பிரிட்டிஸ் காலனியவாதிகள் இலங்கை மக்களை பிரித்தாளக் கையாண்ட ஆட்சியதிகாரப் பகிர்வுமுறை என்பது, இனரீதியானது. இனரீதியான பிரதிநிதித்துவம் மூலம், இலங்கை மக்களைப் பிரித்தாண்டனர்.
காலனிக்கு பிந்தைய காலனிய கறுப்பு அடிமைகளின் ஆட்சி, அதே இனரீதியான ஆட்சியமைப்பு முறையையே தொடர்ந்தனர். ஆட்சியை தமக்குள் இனரீதியாக பிரித்துக் கொண்டவர்கள், தத்தம் பங்குக்கு தம் இனம் சார்ந்து இனவாதத்தை விதைத்தனர். இதில் யாரும், சளைத்தவர்களல்ல.
இப்படி உண்மை இருக்க, இனவாதத்தையும் - இனவொடுக்குமுறையையும் சிங்கள ஒடுக்கும் வர்க்கம் கண்டுபிடித்ததல்ல, மாறாக காலனிய காலத்தில் காலனியவாதிகளால் வித்திடப்பட்டது. காலனிய காலத்திலும், காலனியத்துக்கு பின்னும், தமிழ் - சிங்கள ஒடுக்கும் வர்க்கங்கள், அதே இனவாதத்தையே அரசியலாக்கினர். இனவாதத்தை விதைப்பதில் எந்தவகையிலும் ஒன்றுக்கொன்று குறைந்ததாக கருதுவது, ஒன்றைக் குற்றஞ்சாட்டுவது வரலாற்றுத் திரிபு. இப்படிப்பட்ட வரலாற்று சூழலிலும், நீட்சியிலும் தமிழ்மக்கள் மத்தியில் இனவாதத்தை வீரியமாக்கவே, இனவாத தமிழ் பல்கலைக்கழகம் முன்வைக்கப்பட்டு கோரப்பட்டது.
இப்படி இனவாதக் கோரிக்கைகளை ஒருதரப்பு மறுக்கும் போது, மறுதரப்பு அதை தன் இனத்துக்கு எதிரான இனவாதமாகக் காட்டியது. அதேநேரம் தமிழினவாதமோ தங்கள் கோரிக்கையை மறுக்கும் தமிழ் தரப்பை, இனத் துரோகியாகக் காட்டியது. தங்கள் தேர்தல் அரசியல் நலனுக்காக முன்வைத்த தமிழினவாதத்தை ஏற்க மறுப்பதை துரோகமாகவும், தனிநபர்களை துரோகியாகவும் முத்திரை குத்தியது. இதை அகிம்சைவாதியாகக் காட்டப்பட்டு போற்றப்படும் செல்வநாயகத்தின் சொந்தப் பத்திரிகையான சுதந்திரனிலும், தமிழரசுக் கட்சியின் அரசியல் நடைமுறையாகயும் எப்போதும் இருந்து வந்துள்ளதைக் காணலாம். தமிழரசுக் கட்சியின் தமிழினவாதத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துக்கும், ஜனநாயகத்துக்கும், தமிழினவாதத்தில் என்றைக்கும் இடமிருக்கவில்லை. தமிழ் பல்கலைக்கழகம் என்பது தமிழினவாதத்தை தூண்டும் தமிழினவாதிகளின் அரசியலாக முன்வைக்கப்பட்ட, தூண்டில்.
12.10.1952 இல் சுதந்திரன் பத்திரிகை, தமிழினவாதத்தை தூண்டும் தங்கள் அரசியல் செயற்பாட்டை முன்னிறுத்தி, தமிழ் பல்கலைக்கழகம் குறித்து முதல் பக்கச் செய்தியொன்றை வெளியிடுகின்றது. அதில் "6 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பல்கலைக்கழகமா" என்ற தலைப்பில், "சிங்கள இனவெறியர்கள் ஏளனம்!" செய்வதாக கூறி, தமிழனை இனவாதமாக சிந்திக்கக் கோருகின்றது.
