மனிதர்களை விட, மனிதர்களின் கடவுள்களை விட, மனிதர்கள் கண்டு பிடித்த ஆயுதங்களை விட, மனிதர்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை விட வலிமை வாய்ந்ததே இயற்கை. இந்த இயற்கையின் சீற்றமானது இந்தப் பூமியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போதெல்லாம் அது பூமியின் எங்கோ ஒரு முலையில் தானே என அதை நாம் மௌனமாக தாண்டி சென்று விடுகிறோம். மக்கள் அழிவும் மரணங்களும் நமது நெஞ்சினை பாதித்தாலும் நமக்கு இல்லைத் தானே என்று அமைதியடைந்து விடுகிறோம். இன்று மரணம் ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவினை தட்டும் சூழ்நிலையில், கதவினை திறந்து வெளியில் கால் வைத்து விட்டால் மரணம் நம்மை பற்றிக் கொண்டு விடுமென்ற பயத்தில் மாதக் கணக்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல மனிதர்களோடு வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள்.., இப்படி அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது. இந்த ஓர் மாதகாலம் தான் இயற்கை சுதந்திரமாக குளிர்மையான சுத்தக்காற்றினை சுவாசித்து சுகத்தினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறது. இயற்கையின் நீண்ட கால வேதனை இன்று சற்று தணிக்கப்பட்டுள்ளது. இயற்கை வெப்பத்தின் கொடூரத்தினை தாங்க முடியாமல் ஒவ்வொரு நாட்டு வாசலிலும் கையேந்தி நின்ற போது எதுவும் பண்ண முடியாது என்று திமிரோடு கதவை மூடிவிட்ட அமெரிக்காவும், ஏதோ பிச்சை போடுவது போல் சில்லறையினை காட்டி காதுகளை இறுகப் பொத்திக் கொண்ட உலக நாடுகளும் இன்று தன் காலில் வீழ்ந்து கிடப்பதை பார்த்து இயற்கை கம்பீரமாக நெஞ்சினை நிமிர்த்தி நிற்கிறது. இது இயற்கையின் நியாயமான உணர்வு தான்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
கொரோனா (SARS-CoV-2) வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது
எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை. வைரஸ்சுக்கு எதிராக யுத்தம், ஆயத்தம் என்று கொக்கரித்த அரசியல் பின்னணியில், அவையின்றி மரணங்கள் தொடருகின்றது. நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!
என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது. இன்று கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று என்று, மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வயது மற்றும் வைரஸ் இலகுவாக பலியெடுக்கும் நோய்களைக் கொண்ட எனது உடல், இந்தச் சூழலில் எனக்கான சுயபலம் - கடந்த 40 வருடமாக நான் நேசித்த சமூகத்தைக் குறித்து தொடர்ந்து அக்கறையோடு எழுதுவது மட்டும் தான். அண்மையில் பொதுவில் கொரோனா குறித்த 20க்கும் மேற்பட்ட கட்டுரையில் எதை பேசினேனோ, அதை என்னிலையில் இருந்து எழுதுகின்றேன்.
இயங்கியலற்ற மார்க்சிய சிந்தனைமுறையில் கொரோனா
கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தனக்கும், தன் வீட்டுக்குள்ளும் வாரது, மரணம் தன்னை சுற்றி நிகழாது என்ற சுய கற்பனையில் - சுய அறியாமையில் இருந்து கருத்துக்களை உருவாக்குகின்றவர்கள், தங்கள் கருத்துக்கு இடதுசாரிய முலாம் பூசுகின்றனர்.
ஒட்டுமொத்த சமூகத்தையும் மையப்படுத்தாத, அதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு அணுகுகின்ற பார்வை - முதலாளித்துவ சிந்தனைமுறை. உனக்கு வைரஸ் தொற்று வந்தால், உன்னைச் சுற்றி மரணம் நிகழ்ந்தால் இதை எப்படி நீ பார்ப்பாய்? முதலாளித்துவம் கொல்லும் தானே, என்று கூறுவாயா? இல்லையென்றால் மக்களுக்கு என்ன கூறுவாய்?
இடதுசாரியத்தின் பெயரில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அணுகுகின்ற எல்லாப் பார்வையும், இயங்கியலற்ற வரட்டுத்தனமாகும். தன்னை மையப்படுத்தி, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் தனியுடமைவாதக் கண்ணோட்டம். இதுதான் தனிமனிதர்களுக்குள் இயங்கும் முதலாளித்துவச் சிந்தனைமுறை.
இப்படிப்பட்ட சிந்தனைமுறைகள் வழி மார்க்சியத்தையும், முதலாளித்துவத்தையும் கிளிப்பிள்ளைகள் போல் உளறுவதை அறிவாக்க முனைகின்றனர். தமக்கு தெரிந்ததை வைத்து மீண்டும் அரைக்கின்றதைத் தாண்டி - இயங்கியல் முறையில் இயங்கிக்கொண்டு இருக்கும் சமகால விடையம் மீது இயங்கியலற்று புலம்பவது நடக்கின்றது. முதலாளித்துவம் அப்படித்தான் என்று வார்த்தை ஜாலங்கள் மூலம் முழங்க முடியும். மக்களை அறிவூட்ட முடியாது.
