Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் முஷாரப் எதிர்ப்பு: முனை மழுங்கிய போராட்டம்

முஷாரப் எதிர்ப்பு: முனை மழுங்கிய போராட்டம்

  • PDF
PJ_11_2007.jpg

பாகிஸ்தானில் அக்டோபர் 6 அன்று நடைபெற்ற அதிபர் ""தேர்தலில்'', முஷாரப் ""வெற்றி'' பெற்றுவிட்டாலும், அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூடாது என அந்நாட்டு உச்சநீதி மன்றம் தடை விதித்திருக்கிறது.


நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை 1999ஆம் ஆண்டு கவிழ்த்துவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத் தளபதி பெர்வேஸ் முஷாரப்,

 2002ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, அதிபராகவும் முடிசூட்டிக் கொண்டார். இந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியை முட்டுக் கொடுப்பதற்கு ஏற்ப 2002ஆம் ஆண்டிலேயே, நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்பட்டது. நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முசுலீம் லீக் கட்சியை உடைத்து, முஷாரப்பால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் முசுலீம் லீக் (க்யூ) பிரிவுதான், பாக். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிப்பதோடு, அரசாங்கத்தையும் நடத்தி வருகிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதோடு, தானே அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பிய முஷாரப், அதற்கு ஏற்ப சில சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.


தான் இராணுவத் தளபதி பதவியைக் கைவிட நேர்ந்தால்கூட, அதிபராவது தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக, ""அரசு ஊழியர் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள்வரை தேர்தல்களில் போட்டியிடக் கூடாது'' என்ற தேர்தல் விதி மாற்றியமைக்கப்பட்டது.


முஷாரப் வகித்துவரும் அதிபர் பதவிக் காலமும், தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலமும் நவம்பர் 15 ஆம் தேதியோடு முடிவடைகின்றன. புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல், ஏற்கெனவே செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பே நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆயுட்காலம் முடியும் நிலையில் உள்ள நாடாளுமன்றம் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதும் முறையானது கிடையாது.


புதிய நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரிக்கும் பாகிஸ்தான் முசுலீம் லீக் (க்யூ) பிரிவுக்கு பெரும்பான்மை கிட்டாவிட்டால், தான் மீண்டும் அதிபராவதில் சிக்கல் ஏற்படும் எனக் கருதிய முஷாரப், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிந்த இரண்டு மாதத்திற்குள் தேர்தலை நடத்தும் வண்ணம் மற்றுமொரு சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்தார். இதன் மூலம், ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் உள்ள தற்போதைய நாடாளுமன்றமும், நான்கு மாகாண சட்டசபைகளும் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டையை உருவாக்கினார்.


இந்த ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு முஷாரப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யக்கோரி, எதிர்த்தரப்பினர் ஒரு மனுவை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இஃப்திகர் சௌத்ரியை முஷாரப் பதவி நீக்கம் செய்தது செல்லாது எனத் தீர்ப்பளித்து, இஃப்திகர் சௌத்ரியை மீண்டும் தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நேரமது. எனவே, உச்சநீதி மன்றத்தின் சுத்தியல் முஷாரபின் தலையில் இடியாக இறங்கும் என எதிர்த்தரப்பினர் கனவு கண்டனர். ஆனால், உச்சநீதி மன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பு எதிர்த்தரப்பினர் மனுவைச் செல்லுபடியாகாது என அறிவித்து விட்டது.


அதிபர் தேர்தலில் முஷாரபை எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் பழைய கோரிக்கையோடு மீண்டும் உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளனர். இந்தப் புதிய வழக்கிலோ, உச்சநீதி மன்றம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாக, அதிபர் தேர்தலை நடத்துவதற்கு அனுமதித்துவிட்டு, முடிவுகளை(!) வெளியிடத் தடை போட்டுள்ளது.


முஷாரப் மீண்டும் அதிபராவதை உச்சநீதி மன்றம் விரும்புகிறதோ இல்லையோ, அந்நாட்டின் மேல்தட்டு வர்க்கம் விரும்புகிறது. முஷாரப் அதிபர் தேர்தல் ""வெற்றி'' பெற்றது அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்டவுடனேயே, அந்நாட்டின் பங்குச் சந்தை வியாபாரம் எகிறிப் பாய்ந்தது; பங்குச் சந்தை தரகர்கள் முஷாரபின் வெற்றியை வெடி வெடித்துக் கொண்டாடினர். முஷாரபின் வெற்றியைப் பங்குச் சந்தை கொண்டாடுகிறது என்றால், பன்னாட்டு நிறுவனங்களும் அவ்வெற்றியை ஆமோதிக்கின்றன என்றுதான் பொருள்; அமெரிக்கா, முஷாரபைக் கைவிடத் தயாராக இல்லை என்பதுதான் இதன் பொருள்.