1950 களில் சுதந்திரன் பத்திரிகை மூலம் தமிழரசுக்கட்சி முன்வைத்த தமிழினவாத தமிழ் பல்கலைக்கழகக் கோரிக்கையே, 1952 இல் சிங்கள இனவாதிகளுக்கும் - இனவாத அரசியலுக்கும் பயன்படும் பொருளாகின்றது. இனவாதத்தை தூண்ட, இனவாத நடைமுறைகளைக் கொண்டு வர, இன்னுமொரு இனவாதம் உதவுகின்றது. அதைக் காட்டி மீள இனவாதமாக்குகின்றது தமிழரசுக்கட்சி.
1948 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட போது தமிழரசுக்கட்சி உருவானது. பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆதரித்ததைக் காட்டியே, தீவிரமான தமிழ் இனவாத கட்சியாக 18.12.1949 இல் இலங்கை தமிழரசுக் கட்சி உருவானது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்சில் நடந்த இந்தப் பிளவு, இன்னுமொரு தீவிர இனவாதமாகவே நடந்தேறியதே ஒழிய இனவாதத்துக்கு எதிராகவல்ல. தமிழினவாதத்தை தமிழ்மக்கள் மத்தியில் உருவாக்கவே, புதிய கட்சி உருவானது. இது முரணற்ற ஜனநாயக கோரிக்கைக்கு பதில், இனவாதக் கோரிக்கையை முன்வைத்தது.
தமிழ்;மக்கள் மத்தியில் உடனடியாகவே இனவாதத்தைப் புகுத்த 1950 இல் தமிழ் பல்கலைக்கழகக் கோரிக்கையை முன்வைக்கின்றது. இந்தவகையில் தமிரசுக்கட்சியை உருவாக்கிய செல்வநாயகம், 1947 முதல் வெளியிட்ட சுதந்திரன் பத்திரிகையில், இந்த இனவாத பல்கலைக்கழகக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
1948 பிரஜாவுரிமைச் சட்டம் மூலம் மலையக மக்களிள் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட பின்னணியில் எந்தளவுக்கு அதில் இனவாதம் இருந்ததோ, அதற்கு நிகரான இனவாதமே இனரீதியாக தமிழ் பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கையிலும் காணமுடியும். இந்த இனவாத தமிழ் பல்கலைக்கழகத்தை அமைக்க, எம்மை நாம் ஆளும் அதிகாரத்தைக் கோரி - "சமஸ்டி" ஆட்சி முழக்கம் முன்வைக்கப்பட்டது.
1948 இல் பிரஜாவுரிமைச் சட்டத்தை வெறும் இனவாத நோக்கில் மட்டும் தமிழினவாதிகள் குறுக்கியும் - திரித்தும் காட்டியதன் மூலம், தமிழினவாதம் விதைக்கப்பட்டது. அன்று பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது என்பது, அந்த மக்களின் தேர்தல் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டுதானே ஒழிய, இனத்தையோ மொழியையோ அடிப்படையாகக் கொண்டல்ல. மலையக மக்கள் வாக்குகள் யாருக்கு, எதற்குப் பயன்படுத்துகின்றனர் என்ற தேர்தல் அரசியல் அடிப்படையில் இருந்துதான், வாக்குரிமையை பறிக்க பிரஜாவுரிமையை ஆளும் வர்க்கம் பறித்தனர். சுரண்டப்பட்ட மலையகமக்களின் உழைப்பு எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து சுரண்டுவதை இது எந்தவிதத்திலும் தடுக்கவிலை. பிரஜாவுரிமை இழந்த மக்களை, அவர்களின் உழைப்பில் இருந்து அகற்றவில்லை.
மலையக மக்கள் 1948 இல் தொழிலாளர்களாக அணிதிரண்டு வர்க்கக் கட்சிகளுக்கு வாக்களித்ததும், வர்க்கக் கட்சிகளின் ஆட்சி அதிகாரத்தை தேர்தல் மூலம் கொண்டுவரும் அளவுக்கு வாக்குகளைக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக ஆளும் வர்க்கம் கொண்டிருந்த வர்க்க அச்சமே, வாக்குரிமையைப் பறிப்பதற்கான அன்றைய அரசியல் அடிப்படைக் காரணமாகும்.