கொரோனா குறித்து!? : பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சியம் மீதான கேள்வி
உலக முதலாளித்துவம் பொது நெருக்கடிக்குள்ளாகி திணறுகின்றது. சமூக வலைத்தளங்களே பாரிய கருத்துருவாக்கத்தை கட்டமைக்கின்றது. முதலாளித்துவ ஊடகங்கள் கட்டமைக்கும் தகவல்களையும் - சிந்தனைகளையும் அவை காவி வருகின்றன. மறுபக்கத்தில் உதிரித்தனமான நம்பிக்கைகள், கற்பனைகள், பரபரப்பான தனிமனித அற்பத்தனங்கள், அறியாமைகள்… முதல் மதம் - இனம் - சாதி - நிறம் சார்ந்த குறுகிய வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் - சிந்தனைகள்.. எல்லாம் அறிவியல் மூலம் பூசி - மனித சமூகத்தையே திசை தெரிய முடியாத வகையில் திணறடிக்கின்றது.
மக்களைச் சார்ந்த உண்மைகளையும் - அறிவியலையும் - நடைமுறைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும், சமூக இயக்கங்களைக் காண முடிவதில்லை. அநேகமாக வெறும் சொற்களுக்குள் - எதிர்தரப்பை திட்டுகின்ற மொழிக்குள் முடங்கிவிடுகின்றதையே காணமுடிகின்றது. தன்னியல்பின் பின்னால் வால் பிடிப்பதையே காண முடிகின்றது. முகமூடி போட்ட போலி அறிவியலை - அறிவென்று நம்பி பரப்புகின்றது. பகுத்தறிவு கொண்டு அணுகவும், அனைத்தையும் சந்தேகக் கண்ணுடன் அணுகிப் பார்க்க முடியாத தத்துவ வறுமைக்குள் முடங்கி விடுகின்றது. இதனால் மக்களை அறிவூட்டக் கூடிய வகையில், மக்களை அணிதிரட்டக் கூடிய வகையில் சிந்தனைகளையும் - செயற்பாடுகளையும் காண முடிவதில்லை. சமூக இயக்கங்கள் செயலற்று தேங்கி விடுகின்றது. அறிவொளியில் இயங்குகின்ற இயங்கியல் தன்மையை சமூகம் இழந்து நிற்கின்றது.
கொரோனா (SARS-CoV-2 – Corona Virus Disease 2019) வதந்திகளும் - வாந்திகளும் - அரசியலும்
தாங்கள் பேசுகின்ற விடையங்கள் குறித்தும், பரப்பும் விடையங்கள் குறித்தும் தன்னளவில் தான், சமூக பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். நஞ்சுகளைப் பரப்புவது வலதுசாரிகளால் மட்டுமல்ல - இடதுசாரியத்தின் பெயரிலும் நடந்தேறுகின்றது. கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மடடு;ம் பரவவில்லை, மனிதனின் பகுத்தறிவை அழிக்கும் வதந்திகளும் - வாந்திகளுமே பரப்பப்பட்டு மனிதனின் பகுத்தறியும் தன்மையை கொன்று வருகின்றது.
கொரோனா (SARS-CoV-2) வரலாறு திரிக்கப்படுவதில் இருந்தே, அனைத்து தகவல்களும் - பித்தலாட்டங்களும் மூளைக்குள் திணிக்கப்படுகின்றது. கொரோனா குறித்து பெற்றுக்கொண்ட புனைவுகள், கற்பனைகள்– அது உருவாக்கும் அரசியல் கேடுகெட்ட மனிதவிரோதக் கூறாக பரிணமிக்கின்றது. இதை கேள்விக்குள்ளாகி – பகுத்தாய்வுக்கு உட்படுத்துவோம்.
….
சீன மருத்துவர் டாக்டர் லீயை முன்னிறுத்தியே, கொரோனா குறித்த அனைத்து கற்பனைகளும் - புனைவுகளும் அறிவாக கட்டமைக்கப்படுகின்றது.
தனிமனித கருத்துச் சுதந்திரம், அரசின் ஜனநாயகத் தன்மை, வைரஸ் பரவல், மரண விகிதம் … என்று, பலவிதமான கருத்துகளும் அதன் மூலம் அரசியலும் கட்டமைக்கப்படுகின்றது.
30.12.2019 டாக்டர் லீ முதன்முதலாக வைரஸ் தொற்றுக் குறித்து தனது தனிப்பட்ட சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கையை விடுக்கின்றார். அவர் சார்ஸ் (SARS-CoV-1) வைரஸ்சாக இருக்கும் என்று கூறுகின்றார். இந்தத் தகவல்களை சீன அரச மூடி மறைத்ததாகவும் - வைரஸ் பரவ அனுமதித்ததாகவும், இதனால் தான் உலகின் இன்றைய அவலம் என்ற கருத்தைக் கட்டமைக்கின்றனர். இது உண்மையா எனின் இல்லை.
