Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

"முன்போல் சாதி ஒடுக்குமுறையில்லை"

  • PDF

"முன்போல் சாதி ஒடுக்குமுறை இல்லை" முதலாளித்துவ வெள்ளாளியத்தால் இப்படித்தான் புலம்ப முடியும். முன்போல் எதுதான் இருக்கின்றது!? எல்லாம் இயங்கிக் கொண்டு மாறிக்கொண்டு இருக்கின்றது. இதுதான் இயங்கியல் விதி, இது சாதிக்கு விதிவிலக்கல்ல. இதை மறுக்கிறவர்கள், நாங்கள் முன்போல் உங்களை ஒடுக்குவதில்லை என்று கூறுகின்றதன் பொருள், நவீன வெள்ளாளிய ஒடுக்குமுறை பூசிமெழுகுவதைத் தவிர வேறு ஒன்றுமல்ல.

முதலாளித்துவம், ஆணாதிக்கம், நிறவொடுக்குமுறை, மதவொடுக்குமுறை .. என எதுவும் முன்போல் இருப்பதில்லை. இதனால் இதை இல்லை என்று கூற ஒருவன் முற்படுவானேயானால், அவன் ஒடுக்குமுறையாளனாக இருக்கின்றான் என்பதுதான் பொருள்.

இது இன்று சாதி எப்படி, எங்கே இயங்குகின்றது என்பதைக் காட்டு என்று கேட்பதற்கு நிகரானது. பாரம்பரிய சாதிய சுடலையில் தான் எரிப்போம் என்பதும், யார் தேர் தடத்தை பிடிக்கலாம் என்பதை வரையறுப்பதாகட்டும், யார் பூசாரி என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயில் எங்கே - எது வரை யார் நுழைய முடியும் என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயிலில் பெண்களின் எல்லை என்ன என்பதை வரையறுக்கும் ஒழுக்க விதியாகட்டும், சேட்டைக் கழற்று - செருப்பை கழற்று என்ற அதிகாரமாகட்டும் இவற்றின் பின்னால் சாதிய அதிகாரமும் - ஒடுக்குமுறையுமே இயங்குகின்றது. இது இன்று வெளிப்படையாகவும் - மறைமுகமாகவும் இயங்குகின்றது.

இவற்றைக் கடந்து தனிச்சொத்துடமை அடிப்படையில் யாரை எங்கே அனுமதிப்பது என்பது, எனது தனியுடமையிலான தனி உரிமை சார்ந்தது என்று கூறும் எல்லையில் கூட சாதி இயங்குகின்றது. எல்லா பண்பாட்டு - கலாச்சார தளத்திலும் சாதி இயங்குகின்றது. சாதி இயங்குகின்றது என்றால், வெளிப்படையாகவும், நாசூக்கான முறையில் வடிவம் மாறி ஒழித்தும் இயங்குகின்றது. எந்த வடிவில் இருந்தாலும் அது ஒடுக்குமுறைதான். மனிதனை மனிதன் சமமாக அங்கீகரிக்காத எல்லாத் தளத்திலும், சாதிய ஒடுக்குமுறையே இயங்குகின்றது. சாதிய சமூக அமைப்பின் இயங்குவிதியே இது தான்.

நூலகத்தை மீளத் திறக்க சாதி தடையாக இருக்கவில்லை என்ற வெள்ளாளியத்தின் இன்றைய ஊளையிடல்களும் - கூச்சல்களும், சாதிய ஒடுக்குமுறையே. ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவரை ஒடுக்கும் சாதிய சிந்தனை மூலம் முன்னிறுத்திக் காட்டிக் கொள்வதன் மூலம், அதை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக காட்டுவதும் - கூறுவதும் கூட, ஒடுக்கும் வெள்ளாளியமே.

1970 களில் கூட்டணியின்; வாலாக, அதேநேரம் தலைக்கும் வாலுக்கும் முரண்பாடாக உருவான நான்கு இயக்கங்களான "ஈழத் தமிழ் இயக்கம் (1969)" "தமிழ் மாணவர் பேரவை (1970)" "தமிழ் இளைஞர் பேரவை(1973)", "தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(1975)" இணைந்தவர்களில் பலர், ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து வந்தவர்கள். "தமிழ் இளைஞர் பேரவை(1973)" தலைவராகவும், "தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(1975)" செயலாளராகவும் இருந்தவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். இதனால் அவர் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்தவர் என்று யாராவது கூற முற்பட்டால், அது வெள்ளாளியம்.

1977 தேர்தலின் போது கூட்டணி சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வேட்பாளராக அவரை தேர்தல் அரசியலில் முன்னிறுத்துமளவுக்கு (அவர் அதை மறுத்து விட்டார்) முன்வந்த கூட்டணி, ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்தது கிடையாது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை மோசடி செய்ய, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த - ஒடுக்கும் சாதிக்கு அரசியல் ரீதியாக சேவை செய்யும் பிரதிநிதிகள் தேவைப்பட்டனர்.