மாறாக மலையக மக்கள் தமிழ் மொழியைப் பேசியதால் அல்ல. சிங்கள மக்களின் தொழில்களுடன் போட்டியிட்டவர்களும் அல்ல. அதாவது மலையக மக்களின் மொழி, தொழில் எந்த வகையிலும் சிங்கள மக்களுடன் முரண்படவில்லை. அன்றாட வாழ்க்கை கூட இரு வேறு தளத்தில் இருந்தது. மலையக மக்கள் வெளியார் தொடர்பு கொள்ளமுடியாத இடைவெளியில், திறந்தவெளிச் சிறைகளில் வாழ்ந்தவர்கள். சிங்கள மக்களை இனம் மற்றும் தொழில் சார்ந்து, உணர்வுபூர்வமாக தொடுமளவுக்கு, பிரஜாவுரிமை பறிப்பு இனவாத அரசியல் கண்ணோட்டத்தில் செல்வாக்கு வகிக்கவுமில்லை.
மாறாக ஆளும் வர்க்கம் அவர்களின் வர்க்க ரீதியாக வாக்குகளைக் கண்டு அஞ்சியதுடன், தொழிலாளர் வர்க்க கட்சிகளின் தலைமையின் கீழ் அந்த மக்கள் இருப்பது, எதிர்காலத்தில் அதிக சுரண்டலை நடத்த முடியாத மக்கள் கூட்டமாக மாறுவதை தடுக்கவே, பிரஜாவுரிமை (வாக்குரிமை) பறிக்கப்பட்டது. இலங்கையின் பிரதான ஏற்றுமதி வருவாயைத் தந்த மலையக மக்களின் உழைப்பு, வர்க்கக் கட்சிகளின் பின் இருப்பதை கண்டே அஞ்சினர். இந்த வர்க்க அடிப்படையில் இருந்து தான், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் கூட பிரஜாவுரிமை சட்டத்தை ஆதரித்தது. பல தமிழ் தலைவர்கள் மலையகமக்களை சுரண்டும் தேயிலைத் தோட்ட முதலாளிகளாகவும் இருந்தனர்.
இப்படி உண்மைகள் இருக்க, சிங்கள - தமிழ் இனவாதிகள் தத்தம் அரசியல் நோக்கில் இருந்தே, இதற்கு இனவாத கண்ணோட்டத்தை வழங்கினர். தமிழினவாத அரசியல் இதை இனவாதமாகக் குறுக்கிக் காட்டி, கட்சியிலிருந்து விலகியது. புதிய தீவிர தமிழினவாதக் கட்சியை உருவாக்கினர். மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிப்பு எந்தவிதத்திலும் வடகிழக்கு மக்களின் இன-மத உணர்வுடன் தொடர்பற்று இருந்தது. அதேநேரம் மலையக மக்களை இழிவாக அணுகும் வடகிழக்கின் வெள்ளாளிய சாதிய சமூக உணர்வுடனேயே அணுகியது. பிரஜாவுரிமைப் பறிப்பு அரசியல் ரீதியாகவும் - உணர்வு ரீதியாகவும், வெள்ளாளிய சாதிய சமூகத்திற்கு தொடர்பற்று காணப்பட்டது.
பிரஜாவுரிமை பறிப்பைச் சொல்லி வடகிழக்கு வெள்ளாளிய சாதிய மக்களின் வாக்குகளை இனரீதியாக திரட்டவே முடியாது. இந்த அரசியல் பின்னணியில் வடகிழக்கு மக்களின் இனவாதத்தை தூண்டிவிட, தமிழ் பல்கலைக்கழக முழக்கம் முன்வைக்கப்படுகின்றது.
வடகிழக்கில் உயர் சமூக அந்தஸ்து பெற்று சமூக மேலாண்மை பெற்று இருந்தவர்கள், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி கற்றவர்களே. டாக்டர், எஞ்சினியர், கனவுகளுடன் மொத்த கல்வியையும் குறுக்கி கனவுகண்;ட வெள்ளாளிய சமூகத்தில், தமிழ் பல்கலைக்கழகம் மூலமே அதிகளவில் டாக்டர், எஞ்சினியர் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்தை தமிழினவாதம் மூலம் கனவு காண வைத்து, இதன் மூலம் தமிழின உணர்சியையும் - உணர்வையும் தட்டியெழுப்பினர். இதை சிங்கள அரசு தமிழனுக்கு தரமறுப்பதாக கூறியே, 1950 களில் இனவாதவுணர்ச்சியை சமூகத்தில் புகுத்தினர்;
இந்தளவுக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வடக்கு தமிழனுக்கு (அண்ளளவாக 50 சதவீதம்) கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணிய வெள்ளாளிய சமூகத்தில் இருந்துதான், இந்த "சிங்களவன்" தரமறுத்த தமிழ் பல்கலைக்கழகம் பற்றிய இனவாதம் முன்வைக்கப்பட்டது. வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பு மறுதளித்த கல்விமுறைக்கு நிகராக, வர்க்க ரீதியாக வடக்கு, கிழக்கு, வன்னி மக்கள் கல்வி கற்க முடியாதயளவுக்கு - தமிழ் ஒடுக்கும் வர்க்கம் அவர்களைச் சுரண்டியது.
