Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கிய இயக்க அதிகாரங்களையும், பாசிசமயமாக்கலையும் கேள்விக்குள்ளாக்கியது – 1986 இல் நடந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம். இந்தப் போராட்டங்கள் தன்னெழுச்சியானவையல்ல. திடீரென ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்திய அற்புதங்கள் எதுவும், இனவாதம் பேசிய யாழ் வெள்ளாளிய வலதுசாரிய தமிழ் சமூகத்தில் சாத்தியமற்றது. தன்னெழுச்சியாக போராட இடதுசாரியத்தை முன்வைத்து போராடும் பாரம்பரிய சமூகமாக – யாழ் சமூகம் இருந்ததில்லை.

 

இந்த வரலாற்றுச் சூழலிலேயே மாணவர் சமூகத்தையும், ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து வழிநடத்தக் கூடிய, ஒடுக்கப்பட்ட மக்களை நேசிக்கும் தலைமையானது பல்கலைக்கழகத்திலும் - சமூகத்திலும் கருக்கொண்டு இருந்தது. இதுவே அன்றைய யாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் அரசியல் அடித்தளம்.

1986 போராட்டத்தின் போது வெளியான துண்டுப்பிரசுரங்கள், முன்வைத்த கோசங்கள், ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், ஆற்றிய உரைகள், கொடுக்கப்பட்ட பத்திரிகை அறிக்கைகள்.. அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களை முதன்மைப்படுத்தியிருந்தது. இவை கண்மூடித்தனமானவையல்ல, தன்னெழுச்சியானவையுமல்ல. இதை அக்கால ஆவணங்களின் துணையுடன் விரிவாக முன்வைக்கும் போது, இக் கூற்று முழுமை பெறும். அன்று நடந்த மாணவர் போராட்டத்தை முறியடிக்க புலிகள் முதல் சிவத்தம்பி வரை எடுத்துக்கொண்ட எதிர்ப்புரட்சிகர அணுகுமுறைகளை மாணவர்கள் எதிர்கொண்ட போது, கையாண்ட புரட்சிகரமான அணுகுமுறை என்பது உணர்ச்சி வசப்பட்டதல்ல, தன்னெழுச்சி வகைப்பட்டதல்ல. வலதுசாரிய அணுகுமுறைகளுமல்ல. இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தும் புரட்சிகரமான அரசியலால் வழிநடத்தப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த 1986 போராட்டமும், இத்தகைய அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு தியாகியானவர்களும், வரலாற்று ரீதியாக இருட்டடிப்பு செய்யப்படும் போக்கில் இருந்து இன்னமும் விடுபடவில்லை. இந்தப் போராட்டங்களைக் குறித்து கூற முனைவர்கள் கூட, அதை அரசியல்ரீதியாக சிறுமைப்படுத்திக் காட்டவே முனைந்தனர். இதற்காக காலம், இடம், சம்பவங்கள் என அனைத்தையும் தலைகீழாகப் புரட்டவும் - திரிக்கவும் முனைகின்றனர். தங்களுடைய வெள்ளாளிய அரசியல் சிந்தனைமுறையில் இருந்து, போராட்டத்தை தன்னியல்பானதாகவும் - உணர்ச்சிவசப்பட்டவர்களின் போராட்டமாகவும் காட்டவும் - திரிக்கவும் செய்கின்றனர். இதை மறுக்கும் ஆவணங்களில் பல எம்மால் பாதுகாக்கப்பட்டதுடன், அன்றைய கால பத்திரிகைகளில் இதற்கான குறிப்புகள் பலவற்றை காண முடிகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்கால அரசியல் போராட்டத்திற்காக, இவற்றையெல்லாம் வரலாறாக்க வேண்டியிருக்கின்றது. ஒடுக்கியவன் கூறியதல்ல மனிதனின் உண்மை வரலாறு,

1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய அரசியல் சர்வதேசியமல்லாது தமிழ் தேசியம் சார்ந்த இடதுசாரியமாகும். இருந்தபோது தமிழ் இனவாதம் கோலோச்சிய அக் காலகட்டத்தில், இந்தத் தேசியம் சார்ந்த இடதுசாரியமே ஒடுக்கப்பட்ட மக்களின், ஒரே மூச்சாக இருந்திருக்கின்றது.

