Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் டாலர் மதிப்புச் சரிவு: இந்தியா இடிதாங்கியா?

டாலர் மதிப்புச் சரிவு: இந்தியா இடிதாங்கியா?

  • PDF
PJ_2007 _12.jpg

டாலர் மதிப்புச் சரிவினால் இந்தியாவில் 80 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சியை எட்டப் போகிறது என மன்மோகன் சிங் கும்பல் ஒருபுறம் ஆரவாரம் செய்து கொண்டிருந்தாலும், இன்னொருபுறம், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி என்ற கத்தி அவர்களை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

 

சர்வதேச நிதிச் சந்தையில் அமெரிக்க டாலர் சந்தித்து வரும் சரிவுதான் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தி வருகிறதே தவிர, இதில் இந்தியப் பொருளாதாரத்தின் சாதனை எதுவும் இல்லை. தாராளமயம் தனியார்மயம் தீவிரமாக அமலுக்கு வந்த 1991ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 26,90 ஆக இருந்தது. இது, கடந்த பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாகச் சரிந்து ரூ.45/ஐத் தொட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச நிதிச் சந்தையில் விழத் தொடங்கியதையடுத்து, தற்பொழுது, ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 39/ ஆக அதிகரித்திருக்கிறது.

 

நமது நாட்டுச் செலாவணியான பணம் வலுவாக இருப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதுதானே எனப் பாமரன் கருதலாம். ஆனால், ஏற்றுமதிக்கு முன்னுரிமை தரப்படும் தற்போதைய இந்தியப் பொருளாதாரத்தில், பணத்தின் மதிப்பு உயர்வு மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அதனால்தான், ஏற்றுமதி நிறுவன அதிபர்கள் இந்த ""உயர்வை'' வரவேற்க மறுக்கிறார்கள்.

 

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியும்கூடத் திடீரென, எதிர்பாராதவிதமாக நடந்துவிட்ட விபத்து அல்ல; மாறாக, அமெரிக்கா திணித்துவரும் உலகமயம் மற்றும் அதனின் மேலாதிக்க நடவடிக்கைகளின் நேரடி விளைவுகள்தான் இந்த வீழ்ச்சி.

···

தனியார்மயம் தாராளமயத்தை ஏற்றுக் கொண்டுள்ள அனைத்து ஏழைகளிடமும், உலக வங்கி கூறும் முதல் "அறிவுரையே' பட்ஜெட் பற்றாக்குறையையும், வர்த்தகப் பற்றாக்குறையையும் (ஒரு நாட்டின் ஏற்றுமதியைவிட, இறக்குமதி அதிகமாகும்பொழுது ஏற்படும் பற்றாக்குறை) குறைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரமோ, உலக வங்கியின் இந்த அறிவுரைக்கு நேர் எதிராகத்தான் இயங்கி வருகிறது. உலகத்திலேயே, பட்ஜெட் பற்றாக்குறையும், வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகமுள்ள நாடு அமெரிக்காதான்.

 

ஒரு நாடு, தனது வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும் என்றால், ஒன்று அமெரிக்க டாலரை ஈட்ட ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்; இல்லையென்றால், இறக்குமதியைக் குறைக்க வேண்டும். இவை இரண்டும் சாத்தியமில்லாத நிலையில், அந்த நாடு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

 

தனது நுகர்பொருள் தேவைக்கு இறக்குமதியையே பெரிதும் சார்ந்திருக்கும் அமெரிக்காவால், இறக்குமதியை ஈடுகட்டும் வண்ணம் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதை முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே ஒத்துக் கொள்கிறார்கள். எனினும், உலக நாடுகளுக்கு இடையேயான ஏற்றுமதிஇறக்குமதி வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரிலேயே நடப்பதால், மிதமிஞ்சிய அளவில் அமெரிக்க டாலரை அச்சடித்துத் தள்ளுவதன் மூலம், அமெரிக்கா தனது வர்த்தகப் பற்றாக்குறையைச் செயற்கையாக ஈடுகட்டி வருகிறது. சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே நடந்து வரவேண்டும் என்பதற்காகவே, அமெரிக்கா, 75,000 கோடி அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது.