தமிழ்மொழி பேசியவர்களை "தமிழன்" என்று, தமிழினவாதம் பேசியவன் அடையாளப்படுத்திய அரசியல் பின்னணியில், சாதியும் வர்க்கமுமே கோலோச்சியது. 1970 களில் இனரீதியான தரப்படுத்தல் வந்தபோது கூட, தமிழன் தன் ஒடுக்கிய தமிழனின் கல்விக்கு என்றும் குரல் கொடுக்கவில்லை. இந்த வகையில் தமிழினவாத அரசியல், தன் இன ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுத்த உரிமைக்காக என்றும் குரல் கொடுத்துப் போராடியது கிடையாது. இங்கு தமிழினவாதிகள் கோரிய தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழனைத் தமிழன் ஒடுக்கும், வெள்ளாளிய சமூக அதிகாரத்தின் இனவாதக் குரலாகவே 1950 களில் எழுந்தது. 1970 களில் இது மாறிவிடவில்லை. இப்படிப்பட்ட தமிழினவாதம் என்பது ஒடுக்கும் சிங்கள இனவாதத்துக்கு எதிரானதல்ல. மாறாக தன்னைத்தான் இனரீதியாக உயர்ந்தவனாக முன்னிறுத்திக் கொள்ளும் தமிழினவாதமே.
29.08.1944 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினை உருவாக்கிய போது, இனரீதியாக, இனவாத அடிப்படையில் "தமிழ்" கட்சியே உருவாக்கப்பட்டது. 18.12.1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியினை உருவாக்கிய போது, இதே "தமிழ்" இனவாத அடிப்படையிலேயே கட்சி உருவாக்கப்பட்டது. இக்காலத்திலும், இதன் பின்னுமாக இலங்கை ஆட்சியதிகாரத்துக்கு வந்த எந்தக் கட்சியும், "சிங்கள" இனத்தின் பெயரில் கட்சியாக உருவானது கிடையாது. இலங்கையின் ஆட்சியதிகாரத்துக்கு வந்த அனைத்துக் கட்சியும், இனரீதியாக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக, கட்சிப் பெயர் மூலம் தன்னை முன்னிறுத்தியது கிடையாது. அதேநேரம் தனது கட்சியும், ஆட்சியும் இலங்கையின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதை தானாகவே முன்வந்து நிறுவ வேண்டியும் இருந்தது. அதாவது தாங்கள் இனவாதிகளல்ல என்பதை எப்போதும் முன்வைக்கவும், அதை செயலாகக் காட்டவும் - நிறுவவும் வேண்டியிருந்தது. இனவாத ஆட்சி அமைப்பின் இந்த அக முரண்பாடு, தமிழினவாத தமிழ் கட்சிகளுக்கு கிடையாது.
தமிழினத்தின் பெயரில் உருவான கட்சிகள், "தமிழ்" பெயரில் இனக் கட்சியாகவே உருவானது. தமிழினவாதத்தைப் பேசி அதை நடைமுறையில் முன்வைப்பதன் மூலம், தன்னை இனக் கட்சியாக தன் இனத்துக்கு நிறுவ வேண்டியிருந்தது. வாக்குப் பெறும் தேர்தல் கட்சிகள் என்ற அடிப்படையில், தமிழ்மக்களின் வாக்கை பெற இனவாதம் பேசுவது அவசியமானதாக இருந்தது. இந்த இனவாத அரசியலாக முன்வைக்கப்பட்டதே, தமிழ் பல்கலைக்கழகக் கோசம். இதற்கு வெளியில் அல்ல.இப்படி தங்கள் இனவாத கட்சியின் தேர்தல் வெற்றிக்கான இனவாத அரசியலே, பரஸ்பரம் இனவாதமாகத் தூண்டிவிடப்பட்டது. 06.06.1956 இல் சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்கிய அதே தினம், தமிழினவாதிகள் இனரீதியான தமிழ் பல்கலைக்கழகத்தை அமைக்கும் அமைப்பை அறிவிக்கின்றனர். இப்படி பரஸ்பரம் இனவாத அரசியல், இரு பக்கங்களிலும் அரங்கேறியது.
