பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?
செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, முதலாளித்துவம் பொருளாதாரத்தின் வளர்ச்சியாக கருதுகின்றது. அனைத்துச் செல்வத்துக்குமான மனித உழைப்பு நின்று போகும் போதும், உற்பத்தியில் இலாபம் குறையும் போது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொது நெருக்கடியாக மாறுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று உலக உற்பத்தியை நிறுத்தியதுடன், தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலையை உருவாக்கி இருக்கின்றது. கொரோனா முடிவுக்கு வராத (மே மாதம்) இன்றைய சூழலில் 8.8 ரில்லியன் டொலர் (8 800 000 000 000), அதாவது உலகப் பொருளாதாரத்தில் 5.8 – 8.8 சதவீதமான பொருளாதார இழப்பு குறித்து ஆசியன் வளர்ச்சி வங்கி எதிர்வு கூறியிருக்கின்றது.
இதன் பொருள் உலகம் பொருளாதார நெருக்கடியை நோக்கிப் பயணிக்;கின்றது. அது அரசியல் நெருக்கடியாக, வர்க்க முரண்பாடுகளாக எழும். கொந்தளிப்பான இந்த சூழலை முதலாளித்துவமானது
1.மக்களை இன – மத - சாதி - நிற ஒடுக்குமுறை மூலம் பிளந்து, வர்க்க மோதலை தவிர்க்க முனையும்.
2.நிதி மூலதனத்தைக் கொண்டு இலாபத்துக்கான சந்தையை சரியவிடாது பாதுகாக்கும்.
3.அரசுடமைகளை தனியுடமையாக்குவதன் மூலம் முதலாளித்துவத்தின் இலாபத்தை தக்கவைக்கும் அதேநேரம், நிதிமூலதனத்தைத் திரட்டிக் கொண்டு தன்னை தகவமைக்க முனையும்.
இந்த வகையில் முதலாளித்துவம் ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள எல்லாவிதமான ஏற்றத்தாழ்வான – நெளிவுசுழிவான வழிமுறைகளைக் கையாளும்.
பாட்டாளி வர்க்கம் அரசியல்ரீதியாக இதை விளங்கிக் கொண்டு தன்னை தயார் செய்வதும் - அரசியல் நெருக்கடியின் போது அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு தயாராக - தன்னை அரசியல்ரீதியாக அமைப்பாக்கி இருக்கவேண்டும். இன்றைய உற்பத்திமுறையும், நுகர்வும் மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவானதல்ல. மாறாக செல்வந்தர்கள் மேலும் செல்வந்தராவதற்கானதாக இருக்கின்றது. இதனால் இது இயற்கை குறித்து அக்கறைப்படுவதில்லை. வாழ்வியல் சார்ந்த மனித உரிமைகள், தேவைகள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை.