மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1

வாக்களிக்கும் போது யாரை வெல்ல வைக்கவேண்டும் என்பதைச் சரியான இலக்காகக் கொள்வது அவசியம், அதேநேரம் வெல்ல முடியாவிட்டால், அவர்கள் குறைந்தது எதிர்கட்சியாகத்தன்னும் இருக்கவேண்டும். எதிர்க்கட்சியில் பழைய ஊழல்வாதிகளை, இனவாதிகளை, பிரதேசவாதிகளை, ஆணாதிக்கவாதிகளை, சாதியவாதிகளை விட்டுவிடுவது என்பது, ஆட்சியாளர்களின் மக்கள்விரோத அரசியலுக்குத் துணைபோவதாகும்.
இந்த வகையில் வாக்களிக்க முன், யார் உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கின்றனர் என்ற கேள்விக்குப் பதில் தெரிந்தாக வேண்டுமென்றால், இலங்கையில் யார் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதற்கான, பதில் தெரிந்தாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களில் நீங்கள் அடங்கவில்லையா என்பதற்கான, உங்கள் கேள்வியும் - பதிலும் - தெளிவும் மிகமிக அடிப்படையானது.
யார் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் யாரெல்லாம் சமூகத்தின் அடிநிலையிலிருக்கின்றனரோ, யாரெல்லாம் அன்றாடம் உழைத்து வாழக்கூடிய (நாட்கூலி, மாதச் சம்பளம் பெறுகின்ற) மக்களோ, அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.
இந்த வகையில் மக்கள், ஏதோ ஒரு வகையில் உழைக்கும் மக்களான இவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகின்;றனர். வறுமையிலோ, மாதாந்த சம்பளத்தில் வாழ முடியாதவர்களாகவோ, மருத்துவ வசதிகளின்றியோ, கல்வி கற்ற முடியாதவர்களாகவோ, சாதி இனம் பிரதேசம் மதம் பால் போன்ற சமூகக் காரணங்களால் தனிமைப்படுத்தப்படுகின்றவர்களாகவோ, சமூகம் சார்ந்து பல்வேறு உளவியல் நெருக்கடிகளால் மகிழ்ச்சியை இழந்து காணப்படுகின்ற மக்களே, ஒடுக்கப்பட்ட மக்கள். இதில் நீங்கள் அடங்கவில்லையா?