இனம், மொழி, மதம்.. சமவுரிமை அடிப்படையில், முரணற்ற ஜனநாயகத்தை முன்வைத்து இனவாதத்தை எதிர்த்து போராடுவதுக்குப் பதில், தமிழினவாதத்தை முன்வைத்ததையே வரலாறு காட்டுகின்றது. தாங்களே தமிழினவாதிகளாக இருந்து கொண்டு, இன்னொரு இனவாதத்தை எதிர்த்துப் போராடியதாக கூறுவது, உண்மையில் இனவாதத்தையல்ல. மாறாக தமிழ் மக்களை தமிழினவாதத்திற்கு பலியாக்கி, தமிழினவாத தேர்தல் அரசியல் வெற்றிக்கு தேவையான வாக்குளை திரட்டவே, பிற இனவாதத்தை பயன்படுத்தினர். இதன் மூலம் தங்கள் இனவாதத்தை பலப்படுத்தினர்.
தமிழ்மக்களை இனவாத மூலம் அணிதிரட்டும் இனவாத அடிப்படையிலேயே, 1950 களில் தமிழ் பல்கலைக்கழகக் கோசம் என்று அரசியலாக்கினர். இந்த இனவாத தமிழ் பல்கலைக்கழகம் குறித்து 20.01.1967 இல் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், "தமிழ்ப் பல்கலைக் கழகம்" என்ற தலைப்பில், விரிவான இனவாத சிந்தனையை முன்வைக்கின்றது. அதில் "இன்று நேற்றல்ல, சுமார் ஏழு வருடங்களுக்கு (1950) முன்னமே தாங்கள், தமிழ் பல்கலைக்கழகத்தை முன்வைத்து வலியுறுத்தி வந்ததாக" கூறுகின்றது. அன்று தாங்கள் தமிழினவாத அடிப்படையில் "தாங்கள் கோரியதை முழச் சமூகமும் கண்டு கொள்ளாது, இன்று அதை காண்பதாக குற்றம் சாடுகின்றது." இனியாவது தாங்கள் கூறுவதை இனவாத கண்ணோட்டத்தில் கண்டுகொண்டு, தங்கள் இனவாதத்தின் பின் இன்றே அணிதிரள வேண்டும் என்று கோருகின்றது.
1950 இல் இனரீதியாக சிந்திக்காத தமிழ் சமூத்தை தமிழினவாதம் மூலம் சிந்திக்கவும், செயற்படவும் கோருகின்றது. 1957 இல் தமிழ் பல்கலைக்கழகக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதை தமிழினவாத விமர்சனத்துடன் அணுகி, அதை புதிய கோரிக்கையான சமஸ்டியுடன் இணைத்துக் கோருமாறு வேண்டுகின்றது.
இலங்கை மக்களின் கல்வியை இனரீதியாக பிரிக்கின்ற – பிளக்கின்ற அரசியலை, தமிழ் மக்கள் சார்ந்து இனரீதியாக முன்னெடுக்கப்பட்ட வரலாற்றை, எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. கல்வியில் இனவாதம் இப்படித்தான் சிறுசிறுகப் புளுத்தது.
கல்வியில் புளுத்த இந்த இனவாதம் எப்படி உருவானது என்பதை, சுதந்திரன் ஆசிரியர் தலையங்கம் இனவாத பெருமையுடன் முன்வைகின்றது. "வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்கம் தமிழ் பல்கலைக்கழகத்தை பேசமுன்னமே சுதந்திரன் (1950 முதல்) முன்வைத்து வருவதை", இனரீதியாக தமிழின் உணர்ந்து கொள்வது அவசியம் என்கின்றது.