 

இரண்டாவதாக, கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வது மேற்காசிய நாடுகளாக இருந்தாலும், அதன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவது அமெரிக்காதான். ஒரு பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ய ஆகும் செலவு 10 அமெரிக்க டாலருக்குக் குறைவாகவே இருந்தாலும், சர்வதேசச் சந்தையில் அதனின் விற்பனை விலை தற்பொழுது 100 அமெரிக்க டாலராக இருக்கிறது. கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்வதால்தான், அதனின் விலை உயர்ந்து கொண்டே செல்வதாகக் கூறப்படுவது முழுப் பொய்.

 

2004இல் உலக அளவில் கச்சா எண்ணெயின் தேவை வெறும் 4 சதவீதம் அதிகரித்த பொழுது, அதனின் விலை 34 சதவீதம் அதிகரித்தது. 2005இல், கச்சா எண்ணெயின் தேவை 1.6 சதவீதம்தான் அதிகரித்தது. ஆனால், அதன் விலையோ மேலும் 35 சதவீதம் அதிகரித்தது. இந்தச் செயற்கையான விலையேற்றத்தை ஈடுகட்டுவதற்காகவே, அமெரிக்கா 46,000 கோடி டாலர்களை அச்சிட்டு, உலக நாடுகளிடையே புழக்கத்தில் விட்டுள்ளது. உற்பத்தியின் மதிப்பைவிட, பல மடங்கு மித மிஞ்சிய அளவில் அமெரிக்கக் காகிதப் பணம் உலக நாடுகளிடையே புழக்கத்தில் இருந்து வருகிறது.

 

மூன்றாவதாக, 1990களின் இறுதியில் தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு ""வளர்ந்து'' வரும் நாடுகள், தங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே, தங்களின் பணத்தின் மதிப்பை குறைத்துக் கொண்டே சென்றன. இதன் எதிர்விளைவாக அமெரிக்க டாலரின் மதிப்பு செயற்கையாக ஊதிக் கொண்டே போனது. ஏழை நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மலிவாக இருக்கும் என்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியமும் தனது டாலர் ஊதிப் பெருக்கப்படுவதை அனுமதித்தது.

 

உலகின் பல்வேறு நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பு அமெரிக்க டாலராகவே இருப்பதாலும்; பல்வேறு நாடுகள் தங்களின் சேமிப்பை அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களிலேயே முதலீடு செய்திருப்பதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ந்துவிடாமல் செயற்கையாகத் தடுக்கப்பட்டது. இந்தச் சூதாட்ட நடவடிக்கைகள் அமெரிக்க டாலர் மிதமிஞ்சிய அளவில் புழக்கத்தில் இருப்பதும்; அதனின் மதிப்பு செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்டிருப்பதும் தமது வரம்பை எட்டிவிட்டதையடுத்துதான் அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் வீழ்வது அனுமதிக்கப்பட்டது.

···

இம்மதிப்புச் சரிவினால், அமெரிக்காவில் ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. எனினும், ஏகாதிபத்திய நாடுகளுக்கு, தங்களின் பணத்தின் மதிப்பை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் அரசியல் பலம் இருப்பதாலும்; அந்நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு / தேசங்கடந்த தொழில் நிறுவனங்கள் முன் பேர வர்த்தக ஒப்பந்தங்களைப் (இருநாடுகளின் பணத்தின் மதிப்பை முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபடுவது) போட்டுக் கொள்வதாலும்; ஐரோப்பிய யூனியன் நாடுகள் அமெரிக்க டாலருக்குப் பதிலாக, ""யூரோ''வை அந்நியச் செலாவணியாகப் பயன்படுத்துவதாலும், இந்த வீழ்ச்சி ஏகாதிபத்திய நாடுகளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தப் போவதில்லை.

 

அதேசமயம், ஏழை நாடான இந்தியாவிலோ, ஜவுளித் துறை, ஆயத்த ஆடைத் தொழில், கடல்வாழ் உயிரின உணவுப் பொருட்கள், தோல் பொருட்கள், தகவல்தொழில் நுட்பத் துறை ஆகிய ஏற்றுமதியை நம்பியிருக்கும் தொழில்கள் பலத்த சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன.

