Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

கல்வி- மற்றும் தமிழ் மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போர் மீது தாக்குதல் !

  • PDF

இலங்கை அரசின் கல்விக் கொள்கை, மனித உரிமை மீறல்கள் , மாணவர்களில் கல்வி கற்கும் உரிமை மறுப்பு , கல்வியைத் தனியார் மயப்படுத்தல் போன்ற மாணவர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக,   அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்முனைப் போராட்டங்களைப்  பலவடிவங்களிலும்  நடாத்தி வருகின்றது . இப்போராட்டகளுடன் , யாழ்- மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு எதிரான போராட்டங்களும் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.

தென்னிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களிடையே ,   யாழ்- மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு அடித்தளமாகவுள்ள  மஹிந்த அரசின் இனவாத அரசியல் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் ,  விவாத அரங்குகள் நடாத்தப்பட்டு வருகிறது. அத்துடன் நேற்று தொடக்கம் " மாணவர்களிடையே இனவாதத்தை புகுத்திச் செயற்படுவதையும் , மாணவர் மீதான அடக்கு முறைகளையும்  நிறுத்து ! "மூடப்பட்ட யாழ் - பல்கலைக் கழகத்தினையும் , கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் உடனடியாகத் திற " போன்ற கோஷங்களைத்   தென்னிலங்கை மாணவர்கள்   தமது போராட்டங்களில் முழங்கினர் . வடக்குக் கிழக்குத் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள்  பல வடிவங்களிலும் தொடரப்படவிருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்புத் தெரிவிக்கின்றது .

மேற்படி தமிழ் மாணவர்களுக்கு ஆதரவான போராட்டங்களுடன் கூடிய , கல்வி உரிமைக்கான போராட்டம்   ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இன்று காலை(13.05.2014) சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி  பல்கலைக்கழக மாணவர்கள் மீது  இனந்தெரியாதோர் பல கிலோக் கணக்கான மிளகாய்த்தூளினை வீசிச் சென்றுள்ளனர்.   மாணவர் மீதான  அடக்குமுறையை நிறுத்துமாறு வலியுறுத்தி இந்த மாணவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ,   மோட்டார் சைக்கிளில் வந்த  இருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது மிளகாய்த் தூளினை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

2012-2013 காலப் பகுதியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தனது  3 செயர்பாட்டாளர்களை அரசின் கொலைவெறிக்கு பலிகொடுத்துள்ளது. தற்போது மகிந்தவின் வாசஸ்தலத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியதனால், 17 மாணவர் தலைவர்கள் கைது செய்யப்படும் நிலை உள்ளதுடன் , அவர்களிற் சிலர் கடத்தப்படவும், காணாமற் போகச் செய்யப்படவும் கூடிய அச்சம் நிறைந்த சூழல் போராடும் மாணவர் மத்தியில்  நிலவி வருகிறது .

இம்மாணவர்களில் கல்வி உரிமைக்கான  போராட்டம் மற்றும் தற்போது  வடக்கு - கிழக்கு மாணவர்களில் உரிமைக்கான போராட்டம் போன்றவை பற்றிய தகவல்கள் எதுவும் இன்றுவரை தமிழ் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை.  இம்மாணவர்களில் போராட்டம் சார்ந்த ஒருவகைக் கள்ள மௌனமே தமிழ் ஊடகங்கள் மத்தியில் மட்டுமல்ல , தமிழ் தேசிய அரசியர் செயர்பாடாளர்கள் எனத் தம்மைக் கூறும் தமிழர்கள் மத்தியிலும் நிலவுகிறது. இதே நிலைதான்   தமிழ் இடதுசாரிகள் எனக் கூறிக் கொள்வோரின் நிலையும் . தென்னிலங்கை மாணவர்கள் வடக்குக் கிழக்கு மாணவர்களில் உரிமைக்காகக்  குரல்கொடுப்பதன் மூலம் இரு மாணவர் சமூகங்களுக்குமிடையில் நெருங்கிய அரசியல் உறவு ஏற்பட்டால், அது  தமது அரசியல் - சமூக இருப்பிற்குக்  குந்தகமாகப் போகும் என்பதே இந்தக் கள்ள மௌனம் காக்கும் போலி இடதுசாரிகளினதும் , தமிழ் தேசியம் கதைக்கும் குறுங்குழுவாத சக்திகளில் அச்சமாகும். இந்த வகையில் மஹிந்த அரசின் இனவாத அரசியல் நோக்கமும் - தமிழ் தேசியம் கதைப்போரின்  அரசியல் நோக்கமும் ஒன்றாகவே உள்ளது !

இவ் இனவாத அரசியலை முறியடித்து, அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்காக இணைந்து போராடும் வகையில் நடைமுறை அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது, மக்கள் நலன் சார்ந்து இயங்கும்  முன்னணிச் சக்திகளில் கடைமையாகும் .

Last Updated on Tuesday, 13 May 2014 15:19