31.12.2019 சீன அரசாங்கம் உலகச் சுகாதார அமைப்புக்கு, இனம் காண முடியாத வைரஸ் தொற்றுக்குள்ளான 41 பேர் தங்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிவித்திருக்கின்றது. அதாவது டாக்டர் லீ சமூக வலைத்தளத்தில் தன்னிச்சையாகவும் - பொறுப்பற்ற விதத்திலும் அறிவித்த மறுநாளே சீன அரசு உலக சுகாதார அமைப்புக்கு அறிவித்திருக்கின்றது. இங்கு சீன அரசு தவறு இழைக்கவில்லை, எதையும் மூடிமறைக்கவுமில்லை. அரசு மிகத் தீவிரமாக அக்கறை எடுத்து உலகுக்கு அறிவித்த தகவலை, சக மருத்துவர் மூலம் பெற்ற டாக்டர் லீ (இவர் ஒரு கண் மருத்துவர்) அதை சமூக வலைத்தளத்தில் முன்வைக்கின்றார்.
சீனா, தென்கொரிய வழிமுறைகளும் - மேற்கின் தடுமாற்றங்களும்
உலக முதலாளித்துவமானது கொரோனாவுக்கு எதிராக ஒரே திசையில் பயணிக்க மறுப்பதன் மூலம், கொரோனா தொடர்ந்து பரவும் அதேநேரம் வைரஸ் தொற்று முடிவுக்கு வராது. கொரோனா வைரஸ்சை எதிர்கொள்வதில் உலக முதலாளித்துவமானது பிரிந்து நிற்கின்றது. ஏகாதிபத்தியங்கள், வரையறுக்கப்பட்ட அரச முதலாளித்துவம், வலதுசாரிய இன, நிறவாத … அரசு கொள்கைகளால் முரண்பட்டே கொரோனாவை அணுகுகின்றனர். இந்த வேறுபாட்டையும், மக்கள் விரோதக் கூறுகளையும் கண்டுகொள்ளாத கொரோனாவுக்கு எதிராக மக்களை முன்னிறுத்தும் சிந்தனை முறையானது, தெளிவற்ற குறுகிய அணுகுமுறையால் மனித பகுத்தறிவையே அரித்து வருகின்றது.
அரசுகள் முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கின்றதுக்கு முரணாக எதிர்மறையில் கொரோனா நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவை பற்றி பேசுவதற்குள் - கொரோனா அரசியலை குறுக்கி விடுகின்றனர். வைரஸ்சுக்கு எதிரான அரசுகளின் கொள்கைகள் சரியானதா என்பது குறித்து அக்கறை காட்டப்படுவதில்லை. இதன் பொருள் அரசுகள் கொரோனாவுக்கு எதிராக சரியான அரசியலில் மக்களை வழிநடத்துவதாகவும் - பொருளாதாரரீதியாக மட்டுமே தவறாக இருப்பதான பொதுப் பிரமைக்குள் - மனிதர்களை வழிநடத்தி விடுகின்றனர்.
அரசுகள் கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி, வைரஸ் பரவலை அனுமதிக்கின்ற வகையில் மேற்கு முதலாளிகளிள் இலாபத்துக்கான (தேவைக்கானதல்ல) உற்பத்தியை மீள தொடங்கவுள்ளது. இதையே மூன்றாம் உலக நாடுகளும்; பின்தொடரும்.
கொரோனாவைப் புரிந்து கொள்ளாத இடதுசாரியம்
கொரோனாவைக் கண்டு பயந்த மக்கள், மந்தைகள் போல் தப்பித்து ஓடுகின்றனர். பணமுள்ள தரப்பினர் விடுமுறையாக மாற்றி கும்மாளம் குத்துகின்றனர். அன்றாடம் கஞ்சிக்கு உழைக்கும் உதிரி உழைப்பாள வர்க்கம் கூட்டம் கூட்டமாக அலைகின்றது. இளைஞர்கள் தம்மை கொரோனா பாதிக்காது என, கூறி ஊர் சுற்றுகின்றனர். மதவாதிகள் கடவுள் கொரோனாவை எம்மிடம் அண்ட விடமாட்டார் என்று கூறி, கூடிக் கும்மி அடிக்கின்றது. இப்படி ஆயிரம் விதமாக, அறிவிழந்த மனிதச் செயற்பாடுகள். இது உருவாக்கும் சிந்தனைகள். சமூக வலைத்தளங்களில் வைரஸ்சாகி வருவதால், அறிவிழந்து போன மனித நடத்தைகளால் வைரஸ் சுதந்திரமாக பரவுகின்றது.
இடதுசாரியம் எதைக் கற்றுக் கொண்டுள்ளது? எதைக் கற்றுக் கொடுக்கின்றது? இடதுசாரியம் இதை வால் பிடிக்கின்றது. தன்னியல்பு இன்றி பின்னால் ஓடுகின்றது. தன் அரசியல் நடத்தையை சமூக சேவையாக மட்டும் குறுக்கி விடுகின்றது. முன்னோக்கி மக்களை அறிவியல் ரீதியாக வழிநடத்த வேண்டிய அரசியல் பாத்திரத்தை முன்னெடுக்க வேண்டியவர்கள், கொரோனா குறித்து புரிதலேயின்றி - முதலாளித்துவத்தின் கால் தடங்களின் பின்னால் ஓடுகின்றது.
