Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான தமிழினவாத பாதயாத்திரையாகட்டும், யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கு பொங்கிய தமிழினவாதிகளின் அரசியல் பின்னணியில் இருப்பது, தொடரும் பேரினவாத பௌத்த ஒடுக்குமுறைகளே. இப்படி இனவாதங்கள் - மதவாதங்கள் ஒன்றையொன்று சார்ந்து இயங்குவதுடன், மக்களை அதன் பெயரில் பிளக்கின்றது. மக்கள் ஐக்கியப்பட்டு வாழ்வதை பிளப்பதற்கே, இனவாதங்களும் - இனவாதப் போராட்டங்களும், அரசியலில் கூட்டாக முன்வைக்கப்படுகின்றது. இது தேர்தல் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல, நாட்டை விற்பதற்குமே. இலங்கை மக்களின் உழைப்பை வட்டியாக நிதிமூலதனத்திற்கு கொடுப்பதற்குமே.


இலங்கை அரசின் அதிகாரம் சார்ந்த இனவொடுக்குமுறையே, பிறரின் இனவாதங்களுக்கும் - மதவாதங்களுக்கும் துணையாக இருக்கின்றது. அரசின் இனவாதவொடுக்குமுறையைப் பேசாது இயக்கங்களினதும், புலிகளினதும், தமிழ் தேசிய தேர்தல் கட்சிகளினதும் மனிதவுரிமை மீறல்களையும், பிழைப்புவாதங்களையும், சந்தர்ப்பவாதங்களையும் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் எந்த மாற்றமும் நடக்காது.

அருண் சித்தார்த் மைத்திரேயன்; போன்றவர்கள் அரசின் இனவொடுக்குமுறையைப் பேசாது, மறு தரப்பை பேசுவதன் மூலம் எதையும் மாற்றிவிட முடியாது. ஒடுக்குமுறைகள் உள்ள வரை ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றும், தமிழ், முஸ்லிம் இனவாதங்களும் - மதவாதங்களும் தொடர்ந்து செழித்தே வளரும். பரஸ்பர இனவாதம் தேர்தல் கட்சிகளின் நவதாராளவாதக் கொள்கை.

அரசுடன் சேர்ந்து பயணிப்பதன் மூலம், அரசின் இனவாதத்தை – மதவாதத்தை தடுக்கமுடியாது. டக்ளஸ், பிள்ளையான், கருணா, அருண் சித்தார்த் மைத்திரேயன்; .. போன்ற அனைவரும், அரசுடன் இணைந்து பயணிப்பவர்கள் தான். அவர்களுக்கு நன்கு தெரியும், அரசு இனவொடுக்குமுறையை கையாள்கின்றது என்ற உண்மை. அதை அரசுடன் சேர்ந்து தடுத்து நிறுத்தும் எந்த உரையாடலையோ, நடைமுறையையோ கையாளாமல், எதிர் இனவாதத்தை மட்டும் எதிர்த்து பேசுவதன் பொருள், அரச இனவாதத்திற்கும் - இனவொடுக்குமுறைக்கும் தொடர்ந்து உதவுவதே.

மறுபக்கத்தில் தமிழினவாதம் தனது இனவாதம் சார்ந்த தன் இன மக்கள் மீதான தனது ஒடுக்குமுறைகள் பற்றிப் பேசுவதில்லை. மாறாக அரச இனவாதத்தை மட்டும் பேசுவதன் மூலம், அருண் சித்தார்த் மைத்திரேயன்; முன்வைக்கும் உண்மைகளுக்கு முழுக்கு போட்டுவிட முடியாது. அருண் சித்தார்த் மைத்திரேயனை யார் என்று கேட்பது – அதைப் பற்றி பேசுவதன் மூலம், அவர் முன்வைக்கக் கூடிய தமிழ் தேசியத்தின் மனிதவுரிமை மீறல்களை மூடிமறைத்துவிட முடியாது. அவதூறு செய்ய முடியும். வேண்டுமென்றால் 1970 களில் தமிழினவாதம் கையாண்ட தனிநபர் பயங்கரவாத வழிகளில் அவரை அழித்தொழிக்கலாம். அதை நோக்கி, தமிழினவாதம் மீளவும் பயணிக்க முனைகின்றது. இந்த தமிழினவாத அரசியல் என்பது, குண்டுச் சட்டிக்குள் சுற்றி சுற்றி ஓடுவதன் மூலம் வாக்குகள் பெறலாம், ஆனால் ஒருநாளும் இனவொடுக்குமுறைக்கு தீர்வு காணமுடியாது.

