2020 தேர்தல் குறித்து, யாழ் மையவாத சிந்தனையானது முட்டுச் சந்தியில் வந்து நிற்கின்றது. எது பாதை என்று குழம்புகின்றது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றது.
தமிழ் இனவாதமும், பிரதேசவாதமும், மதவாதமும், சாதியமும் பேசுகின்ற தங்கள் மனித விரோத வக்கிரத்துக்கு வாக்களிக்கக் கோருகின்றனர். மறுபுறம் ஒடுக்குபவனுடன் சேர்ந்து அபிவிருத்தி – வேலைவாய்ப்பு என்று கூறி, ஒடுக்கப்பட்டவன் மற்றொருவனுக்கு அடிமையாக இருக்க வாக்களிக்குமாறு கோருகின்றது. இன்று தேர்தல் வெற்றிக் கனவுகளுடன் பயணிக்கின்றவர்களின் அரசியல் சாரம் இதுதான்.
தமிழ் இனவாதிகள் கடந்த 70 வருடமாக முன்னிறுத்தி பயணித்த அதே இனவாதக் கனவுகளுடன் - தீர்வுகளை கண்டடைந்ததான போலிக் பிரமிப்புகளுடன், கொழுப்பேறிய மண்டைக் கனத்துடன் கம்பு சுத்துகின்றனர். வழமை போல் இம்முறையும் பெற்றி பெற்று, தமிழனை தமிழன் ஒடுக்குகின்ற தங்கள் அதிகாரத்தை, மறுபடியும் கோருகின்றனர்.
ஒடுக்கப்பபட்ட தேசம், தேசியத்தின் அழிவைத் தவிர, வேறு எதையும் இந்த யாழ் மையவாத இனவாதச் சிந்தனைமுறை - தேர்தல் மூலம் கடந்த காலத்தில் உருவாக்கவில்லை. தேர்தல் அரசியல் முதல் ஆயுதப் போராட்டம் வரை, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியதே ஒழிய, விடுதலைக்கு வழிகாட்டியது கிடையாது. விடுதலை என்பது இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், சாதி வாதம் மூலம் சாத்தியமில்லை.
தமிழனைத் தமிழன் ஒடுக்கும் இன ஒற்றுமை குறித்தும் - வாக்குச் சிதறாமை குறித்தும் பினாற்றுகின்ற யாழ் சிந்தனைமுறை, பாராளுமன்றத்தில் சாதித்தது என்ன? ஆயுதப் போராட்டத்தில் பெற்றது என்ன? எதுவுமில்லை. சமூகத்தைப் பின்னோக்கிப் பயணிக்க வைத்திருக்கின்றதே அதன் வரலாறு.
இனவாதிகள் தமக்குள் பேசி தீர்வு காண்கின்ற நடைமுறைச் சாத்தியமற்ற மாயையை முன்வைப்பதும், இனவாத வாக்களிப்பு மூலம் எங்கள் பலத்தை பிற இனவாதிகளுக்கு நிகராக காட்டுவதற்காக வாக்களிக்க வேண்டும் என்று கோருவதைத் தாண்டி, எதையும் முன்வைப்பதில்லை.
இனவாதம் மூலம் இனவாத ஒடுக்குமுறைக்கு தீர்வு என்ற அரைத்த மாவையே அரைத்துக் காட்டுகின்றததைத் தாண்டி, எதையும் இனவாத வாக்களிப்பு தரப்போவதில்லை. இது கடந்து வந்த வரலாறு, மீண்டும் நாளைய வரலாறாகும்.
அமெரிக்கா, இந்தியா மூலம் தீர்வு என்று கூறுகின்ற நவதாராளவாத இனவாதிகள், மக்களின் காதுக்கு பூவைப்பதன் மூலம், தனிப்பட்ட தங்கள் சொத்தைப் பெருக்குகின்றதைத் தாண்டி - எதையும் மக்களுக்காக செய்ததில்லை.
வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட எந்த இனவாதியாவது, அவர்கள் பெற்றுக்கொண்ட வாகனத்தை விற்ற காசை மக்கள் நலன் திட்டத்திற்காக கொடுத்து இருக்கின்றார்களா? அவர்கள் தங்கள் செல்வத்தை மட்டும் பெருக்கி வருவதை தாண்டி, மக்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்? சொல்லுங்கள்.
தேர்தல் வடிவம் மூலம் தீர்வு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது என்று கூறி, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து சிந்திக்கின்ற, செயற்படுகின்ற கட்சிகளுக்கு வாக்களித்தால் மட்டுமே - குறைந்தபட்சம் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.
1.அவர்களுக்கு வாக்களித்தால் உங்களுக்கு உண்மையாகவும் - நேர்மையாகவும் இருப்பார்கள்;. ஒடுக்கப்பட்ட மக்களின் அபிவிருத்தி முதல் உங்கள் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுப்பார்கள்.
2.ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை தாங்கள் அணிதிரட்டிக் கொள்ளவும், தமிழனை தமிழன் ஒடுக்குகின்ற அயோக்கியத்தனத்தை இனம் பிரித்துக் காட்டவும் - போராடவும், உங்கள் வாக்குகளை பயன்படுத்த வேண்டும்;. இது சிறிதாக இருந்தாலும் - மலையையே புரட்டிவிடுமளவுக்கு வலிமை வாய்ந்த, நெம்புகோலாக செயற்படும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை அணிதிரட்டுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்று கூறுகின்றவர்கள் யார் என்றால், உண்மையில் தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற தமிழர்கள் தான். அவர்கள் 70 வருடமாக தங்கள் நடைமுறைச் சாத்தியமற்ற இனவாத யாழ் மேலாதிக்க கொள்கையை பாதுகாக்க, ஒடுக்கப்பட்டவனாக அணிதிரளுகின்ற உங்கள் செயற்பாட்டை நடைமுறைச் சாத்தியமற்றது என்று கூறுகின்றான். ஒடுக்கும் தமிழனின் இந்த கேலிக்கூத்துக்கு, கைக்கூலியாகாமல் - பலியாடாகாமல் இருக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரள்வதே தேர்தல் கடமை.
இந்த வகையில் 2020 தேர்தலில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து இரண்டு, கட்சிகளை இனம் காண முடியும்.
1.முன்னிலை சோசலிசக் கட்சி
2.மக்கள் ஜக்கிய மேம்பாட்டு முன்னணி (சுயேட்சை)
வெவ்வேறு முரண்பாடுகளைக் கடந்து, இவர்கள் குறைந்தபட்சம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேர்மையாக இருப்பார்கள். தங்கள் நேரம், பணத்தை மக்களுக்காக கொடுப்பவர்கள் மட்டுமின்றி, மக்களுக்காக உழைக்கின்ற சமூகப் பண்பை கொண்டவராக எதார்த்தத்தில் வாழ்கின்றவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுடன் நிற்பதன் மூலம், ஒடுக்குகின்ற இனம், மதம், சாதி, பிரதேசவாதம் .. என்று எதனுடனும் சமரசம் செய்யாது போராடுகின்றவர்கள். இந்த வகையில் மக்களுக்காகக் குரல் கொடுப்பார்கள். சாத்தியமானதை நடைமுறையில் தீர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள். உங்கள் வாக்குகளை இவர்களுக்காக போடுவதன் மூலம், தமிழனைத் தமிழனாய் ஒடுக்குகின்றவனுக்கும், தமிழனை ஒடுக்குகின்ற பேரினவாதிக்கு துணை போகின்றவனுக்கும் எதிராக அணிதிரள்வன் மூலம் தான், எதையாவது பெற முடியும். ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலுக்கு வாக்களிப்பது மட்டுமே நடைமுறைச் சாத்தியமான உண்மைக்கும் - நேர்மைக்கும் வாக்களிப்பதாகும்.