கொரோனா குறித்து முதலாளித்துவம் தடுமாறிய அணுகுமுறைகளின் பின்னுள்ள அடிப்படை உண்மைகளைக் கூட புரிந்து கொள்ளவில்லை. முதலாளித்துவமானது பொருளாதார கண்ணோட்டத்தில் கொரோனாவை அணுகி அலட்சியப்படுத்தியது போன்று, இடதுசாரியமும் அதே பொருளாதார அடிப்படையின் கீழ் இருந்து அணுகுவதன் மூலம் - மக்களை வழிநடத்தத் தவறிவிட்டனர்.
வைரஸ்சுக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டுமா!?
அரசு அதிகாரம் மூலம் மக்களைப் பாதுகாத்தீர்களா, பாதுகாக்கின்றீர்களா என்பதை அரசுகளிடம் கேட்கத் தவறுகின்றவர்கள், குவியும் அரசு அதிகாரம் ஆபத்தானது என்று அரசியல் வகுப்பு எடுக்கின்றனர். சமூகமாக தன்னைத்தான் உணராத தனிமனித சுயநலனை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் பொதுநடத்தையைக் கேள்வி கேட்பதற்கு பதில், தனிமனித சுதந்திரங்கள் குறித்த பாடம் எடுக்க முனைகின்றனர். என்ன முரண். இதுதான் திரிபு.
மக்களை எதார்த்தத்தின் மீது சிந்திக்கவிடாது, நாளை குறித்த கற்பனை உலகிற்குள் நகர்த்துவது. ஆழ்ந்து புரிந்துகொள்ள விடாது, அடுத்தடுத்து புதிய விடையத்துக்குள் நகர்த்துவது. புதிய அதிகாரங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம், பழைய அதிகாரம் இழைத்துக் கொண்டிருக்கும் குற்றத்தை கண்டுகொள்ளாது இருப்பது - மறைப்பது.
என்ன நடக்கின்றது, தனிமனித சுதந்திரங்களே வைரஸ்சை பரப்புகின்ற சமூகக் கூறாக மாறி நிற்க, சமூகத்தின் சுதந்திரம் குறித்து சிந்திக்கின்றவர்கள் வைரஸ் பரவுவதை தடுக்க முனைகின்றனர். அரசு தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மூலதனத்தைப் பாதுகாக்க, மக்களை பலியாடாக்கி இருக்கின்றது. இது தான் எங்கும் தளுவிய உண்மை.
இப்படி இன்று வைரஸ்சுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து, அது அதிகாரத்தை மய்யப்படுத்தவும், மக்களை ஒடுக்கவும், மக்களை கண்காணிக்கவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவும்.. கூறி எதிர்க்கின்ற சமூகப் பொறுப்பின்மையை இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கின்றனர். வேறு சிலர் ஒன்றுமில்லாத ஒன்றை ஊடகங்களும், அரசுகளும் ஊதிப் பெருக்கியதாக கூறி, கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையை அலட்சியப்படுத்துவதன் மூலம், அரசுகளின் குற்றங்களை மூடிமறைக்க முனைகின்றனர்.
கொரோனா (கோவிட் 19) மீட்பு நிதி எங்கிருந்து வருகின்றது!?
மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லையென்றும், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டியும், அரசு உடமைகளை தனியாருக்கு விற்று வந்த அரசுகள் தான், திடீரென கொரோனா தாக்கத்தில் இருந்து மூலதனத்தை மீட்க பெரும் நிதியை கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது. ஐp-20 நாடுகள் 5 ரில்லியன் (500 000) கோடி டொலரை இறக்கி இருக்கின்றது. கொரோனா தாக்குதலில இருந்து மக்கள் தப்பிப்பிழைக்க உதவும் மருத்துவ அடிப்படைக் கட்டுமானங்களின்றி உயிர் இழக்கின்ற சூழலில், மக்களை மீட்க முயற்சி எடுக்காமல், மூலதனத்தை மீட்க தாராளமாக அள்ளிக் கொடுக்;கப்படுகின்றது. எங்கிருந்து இந்தப் பணம் வருகின்றது?
கோரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலக உற்பத்தியில் 70 முதல் 50 சதவீத உழைப்பு நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு மாதங்கள் உழைப்பை முடக்குவதன் மூலமே, மக்களை தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அறிவியல் முடிவுக்கு அமைய உற்பத்திகள் சடுதியாக நின்று போய் இருக்கின்றது. அதேநேரம் முடங்கிய உற்பத்தி மீள முடுக்கிவிடும் போது, ஏற்படும் மந்த நிலையில் இருந்து மீள, மேலதிகமாக குறைந்தது இரண்டு மாதங்களாவது தேவை என்று முதலாளித்துவம் கருதுகின்றது. இதற்கான பாரிய நிதித் திட்டங்களை அரசுகள் அறிவித்து வருகின்றது.
இந்த நிதி எங்கிருந்து வருகின்றது? அந்த நிதியை எப்படி, எந்த வடிவத்தில் பகிரத் தொடங்கி இருக்கின்றனர் என்பதை, கிடைக்கும் தரவுகளில் இருந்து ஆராய்வோம்.
நிதி, அரசின் வரவு செலவில் இருந்து வரவில்லை. மக்களிடம் இருந்து திரட்டப்படவில்லை. உலகின் முழு நிதி மூலதனத்தையும் குவித்து வைத்துள்ள செல்வந்தர்கள் கொடுக்கவில்லை. செல்வந்தர்களின் நிதி மூலதனத்தை அரசுடமையாக்கவில்லை. அப்படியாயின் எப்படி?
