இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் போராட்டமே, ஆயுதப் போராட்டமாக மாறியதா எனின் இல்லை. இனவொடுக்குமுறைக்கு எதிரான மக்கள்திரள் போராட்டமே நடக்கவில்லை. தமிழ் இனவாதத்தை வாக்கு அரசியலுக்காக முன்வைக்க, இனவொடுக்குமுறை பயன்படுத்தப்பட்டதே வரலாறு.
தேர்தல் அரசியலுக்கு வெளியில், இனவாதமல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள்திரள் அரசியலை வரலாற்றில் காணமுடியாது. இது தான் கடந்த வரலாறு.
இந்த தேர்தல் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட இனவாதப் பின்னணியிலேயே, 1970 களில் உருவானதே தனிநபர் பயங்கரவாதமும், அதற்கு எதிரான அரச பயங்கரவாதமும். இவை தத்தம் வழியில் இனவாதமாக வளர்ச்சி பெற்றதன் விளைவே, ஆயுதப் போராட்டமாக மாறியது. இந்த ஆயுதப் போராட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட பின்னணியில் இருந்தது, இந்திய இலங்கை முரண்பாடே. குறிப்பாக அமெரிக்க - ருசிய முரண்பாடே, இலங்கையில் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியுற்றதே ஒழிய, சொந்த மக்களின் போராட்டங்களல்ல. இந்தியா வழங்கிய ஆயுதப் பயிற்சி, ஆயுதங்கள், பணம் இவைதான் வீங்கி வெம்பிய ஆயுதப் போராட்டமாக, கூலிப்படையாக உருமாற்றியது. இதற்கு அமைவாக நடந்தேறிய "இனக்கலவரம்" (1977, 1981, 1983), அதாவது தமிழ் மக்களை இனரீதியாக ஒடுக்கிய வன்முறை சம்பவங்கள் ஊக்கியாக செயற்பட்டது.
இனவொடுக்குமுறைக்கு எதிரான மக்கள்திரள் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக மாறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டத்தில் இனவொடுக்குமுறைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்கள் உருவாகவில்லை. தேர்தல் அரசியல் கண்ணோட்டத்தில் உருவான ஆயுத வன்முறையின் பின்னணியில், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இருக்கவில்லை, உணர்ச்சியின் அடிப்படையில் தேர்தலில் திரண்டவர்களைக் கொண்டு - அதே உணர்ச்சியில் உருவாக்கப்பட்ட வன்முறையும் - தேர்தல் அரசியலுடன் இணைந்து, இனவொடுக்குமுறைக்கு எதிரான மக்கள்திரள் அரசியலை மறுதளித்தனர்.
1970 களில் உணர்ச்சி அடிப்படையில் உருவான வன்முறை என்பது, தேர்தல் கட்சியின் வெற்றிக்காக நடத்தப்பட்டது. தமிழ் இனவாதிகளை தோற்கடித்த, தோற்கடிக்கக் கூடிய வேட்பாளர்களை இலக்கு வைத்து அவர்களைக் கொன்றது. அதாவது இனவாத தேர்தல் கட்சிகள் யார் யாரைத் துரோகி என்றனரோ, அவர்களைக் கொன்றனர். கொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியபோது, இனவாத தேர்தல் கட்சிகளே நீதிமன்றத்தில் வழக்காடியதும், அவர்கள் சிறையில் இருந்து மீண்டு வந்த போது மாலை போட்டு வரவேற்றனர். இதன் மூலம் இது போன்ற கொலைகளை ஊக்குவித்து, இதையே இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக மாற்றினர். தாமல்லாத அனைவரையும் கொல்லும் புலிகளின் மனிதவிரோத அரசியல், இஙகிருந்து இப்படித்தான் உருவானது.
ஒடுக்கப்பட்ட மக்கள்திரள் போராட்டம் நடந்து, அதிலிருந்து புலிகள் போன்ற விதிவிலக்கான மனிதவிரோத இயக்கங்கள் தோன்றவில்லை. மாறாக தேர்தல் அரசியல் கட்சியின் வெற்றிக்காக நடத்திய வன்முறை வடிவில் இருந்தே புலிகள் தோன்றினர்.