தாங்கள் அன்று இனவாதமற்ற இலங்கைச் சூழலில் இதை முன்கூட்டியே தமிழினவாதத்தை முன்வைத்ததை தவறல்ல, என்று தர்க்க ரீதியாக நியாயப்படுத்துகின்றது. "இன்று (1957) உருவாகியிருப்பது போன்ற ஒரு மொழிச் சிக்கல் ஏற்படப் போகின்றது என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அவதானித்து, சுதந்திரன் அப்போது தமிழ் பேசும் மக்களை இன ரீதியாக தட்டி எழுப்பிக் குரல் கொடுத்தது" என்கின்றது. இனவாதம் வருமென்று கருதி, தாங்கள் முன்கூட்டியே தமிழினவாதத்தை முன்வைத்ததை பெருமையாக முன்வைத்து, அதை பற்றி இனவாதக் கண்ணோட்டத்தில் பீற்றிக் கொள்கின்றது.
இனவாதமல்லாத சூழலில் தமிழரசுக்கட்சி எப்படி எந்த வடிவில் தமிழ் இனவாதத்தை முன்வைத்தது என்பதை, அதாவது சிங்கள இனவாதம் வருமென்று தாங்கள் நம்பியதை கொண்டு இனவாத தமிழ் பல்கலைக்கழகம் வைத்தது குறித்து பேசுகின்றது. அன்று தமிழ் சமூகம் கண்டுகொள்ளத் தவறியது, இனியும் நிகழக் கூடாது என்று இனவாதத்தை மிகத் தெளிவாக 1957 இல் முன்வைக்கின்றது. சிங்கள இனவாதம் வருமென்று முன்கூட்டி இனவாதத்தை வைப்பதின் பின்னுள்ள அரசியல் உள்ளடக்கம், பரஸ்பரம் இனவாதமே. "தமிழ்" பெயரில் தமிழினவாதக் கட்சியை உருவாக்கியவர்கள், சொந்த இனவாதம் மூலமே தங்கள் அரசியலை தொடங்கினர். சிங்கள இனவாதமா, தமிழ் இனவாதமா, எது முதல் தொடங்கியது என்பதல்ல, இரண்டுக்கும் அரசியல்ரீதியான சமமான சமூகப் பாத்திரம் வரலாற்றில் நிறையவே உண்டு.
சுதந்திரன் கூற்று இதையே மிகக் தெளிவாக முன்வைக்கின்றது. "அப்போது தாங்கள் கூறிய போது தமிழ் மக்கள் கண்டுகொள்ளாது" இருந்த தமிழ் பல்கலைக்கழகம் இன்று "சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட பின் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உருவாக்கும் எண்ணம் தமிழ் மக்களிடம் பிறந்தது” குறித்து பேசும் அதேநேரம், இனி அப்படி நிகழக் கூடாது என்கின்றது. அதேநேரம் "அரச ஆதரவு இன்றி தமிழ் பல்கலைக்கழகத்தை நடத்த முடியாது, எனவே சமஸ்டி ஆட்சி அமைப்பதற்காக" உழைப்பதன் மூலம், தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்க முடியும் என்கின்றது. தமிழ் பல்கலைக்கழகம் என்பது தங்கள் கட்சி அரசியலான சமஸ்டி ஆட்சியுடன் இணைந்ததே என்கின்றது. தமிழ் மக்களை இனவாத சேற்றில் புதைக்கும் தேர்தல் அரசியல் சதியில், தமிழ் பல்கலைக்கழகம் இணைக்கப்பட்டு – தமிழன் அதிகாரம் குறித்து பேசுவது பொருளாகின்றது.