 

சர்வதேச அளவில் நடைபெறும் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 3 சதவீதம்தான்; சீனாவின் பங்கோ 20 சதவீதம். டாலரின் மதிப்புச் சரிவுக்கு ஏற்றவாறு, சீனா தனது நாட்டு செலாவணியின் மதிப்பு உயர்ந்து போய்விடாமல் தடுத்ததன் மூலம், அதனின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படாமல் காப்பாற்றி விட்டது. ஆனால், இந்திய ஆளும் கும்பலுக்கு பணத்தின் மதிப்பு உயர்வைத் தடுத்து நிறுத்தும் அரசியல் துணிவு இல்லாததால், இந்தியா, ஜவுளி ஏற்றுமதியில் இந்தோனேஷியா, வங்காள தேசம் ஆகிய ஏழை நாடுகளைவிடப் பின்தங்கிப் போய்விடக் கூடும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஜவுளித் தொழிலை நம்பியிருக்கும் 3.5 கோடி தொழிலாளர்களின் வாழ்க்கையைவிட, சந்தையின் சூதாட்டத்திற்குப் பக்க மேளம் வசிப்பதைத்தான் மன்மோகன் சிங் கும்பல் விரும்புகிறது.

 

டாலரின் மதிப்புச் சரிவினால், திருப்பூரில் ஏற்கெனவே 10,000 தொழிலாளர்கள் வேலையிழந்து விட்டதாகவும், இவ்வேலையிழப்பு 50,000ஐத் தொடும் என அந்நகரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் கூறியுள்ளன. கரூர் ஜவுளித் தொழிலில் மட்டும் 600 கோடி ரூபாய் முதல் 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்; ஏற்றுமதியை நம்பியுள்ள சிறுவீத உற்பத்தியாளர்கள் போண்டியாக நேரிடும்; தொழிலாளர்களுக்குக் கூலியிழப்பு ஏற்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தகவல்தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பள உயர்வை அறிவிக்காமல், தள்ளிப் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இப்பாதிப்புகள் ஒருபுறமிருக்க, ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிட்டதால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் நுகர் பொருட்களை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை மலிவாகக் கிடைக்கும். இதனால், இறக்குமதி அதிகமாகி, உள்நாட்டுத் தொழில்கள் அழிவைச் சந்திக்க நேரிடும் என ""பிஸினஸ் வேர்ல்டு'' போன்ற முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், டாலரின் மதிப்புச் சரிவு இந்தியாவில் மட்டும் 80 இலட்சம் வேலை வாய்ப்புகளைப் பறித்துவிடக் கூடும் எனக் கூறப்படுகிறது.


···


அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே போவதை இந்தியத் தரகு முதலாளிகள் விரும்பவில்லை. எனவே, பணத்தின் மதிப்பு உயர்வதைக் கட்டுப்படுத்தும் முகமாக, நாட்டிற்குள் அமெரிக்க டாலர் நுழைவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.


வெளிநாடுகளில் வசிப்போர், தங்களது அடையாளம் / முகவரி ஆகியவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல், இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, பங்கேற்புப் பத்திரம் என்றொரு குறுக்கு வழி இருக்கிறது. கருப்புப் பணக் கும்பலுக்கு, தங்களின் பணத்தை முதலீடு செய்வதற்கு மிகவும் சாதகமான வழி இது. இந்தப் பங்கேற்பு பத்திர விதிமுறைகளைக் கடுமையாக்கப் போவதாக பங்கு பரிமாற்ற வாரியம் (செபி) அறிவித்தவுடனேயே, பங்குச் சந்தை சரிந்து, இந்திய முதலீட்டாளர்களுக்கு 4 இலட்சம் கோடி ரூபாய் நட்டமேற்பட்டது.

 

அந்நிய நிதி நிறுவனங்கள், இந்தியப் பங்கு சந்தையில் செய்துள்ள முதலீட்டில் 52% முதலீடு, பங்கேற்பு பத்திரம் வழியாகத்தான் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்பு பத்திர விதிமுறைகளைக் கடுமையாக்கினால், அந்நிய நிதி நிறுவனங்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனை விரும்பாத மன்மோகன் சிங் கும்பல், செபியின் அறிவிப்பைக் கைவிட்டது.