இயற்கையை மறுதளித்து சுயநல மருத்துவம் கொரொனாவுக்கு முண்டு கொடுக்கின்றது
கொரோனா உலகெங்கும் பரவிய வடிவம், செல்வ அடுக்குகளின் மேல் இருந்தவர்கள் மூலம் நடந்தேறியது. செல்வ மேல் அடுக்கில் இருந்து கீழாக பயணிக்க தொடங்கிய கொரோனா லைரஸ்சுக்கு தெரியாது, மருத்துவம் பணம் உள்ளவனுக்கு மட்டும்தான் இருந்தது என்ற உண்மை. அனைவருக்கும் மருத்துவமில்லை என்ற எதார்த்தம், பணமுள்ளவனின் மருத்துவ அடித்தளத்தையே தகர்த்துவிட்டது. பணம் உள்ளவன், இல்லாதவன் என்று எந்தப் பாகுபாடுமின்றி, மருத்துவ உலகை புரட்டிப்போட்டு இருக்கின்றது.
அந்தளவுக்கு இயற்கை பணத்துக்கு கட்டுப்பட்டதோ, உட்பட்டதே அல்ல. ஆனால் உலகமயமாதல் அனைத்தையும் பணத்துக்கு உட்பட்டதாக்கியதன் விளைவு, இன்றைய பொது அவலமாக வருகின்றது. இயற்கையில் உருவான வைரஸ்சை சமூகமாக போராடித்தான் எதிர்கொள்ள முடியும், தனிமனிதனாக அல்ல. இயற்கை அந்தளவுக்கு வீரியம் மிக்கது.
இயற்கையில் உருவான ஒரு மனிதனின் இதயம் ஒரு நாளுக்கு 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தமோ ஒரு நாளில் 27,03,69,792 கிலோ மீற்றர் பயணம் செய்கிறது. 70,00,000 மூளைச் செல்கள் தொடர்ந்து கற்றுக் கொள்கின்றது. 438 கன அடி காற்றை உள்ளே இழுக்கிறது. 23,000 தடவை சுவாசிக்க முடிகின்றது. 750 தசைகளை அசைக்க முடிகின்றது. இந்த இயற்கையின் ஆற்றல் மேலான மனிதக் குரங்கின் பரிணாமமும், உழைப்பின் ஆற்றல் மனிதனாக பரிணாமமடைந்த போது, உயிரியல் ரீதியாக தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையின் ஆற்றல். இயற்கை தொடர்ந்து இயங்கிக் கொண்டும், தன்னை மாற்றிக் கொண்டும் இருப்பது போல், இந்த இயற்கையில் மனிதனும் தன்னை தகமைத்துக் கொண்டு இருக்கின்றான். இவை அனைத்தும் இயற்கையின் போக்கில் நிகழ்கின்றது.
மணியை ஆட்டு! மூத்திரத்தைக் குடி!! மதவெறியுடன் அலட்டு!!! இனவெறியுடன் கற்பி!!!!
அமெரிக்க ஜனாதிபதியின் இனவெறி, கொரோனாவை "சீனா வைரஸ்" என்று கற்பிக்கின்றது. யாழ் வெள்ளாளியப் பன்னாடைகள், மதவெறியுடன் கொரோனாவை காண்பிக்கின்றது. இந்திய பார்ப்பனிய இந்துப் பன்னாடைகள் மணியை ஆட்டி, சத்தத்தை எழுப்பி கொரோனாவை விரட்ட முடியுமென்கின்றது. மூத்திரத்தைக் குடி, கொரோனா தொற்றாது என்கின்றனர்.
மத நம்பிக்கை உனக்கு மட்டுமானது. அதை பிறருக்கு திணிக்க முடியாது - பிறரை திட்டவும் முடியாது. இப்படி அடிப்படை ஜனநாயகம் இருக்க, இதை மறுதளிக்கும் வண்ணம் நம்பிக்கைகளைக் கொண்டு பிறர் வாழ்வில் தலையிடுகின்றனர். இப்படி தலையிடும் மத, இன, சாதி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள், இயல்பாகவே சுயநலமானது, சமூக உணர்வுமற்றது.
இப்படி ஆளுக்காள் இஞ்சி, மஞ்சள், உள்ளி … சாராயம் என்று எத்தனையோ புரட்டுகள், நம்பிக்கைகள், அனுமானங்கள், முடிவுகள் எல்லாம் நடைமுறை வாழக்கையில் பொய்யாகி, புரட்டாகி, மோசடியாகிய போதும், பயம், அறியாமை, வெறும் நம்பிக்கை இன்னமும் சமூகத்தை கட்டிப் போடுகின்றது.
வாழ்வின் எதார்த்தம் என்ன? உலகெங்கும் உள்ள எல்லா மதவழிபாட்டு மையங்களும் மூடப்பட்டு வருகின்றன, தனிமனித நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட வழிபாடு மூலம், கொரோனா வைரஸ் பரவுவதையும், அதற்கு பலியாவதையும் தடுக்க முடியாது என்பதால் லைரஸ் மக்களை வீட்டுக்குள் சிறைவைக்கின்றது. கூட்டமாக கூடும் மத வழிபாட்டினால் வைரஸ் பரவி பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வழிபடக் கூடினால் பலரைக் கொன்றுவிடும் என்ற அறிவியல் உண்மைகள், மனிதனின் எதார்த்த வாழ்வியலைத் தீர்மானிக்கின்றது. கற்பனைகள், நம்பிக்கைகள் உயிரையே பறித்துவிடும் என்ற உண்மையை யாரும் மீறத் தயாராகவில்லை.