இப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த தமிழ் தேசியவாத இடதுசாரியம் திடீரென சமூகத்தில் தோன்றவில்லை. அதற்கென்று தனி வரலாறு இருக்கின்றது. அது 1970களில் தமிழ் தேசியம் முன்வைத்த போலி இடதுசாரியத்தில் இருந்து தோன்றவில்லை. வலதுசாரி தமிழ் தேசியம் 1970 களில் இடதுசாரியத்தின் பெயரில் முன்வைத்த போலி இடதுசாரியமானது, வலதுசாரியத்தின் இருப்புக்காகவும் - அதை நியாயப்படுத்தலுக்காகவும் பயன்பட்டதே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தும் அரசியலாக என்றைக்கும் மாறியதில்லை. அந்த போலி இடதுசாரியமானது இயக்க அக முரண்பாட்டையும், பிளவுகளையும் உருவாக்கியதுடன், அமைப்புகளை சிதைத்த போதும் - ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்ரீதியாக முன்னிறுத்தியிருக்கவில்லை. நடைமுறையில் வலதுசாரியமாகவே வெளிப்பட்டது.

அதேநேரம் தமிழ் தேசியவாத இடதுசாரியம் வரலாற்று ரீதியான சர்வதேசிய வர்க்க கட்சிகளுக்;கும் - இனவாதத்துக்கும் இடையிலான ஒரு வர்க்கப் போராட்டத்தில் இருந்து உருவாகவில்லை. அப்படியொரு போராட்டமே நடக்கவில்லை. சர்வதேசியம் பேசிய வர்க்க கட்சிகள் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இருந்து விலகியே இருந்தனர்.

அன்று சர்வதேசியத்தை முன்னிறுத்திய எந்தக் கட்சிகளும், ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களுடன் இணைந்து போராடவில்லை. 1960 களில் சர்வதேச கம்யூனிச இயக்கம் வர்க்கப் புரட்சியை முன்னிறுத்தி பிளவடைந்த போது, இலங்கையிலும் அப்பிளவு நடந்தது. வர்க்கப் புரட்சியை மறுத்த இலங்கைக் கட்சிகள் அனைத்தும், இனவாத ஆளும் முதலாளித்துவ வர்க்கக் கட்சியாக சீரழிந்து, இனவொடுக்குமுறையாளராகவே மாறினர். இந்தப் போலி இடதுசாரியத்தை அம்பலப்படுத்தியே, தமிழ் இனவாதமானது போலி இடதுசாரிய வேசத்தை தனக்கு போட்டுக்கொள்ள முடிந்தது.

மறுபக்கத்தில் வர்க்க போராட்டத்தை முன்வைத்து சண் தலைமையில் பிளவுண்ட கட்சியானது, பொது இடங்களில் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையை எதிர்த்து வடக்கில் போராடியது. அதேநேரம் நாடு முழுக்க பல்;வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியதுடன், மலையகத்தில் பாரிய தொழிற்சங்கத்தை கொண்டிருந்தது. இருந்த போதும் வர்க்கக் கட்சியாக, முரண்பாடுகள் மீது நடைமுறையில் போராடும் கட்சியாக இருக்கவில்லை. இதனால் அக்காலத்தில் இருந்த அரசியல் முரண்பாடுகள் மீது, வர்க்க அரசியல் நிலைப்பாட்டை எடுத்து செயற்பட முடியவில்லை.