1960 களில் சாதிப் போராட்டத்தை தடுக்க 1970 களில் கூட்டணி "சமபந்தி" நடத்திய போது, சிவகுமாரன் அதை முன்னின்று செய்யுமளவுக்கு வெள்ளாளியத்தின் பிரதிநிதியாக உழைத்தவன். இப்படி உருவான இளைஞர்கள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் அல்ல, மாறாக ஒடுக்குகின்றவன் செய்த வெள்ளாளிய அரசியலுக்கு "தமிழ் தேசியத்தின்" பெயரில் உருவானவர்கள். மேலே பெயர் குறிப்பிட்ட நான்கு அமைப்புகளில் இருந்தவர்களில் பலர் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து தலைமைகளில் இருக்குமளவுக்கு, தனிப்பட்ட ரீதியில் சாதி பார்க்காத அளவுக்கு இளைஞர்களின்; உலகமது. ஆனால் அவர்களின் அரசியல் வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பை பிரதிநிதித்துவம் செய்தது. 1960 களில் சாதி போராட்டத்தை எதிர்த்து உருவான அரசியலில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களுக்கு முன்னிலைப் பாத்திரத்தை வழங்கியதுடன் - அதை வெள்ளாளியம் அங்கீகரித்தது. இதன் மூலம் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகின்ற பித்தலாட்டத்திற்கு முன்னிலை வகித்ததுடன் – அதற்கு தலைமையும் தாங்கினர். இந்த நான்கு வெள்ளாளிய அமைப்புகளில் இருந்தவர்கள் தான் - பின்னாளில் இயக்கங்களின் (பிரபாகரன் உட்பட) தலைவர்கள்.

கூட்டணியின் வெள்ளாளிய அரசியலே பித்தலாட்டமானது. "வட்டுக்கோட்டை தீர்மானம் (1976)" புரட்சிகர வேசம் போட்டது. சுரண்டலற்ற – மதச் சார்பற்ற சமூகம் பற்றி பேசுகின்றது. அத்துடன் இதன் தீர்மானம் ஒன்று "தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும், எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்" என்கின்றது. 1977 தேர்தல் இதற்காக வாக்களிக்கப்பட்டது என்றால் இது எப்படி மோசடியோ, அது போல் சாதி பற்றிய கூற்றும் பித்தலாட்டம் நிறைந்தது. புலிகள் இதில் இருந்து –அதே மோசடிகளுடன் தோன்றியவர்களே.

கூட்டணி இது மட்டும் செய்யவில்லை. 04.02.1976 இல் பாராளுமன்றத்தில் செல்வநாயகம் "விடுதலை பெற்ற இறைமையுள்ள மதசார்பற்ற சமதர்ம நாடான தமிழ் ஈழப்;" பிரகடனத்தை செய்த போது, இறைமை பற்றியும், மதசார்பற்ற தன்மை பற்றியும், சமதர்மம் பற்றியும் பேசுகின்ற பித்தலாட்டம் இன்றி, அரசியல் நகர்த்தப்படவில்லை. இதைத்தான் புலிகளும் செய்தனர்.

இந்த அரசியல் தான் «நான் சாதி பார்ப்பதில்லை.» «இப்போது எங்கே யார் சாதி பார்க்கின்றனர்» என்று உளற வைக்கின்றது. வெள்ளாளியச் சிந்தனைமுறையின் இந்த உளவியலே, மோசடியை சார்ந்தது. இது தான் "முன்போல் சாதி ஒடுக்குமுறை இல்லை" என்று கூறுவதை, வெள்ளாளிய அறிவியலாக பினாத்துகின்றது.

தலித் வெள்ளாளியமோ "படித்து பட்டம் பெற்று - பொருளாதார ரீதியில் முன்னேறினால்" சாதி ஒழிந்து விடும் என்பது - இங்கு சாதியைக் காண்பதும் கற்பனை என்கின்றது.

சாதியை அடையாளமாக்கி பிழைத்துக் கொள்ளும் தலித்திய வெள்ளாளியம் இருப்பது போல், சாதி ஒடுக்குமுறையைக் காட்டி பிழைக்கும் அடையாளப் பிழைப்புவாத வெள்ளாளிய தலித்தியம் இயங்குகின்றது. பிறப்பை முன்னிறுத்தி தனிநபரை அணுகுவது வரை - சாதிய ஒடுக்குமுறையை வரையறுக்கும் வெள்ளாளிய தலித்தியம் இயங்குகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத, அந்த மக்களை ஒடுக்குமுறையில் இருந்து விடுபட வழிகாட்டாத சிந்தனை முறைகள் எல்லாம், வெள்ளாளிய சிந்தனை முறையின் பிரதி தான்.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றது போன்றே, இன்று இன ரீதியான ஒடுக்குமுறையும் காணப்படுகின்றது. இதில் ஒன்றை மட்டும் காண்கின்ற முறை வெள்ளாளியச் சிந்தனை முறை. ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தை எதிர்ப்பது, புலியெதிர்ப்பு .. என்று அனைத்து வகையான தலித்தியமும், வெள்ளாளியமும், வெள்ளாளியத்தின் கூறாகும். வெள்ளாளியம் என்பது ஒடுக்கும் சிந்தனை முறை. அது எல்லா ஒடுக்குமுறையிலும் தன்னை ஏதோ ஒருவிதத்தில், ஒடுக்கும் ஏதோ ஒரு தரப்புடன் ஜக்கியப்படுத்திக் கொள்ளும். அது ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி தன்னை அடையாளப்படுத்த மறுக்கின்ற போது, அது சாதிய சமூக அமைப்பில் வெள்ளாளியமாகவே இயங்குகின்றது. சாதி பலமுனைகளில் பல வேசத்தில் இயங்குகின்றது. இதில் தலித் வேசமும் ஒன்று.

Last Updated on Sunday, 05 July 2020 18:03