சண் ரிவி பவித்ரா : கொரோனா தொடர்பான அறிவியல் புரட்டுகள்
அறிவியலற்ற புரட்டுகள் இனம், மதம், சாதி, நிறத்தை .. முன்வைத்து கட்டமைக்கப்படும் நிலையில், தனிப்பட்ட நம்பிக்கையை அறிவாக உளறும் வக்கிரங்களும், உள்நோக்குடன் தங்கள் உணவை முன்னிறுத்தி கட்டமைக்கும் புரட்டுத்தனங்களும், கொரோனாவை மிஞ்சும் வைரஸ்சாக உலாவி வருகின்றது.
இதன் பின்னால் உணவுகள், போதைப் பொருட்கள், வெப்பநிலை, மதம் … என்று எண்ணற்ற வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைத்துள்ள போலித்தனத்தின் பின்னணியில் சந்தை, இனவாதம், மதவாதம், நிறவாதம்.. தொடங்கி தனிப்பட்ட மதவாதிகள் கொழுத்து கும்பியடிப்பது வரை நடந்தேறுகின்றது.
இதன் எதிர்மறையில் “அறிவியல்பூர்வமான” பொய்களை அரசுகளும், ஊடகங்களும் முன்வைக்கின்றது. அரசைப் பாதுகாக்க, சந்தையை தக்கவைக்க, மருத்துவக் குறைபாட்டை மூடிமறைக்க.. அறிவையே திரிப்பது நடந்தேறுகின்றது.
அறிவியல் என்பது என்ன? ஆராயும் பொருளிள் இயற்கையை, இயற்கையாக அணுகுவதும் - அதை விளக்குவதும் தான்;. வர்க்கம், சாதி, இனம், நாடு.. சார்ந்து அணுகுவது அறிவல்ல. ஒவ்வொரு நாடும் கோவிட் 19 வைரசை அணுகுகின்ற வேறுபட்ட அணுகுமுறைகளும், அளவுகோல்களும், அறிவியல் திரிபில் இருந்தே வேறுபடுகின்றது. கொரோனா வைரஸ் உலகெங்கும் ஒரேவிதமான நிபந்தனைகளில் தகவமைத்தே பரவுகின்றது என்பதே உண்மை, இயற்கை விதிக்கு உட்பட்டு வைரஸ் இயங்க, இதை வேறுபட்ட விதமாக அணுகும் முறையும் - அதை விளக்கும் வடிவமும் அறிவியல்ரீதியாக திரிபுபட்டது. இங்கு அறிவியலும் திரிக்கப்படுகின்றது என்பதே பொருள்.
உண்மையில் என்ன நடக்கின்றது எனில் சமூக பொருளாதார கட்டமைப்பை தீர்மானிக்கின்ற சந்தைப் பொருளாதார அடிப்படையில், அறிவியலைத் திரிப்பது நடக்கின்றது. மூடிமறைத்து அரைகுறையாக, அரசின் தேவைக்கு ஏற்ப விளக்குவதும் - நடைமுறைப்படுத்துவதும் நடக்கின்றது. இயற்கையில் மக்கள் கூட்டம் என்ற அடிப்படையில் இருந்து, விளக்குவது நடைமுறைப்படுத்துவதும் கிடையாது. இது தான் நாடுகளுக்கு இடையிலான வேறுபட்ட அணுகுமுறைகள்.
கொரோனா குறித்து ஆறு வருடங்கள் (2006-2012) சிறப்புப் பட்டம் பெற்ற பவித்ரா, சண் தொலைக்காட்சியில் முன்வைத்த விடயங்களில் - சமகால கோவிட் 19 குறித்து பல தவறான கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் இந்த கோவிட் 19 குறித்;து கூறுகின்ற தரவுகள் - ஏற்கனவே மேற்கு ஏகாதிபத்தியங்கள் முரண்பட்ட அணுகுமுறையுடன் முன்வைத்த - அறிவியல் புரட்டுக்களை அடிப்படையாகக் கொண்டது.
கொரோனா வைரஸ் வரலாறு குறித்து, பட்டப்படிப்பு அடிப்படையில் உள்ளடங்கிய விடயங்கள் அறிவுபூர்வமானவைதான். ஆனால் கோவிட் 19 வைரஸ் குறித்து முன்வைத்த கருத்துக்கள் தவறானது. இது போன்று பலரும் இதை முன்வைப்பதால், பவித்ராவின் கருத்தை பலரும் காவிச் செல்வதால், விரிவாக சிலவற்றை ஆராய்வோம்.
அரசுகளின் கோமாளித்தனமான கொள்கை முடிவுகளுக்கு, வைரஸ் கட்டுப்படுமா!?