இந்த அரசியல் காரணமாகவே சண் தலைமையிலான கட்சியில் இருந்த மாணவ அமைப்பின் தலைவரான ரோகண விஜவீர பிரிந்து சென்றதுடன், Nஐ.வி.பியை உருவாக்கினார். Nஐ.வி.பி 1971 இல் இலங்கையில் முதன்முறை ஆயுதக் கிளர்ச்சியை நடத்தியது. இந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த வர்க்கக் கட்சியாக இருக்கவில்லை. மாறாக இளைஞர்களை முன்னிறுத்திய குட்டிபூர்சுவா வர்க்கத்தைச் சார்ந்து இருந்ததுடன், சமகால முரண்பாடுகளான இனவொடுக்குமுறை மீது அரசியல்ரீதியாக தலையிடவில்லை.

குறி;ப்பாக இனவாதம் - மதவாதம் என்பது ஆளும் வர்க்கத்தினதும், அதை முன்னிறுத்திய தேர்தல் கட்சிகளினதும் அரசியலாக இருந்த போது, அதை எதிர்த்து Nஐ.வி.பி கிளர்ச்சி செய்யவில்லை. சந்தர்ப்பவாதமாகவே அதைக் கடந்து சென்றனர். சண் தலைமையிலான கட்சியும், 1970 களில் அதன் அரசியல் வரலாற்று வழியில் வந்த புதிய கட்சிகளும், இனவொடுக்குமுறைக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை நடத்தவில்லை. அரசின் இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடிய தமிழ் தரப்பின் இனவாதத்தை காட்டினரே ஒழிய, இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் வர்க்க அரசியலை முன்னெடுக்கவில்லை. இந்த வகையில் இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் வர்க்கக் கட்சியாக இருக்கவில்லை. அதேநேரம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கிய தமிழ் இனவாத பண்பையும், அதன் பரிணாமத்தை எதிர்த்துப் போராடும் வர்க்கக் கட்சியாக நடைமுறையில் இருக்கவில்லை. 1970 களின் பின் "சர்வதேசியம்" பேசியவர்களின் அரசியலில் கடுகளவு கூட இனவொடுக்குமுறைக்கும் மற்றும் இனவாதத்துக்கும் எதிரான, எந்த அரசியல் நடைமுறைகளையும் காணமுடியாது.

இப்படிப்பட்ட 1970 க்குப் பிந்தைய 50 வருடங்களில் இனவொடுக்குமுறைகளும் - இனத்திற்குள்ளான அகவொடுக்குமுறைகளும் கூர்மையடைந்த காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல்ரீதியாக கைவிடப்பட்டார்கள். இன முரண்பாடு கூர்மையாகி இரண்டு நாடாக, இரண்டு இனமாக பிரிந்து கிடந்த அரசியல் சூழலில், ஒன்றுபடுத்தும் வர்க்க அரசியலை கையிலெடுக்கவில்லை. சர்வதேசியம் என்பது வெறும் கொள்கையாகவும், இருப்புக்கானதாகவுமே பயன்படுத்தப்பட்டது. மறைமுகமாக இனவாதத்துக்கு துணைபோனது.

இந்தச் சூழலில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் தம் மீதான இனவொடுக்குமுறையையும், அதேநேரம் ஜனநாயகமற்ற இ;னவாத தமிழ் பாசிச கட்டமைப்புக்குள் மூச்சுகூட விட முடியாது திணறினர். இதற்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டங்கள் முதல் தமிழ் இடதுசாரிய அரசியல் வழிகாட்டலின் கீழ் நடத்திய போராட்டங்கள், வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன. இவைக்கு பின்னணியில் தமிழ் தேசியவாத இடதுசாரிகளின் தலையீடு, வழிகாட்டல்கள், அவர்களின் கருத்தியல் தாக்கங்கள் இருந்தன. இதைக் கொண்டிருந்தவர்கள் குறித்தே முந்தைய கட்டுரையில் பேசினோம். இதற்கு அடிநாதமாக இருந்தது என்.எல்.எப்.ரி.யே. அது எப்படி நடந்தது என்பதைப் பார்ப்போம்.

தொடரும்

 

 மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05