Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

சுமந்திரனின் "தமிழ் தேசியம்" குறித்து "ஆய்வாளர்" ஜோதிலிங்கத்தின் புலம்பல்

  • PDF

"தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் நாங்கள் பூச்சியம்" என்று கூறுவதே, யாழ் மையவாதச் சிந்தனை முறை.  இப்படி "தமிழ் தேசியவாத ஆய்வாளராக" முன்னிறுத்தப்படும் ஜோதிலிங்கம் சுமந்திரனுக்கு எதிராக முன்வைக்கின்றார்.

சுமந்திரனுக்கு எதிரான "தமிழ்த் தேசியம்" இப்படித்தான், முனங்கி, முழங்குகின்றது. சுமந்திரனின் அரசியலென்பது "தமிழ் தேசியம்" நீக்கம் செய்யப்பட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அரசியல் அல்லது அதன் அங்கம். அது மேற்கு நாட்டு "லிபரல்" அரசியலாம். அதாவது யாழ் மைய்யவாத வெள்ளாளிய சிந்தனைக்கு பொருந்தாத ஜனநாயக  - விடுதலை அரசியலாம்.

இப்படி மேற்கு ஏகாதிபத்தியத்தின் மடியில் படுத்துக் கிடந்து கனவு காண்கின்ற "தமிழ் தேசியமானது", ஐக்கிய தேசிய கட்சி ஊடாக மேற்கு ஏகாதிபத்தியத்தை சுமந்திரன் அணுகுவதை துரோகம் என்கின்றனர். எதிர்ப்பு அரசியல் - இணக்க அரசியல் என்று, ஓடுக்கும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி மோதுகின்ற பிழைப்புவாதம்.

1975 இல் "தந்தை" செல்வா முன்வைத்த "தமிழ் தேசியத்தை" சுமந்திரன் கைவிட்டுவிட்டார் என்று வரலாற்று ரீதியாக ஆய்ந்து கூறும் ஜோதிலிங்கம், தன் வரலாற்றில் தான் கைவிட்டு – காட்டிக் கொடுத்த வரலாற்று திரிபுகள் மீதேறி புலம்புகின்றார்.
1985 - 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் நாங்கள் முன்னின்று எடுத்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நீங்கள், வரலாற்றுக்கு முரணாக புலம்பவது எந்த அடிப்படையில்? யாருடைய நலனுக்காக?

1985 இல் புலிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கி – மாணவர் சமூகத்தையே  ஒடுக்கிய போது - அதை எதிர்த்து நின்றவர்களில் நீங்களும் ஓருவர். மறந்து விட்டீர்களா!?  மாணவர்களை ஓடுக்கிய புலிகளுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர் சங்கம் போராட மறுத்து, புலிப் பினாமியாக இயங்கிய சூழலில், மாணவர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய மாணவர் அமைப்பின் தலைவராக உங்களை நாங்கள் தெரிவு செய்தோம். நினைவு இருக்கின்றதா? ஆம், அன்று புலிக்கு எதிராக, புலி அரசியலை எதிர்த்து தலைமை ஏற்றீர்கள். அப்படித்தானே.

 

இப்படி 1985 இல் புலிக்கு எதிராக உருவான அந்த புதிய மாணவர் சங்கத்தை உருவாக்க முன்னின்று உழைத்து விஜிதரனை, 1986 இல் புலிகள் கடத்தி காணாமலாக்கிய போது, மாணவர் - மக்கள் ஒருங்கிணைந்த போராட்டம் உருவானது. அப்போதும் நீங்களே அதற்கு தலைவர். நாங்கள் அன்றிருந்த எல்லா இயக்கத்தையும் எதிர்த்து ஜனநாயகப் போராட்டத்தை நடத்திய போதும், புலிகள் மட்டும் எமக்கு எதிராக மாறி எம்மை தாக்கிய போது – அவர்கள் எம் எதிரியாகவும் முன்னின்றனர். இதற்கு நீங்கள் தலைமை ஏற்ற போது - உங்கள் செயற்பாடுகள் மாணவர்களின் பொதுநோக்குக்கு முரணாக இருந்தது குறித்து விமர்சனம் இருந்த போதும், எங்கள் அனைவரதும் கூட்டு முடிவுகளுக்கு நீங்கள் தலைமை ஏற்றீர்கள். அன்று புலியின் அரசியலையும் - அதன் மக்கள் விரோத கூறுகளையும் எதிர்த்து போராடிய நாங்கள் - புலியின் மக்கள் விரோத அரசியலை ஒரு நாளும் அங்கீகரித்தது கிடையாது. ஆனால் நீங்கள்!?

அன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக - பலரை புலிகள் கொன்றனர். நீங்கள் இன்று அந்த தியாகத்தை – போராட்டத்தை – வலியை கொச்சைப்படுத்தும் வண்ணம், எந்தவிதமான சமூகப் பொறுப்பும் - மனித உணர்வும் இன்றி தலைகீழாக போடும் தோப்புக்கரணத்தின் நாற்றம் - தாங்க முடியவில்லை.

1986 இன் இறுதியில் உங்களை கைது செய்து அழிக்க - புலிகள் உங்கள் இருப்பிடத்தை முற்றுகையிட்டு சூறையாடியது நினைவிலுண்டா? எங்கள் போராட்டப் புகைப்படங்கள் - ஆவணங்கள் அனைத்தையும் அங்கு இருந்து எடுத்துச் சென்ற புலிகள், அதை கொண்டு பலரை ஓடுக்க காரணமான அந்த நிகழ்வு வரலாற்றுக்கு முரணானதா? உங்களையும், விமலேஸ்வரனையும் தம்மிடம் விசாரணைக்கு ஒப்படைக்குமாறு பல்கலைக்கழகம் ஊடாக மாணவர் சங்கமான எம்மிடம் கோரிய போது, நாங்கள் உங்களை ஒப்படைப்பதாயின் உங்கள் உயிருக்கு உத்தரவாதத்தைக் கோரினோம். அதற்கு புலிகள் மறுத்த போது, நாங்கள் உங்களை ஒப்படைக்க மறுத்தோம். நீங்கள் பிழைப்புக்காக அதை எல்லாம் மறந்து போகலாம், நாங்கள் மறக்க மாடடோம்.

இப்படி அன்று நாங்கள் முன்வைத்த ஜனநாயகக் கோரிக்கையை, இன்று வரை கைவிட்டது கிடையாது. புலியின் மக்கள் விரோத அரசியலை, நாங்கள் ஏற்றுக் கொண்டது கிடையாது, அதை சுமந்திரன் ஏற்றுக் கொள்ளவில்;லை என்று கூறி, நீங்கள் கொந்தளிப்பது வேடிக்கையாக இருக்கின்றது. "தந்தை" செல்வா முன்வைத்ததை கைவிட்டதாக சுமந்திரனை குற்றஞ்சாட்டும் நீங்கள், எதையெல்லாம் கைவிட்டு ஓடுக்கப்பட்ட மக்களின் முதுகில் சவாரி செய்கின்றீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்.

"தந்தை" செல்வா 1948 - 1949 மலையக மக்களின் மேலான இனவொடுக்குமுறைக்கு எதிராக எதை முன்வைத்து கட்சியை தொடங்கினாரோ அதைக் கூட கைவிட்டது, உங்கள் "தமிழ் தேசியத்துக்கு" தெரியாமல் போனது எப்படி? எதனால்? யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான  தேசியத்துக்கு ஓன்று என்றவுடன், துடித்துப் பதைக்க வைக்குதோ!?


நீங்கள் 1987 க்கு முன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தில் இருந்த போது, இந்திய சார்பு மக்கள் விரோத அரசியலுடன் முரண்பட்ட செழியன் - தாஸ் அணியுடன், நீங்கள் பயணித்த வரலாற்று வழி வந்ததை நீங்கள் வசதியாக மறந்ததை - உங்கள் நினைவுக்கு மீண்டும் கொண்டு வருகின்றேன். அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் விடுதலையை முன்னிறுத்தி உருவான ஒரு இயக்கம். அப்படி உருவான இயக்கத் தலைமை இந்தியக் கைக்கூலி அரசியலை முன்னிறுத்தி - ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை மறுத்த போக்கை எதிர்த்து, ஓடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்னிறுத்திய செழியனுடன் பயணித்த உங்கள் அன்றைய அரசியல் நிலையைக் கைவிட்டு, ஒடுக்கும் வெள்ளாளிய தமிழ் தேசியத்துக்காக வக்காளத்து வாங்குவது எதனால்?

அன்று புலிகள் உங்களைக் கொல்ல முயன்ற போது தப்பியோடிய நீங்கள், அந்தப் புலிக்கு வக்காளத்து வாங்குவதும், அந்த "தமிழ் தேசிய" வெள்ளாளியத்துக்கு வக்காளத்து வாங்குவதன் பின் இருப்பது, அப்பட்டமான உங்கள் பிழைப்புவாதமே.
வெள்ளாளிய சிந்தனையிலான "தமிழ்தேசியம்" என்பது ஒடுக்குகின்ற சாதியப் பண்பாட்டு அதிகாரங்களையும் - சாதிய சுரண்டல் வடிவங்களையும் கொண்டது. ஆணாதிக்க கலாச்சார பண்பாட்டு அடிப்படைகளைக் கொண்டு, பெண்ணை ஒடுக்கி சுரண்டுகின்றது. யாழ் அல்லாத பிரதேசங்கள் மேலான யாழ் மேலாதிக்கத்தை கொண்டு, ஒடுக்குவதன் மூலம் சுரண்டுகின்றது. இவை அனைத்தும் சுரண்டுகின்ற நவதாராளவாத வர்க்க அதிகாரத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை அடிப்படையாகக் கொண்டதல்ல. தமிழ் மக்களை ஒடுக்குகின்ற அனைத்து வகையான ஓடுக்குமுறைக்கும் எதிராக செயற்படாத "தமிழ் தேசிய" அரசியல், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்குகின்ற வெள்ளாளிய சிந்தனையிலான  தேசியம் தான். இது இந்தியாவில் பார்ப்பனிய சிந்தனைக்கு நிகரானது. இந்த வெள்ளாளிய சிந்தனையிலான தேசியம்  - கருவறுக்கப்பட வேண்டும்.

மாறாக இனவொடுக்குமுறைக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த போராட்டம் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும். இதை மறுக்கின்ற எல்லோரும் - ஒடுக்குகின்ற தேசியத்தை முன்னிறுத்துகின்ற அனைவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் விரோதிகள். ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியத்தை ஒடுக்குகின்ற, ஒடுக்குகின்றவனுக்கு காட்டிக் கொடுக்கும்; ஒடுக்கும் மக்களின் விரோதிகள்.

விக்கினேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் தங்கள் கொழும்பு வாழ்க்கையை விட்டு விலகி யாழ்ப்பாணத்துக்கு வந்து விட்டதால் "தமிழ் தேசியம்" அவர்களுடன் வாழ்கின்றதாம்! இப்படி யாழ்ப்பாணிய வெள்ளாளிய சிந்தனைக்கு முரணாக கொழும்பு வெள்ளாளியச் சிந்தனைக்குள் சுமந்திரன் வாழ்வது தான்,  தங்கள் யாழ்ப்பாணிய "தமிழ் தேசியத்தை" நிராகரிப்பதற்கான அடிப்படையாம், இது தான் ஜோதிலிங்கத்தின் "தமிழ் தேசிய" ஆய்வு முடிவு. யாழ்ப்பாணிய வெள்ளாளியனாக சிந்திப்பதற்கும், கொழும்பு வெள்ளாளியனாக சிந்திப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை முன்னிறுத்தி அணுகுவது தான், ஒடுக்கப்பட்ட "தமிழ் தேசத்தின்" விடுதலைக்கான எதிர்காலம் தங்கி இருக்கின்றது என்பதை சொல்லுகின்ற பெயர் தான் ஆய்வும், "ஆய்வாளர்" பட்டங்களும்.

"ஆயுதப் போராட்டம் திணிக்கப்பட்டது" என்று கூறுவதே ஓருதலைப்பட்சமானதும், வரலாற்று திரிபுமாகும். "தமிழ் தேசியத்தின்" பெயரில் செய்த தனிநபர் பயங்கரவாதம், அரச பயங்கரவாதமாக பரிணமித்து. ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நடத்தி, அதில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியில் மக்கள் யாரும் ஆயுதமேந்தவில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட சமூகம் மீது அரசு மற்றும் தனிநபர் இனவாத பயங்கரவாதம் மூலம், வன்முறை சமூகம் மீது திணிக்கப்பட்டது. மக்களின் வாழ்விலிருந்து அன்னியமான இனவாத லும்பன்களே, மக்களின் பெயரில் ஆயுத வன்முறையில் ஈடுபட்டனர். இதைத்தான் ஆயுதப் போராட்டம் என்றனர். இது ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமல்ல. ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகளை ஒடுக்குகின்றவனின் கூலிப்படையாக மாற்றி, வெள்ளாளிய சிந்தனையிலான "தமிழ் தேசிய" ஆயுதப் போராட்டத்தை நடத்தினர்.

இதற்கும் ஓடுக்கப்பட்ட தேசியத்துக்கும், ஓடுக்கப்பட்ட மக்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. இன்று தொடர்ந்து இனவொடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசம் - தேசிய இனங்கள், யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான "தமிழ்தேசிய" வரலாற்று வழியிலும் சரி, இன்று அது முன்வைக்கும் வடிவங்கள் மூலம், தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடவோ – மீளவோ முடியாது. இந்த குண்டுச் சட்டிக்கு வெளியில்; சமூகம் புதிதாக கற்றுக்கொள்வதில் இருந்துதான், தமக்கான சரியான பாதையை கண்டறிய முடியும்.