அருண் சித்தார்த் மைத்திரேயன்; கடந்தகாலத்தில் அரசுக்கும் - புலிக்கும் எதிரான, இடதுசாரிய அரசியல் தர்க்கங்களையும் வாதங்களையும் எடுத்து, அதில் அரசுக்கு எதிரானவற்றை மட்டும் வெட்டி நீக்கி முன்வைப்பதன் மூலம், அரசவொடுக்குமுறைக்கு உதவவே முனைகின்றார். கடந்தகால புலியெதிர்ப்பு அரசியலை விட, சிறப்பாக மீளச் செய்ய முனைகின்றார். புலியெதிர்ப்பு அரசியல் அதைக் கொண்டாடலாம், ஆனால் இலங்கையின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. இனவாதம் என்பது நாட்டை விற்கும் நவதாராளவாத தேர்தல் அரசியலை மூடிமறைக்கும், அரசியல் நிகழ்ச்சிநிரல். அதையே அருண் சித்தார்த் மைத்திரேயன்; தன் பாணியில் செய்ய, மறுபுறம் தமிழினவாதிகள் தங்கள் பாணியில் செய்கின்றனர்.

நாட்டை விற்கும் அரசின் கொள்கையே, திட்டமிட்ட வகையில் இனவாதங்களையும், மதவாதங்களையும் தூண்டிவிடுகின்றது. இதன் மூலம் மக்களை இனவாத, மதவாத சண்டைக்குள், சாக்கடைக்குள் முடக்கி விடுகின்றது. இதை பயன்படுத்தி நாட்டை கூறுபோட்டு விற்கின்றது. எந்தப் பகுதி யாருக்கு என்று அன்னிய நாடுகள் தமக்குள் மோதிக் கொள்ளுகின்ற இன்றைய சூழலில், மக்களை இனவாத - மதவாத மோதலுக்குள் ஈடுபடுமாறு தொடர்ந்து பார்த்துக் கொள்கின்றது. நாட்டை கூறுபோட்டு விற்கின்ற, அன்னிய கடனில் மூழ்கின்ற நாட்டைப் பற்றி சிந்திக்கின்ற நிலையில், யாரும் இருக்கக் கூடாது. இது அரசின் கொள்கை மட்டுமல்ல, தேர்தல் அரசியலில் ஈடுபடுகின்ற அனைவரதும் (தமிழ், முஸ்லிம், மலையக..) நவதாராளவாதக் கொள்கையே. திட்டமிட்டே இனவாதத்தை தூண்டி விட, பதிலுக்கு தமிழ், முஸ்லிம் இனவாதங்கள், மதவாதங்கள் மூலம் மக்களை மோதவைக்கின்றனர். நாட்டை அரசு விற்பதற்கே, பிற இனவாதங்கள் துணை போகின்றன. தமிழ், முஸ்லிம் இனவாதங்கள், மதவாதங்கள் பேசும் எவரும், அரசு நாட்டை விற்பதை குறித்து எதுவும் பேசுவதில்லை. நாட்டை விற்பதற்காகவே அரசு இனவாதம் தூண்டப்படுவதை பற்றி - இந்த இனவாதங்கள் பேசுவதில்லை.