 

76 சதவீத இந்திய ஏற்றுமதி வர்த்தகம், அமெரிக்க டாலர் மூலம்தான் நடைபெறுகிறது. இதனை ""யூரோ''வுக்கு மாற்றிக் கொண்டால், பணத்தின் மதிப்புச் சரிவைத் தடுக்கலாம் என்று இன்னொரு ஆலோசனையைப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்திய அரசு இந்த ஆலோசனையைப் பரிசீலித்தாலே, அதன் விளைவாக என்னென்ன பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது மன்மோகன் சிங்குக்குத் தெரியும்.

 

சதாம் உசேன் தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி வியாபாரத்தை அமெரிக்க டாலரில் இருந்து யூரோவுக்கு மாற்றினார். ஆனாலும் அவரைக் காப்பாற்ற ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் கூட முன்வரவில்லை.

 

ஈரான் கச்சா எண்ணெய் வியாபாரத்தில் அமெரிக்காவுக்குப் போட்டியாகச் சர்வதேச சந்தை ஒன்றை ஏற்படுத்தப் போவதாகவும்; தனது கச்சா எண்ணெய் வியாபாரத்தை அமெரிக்க டாலரில் இருந்து யூரோவுக்கு மாற்றப் போவதாகவும் ஒரு செய்தி வெளியானது. உடனே, அமெரிக்கா ஈரான் சட்டவிரோதமாக அணுகுண்டு தயாரிப்பதாகக் குற்றஞ்சுமத்தி, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை ஏவிவிட்டது; மேலும், அந்நாட்டின் மீது ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்கவும் தருணம் பார்த்துக் கொண்டுள்ளது.

 

அமெரிக்க டாலருடன் மோதவேண்டும் என்றால், அது இறுதியாக அமெரிக்க இராணுவத்துடன் மோத வேண்டிய அபாயத்திற்குள் தள்ளிவிடும் என்பது மன்மோகன் சிங்குக்குத் தெரியும். ஏனென்றால், அமெரிக்க டாலர் என்பது வெறும் காகிதப் பணம் அல்ல. அது, மேலாதிக்கத்திற்கான ஒரு ஆயுதம். பங்குச் சந்தைச் சூதாட்ட நிறுவனங்களின் மிரட்டலுக்கே பணிந்து விடும் இந்திய அரசிடம், அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் துணிவை எதிர்பார்க்க முடியுமா?

 

பணத்தின் மதிப்பைத் தீர்மானிப்பதில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர், மன்மோகன் சிங். பணத்தின் மதிப்பை வர்த்தகச் சூதாடிகள் தீர்மானிக்கும்படி, இந்திய நிதிச் சந்தையைத் தாராளமயமாக்க முயன்று வருகிறார் அவர், எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஏற்றுமதி நிறுவன முதலாளிகளின் இலாபத்தைப் பாதுகாக்க, வரிச்சலுகை என்ற எளிய வழிக்குள் புகுந்து கொண்டுள்ளார், மன்மோகன் சிங். இதுவரை ஏற்றுமதியாளர்களுக்காக, 1,400/ கோடி ரூபாய் வரிச் சலுகையை அளித்திருக்கிறார், மன்மோகன் சிங். அவர்களோ, இன்னும் வேண்டும் என ஆளாய்ப் பறக்கிறார்கள்.

 

இந்த வரிச் சலுகை, இறுதியில் பட்ஜெட்டில் பற்றாக்குறை என்ற பெயரில் இந்திய மக்களின் மீது சுமத்தப்டும். ஏற்றுமதி முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகையை ஈடுகட்ட, மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் வெட்டப்படலாம்; மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்படலாம். அமெரிக்க டாலர், அந்நியச் செலாவணி சேமிப்பு, ஏற்றுமதி வர்த்தகம் என்பதெல்லாம், இந்திய உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் என்பது தான் இந்த நெருக்கடி நமக்கு உணர்த்தும் பாடம்!


· திப்பு