இத்தகைய தனிநபர் பயங்கரவாத வன்முறைக்கு எதிரான சட்டமும் – நீதியும், துரோகத்தின் செயலாகக் காட்டினர். அதை முன்னின்று முன்னெடுத்தவர்களை கொல்லும் வன்முறை, போராட்டமாகக் காட்டப்பட்டது. இதன் போது இனவொடுக்குமுறையின் மய்யமாக இருந்த அரச பயங்கரவாதமானது, கைது, சித்திரவதை, கொலைகளாக வளர்ச்சியுற்றது. அரச பயங்கரவாதத்தின் வளர்ச்சியையும், கொடூரத்தையுமே இனவொடுக்குமுறையாகக் காட்டப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறை முன்வைக்கப்படவில்லை. இதில் இருந்து ஆயுதப் போராட்டம் வளரவில்லை.
குறிப்பாக தரப்படுத்தலுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் கூட, மக்கள்திரள் போராட்டமாக வளரவில்லை. மாறாக தனிநபர் பயங்கரவாத வன்முறைக்கு இனவாத உணர்ச்சியூட்டும் கருவியாகவே மாணவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்த மாணவர் போராட்டங்களை முன்னின்;று வழிநடத்தியவர்கள், தமிழ் இனவாத தேர்தல் கட்சிகளின் எடுபிடிகளாகவும் – நடந்த வன்முறையின் பின்னணியில் செயற்பட்டவர்களாக அல்லது அதில் ஈடுபட்டவர்களாகவே இருந்தனர். இனவாத தேர்தல் கட்சிகளின் வெற்றிக்காக நடத்திய தனிநபர் பயங்கரவாத வன்முறைக்கு ஊக்கியாக, 1974 களில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டின் பெயரில் நடந்த வன்முறை இருந்துள்ளது. ஆனால் இந்த வன்முறை தேர்தல் அரசியல் கட்சியால், தனிநபர் பயங்கரவாத வன்முறையாளர்களால் திட்டமிடப்பட்டது. தமிழினவாத வரலாறு சொல்வது போல் அல்ல, நடந்தது தமிழ் இனவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றிய வன்முறையே. என்ன நடந்தது என்பதை தனியாக விரைவில் பார்ப்போம்.
இனவொடுக்குமுறைக்கு எதிரான மக்கள்திரள் அரசியல் மற்றும் போராட்டம் மூலம் ஆயுதப் போராட்டம் உருவாகவில்லை. மாறாக தேர்தல் அரசியலில் இருக்கக் கூடிய ஜனநாயக மறுப்பு வன்முறை, அதற்கு சர்வதேச ரீதியாக கிடைத்த ஆதரவு, "இனக்கலவரம்" அரச பயங்கரவாதத்தின் இனவாதத் தன்மையும் - ஆயுதப் போராட்டமாக மாற்றியது.
இனவொடுக்குமுறைக்கு எதிராக போராட வேண்டிய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமானது, மறுதளிக்கப்பட்டதன் விளைவு, மற்றொரு இனவாதமாக மாறியது. அதுவும் - அரச பயங்கரவாதத்துக்கு நிகரான ஒடுக்குமுறையாக – பயங்கரவாதமாக மாறியது.
இப்படி 1970 களில் தேர்தலில் தோற்றவர்கள் வென்றவரை அரசியலிருந்து நீக்க கொல்லத் தொடங்கிய வன்முறை தொடங்கி 2009 முடிந்து போன யுத்தம் வரை, ஏற்படுத்திய சமூக விளைவுகள் கொண்டு இனவொடுக்குமுறையைக் காண்பது என்பது அரசியல்ரீதியான வங்குரோத்துத் தனமே.வன்முறை தொடங்கி யுத்தம் வரை அரசு மட்டும் இன ஒடுக்குமுறையை செய்யவில்லை, போராடிய இயக்கங்களும் இனவொடுக்குமுறையைச் செய்ததுடன், சொந்த மக்களையும் ஒடுக்கியதே வரலாறு. இப்படி உண்மை இருக்க எப்படி இனவொடுக்குமுறையை, இன்னொரு இனவாதத்தால் முன்வைக்க முடியும்?
தொடரும்
தமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)
அதிகாரத்தை மறுப்பதா இனவொடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 02)
இனவாதச் சிந்தனைமுறை! - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)
ஒடுக்குமுறையை அடையாளப்படுத்த தடையாக இருப்பது எது? - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 05)
1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode