்கடியை மறைத்துக் கொண்டனர்.

தாம் வாங்கிய வீடுகளுக்கு இரண்டு மடங்கு கடன் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்ட போதும், தொழில்களை இழந்தபோதும், இறக்குமதி பொருட்கள் அருமையாக கிடைத்த போதும், உள்ளூர் மதுவை குடித்து நெருக்கடியை தமக்குள் மறைத்துக் கொண்டனர்.

தற்போது வரும் செய்திகளின் படி திவாலான பொருளாதாரத்தால் செய்வதறியாது தவிக்கும் ஐஸ்லாந்து அரசானது, அமெரிக்க தேசங்கடந்த அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இயற்கைவளத்தை விற்க முன்வந்துள்ளதாக தெரிகின்றது. அலுமினியத்தின் மூலப்பொருளான பொக்சீட்டை, ஐஸ்லாந்தின் இயற்கையான பனி ஆறுகளால் சுத்திகரித்து, அலுமினியத்தை பிரித்தெடுக்கும் கம்பெனிகளுக்கு(alcoa), ஐஸ்லாந்தின் சில பகுதிகள் தாரை வார்க்கப் பட்டுள்ளன. மிக இரகசியமாக நடந்துள்ள இந்த ஒப்பந்தமானது, ஐஸ்லாந்தை சுற்றுச் சூழலை அசுத்தப்படுத்தும் மூன்றாம் உலக நாட்டைப் போல மாற்றுவதற்கு வழி வகுத்துள்ளது. மூலப்பொருளான போக்சீட்டில் இருந்து அலுமினியத்தை பிரிப்பதற்கு ஆகும் செலவு, பிரேசிலை விட ஐஸ்லாந்தில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தவிச்ச முயல் அடித்த கதையாக, பொருளாதார நெருக்கடியால், பாதிக்கப்பட்ட ஐஸ்லாந்தை அமெரிக்க அலுமினியம் கம்பனிகள் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்டளவு ஐஸ்லாந்துகாரருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்குமென்றாலும், இந்த நிறுவனங்களுக்கான அணைக்கட்டு கட்டும் ஒப்பந்தப்படி சீன, போர்த்துகீசிய தொழிலாளர்கள் வரவிருக்கின்றனர்.

ஐஸ்லாந்தின் இடதுசாரி இயக்கங்கள் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி, ஐஸ்லாந்து அரசுக்கெதிரான போராட்டமாக முன்னெடுத்துள்ளன. வெகுஜன போராட்டத்தில் செங்கொடிகளும் பயன்படுத்தப்பட்டது, ஐஸ்லாந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தேசத்தை திவாலாக்கிய ஐஸ்லாந்து வங்கிகளை கொளுத்துவோம், என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெறாத, அந்த ஆர்ப்பாட்ட வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.