இயற்கையின் உயிரியல் விதியையும் - உயிரியல் குறித்த மருத்துவ அறிவியலையும் கொச்சைப்படுத்தும் அரசியல் முட்டாள்தனங்களே - அரசுகளின் மருத்துவக் கொள்கையாக, முடிவுகளாக இருக்கின்றது. கொரோனா வைரஸ் தன் சொந்த உயிரியல் விதியில் இயங்குகின்றது. அது இயற்கையில் நெடு நேரம் இயல்பழியாது இருக்கும் எல்லா நிகழ்தகவுகளையும் தனக்குள் கொண்டுள்ளது. அது மனித உடலில் மட்டும் தன்னை உயிர்ப்படுத்தி வாழ்வதில்லை. சடப்பொருளில் தங்கி தன்னை தேக்கிக் கொண்டு, மனித உடலைச் சென்றடையும் ஆற்றல் கொண்டது. பொருள் உலகமே மனிதனின் ஆன்மாவாகிவிட்ட உலகில், பொருள் மூலமும் வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டு பரவுதன் மூலம் மனித உடலில் உயிர் வாழ முனைகின்றது. உண்மை இப்படி இருக்க, மனிதனை மட்டும் தனிமைப்படுத்தும் மேற்குலக அரசு மூலதனக் கொள்கைகள், மனித அறிவியலையே கேலி செய்கின்றது.
உதாரணமான நான் வாழும் பிரான்ஸ் நாட்டையே எடுப்போம். பிரான்சு அரசு எப்படிப்பட்ட முட்டாள்தனமாக, அறிவியலைக் கேலி செய்கின்றது என்று பார்ப்போம். வைரஸ் மனிதர்களுக்கு இடையிலான நேரடி தொடர்பு மூலமாகத் தான் பரவுகின்றது என்று வரையறுக்கும் அறிவியலுக்கு எதிரான கொள்கை முடிவுகளானது, அதிஸ்டமிருந்தால் மட்டும் தான் வெற்றி பெறும். அரசின் இந்த முடிவுக்கு அமைய மனிதர்களுக்கு இடையிலான நேரடி தொடர்புகளை தடுப்பதன் மூலம், வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் திட்டமே தனிமைப்படுத்தும் நடைமுறையாகும். இது சீன மாதிரியில் இருந்து வேறுபட்டது. பிரான்சில் தனிமைப்படுத்தலை நடைமுறைப்படுத்தி, அண்ணளவாக ஒரு வாரமாகின்றது.
இதனால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாங்கள் சொந்த வீடுகளில் பாதுகாப்பாக இருக்கின்றோமா எனின் இல்லை. ஆனால் அப்படி இருப்பதாக நம்ப வைக்கப்படுகின்றது. உண்மையில் வைரஸ் தொற்றை மட்டுப்படுத்தி இருக்கின்றனரே ஒழிய, வைரஸ் மனிதர்களுக்கு மனிதர் பரவுவதை தடுத்து நிறுத்த போதுமானதல்ல. இது எப்படி பிற வழிகளில் பரவுகின்றது என்பதைப் பார்ப்போம்.
வைரஸ் பரவவும் - மரணங்கள் நிகழவும் காரணங்கள் என்ன?
நாம் இப்படி ஒரு கேள்வி எழுப்பும் போது, இதை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்ற உண்மை எதார்த்தமாகிவிடுகின்றது. இந்த உண்மை உங்கள் மனதிலும் தோன்றி இருக்கும்; என்பதும் உண்மையல்லவா! அது என்ன?
இதை தடுக்கத் தவறியதற்கு யார் காரணம்? எதற்காக கொரோனா வைரஸை தடுக்கவேண்டியவர்கள் அக்கறைப்படவில்லை?
வைரஸ் பரவலும், மரணங்களும் நிகழ அரசுகள் காரணமாக இருக்கின்றது. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. எப்படி, எதற்காக, ஏன் அரசுகள் வைரஸ் பரவலை அலட்சியப்படுத்தின? மீள திடீரென ஏன் கட்டுப்படுத்துவதற்கு அக்கறைப்படுகின்றன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எம்முன் எழுகின்றது. நாம் கேள்விகளை எழுப்பி பதிலைத் தேடுவது தவிர்க்கப்பட முடியாதது. இது மட்டுமே நாம் சிந்திக்கவும் - செயற்படுவதற்கான அடித்தளம்.
மக்களின் மருத்துவத்தை முதன்மைப்படுத்தி, முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் அரசுகள் இருக்கின்றது. அரசுகள் மக்கள் சார்ந்து முடிவெடுக்க மறுக்கும் போது, மக்கள் போராடுகின்றனர். இது தான் உலகெங்கும் நடந்து வருகின்ற உண்மை. இந்த உண்மை இங்கும் பொருந்தும்.
அதாவது அரசுகள் மக்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுப்பதில்லை. அரசுகள் மக்களுக்கு எதிராக இயங்குகின்றது. மக்கள் சார்ந்து முடிவுகளை எடுக்க மக்கள் கோரும் போது, அதை ஒடுக்குகின்றது. இந்த உண்மை தான் இங்கும் இயங்கியது. மக்களைச் சார்ந்து முடிவுகளை எடுப்பதை அரசுகள் மறுதளித்தன. கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்தின.