பாகிஸ்தானில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் வெளிப்படையான இராணுவ சர்வாதிகார ஆட்சியை, படித்த மத்தியதர வர்க்கம் ஆதரிக்கவில்லை என்பதற்கு முஷாரபை எதிர்த்து வழக்குரைஞர்களும், பத்திரிகையாளர்களும் நடத்திவரும் போராட்டமே சாட்சி. தீவிரவாத எதிர்ப்புப் போரில் அமெரிக்காவின் நம்பகமான அடியாளாக முஷாரப் செயல்படுவதால், அவர் உள்நாட்டு முல்லாக்களின் ஆதரவையும் இழந்துவிட்டார். இப்படிப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே, அமெரிக்காவும், பிரிட்டனும் முன்வந்து முஷாரப்புக்கும், முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவியுமான பெனாசிர் புட்டோவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கின.


இதன் அடிப்படையில், பெனாசிர் புட்டோ, அவரது கணவர், அவரது கட்சிக்காரர்கள் ஆகியோர் மீது 1986க்கும் 1999க்கும் இடைபட்ட காலத்தில் போடப்பட்ட ஊழல்கிரிமினல் குற்ற வழக்குகளைக் கைவிடுவதற்கு ஏற்ப அரசாணை ஒன்று இயற்றப்பட்டுள்ளதோடு, பெனாசிர் நாடு திரும்பவும் முஷாரப் அனுமதித்திருக்கிறார். இதற்குக் கைமாறாக, அக்.6 அன்று நடந்த அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி பெறுவதற்கு பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மறைமுகமாக ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறது.


தற்பொழுது முஷாரபை ஆதரிக்கும் பாகிஸ்தான் முசுலீம் லீக் (க்யூ) பிரிவு, மத அடிப்படைவாத சக்திகள் நிறைந்தது. முஷாரப் தாலிபானை அடக்கி வைப்பதற்கு இந்தக் கட்சி முட்டுக்கட்டை போடுவதாகக் கருதும் அமெரிக்கா, பெனாசிர் புட்டோ முஷாரப் கூட்டணியை உருவாக்குவதன் மூலம், தாலிபானை அடக்குவதில் வெற்ற பெற முடியும் எனக் கணக்குப் போடுகிறது.


பாகிஸ்தான் மக்கள் மத்தியில் முஷாரபிற்கு செல்வாக்குக் கிடையாது என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அந்த அளவிற்கு, நவாஸ் ஷெரிப் தலைமையில் உள்ள அனைத்துக் கட்சி ஜனநாயகக் கூட்டணிக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்பதும் உண்மையானது. நவாஸ் ஷெரிப் நாடு திரும்ப முயன்றதை அமெரிக்காவும், சௌதி அரேபியாவும் விரும்பவில்லை என்பதோடு, அவரது வருகையை பாக். மக்களும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கவில்லை என்பதை முதலாளித்துவப் பத்திரிக்கைகளே ஒத்துக் கொள்கின்றன. அதனால்தான், நவாஸ் ஷெரிப் நாடு திரும்புவதற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றத்தையும் மீறி, மக்கள் செல்வாக்கு இல்லாத நவாஸ் ஷெரிபை மீண்டும் நாடு கடத்துவதில் முஷாரப் எளிதாக வெற்றி பெற்றுவிட்டார். படித்த மத்திய தர வர்க்கத்தின் அதிருப்தியை மழுங்கடிப்பதற்காக, தான் மீண்டும் அதிபராகப் பதவியேற்றால், இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று விடுவதாக உச்சநீதி மன்றத்திற்கும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார், முஷாரப்.


பாகிஸ்தானில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ நடந்துவரும் இராணுவ சர்வாதிகார ஆட்சி என்பது அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்தோடு தொடர்புடையது. பாகிஸ்தான் அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றப்பட்டு இருப்பதை எதிர்த்துப் போராடுவதுதான், அந்நாட்டில் ஜனநாயகம் மலர்வதற்கான முதல் நிபந்தனை, ஆனால், சட்டபூர்வ எதிர்த்தரப்பும், மத்தியதர வர்க்கமும் ஜனநாயகத்திற்காக நடைபெற வேண்டிய புரட்சிகரப் போராட்டத்தை, வெறும் முஷாரப் எதிர்ப்பாகச் சுருக்கிக் கேலிக்கூத்தாக்கி விட்டனர். முஷாரபைத் தூக்கியெறியும் இந்த அரசியல் போராட்டத்தைக் கூட உச்சநீதி மன்ற நீதிபதிகள் செய்து கொடுத்து விடுவார்கள் என அவர்கள் காத்துக் கிடப்பதுதான் இன்னும் அவலமானது!


· குப்பன்