Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் கூலிப்படைகளின் ஆதிக்கம்

அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் கூலிப்படைகளின் ஆதிக்கம்

  • PDF

PJ_2007 _12.jpg அ திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச் செல்வமும், செங்கல்பட்டு நகர அ.தி.மு.க. செயலாளர் குமார் மற்றும் 2 பேரும் கடந்த மாதம் கூலிப்படையினரால் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து,""தமிழ்நாட்டு அரசியலில் கூலிப் படைகளும், ஆயுத வன்முறைக் கலாச்சாரமும் சமீப காலங்களில் பெருகிப் போய்விட்டன; அவை ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டும்'' என்று ஓட்டுக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் அச்சமும்,

 எச்சரிக்கையும், கோரிக்கையும் முன்வைத்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்ல. இவர்களே கொலைக் குற்றங்கள் புரிந்துள்ளனர். கிரிமினல் குற்றக் கும்பல்களுடன் நெருங்கிய உறவு வைத்துக் கொண்டிருந்தவர்கள். மேலும் சொல்வதானால், அவற்றின் நிழல் தலைவர்களாகவும் புரவலர்களாகவும் இருந்தவர்கள். அவற்றுக்கிடையிலான பழிவாங்கும் சங்கிலித் தொடர் கொலைகளின் ஒரு பகுதியாகவே இக்கொலைகள் நடந்துள்ளன. உள்ளூராட்சி மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே நடந்துவந்த அரசியல் காரணங்களுக்கான கொலைவெறியாட்டங்கள் நகரமாநகர, மாவட்ட ஆட்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் மட்டத்துக்கு உயர்ந்துவிட்டது.

 

கள்ளச் சாராயம், போதை மருந்து விற்பனை, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு கொள்ளை, இந்த நோக்கங்களுக்காகக் கொலைகள் புரிவது போன்ற கிரிமினல் குற்றங்கள் பல்கிப் பெருகி வருகின்றன. ஆனால், அவையெல்லாம் கட்டுப்படுத்தவோ, ஒழிக்கவோ முடியாதவை என்றும் அவற்றோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்; அவற்றுக்குப் பலியாகாமல் பொது மக்கள்தாம் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசும் போலீசும் பிரச்சாரம் செய்கின்றன. இவை சாதாரணக் கிரிமினல் குற்றங்கள் என்றாகிவிட்ட நிலையில் கூலிக்குக் கொலைச் செய்வது, ஆட்களைக் கடத்திப் பணயக் கைதிகளாக வைத்துப் பணம் பறிப்பது, போதை மருந்து, நவீன ஆயுதங்கள் கடத்துவது, ""பாதுகாப்புக் கட்டணங்கள்'' வசூலிப்பது, அரசு மற்றும் தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவது போன்ற கிரிமினல் வேலைகளையே தொழிலாகக் கொண்ட கிரிமினல் குற்றக் கும்பல்களும், அவற்றுக்கிடையிலான பழிவாங்கும் சங்கிலித் தொடர் கொலைகள், போலீசின் கண்முன்னே உயர்நீதி மன்றம் உட்பட எல்லா வழக்குமன்ற வளாகங்களுக்குள்ளேயே படுகொலைகள் வன்முறை வெறியாட்டங்கள் இரவுபகல், கிராமங்கள்நகரங்கள் என்ற பாகுபாடின்றி அன்றாட நிகழ்வாகிவிட்டன.

 

இப்போது கிரிமினல் குற்றக் கும்பல்கள் கூலிப் படைகளுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வரை போலீசுக்கும் உள்ள கூட்டும் உறவும் குறித்த செய்திகள் ஒன்றும் இரகசியமானவை அல்ல. ஆனால், பெரும் வங்கிகளின் கடன் வசூல், வீடுவீட்டுமனைத் தொழில், சங்கிலித் தொடர் விற்பனைக் கடைகள், சினிமா தயாரிப்பு திரையரங்குகள், சுயநிதிக் கல்லூரிகள், போக்குவரத்து நிறுவனங்கள், பன்னாட்டு ஏகபோகத் தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் கூலிப்படைகளை வைத்துக் கொண்டிருக்கின்றன. மேற்படி கும்பல்களைத் தமது சம்பளப் பட்டியலில் வைத்துக் கொண்டுள்ளதோடு தொழில் ஒப்பந்தக்காரர்களாகவும் கொண்டுள்ளன.

 

கூலிப்படைகளை நம்பி அரசியல் நடத்தும் ஓட்டுக் கட்சிகளும் பிழைப்புவாதத்தில் மூழ்கிப் போயுள்ள அரசியலற்ற நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே மேற்கண்ட யதார்த்த நிலையைக் கண்டு கொள்ளாமல் இருந்தன; ஆனால், கூலிப்படைகளின் கோரக் கொலைகளை நேருக்கு நேர் பார்க்கும் போதெல்லாம் அரசியலற்ற நடுத்தர வர்க்கத்தினர் அலறுகின்றனர். ""அமைதிப் பூங்கா'' சவடால்கள் மூலம் அரசியலற்ற இந்த நடுத்தர வர்க்கத்தினரின் ஓட்டுக்காக வேண்டி ஓட்டுக் கட்சித் தலைவர்கள் இப்போது கூலிப்படை வன்முறைக் கலாச்சாரம் குறித்து கூப்பாடு போடுகின்றனர். ஆனால், போலீசுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுப்பதைத் தவிர வேறு தீர்வு எதுவும் இவர்களுக்கு கிடையாது. கிரிமினல் கும்பல்களை ஒடுக்குவதற்கென்று மராட்டிய மாநில அரசைப் பின்பற்றித் தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்று போலீசு அதிகாரிகள் கோரி தமிழக முதல்வரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், நாட்டிலேயே மும்பைதான் கிரிமினல் குற்றக் கும்பல்களின் தலைநகரமாக இன்னமும் விளங்குகிறது. குற்றக் கும்பல்களின் கூட்டாளிகளான போலீசு, கூடுதலாகக் கிடைக்கும் அதிகாரத்தையும் அப்பாவி மக்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தும்.