வைரஸ் குறித்து சீன உண்மைகளை பொய்யாகக் காட்டியவர்கள் குற்றவாளிகள்
வைரஸ் குறித்து உலகறிந்த உண்மையை பொய்யாகவும், நம்பகத்தன்மையற்றதாக்கிய அரசுகள், ஊடகங்கள் தொடங்கி அதையே வாந்தியாக்கிய தனிநபர்கள் வரை, மனித இனத்துக்கு எதிரான குற்றத்தை இழைத்துள்ளனர். வைரஸ் மூலம் நிகழும் ஒவ்வொரு மரணங்களுக்கும், இவர்கள் தான் முழுப் பொறுப்பாளிகள்.
சீனா அல்லாத பிற நாடுகள் தொற்றை முன்கூட்டியே தடுத்து இருக்க முடியும். முன்கூட்டியே மருத்துவத்தை தயார் செய்திருந்தால், நிகழும் வைரஸ் மரணங்களைக் குறைத்திருக்க முடியும்;. சீனாவுக்கு வெளியில் எல்லாவற்றுக்கும் போதிய அவகாசம் இருந்தது. ஆனால் அதைச் செய்யவில்லை. இதன் பின்னால் மக்கள் குறித்து அக்கறையற்ற ஆட்சிகள், அதை நக்கிப் பிழைக்கும் ஊடகங்கள். தனிமனிதர்களிடையே வக்கரித்துக் கிடக்கும் மனிதவிரோதச் சிந்தனைமுறைகளே காரணமாக இருந்தன.
இந்தப் பின்னணியில் கொரோனா வைரஸ்சை உலகெங்கும் சுதந்திரமாக பரப்பியது மேற்கு ஊடகங்களும் - ஏகாதிபத்தியங்களும், இந்த சிந்தனைமுறையைக் காவிய தனிமனிதர்களும் தான். தங்கள் போலி அறிவியல் பொய்களையும், தர்க்கங்களையும் கொண்டு, மக்கள் இன்று மரணிக்க காரணமாகி இருக்கின்றனர். இந்த மேற்கு ஏகாதிபத்திய பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்தி உருவான உலகமயமாக்கலை அடியொற்றி முடிவுகளை எடுக்கும் பிறநாடுகள், மேற்கின் மருத்துவக் கொள்கை முடிவைப் பின்பற்றியதன் மூலம், தங்கள் நாட்டு மக்களின் பிணங்களை எண்ணத் தொடங்கி இருக்கின்றனர்.
மாட்டு மூத்திரம் கொரோனாவைக் கட்டுப்படுத்துமா!?
கொரோனாவை வெங்காயம் கட்டுப்படுத்தும் என்றால், உள்ளி கட்டுப்படுத்தும் என்றால், இஞ்சி கட்டுப்படுத்தும் என்றால், பெருங்காயம் கட்டுப்படுத்தும் என்றால், மஞ்சள் வேப்பிலை தொடங்கி தமிழ் வைத்திய முறைகள் கட்டுப்படுத்தும் என்றால், இந்து வாழ்க்கை முறைகள் கட்டுப்படுத்தும் என்றால், காவிகளின் மாட்டு மூத்திரமும் கட்டுப்படுத்தும். இந்து காவி பாசிட்டுகள் கூறும் மாட்டுச் சாணமும் இதற்கு விதிவிலக்கல்ல. நாங்கள் எப்படிப்பட்ட அறிவியல் உலகத்தில் இருந்து சிந்திக்கின்றோம் என்பதற்கு, இவைகளே சான்று.
கொரோனாவைத் தடுக்க மாட்டு மூத்திரத்தைக் குடி, மாட்டுச் சணத்தை பூசு என்று இந்திய ஆளும் காவிகளின் காட்டுக் கூச்சலுக்கு இடையில், வைரஸ் நுழைந்திருக்கின்றது. அறிவியல் ரீதியாக பகுத்தாய முடியாத காட்டுமிராண்டிச் சமூகத்தில் மட்டும் கூறக் கூடிய வழிமுறைகளையும், தீர்வுகளையும் முன்வைக்கின்றவர்களே – மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவுகளை இன்று எடுக்கின்றனர். அறிவியல் ரீதியான மருத்துவத்தை மக்களுக்கு வழங்குவதையோ, முன்னெச்சரிக்கையாக வைரஸ்சை தடுப்பது குறித்தும், பகுத்தறிவுபூர்வமாக அறிவை மக்கள் பெற்றுவிடுவதை தடுக்கும் கூட்டத்தின் மத்தியில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இருக்கின்றது.
அதிகாரத்தில் இருக்கும் இந்தியக் காவிகள் இந்து மதத்தை முன்னிறுத்திய கூச்சலுக்கு மத்தியில், முஸ்லிம் மதவாதிகள் வைரஸ்சுக்கு எதிராக மார்க்கம் பற்றி உளறுகின்றனர். கிறிஸ்துவ மதவாதிகள் சாத்தானைக் கொல்ல இயேசு வந்துவிட்டார் என்று ஆளுக்காள் சன்னதம் எடுத்து ஆடுகின்றனர்.
இப்படி மதக் காட்டுமிராண்டிகளாகவுள்ள மதவாதிகள், மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு வைரஸ்சுக்கும் இடையில் புகுந்து - கொரோனாவை கட்டுக்கடங்காத வீரியமிக்கதாக்க முனைகின்றனர்.