இப்படி அரசின் இன-மத ஒடுக்குமுறைக்கு, பிற இனங்கள் துணைபோவதல்ல. அரசின் இனவாத நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அதை முறியடிக்க வேண்டும். இனவாத பாத யாத்திரைகளை நடத்துவதோ, மக்களை இனவாதம் மூலம் இனரீதியாக திரட்டுவதால் மாற்றம் வந்துவிடுமா எனின் இல்லை. இனவாத கட்சிகள் தத்தம் இனம் சார்ந்து ஒரே அணியாக மாறுவதலோ!, பிற இன (முஸ்லிம்) மக்களுடன் இணைந்து நிற்பதனாலோ!, இனவொடுக்குமுறையில் மாற்றம் வந்து விடுமா!? எப்படி சொல்லுங்கள். மாற்றம் வரும் என்பதை சொல்ல முடியாது என்றால், மக்களை தொடர்ந்து ஏமாற்ற முனைகின்றீர்கள் என்பது மட்டுமே உண்மை.

இப்படிப் போராடினால் ஐ.நா முதல் அன்னியநாடுகள் உதவும் என்பது ஒரு வடிகட்டிய பொய். இப்படி முன்னிறுத்தும் நாடுகள், நாட்டை தமக்குள் பங்கிட்டுக் கொள்ளவே இதைப் பயன்படுத்தும். இந்த நாடுகளுக்கே நாட்டை பங்குபோட்டு, அரசு விற்றுக்கொண்டு இருக்கின்றது. இதற்கு தான் இனவாதம் என்பது, நீங்கள் காட்டும் நாடுகளுக்கு நன்கு தெரியும்;. இனவாதத்தை தூண்டுபவர்களும் அவர்களே. தூண்டுபவர்கள் தீர்வு தருவார்கள் என்பது,, பொய்களின் மேலான இனவாதக் கற்பனைகளே.

இனவாதவொடுக்குமுறைக்கு எதிராக இனவாத – மதவாத அடிப்படையில் அணிதிரளும் போதே, சிங்கள இனவாதமும், இனவொடுக்குமுறையும் செழித்து வளரும். இதைத்தான் அரசு செய்கின்றது. நாட்டை கூறுபோட்டு விற்கும் அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு, இனவாதத்தையும் - மதவாதத்தையும் தூண்டிவிடுவதை தவிர, வேறு மாற்று வழி அரசிடம் கிடையாது. அரசு கடனை வாங்கி அதற்கு பெரும் தொகையை வட்டியாக, தேசிய வருமானத்தை தொடர்ந்து கட்டிக் கொண்டு இருக்க, இனவாதமே இன்று அவசியமாகின்றது. இனவாதமின்றி வட்டி கட்ட முடியாது.

அரசு நாட்டை விற்க தூண்டிவிடும் இனவாதம் மூலம், சிங்கள மக்களை இனவாதம் மதவாதம் மூலம் தன்பக்கம் வைத்திருக்க விரும்புகின்றது. இதை தடுப்பதன் மூலமே, அரசின் இன-மத ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்தமுடியும்;. அரசின் சிங்கள இனவாதத்தை, பௌத்த மதவாதத்தை தடுக்கும் அரசியல் என்பது, பிறிதொரு இனவாதமாக அணிதிரள்வதல்ல. மாறாக இனவாதமற்ற மக்கள் கூட்டமாக அணிதிரள்வது. குறிப்பாக சிங்கள மக்களுடன் இணைந்து, சிங்கள - பௌத்த அரசுக்கு எதிராக போராடுவதற்காக, எல்லா வகையான இனவாதங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கான அரசியலை நோக்கியே, இனவொடுக்குமுறைக்குள்ளாகும் மக்கள் பயணிக்க வேண்டும். மாறாக சொந்த இனவாதம் - மதவாதம் மூலம், அரசை ஒரு நாளும் வெற்றி கொள்ளமுடியாது.