தமிழ் இனவாதிகளின் தேர்தல் அரசியலுக்காக முன்வைக்கப்பட்ட தமிழ் பல்கலைக்கழகத்தை அமைப்பது குறித்து, 1957 தைப்பொங்கல் அன்று பல்கலைக்கழகத்தை அமைக்கும் குழு சார்பாக மயில்வாகனம் பிரதமரை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பு குறித்து 20.01.1967 சுதந்திரன் முதல்பக்க தலைப்புச் செய்தியாக அதை வெளியிடுகின்றது. அதில் "தமிழ் பல்கலைக்கழக தூது கோஸ்டியிடம் பண்டாவின் அகங்கார அறிவிப்பு" என்று தலைப்பிட்டு, தமிழினவாத நோக்கில் திரித்தும் புரட்டியும் எழுதுகின்றது. பிரதமரைச் சந்தித்த குழு தங்களை மலையகம், முஸ்லிம் .. மக்களை உள்ளடக்கிய மொத்த தமிழ்மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், தமிழ் இனத்துக்குரிய கிழக்கில் தமிழ் பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என்று, இனவாத அடிப்படையில் தமிழ் பல்கலைக்கழகத்தை கோரினர். பிரதமர் மலையகம், முஸ்லிம் .. மக்களை பிரதிநிதித்துவப்;படுத்துவதாக கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்து, கிழக்கு தமிழர் பிரதேசம் என்பதை மறுத்து அங்கு சிங்கள மக்களும் வாழ்வதாகவும் கூறினார். இப்படி பிரதமர் கூறியதையே, "அகங்காரம்" என்று தமிழினவாத கண்ணோட்டத்தில் சுதந்திரன் அணுகி, இனவாதத்தை தூண்டி விடுகின்றது. பிரதமர் இனரீதியான தமிழ் பல்கலைக்கழகத்தை இலங்கையில் கோருவதை ஏற்றுக்கொள்ள மறுத்ததை, தமிழினவாத கண்ணோட்டத்தில் கல்வியை இனவாதமாக்க கோருகின்றனர். பிரதமர் இனவாதமல்லாத பல்கலைக்கழகத்தை முன்வைக்குமாறு கோருகின்றார்.
அதேநேரம் பிரதமர் இலங்கை பல்கலைக்கழகத்தில் "தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளில் பல்கலைக்கழகங்கள் இயங்குவதைச் சுட்டிக்காட்டி, கலாச்சார அடிப்படையில் மொழி, சமய பிரிவுகள் பல்கலைக்கழகத்தில் அமைக்க முடியும்" என்று கூறுகின்றார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த சுதந்திரன், எமக்கான இனவாத தமிழ் பல்கலைக்கழகத்தை நாம் அமைக்க வேண்டும் என்கின்றது. இனவாத தமிழ் பல்கலைக்கழகத்தை மறுப்பதை, சிங்கள இனவாதமென்று திரிபை சுதந்திரன் முன்வைத்து, நமக்கான தமிழின ஆட்சி மூலமே இனவாத பல்கலைக்கழகம் சாத்தியம் என்கின்றது. ஆகவே ".. இன்றைய ஒற்றையாட்சி அரசாங்கத்திடம் யாசகம் கேட்டபதல்ல. இன்றைய அரசியல் திட்டத்தை மாற்றியமைத்து தமிழ் பேசும் மக்கள் தமக்கு சுயாட்சியை ஏற்படுத்திக் கொள்வது தான் உள்ள ஒரே வழி… நமது ஆட்சி எமது கைக்கு மாறினால் யாரிடமும் அனுமதி கேட்டகாமல் நமது சொந்தப் பல்கலைக்கழகங்களே நாமே .." அமைக்க முடியும் என்கின்றது.
ஆகவே தமிழ் பல்கலைக்கழகத்தை அமைக்க "சமஸ்டி ஆட்சியை அமைக்க, தேசிய போராட்டத்தில் ஈடுபடவேண்டும்" என்கின்றது. தமிழ் இனவாத தமிழ் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக, சமஸ்டியை ஆதரிக்கவும் - போராடவும்; கோருகின்றது. இங்கு தமிழினவாதிகள் முன்வைத்த சமஸ்டி என்பது ஒடுக்கும் தமிழினவாதிகளின் தேர்தல் அரசியல் கோரிக்கையிலான இனவாதமே ஒழிய, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் முரணற்ற ஜனநாயக கோரிக்கையல்ல.
தொடரும்
மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01
தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02
1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03
பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04
ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05
1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06
சர்வதேசியத்தின் கருவாக இருந்த என்.எல்.எப்.ரி. - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 07
தேசியமும் - சர்வதேசியமும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 08
இன-மத பல்கலைக்கழகத்தைக் கோரியவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 09
இனவாத காலனியத்தின் நீட்சியாக கோரியதே, தமிழ்ப் பல்கலைக்கழகம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 10
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode