Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் குஜராத் மோடியின் வெற்றி: இந்துவெறி பயங்கரவாதப் பிடி இறுகுகிறது

குஜராத் மோடியின் வெற்றி: இந்துவெறி பயங்கரவாதப் பிடி இறுகுகிறது

  • PDF

PJ_2008_1.jpg

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. மற்றும் பிற இந்துத்துவ பாசிச சக்திகள், இந்து மதவெறியனும் காட்டுமிராண்டியுமான நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டன. குஜராத்தைக் கவ்விய பாசிச இருள் தன் பிடியை மேலும் இறுக்கியிருக்கிறது. 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதன் பிறகு நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய முசுலீம்கள் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை பாசிச வக்கிரங்களோடும்

 கோரமாகவும் மோடி தலைமையில் கட்டவிழ்த்து விட்ட உண்மை இரத்தத்தை உறைய வைக்குமாறு அம்பலப்பட்ட பிறகும்; மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும், மனித உரிமை ஆர்வலர்களும், செய்தி ஊடகங்களும் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக நீதியை நிலைநாட்டவும், மோடி உட்பட இந்துத்துவக் கிரிமினல் கொலைவெறியர்கள் தண்டிக்கப்படவும் போராடிய பிறகும்; இந்து பாசிச பரிவாரங்களுக்குள்ளேயே பிளவுகளும் முரண்பாடுகளும் முற்றி வெடித்த பிறகும், பாசிச பரிவாரங்களின் அங்கமாகவே செயல்பட்ட போலீசும் உளவுத்துறையும் நடத்திய போலி மோதல் படுகொலை உச்சநீதி மன்றத்திலேயே அம்பலப்பட்டு நாடு முழுவதும் நாறிய பிறகும், இந்தப் பஞ்சமா பாதகங்களை செய்த குற்றவாளிகளில் பெரும்பான்மையினர் ஒப்புதல் வாக்குமூலங்கள் அளித்த பிறகும், இறுதியாக இவ்வளவு கொலைபாதகச் செயல்களுக்கும் உரிமை பாராட்டி, மோடியே நியாயப்படுத்திய பிறகும், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

 

 

இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, குஜராத் சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, தனக்கென ஒரு கட்டுக்கோப்பான வாக்கு வங்கியை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. மற்றும் பிற இந்துத்துவ பாசிசக் கும்பல்கள் உருவாக்கித் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. சிறுபான்மையினரான இசுலாமியர்களோ, 2002 படுகொலைகளுக்குப் பிறகு பய பீதியில் சிக்கி, ஜனநாயக உரிமைகள் ஏதுமற்ற அகதிகளாகவே வாழ்கிறார்கள். இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள மக்களோ, அரசியலற்ற பிழைப்புவாதகாரியவாத சகதியில் உழல்கின்றனர். இவர்கள் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வுக்கும் எதிரணியான காங்கிரசுக்கும் இடையில் பெரிய வேறுபாடு எதையும் காண்பதற்கில்லை.

 

அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அணி தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்தித்ததற்கு அத்வானிமோடிராஜ்நாத் போன்ற தலைமை பின்பற்றிய இந்துத்துவ கடுங்கோட்பாட்டுவாதமும், சிறுபான்மையினருக்கு எதிரான கொலைவெறித் தாக்குதல்களும் காரணங்களென்று கருதி அவற்றை மறைத்து வைத்துக் கொண்டு, ஒரு மென்மையான இந்துத்துவ கோட்பாட்டை முன்தள்ள வேண்டுமென்ற கருத்து இந்து பாசிச பரிவாரங்களிலேயே எழுந்திருந்தது. அதனால்தான் மோடி கும்பல் தனது வழக்கமான இசுலாமிய எதிர்ப்பு பாசிச வெறிப் பிரச்சாரத்திற்கு பதிலாக, ""குஜராத் வளர்ச்சி'' என்ற பிரச்சினையை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தொடங்கியது. ஆனால் மதச் சார்பற்ற சக்திகளோடு சேர்ந்து ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பாசிச பரிவாரங்களுக்கு எதிராக கடுந்தாக்குதல் தொடுப்பதற்குப் பதிலாக, குஜராத்தின் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசு தானும் ஒரு மிதவாத இந்துத்துவ நிலை எடுத்தது. குறிப்பாக மோடி தலைமையிலான பாசிச பரிவாரங்களின் கிரிமினல் குற்றங்களுக்கெதிராக மத்திய ஆட்சியாளர்கள் என்ற முறையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதோடு, ஜனநாயக சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அதற்கான முயற்சியை மேற்கொண்டபோதும் பாராமுகமாகவே இருந்தது. ""டெகல்கா'' ஏட்டின் அம்பலப்படுத்துதல்கள் வெளியான பிறகும், அது ""பா.ஜ.க.டெகல்கா கூட்டுச் சதி'' என்ற நிலை எடுத்தது. கிரிமினல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையை செய்தது. அதற்கு முக்கியக் காரணம் அந்தக் கிரிமினல் குற்றவாளிகளில் பலர் இப்போது காங்கிரசு அணியில் இருக்கின்றனர்.

 

இவ்வாறு இந்துத்துவ பாசிச பரிவாரங்களின் வெற்றிக்குக் காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதன் விளைவுகள் குஜராத்தை மட்டும் பாதிப்பதாக இருக்காது. நாடு முழுவதும் அதன் பாசிச வெறியாட்டத்தை புதிய வேகத்துடன் நடத்தும். கிழக்கே ஒரிசாவில் கிறித்துவ சபைகளைத் தாக்குவதிலிருந்து இது ஆரம்பத்திருக்கிறது. அதன் வெற்றி சோஜெயா முதலிய வழமையான கூட்டாளிகளை மட்டுமல்ல; இராமதாசு, வைகோ போன்ற பிழைப்புவாத சந்தர்ப்பவாத சக்திகளையும் நெருக்கமாகி விடும். ஆகவே காங்கிரசு இடது முன்னணி ஆகிய மிதவாத இந்துத்துவ மற்றும் போலி மதச்சார்பற்ற கூட்டணியை நம்பிக் கொண்டிராமல், உண்மையான மதச்சார்பற்ற சக்திகள் முன்பை விட மூர்க்கமான கூடுதல் வேகத்துடன் இந்துத்துவ பாசிச பரிவாரங்களை எதிர்த்துப் போரிடாமல் அவற்றை வீழ்த்த முடியாது.